டந்த எட்டு ஆண்டு கால மோடியின் ஆட்சியானது, 67 ஆண்டு கால இந்திய ஆட்சியின் தொடர்ச்சியை முழுவதுமாக அடித்து நொறுக்குவதாக உள்ளது. ஏழைகளுக்கான இந்தியாவாக இப்போது இல்லை.”

****

“தி வயர்” இணையதளம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு ஆளுமைகளிடம் தொடர் நேர்காணல் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் மிகவும் புகழ் வாய்ந்த வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்களை பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பர் நேர்காணல் செய்துள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ல், 15 வயது சிறுமியாக இருந்த ரொமிலா, தான் மிகவும் உற்சாகமான மனநிலையில்,  நிறைய கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கையோடு  இருந்ததாக குறிப்பிடுகிறார். ஜவஹர்லால் நேருவைப் பற்றிக் குறிப்பிடும் போது, “இந்தியாவுக்கான அஸ்திவாரங்களை அமைத்த அவர், மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற விழுமியங்களை போற்றிப் பாதுகாத்தவர். அதுதான் நம்மை தொடர்ந்து நிலைநிறுத்த உதவி வந்தது” என்றும் மேலும் மதம் என்பது அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தார் என்றும் தான் உணர்ந்த நேருவின் இந்தியாவை (அவரது 15 வயது முதல் 32 வயது வரை) விவரிக்கிறார்.

மோடியின் தற்காலிக, போலியான எழுச்சியை பற்றியும், இந்துத்துவா மற்றும் இந்து தேசியவாதத்திற்கு மோடி அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசுகிறார். வரலாற்றை பொய்யானதாக மாற்றி எழுதும் விதமாக செயல்படும் இந்த அரசு, கி.பி 1200 முதல் 1800 வரையிலான காலகட்டத்தை மதம் சார்ந்த, அதாவது இந்து – முஸ்லிம் பிரிவினை என்ற அடிப்படையில் மட்டுமே பார்ப்பது என்ற தவறான கோணத்தில் திரித்து எழுத முயற்சிக்கிறது என்பதையும் விரிவாக விளக்குகிறார். வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் நிகழ்வுகளை கோர்ப்பதாகும். அது கட்டுக்கதைகளை வைத்துப் புனையப்படுவதல்ல என்பதை எடுத்துரைக்கிறார்.

கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை அவர் எப்படி பார்க்கிறார், இந்தியா எந்த மாதிரியாக மாறி உள்ளது என்ற கேள்விக்கு, “தற்போதைய மோடியின் இந்தியாவை எனக்கு பிடிக்கவில்லை, அது மிகவும் குறுகலானதாகவும், மிகவும் வரம்புக்கு உட்பட்டும், ஒரு பக்க சார்பு உடையதாகவும் உள்ளது” எனக் கூறுகிறார் ( வெறுப்பு அரசியல் பரப்பும், இந்துத்துவ சார்பான ஆட்சி என்பதை மறைமுகமாக சுற்றி வளைத்துச் சொல்கிறார் – மொ.பெ) சுதந்திரம் அடைந்தபோது தான் கண்ட கனவு மற்றும் எதிர்பார்ப்புகளை மோடியின் இந்தியா நிறைவேற்றவோ அல்லது பிரதிபலிக்கவோ இல்லை என்றும் தெரிவித்தார். ஒரு வரலாற்று பேராசிரியராக பேசிய அவர் வரலாறு நரேந்திர மோடிக்கு கருணை காட்டாது (அவரை மன்னிக்காது) என்பதையும் தெளிவு படுத்தினார்.

“நரேந்திர மோடி, அதிகார உச்சியிலிருந்து கோலோச்சுபவராக இப்போது இருக்கலாம். ஆனால் எல்லா கோலோச்சிகளுக்கும் நிச்சயம் பாடம் புகட்டப்படும் என்பதை வரலாறு தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்திய ஆளும் வர்க்கம் பெரும்பாலும் தங்கள் சொந்த நலன்களுக்காகவே உழைக்கிறது” என தெரிவிக்கும் அவர் 1947 – ல் தாம் சந்தித்த சாதி மற்றும் வறுமை ஆகிய இரு பெரும் சவால்களை இந்தியா இதுவரை போதுமான அளவில் கையாளவில்லை என தனது வருத்தத்தை பதிவு செய்கிறார்.

“கடந்த எட்டு ஆண்டு கால மோடியின் ஆட்சியானது, 67 ஆண்டு கால இந்திய ஆட்சியின் தொடர்ச்சியை முழுவதுமாக அடித்து நொறுக்குவதாக உள்ளது. ஏழைகளுக்கான இந்தியாவாக இப்போது இல்லை” என காட்டமாக தெரிவிக்கிறார். இப்படி கூர்மையாக விமர்சிக்கும் அறிவுஜீவிகளை கொலை செய்வது அல்லது கைது செய்து பிணையில் கூட விடுவிக்காமல் சிறையில் வாட்டுவது என்பதை நடைமுறைப்படுத்தும் காவி பாசிஸ்டுகள், கார்ப்பரேட்டுகளுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமே அனைத்து வகை சுதந்திரமும் உள்ளதை உறுதிப்படுத்துகின்றனர்.

இந்த லட்சணத்தில்தான், இந்த உண்மையை திசைதிருப்பும் விதமாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி, தேசபக்தியை நிரூபிக்க சொல்கிறது இந்த தேசவிரோத பாசிச கும்பல். இந்தப் பித்தலாட்டத்தைப் புரிந்துகொண்டு மக்கள்தான் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்!

செய்தி மூலம்: https://thewire.in/history/watch-romila-karan-thapar-modi-independence

 

தமிழில் ஆக்கம்: குரு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here