வெளியேறும் அன்னிய முதலீடு! வீழ்ச்சியில் பங்குசந்தை? திவால் நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம்!

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் காலம் முடிவடைந்துவிட்டது. 2008 மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மீண்டும் எழவே முடியாத அளவிற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் முதுகெலும்பு முறிந்து கிடைக்கிறது.

வெளியேறும் அன்னிய முதலீடு! வீழ்ச்சியில் பங்குசந்தை?
திவால் நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம்!


2014ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ்- மோடி கும்பல் இந்தியாவின் நாடாளுமன்றத்தை பயன்படுத்திக்கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் செய்த முதல் வேலை ; நாட்டின் முக்கியமான, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பதுதான்.

அதற்கு முன்னர் ஆட்சியில் செய்த மன்மோகன்- காங்கிரசு அரசு ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு மனம் குளிரும் வகையில் சேவை செய்யாததால் under performer என்று முத்திரை குத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்திலும் நேரடி அன்னிய முதலீடு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டதுதான்.

ஆனால் ஆர் எஸ் எஸ்-மோடி அதிகாரத்திற்கு வந்தவுடன் அந்நிய முதலீடு வருவதற்கு உள்ள அனைத்து தடைகளையும் நீக்கம் செய்து, ரத்தினக் கம்பளத்தின் மீது புல் படுக்கையையும் தயார் செய்து வரவேற்பு கொடுத்தது.

2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தனது முதல் 100 நாள் திட்டத்தில் முக்கியமான பத்து அம்சங்களை முன்வைத்து 15 பக்க கொள்கை விளக்க அறிக்கையும் வெளியிட்டது. உள்துறை மற்றும் உரிய துறைகளுக்கு சுற்றறிக்கையாகவும்  அனுப்பி வைத்தது.

படிக்க:

அந்தப் பத்து அம்சங்களில் ராணுவம், உள்நாட்டு அடிப்படை கட்டுமானத்துறை, ரயில்வே, பொது போக்குவரத்து, வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறை, ஒலிபரப்பு, ஓய்வூதியம், இதர நிதி சேவைகள், சொத்து மறு சீரமைப்பு துறைகள், மருந்துத் துறை, வர்த்தகத்துறை ஆகியவற்றில் தங்குதடையின்றி ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின், நிதி மூலதன ஆதிக்க கும்பல்களின் தடையற்ற முதலீட்டை பெறுவதுதான் முக்கியமான நோக்கம் என்று பச்சையாக வெளிப்படுத்தினர்.

அந்த அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கான திட்டத்தையே வளர்ச்சிக்கான பாதை என்றும் வெளிநாட்டு முதலாளிகள் நேரடியாக தனது மூலதனத்தை இந்தியாவில் உள்ள ஏற்கனவே உருவாக்கப்பட்ட பொதுத் துறைகளில் முதலீடு செய்து உற்பத்தி செய்வதை ‘மேக் இன் இந்தியா’, தற்சார்பு பொருளாதாரம் என்றும் பித்தலாட்டம் புரிந்தனர்.

5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இலக்காக வைத்து நாட்டை நாலு கால் பாய்ச்சலில் கொண்டு சென்று உலகின் வல்லரசுகளில் ஒன்றாக மாற்றப்போவதாகவும் பெரும் சவடால் அடித்தனர்.

படிக்க:

இந்த அன்னிய முதலீடு என்பது தொழில்களில் முதலீடு செய்வது என்பதைக் காட்டிலும் ஊக வணிகத்தின் மூலம் பங்குசந்தைகளில் முதலீடு செய்யப்பட்டது. இது பற்றி தெரிந்த போதிலும் அந்நிய முதலீட்டை ஊக்குவித்தனர்.

நேரடி அன்னிய முதலீடு (Foreign direct investment) :   பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக இருக்கிறது, நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் அல்லாத நிதி ஆதாரமாக இது இருக்கிறது  , எனவே ,முதலீட்டாளர்களுக்கு உகந்த நேரடி அன்னிய முதலீட்டுக்கொள்கையை அரசு உருவாக்கியுள்ளது ! என்று வெளிப்படையாகவே காரணங்களை முன்வைத்து அதற்கு நியாயமும் கற்பித்தனர்.

