ந்தியாவில் மணிப்பூர், ஹரியானா என்று RSS சங்கிகள் பற்ற வைக்கும் நெருப்பில் மக்கள் குடியிருப்புகள் கொழுந்து விட்டெரிகின்றன. ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கார்ப்பரேட் முதலாளித்துவம் உருவாக்கும் காலநிலை மாற்றத்தால் பல பகுதிகள் காட்டு தீயில் கருகி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் ஹவாய் தீவும் தற்போது 2 நாட்களாக எரிந்து கொண்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மவுயி தீவு நகரமான லஹைனாவின் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

அமெரிக்காவுக்கு காட்டுத்தீ ஒன்றும் புதிதல்ல. இருந்த போதும் முன் கணிக்க முடியாமல் திடீரென ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்க அரும்பாடுபட்டு வருகின்றனர். விமான மூலமும் படகுகளின் மூலம் மட்டுமே மீட்பு சாத்தியமாகிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீட்பு பணிகளை செய்து வரும் படையினரை வாழ்த்தி உள்ளார்.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த தீவு அடியோடு முற்றிலுமாக எரிந்து நாசமாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் தற்போது மட்டும் ஏன் இத்தகையை இயற்கை பேரழிவுகள் உலகெங்கும் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதுகுறித்து ஆய்வாளர்கள் சொல்வது என்ன? அதையும் பார்ப்போம்.

அதிகரிக்கும் பருவநிலை மாற்றமானது ஒவ்வொரு கண்டத்தையும் புரட்டிப் போட்டு வருகிறது. தற்போது கடும் வெப்ப அலைகளாக 50 டிகிரி செல்சியஸில் சுட்டெறிக்கவும் செய்கிறது. அல்லது டென்னிஸ் பால் அளவில் பனிக்கட்டிகள் மழையாக விழுந்து மண்டையை பிளக்கவும் செய்கிறது.

தற்போது ஹவாயில் உள்ள மாயு தீவு நெருப்பிற்கு இறையானதன் பின்னே சில விளக்கங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அங்குள்ள புல்வெளி ஆனது ஒரு நாளைக்கு 12 சென்டிமீட்டருக்கு மேல் வளரக்கூடியதாக, 10 அடி உயரம் வரை வளர்ந்து நிற்கக் கூடியதாக இருந்துள்ளது. இப்படி அடர்ந்து உயரமாக வளர்ந்துள்ள புல் ஆனது கடும் வெப்பத்தால் காய்ந்து கருகி உள்ளது. தற்போது காற்றில் ஈரப்பதமும் மிகவும் குறைந்து போய் உள்ளது. இந்த சூழலில்தான் டோரா சூறாவளியின் தாக்கம் வருகிறது. வெப்பமான காற்று இந்தப் புற்களின் மேல் உரசி செல்லும்போது அவை பற்றி படர்ந்து கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

டோரா சூறாவளியின் பலத்த காற்றால் வேகமாக பரவிய தீப்பிழம்புகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் ஒதுங்க இடம் இல்லாமல் கடலில் குதித்தே தப்பித்தனர். சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுமார் 12,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரமான லஹைனா முழுவதையும் தீ சுட்டெரித்துள்ளது. காட்டுத்தீயால் லஹைனாவில் 270-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 2,100க்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளது. இது ஏகாதிபத்தியங்கள் தமக்குத்தானே வைத்துக் கொண்டுள்ள  கொள்ளிதான்.

இதையும் படியுங்கள்: அழிவை நோக்கி தள்ளப்படும் புவிக்கோளம்; விரைவுபடுத்தும் ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்!

சூறாவளியின் தாக்கம் ஹவாயில் எப்படி இருந்துள்ளது? மவுயி தீவில் மணிக்கு 96 முதல் 112 கிலோமீட்டர் (மணிக்கு 60 முதல் 70 மைல்) வேகத்தில் வீசியுள்ளது. இந்த வெப்ப காற்று ஒரு நாளின் முடிவில் சற்று குறைந்துவிட்டது. இதனால்கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். ஐரோப்பாவில் தீயணைப்பு வீரர்களாக களம் இறங்கியவர்கள் காட்டுத் தீயிலேயே கருகி பலியாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏன் முன்கூட்டியே சுதாரிக்கவில்லை?

பசிபிக் பெருங்கடலில் உருவான புயலானது ஹவாய் தீவுக்கு தென்மேற்கே சுமார் 1,380 கிலோமீட்டர் தொலைவில்தான்  மையம் கொண்டிருந்தது. அது ஹவாயில் ஒரு பேரழிவை கொண்டு வரும் என வானியல் நிபுணர்கள் யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஹாலிவுட் சினிமாவுக்கு உரிய பாணியில் புயலின் தாக்கம் மிக நீண்ட தொலைவில் உள்ள ஹவாயை புரட்டிப் போட்டு விட்டது.

மனித இனம் – குறிப்பாக ஏகாதிபத்தியங்கள் தற்போது இயற்கையை சிதைக்கிறது. அதன் எதிர் விளைவாக இயற்கை எப்படி நம்மை அடித்து வீழ்த்துகிறது என்பதை நம்மால் கணிக்க முடியாமல் போகிறது. நாம் உருவாக்கும் இந்த பேரழிவுக்கு நம்முடன் சேர்ந்து புவிப்பரப்பில் உள்ள அனைத்து உயிர்களும் நம்மோடு சேர்ந்து அழிகின்றன.

காவி பாசிஸ்டுகள் பற்ற வைத்த நெருப்பாக இருந்தாலும் சரி; அல்லது கார்ப்பரேட் முதலாளிகள் லாப வெறி பிடித்து புவிப்பரப்பை சூடேற்றம் செயல் முறையானாலும் சரி இரண்டிலும் விளைவு ஒன்றுதான். மக்கள் சாகிறார்கள். கார்ப்பரேட் – காவி பாசிசத்தை  வீழ்த்தாமல் மக்களையோ இயற்கையையோ காப்பாற்ற முடியாது.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here