ட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ, கார் ஸ்டேண்டில் வண்டியை போட்டு ஓட்டிய காலம் மலையேறிவிட்டது.

வேறு எப்படி சவாரி எடுக்கிறார்கள்?

ஓலா உபேர் போன்ற செயலிகளை வைத்து சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்கி தான் பிழைப்பை நடத்துகிறார்கள்.

அதன்படி ஒரு நாளைக்கு இத்தனை சவாரி எடுத்தாக வேண்டும், இத்தனை புள்ளிகள் பெற்றாக வேண்டும், அதற்கு ஏற்ற ஊக்கத்தொகை வாங்கியாக வேண்டும் என்ற அழுத்தத்துடன் தான் ஓடுகிறார்கள்.

அப்பொழுதுதான் தனது கூலி , போன் ரீசார்ஜ், வண்டி பராமரிப்பு செலவு என சமாளிக்க முடியும்.

எனவே ஒவ்வொரு ஓனர் கம் டிரைவரும், பீக் ஹவர்களில் அதிக ட்ரிப் எடுத்து, அதிக கஸ்டமரை பிக்கப் செய்ய அவசரம் காட்டுவார்கள்.

அப்படி தொழிலுக்காக காரை எடுத்துக் கொண்டு கேளம்பாக்கம் வந்த ஓட்டுநர் ரவி என்பவர் இன்று கொலை குற்றத்தில் கைதாகி உள்ளார்.

ஞாயிறு இரவு என்ன நடந்தது?

கோவையில் ஐடி துறையில் வேலை செய்து சம்பாதிக்கும் உமேந்தர், விடுமுறையில் சென்னைக்கு தன் வீட்டுக்கு வந்துள்ளார். எந்த IT காரனும் உள்ளூரில் வேலை தரமாட்டான் போலும்!

ஆனாலும் ஒரு IT இன்ஜினியருக்கு சந்தோசமாக வாழ நேரம் கிடைக்கிறது. ஆனால் எந்த ஓட்டுனரும் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. செல்லும் நிலையில் வருமானம் இல்லை.

உமேந்தர் ஞாயிறு மாலை ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தினருடன் வெளியில் வந்துள்ளார். ஓஎம்ஆர் இல் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று படம் பார்த்துள்ளனர். பின்னர் வீடு திரும்ப அவரது சகோதரியின் செல்போனிலிருந்து கார் புக் செய்துள்ளனர்.

மாலில்தான் பிரச்சினை வந்தது!

உமேந்தர் சென்றது எந்த மால் என்பதையும், அவர் அழைத்தது எந்த வாகன சேவை நிறுவனம் என்பதையும் நேர்மையான பத்திரிகையான இந்து தமிழ் திசை எழுத மறந்து விட்டது, போகட்டும். வேறு பத்திரிக்கைகள் எழுதியுள்ளனரா என வாசகர்கள் சோதித்துக் கொள்ளவும். அந்த மாலுக்கு பிக்கப் செய்ய வந்தவர்தான் பிரச்சினையில் சிக்கியிருப்பவர்.

வந்த ஓட்டுனர் யார்?

சேலம் ஆத்தூரை சேர்ந்த ரவி சென்னையில் தொழில் செய்து வருகிறார். ஞாயிறு இரவு சவாரிக்காக காத்திருந்து ஆப் மூலம் வந்த இவர்களின் அழைப்பை ஏற்று காரை எடுத்துக்கொண்டு பிக்கப் செய்ய வந்துள்ளார்.

குடும்பத்தினர் ஏழு பேரும் குழந்தைகள் உட்பட வண்டியில் ஏறி உட்கார்ந்துள்ளனர்.
அவர்களிடம் டிரைவர் ஓடிபி எண்ணை கேட்டுள்ளார். இவர்கள் ஓடிபி எண்ணை செல்போனில் பார்த்து சொல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கம்பெனி விதிப்படி அதை பதியாமல் வண்டியை ஓட்டக் கூடாது. இதில்தான் கோபம் வந்து கொலையில் முடிந்துள்ளது.

ஏன் கொலை செய்யும் அளவு கோபம் வர வேண்டும்?

ஏனெனில் இரவு நேரத்தில் சினிமா விட்டு செல்லும் மக்களை பிக்கப் செய்ய குறுகிய நேரம் மட்டுமே இருக்கும். எனவே ஒன்று நம்மை அழைத்தவர்கள் ஓடிபி என்னை சொல்லி ஆர்டரை உத்தரவாதம் செய்ய வேண்டும். அவர்களை விரைவாக டிராப் செய்துவிட்டு ரிடர்ன் ட்ரிப்பை தேட வேண்டும்.

நம்மால் 12 மணி நேரம் போனையே உற்று பார்க்க முடியுமா?