தன்னிடம் உள்ள நிதி மூலதனத்தை கடனாக கொடுக்காமல் அல்லது லாபத்திற்கு உத்தரவாதம் இல்லாமல் பல லட்சம் கோடிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏகாதிபத்திய நிதிமூலதன- நிதி ஆதிக்கக் கும்பல் ஒன்றும் தர்மகர்த்தாக்கள் அல்ல.!

ஆனால் அவர்கள் நமது நாட்டின் மீது அக்கறையுடன் பரோபகாரிகளைப் போல, தர்மகர்த்தாக்களை போல தனது நிதி மூலதனத்தை அந்நிய முதலீடாக இங்கே கொட்டிக் கொடுக்கிறார்கள் என்று கதை அளந்தார்கள்.

ஆனால் அவை அனைத்தும் முதலாளித்துவ புள்ளியியல் அறிஞர்களாலும், பங்குசந்தை தரகர்களாலும் செயற்கையாக உற்சாகப்படுத்தப்படும் நீர்க்குமிழி பொருளாதாரம் ஆகும்.

படிக்க:

இந்த உண்மையை மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கண்முன்னே தெரிகின்ற உடனடி அற்ப வளர்ச்சிகளைக் கண்டு குட்டி முதலாளித்துவ அறிஞர்களும், ஏகாதிபத்திய முதலாளித்துவ அடிவருடிகளும் தமது பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

2022 ஜனவரி முதல் சுமார் 1.8 லட்சம் கோடி அன்னிய முதலீடு இந்தியாவிலிருந்து வெளியேறி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 14,000 கோடி அந்நிய முதலீடு நாட்டை விட்டு வெளியேறி உள்ளது. கொரோனாவிற்கு முன்பாகவே இந்தியாவின் பொருளாதாரம் இரண்டரை சதவீதத்திற்கும் கீழே சென்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்தது.

எனினும் தற்போதைய அந்நிய முதலீடு வெளியேறுவதற்கு முக்கிய காரணம்; சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், ரஷ்ய உக்ரைன் போர், கடன் அதிகரிப்பது போன்றவைதான் என்று முதலாளித்துவ பொருளியல் வல்லுனர்கள் சாதிக்கிறார்கள்.

உண்மை அதுவல்ல ! ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் காலம் முடிவடைந்துவிட்டது. 2008 மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மீண்டும் எழவே முடியாத அளவிற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் முதுகெலும்பு முறிந்து கிடைக்கிறது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் அடிப்படையில் இயங்குகின்ற கார்ப்பரேட்டுகள், பங்குசந்தை சூதாடிகள் ,தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகை சுரண்டுகின்ற தொழில்நுட்ப முதலாளிகள் போன்றவர்கள் 1 சதவீதத்தினர் ஒருபுறம் கொழுத்துக் கொண்டே போவதும் ; மற்றொருபுறம் தொடர்ச்சியான வேலையின்மை ,சொந்த வாழ்க்கை தேவைக்கான கடன் மதிப்பு அதிகரிப்பது, விவசாயத்தில் ஏற்படும் கடும் நெருக்கடிகள், சிறு குறு தொழில்கள் திட்டமிட்டே அழிக்கப்படுவது போன்றவற்றின் காரணமாக வாழ்வை இழந்து நிற்கும் 99 சதவீத மக்கள் மறுபுறம் என்று ஏற்றத்தாழ்வு அதன் உச்ச நிலையை எட்டியுள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமான ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் அவை முன்வைக்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் கை, கால் இரண்டும் இழுத்து, முதுகெலும்பு முறிக்கப்பட்டு உள்ள நடைப்பிணமாக தவழ்வதற்கு முயற்சி செய்கின்றது.

உலக மக்களின் பொது எதிரியாக மாறியுள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை குழி தோண்டிப் புதைக்கின்ற மாபெரும் பணி கம்யூனிஸ்டுகள், பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஆம் !ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் உலகம் கம்யூனிஸ்டுகளின் மீள் வருகைக்காக உவகையுடன் காத்துக்கிடக்கிறது.!!

  • இளஞ்செழியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here