பீக்ஹவரில் நேரம் போய்க்கொண்டுள்ளது. ஒன்று இந்த சவாரியை அழைத்துப் போக வேண்டும். OTP தரவில்லை என்றால் டிரைவர் கேன்சல் செய்துவிட்டு, புதிய கஸ்டமரை தேடிப்பிடிக்க மீண்டும் போனையே பார்த்தாக வேண்டும்.


கண் வலித்தாலும் எரிச்சல் அதிகமானாலும் பார்த்து முதல் ஆளாக சவாரியை பிடித்தாக வேண்டும். இப்படி பிடித்த சவாரியும் கடுப்பை கிளப்பினால் ஓட்டுனருக்கு என்ன வரும்?
எப்படியாவது பிழைக்கவண்டி ஓட்டி டார்கெட்டை அடையவேண்டும். அதில் மண்ணை போடுகிறார்களே என்ற கோபம் வந்திருக்க வாய்ப்புள்ளது.

இன்ஜினியர் எப்படி கையாண்டிருப்பார்!

அவருக்கு டிரைவரின் நெருக்கடி புரிந்திருக்காது அல்லது அலட்சியப்படுத்தி பேசியிருக்கவேண்டும். அல்லது அவரும் 12 மணி நேரம் லேப்டாப் முன் அமர்ந்து விருப்பத்துக்கு மாறாக உழைத்து அதே மன உளைச்சலுடன் ஊருக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. தன் எரிச்சலை டிரைவரிடம் காட்டியிருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் காரில் இருந்து இறங்கும் போது கார் கதவை வேகமாக சாத்தியுள்ளார். இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி – அலட்சியம்தான் ஓடிபி யை சொல்ல தாமதப்படுத்திய உமேந்தர் மீது கோபத்தை தூண்டி உள்ளது.

படிக்க

கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவரும் உழைப்பவர்களே!

ஒரு ஓலா உபேர் ஓட்டுனரின் கஷ்டத்தை உணராத சாப்ட்வேர் இன்ஜினியர் தனக்குரிய பாணியில் அதிகாரத்துவமாக அல்லது அலட்சியமாக எந்த அளவு பேசினார் என்பது தெரியவில்லை. டிரைவரும் எந்த அளவு பொறுமையிலிருந்து உச்சபட்ச கடுப்பானார் என்பது தெரியவில்லை. ஆனால் அது வளர்ந்து முடிவில் அது கைகலப்பாகியுள்ளது.

கொல்லவும், கொல்லப்படவும் நிர்பந்திக்கப்படும் மனிதர்கள்!

குடும்பத்துடன் சந்தோஷமாக பொழுதை கழித்து, சினிமா பார்த்து வீடு திரும்ப நினைத்த உமேந்தர் அநியாயமாக கைகலப்பில் கொல்லப்பட்டுள்ளார்.
அதேபோல் குடும்பத்திற்காக ஊரை விட்டு வந்து உழைத்து பணம் அனுப்ப வேண்டும் என்று நினைத்த ஓட்டுனர் ரவியும் இப்பொழுது கொலை குற்றவாளியாக நிற்கிறார். அவர் குடும்ப பின்னணி பற்றி செய்தியில் இல்லை.

இவர்களை இந்த நிலைமைக்கு தள்ளியது யார்?

சுரண்டலை நவீன படுத்திய கார்ப்பரேட் உருவாக்கிய செயலிகள் தான். பத்திரிக்கைள் இதை மட்டும் அலசவே மாட்டார்கள். அவர்களுக்கு நயன்தாரா– விக்னேஷ் சிவனைப் பற்றி ஆராயத்தான் நேரம் இருக்கும். மீடியாக்களுக்கோ ஆட்டுக்குட்டி சொல்வதை கவர் செய்வதில்தான் கவனம் இருக்கும். விதிவிலக்காக சிலர் மட்டும் எழுதக்கூடும்.

இந்நிலைமை மாறுமா?

ஓட்டுனர்களிடம் செயலிகள் மூலம் நடக்கும் சுரண்டல், அதை வைத்து கார்ப்பரேட்டுகள் தரும் மன அழுத்தம், இதை எந்த பீனல்கோடாவது பரிசீலிக்குமா? எந்த நீதிபதிகளாவது இவர்களுக்கு தண்டனை தருவார்களா?

எதுவுமே நடக்காது!

வசமாக சிக்கிய ரவியை வைத்து செய்வார்களே தவிர, ரவியை இந்த நிலைமைக்கு தள்ளிய ஓலா அல்லது உபேர் போன்ற – அதாவது தற்செயலாக இந்து தமிழ் திசை எழுத மறந்துவிட்ட செயலியை இயக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையில் உள்ள முடியைகூட தொட மாட்டார்கள்.

இன்று ரவி கொலைக் குற்றவாளி! இன்று உபேந்தர் இறந்து போனவர்! இத்துடன் – இந்த இரு குடும்பத்தின் இழப்பு வலியுடன் இது முடிந்து விடுமா யோசியுங்கள்!

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here