27 செப்டம்பர் சனிக்கிழமை கரூரில் தவெக‌ எனும் பிழைப்புவாதக் கட்சியின் தலைவரும் நடிகரும், கூத்தாடியுமான விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் 40 பேர் நெரிசலில் சிக்கி மாண்டிருக்கின்றனர் என்பது செய்தி. ஆனால் இவற்றை வன்மமான கொலை என்றே பகிர்ந்திடுதல் சரியானதாக இருக்க முடியும்.

இறந்தோரில் இதுவரை கிடைத்த தகவலின் படி ஆண்கள் 17, பெண்கள் 14, ஆண் பெண் குழந்தைகள் 9 ஆக மொத்தம் இதுவரை 40 பேர் மரணித்துள்ளனர்.

இவர்களில் ஒன்றேகால் வயது குழந்தை ஒன்று, இரண்டு வயது குழந்தை ஒன்று, அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவிருந்த (ஜோடி) இருவர், ஒரே குடும்பத்தில் மூவர் என இந்த மொத்த (40) எண்ணிக்கையில் அடக்கம்.

இது தவிர கரூர் அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 9 பேரும், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலத்த காயமடைந்தோரில் இன்னும் ஓரிருவர் மரணத்தைத் தழுவும் நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டிய அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்னையில் இருந்து இரவு ஒரு மணி விமானத்தின் மூலமாக திருச்சி வந்து அங்கிருந்து தரை மார்க்கமாக கரூர் வந்து இறந்தோரின் உடல்களைப் பார்வையிட்டு உறவினர்களிடம் ஆறுதல் கூறியுள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடமும் நலம் விசாரித்துள்ளார். அண்டை மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களையும் கரூருக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இறந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதி உதவி வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவத்திற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அறிவித்துள்ளார். இதுவே அரசாங்கத்தின் தரப்பு நடவடிக்கைகள்.

மற்றவை எப்படி இருப்பினும், இந்த ஒரு நபர் கமிஷன் நியமித்து எப்பொழுது அறிக்கை கொடுக்க வேண்டும் என்ற கால நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை. பொதுவாக கமிஷன் போடுகின்ற கடந்த கால நிகழ்வுகளை ஆய்வு செய்வோமேயானால் ஒன்று கிடப்பில் போடப்படும்; இல்லையேல், இழுத்து மூடப்படும்; அதுவும் இல்லையேல் அக்கமிஷனுக்கு அல்லது அவ்வழக்கிற்கு உயிர் இருப்பதாக காண்பித்துக் கொண்டு விசாரனைகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படும். அதுவும் இல்லையேல் கமிஷன் பரிந்துரைத்த எதனையும் நடைமுறைப்படுத்தாமல் இழுத்து மூடப்படும். இதன்மூலம் குற்றவாளிகள் பதவி உயர்வில் சென்ற நிகழ்வுகளையும் கண்டிருக்கிறோம்.

இவற்றிற்கு சில உதாரணங்கள்:

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட கால துப்பாக்கி சூடு தொடர்பான இதே அருணா ஜகதீசன் விசாரணை அறிக்கை.
  • சாத்தான்குளம் ஜெயராஜ் ஃபெனிக்ஸ் போலீஸ் கஸ்டடி கொலை வழக்கு.
  • கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு.
  • தற்போதைய மதுரை ஆதீனம் திட்டமிட்டு மதக் கலவரத்தை உருவாக்க பொய்ச் செய்தி பரப்பிய கடுமையான வழக்கு.
  • 2021 தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் அறிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள்.
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு.
  • தற்போது நடைபெற்று வரும் ஆணவப் படுகொலைகள் வழக்கு மற்றும் மடப்புரம் அஜித் குமார் காவல்துறை காட்டுமிராண்டிகளால் அடித்தே கொலை செய்யப்பட்ட வழக்கு.

இப்படி எண்ணற்ற பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

40 பேர் மாண்டிருக்கின்ற பொழுது ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?

40 மனித உயிர்கள் மாண்டு கிடக்கின்றனர். அத்தருணத்தில் கூத்தாடி விஜய்யோ போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக காரில் விரைந்தோடி ஏறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை சென்றடைகிறார். கரூரில் புறப்பட்ட இடத்திலும், சென்னையில் விமான நிலையத்தை விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்ல முயன்ற நேரத்திலும் ஊடகவியலாளர்கள் சார்… சார்… என்று குரல் எழுப்பிக் கதறி கேள்விகள் கேட்க முயன்ற தருணத்தில் செவிட்டுக் காதினன் போல தப்பித்துச் சென்று விட்டான்.எவரையும் எதிர்கொண்டு முகம் காட்ட முடியவில்லை அவனால்.
ஆக 40 பேர் மரணம் அடைந்ததற்கு மற்ற எவரையும் விட பொறுப்பேற்க வேண்டிய முழு முதற் கொலைக் குற்றவாளி த.வெ.க. விஜய்தான்.

அந்த வகையில் முதலில் விஜய், முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ச்சுனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பொறுப்பு மாவட்ட செயலாளர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு உள்துறையைக் கையில் வைத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ஏன் துணிவு வரவில்லை. இதே போன்றதொரு நிகழ்வு தெலுங்கானாவில் அல்லு அர்ச்சுனா என்ற நடிகரால் நடந்த பொழுது அந்த ஆளை உடனடியாகக் கைது செய்து சிறையில் தள்ளியது தெலுங்கானா அரசாங்கம்.

இதுகுறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் முதல்வர் மு க ஸ்டாலினும் சரி; துணை முதல்வர் உதயநிதியும் சரி; ஒரு நபர் கமிஷன் போட்டதை மிகப் பெரும் சாதனையாக அறிவிக்கின்றார்கள். இது கேவலத்திலும் கேவலம்.

எவை எவற்றுக்கோ தானாக முன்வந்து வழக்குகளைக் கையில் எடுக்கும் உயர் நீதிமன்றம், 40 பேர் கண் எதிரே அனைவரும் பதை பதைக்கும் வகையில் செத்து மடிந்து கிடக்கும் பொழுது இதுவரை இது விடயத்தில் வாய் திறக்காமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
எனவே, தவெக-வின் மேற்கண்ட நிர்வாகிகளை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

ஒரு நபர் கமிஷன் தனியே போட்டு இருந்தாலும் அதைக் கூட ரத்து செய்துவிட்டு உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை நடத்த வேண்டும். அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும்.

ஒன்றேகால் வயது குழந்தையின் தாய் காது கேளாதவர்; வாய் பேச முடியாதவர். சைகைகளால் தன் குழந்தையின் மரணத்தை எண்ணித் துயருறும் காட்சியையும், அந்த மாற்றுத்திறனாளியைக் கட்டி அணைத்துக் கதறும் அவரது தந்தையின் துயரத்தையும் காணச் சகிக்க முடியவில்லை.

அடுத்த மாதம் திருமணத்தை எதிர்கொண்டிருந்த ஜோடி இப்படி அநியாயமாக மாண்டு போனதை எண்ணி எண்ணிப் பெற்றோர் கதறி அழுவதை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை.

ஒரே குடும்பத்தில் மூவர் இறந்து போன தாங்க முடியாத துயரத்தில் அரற்றிக் கதறும் பெற்றோருக்கு யாரால் தான் ஆறுதல் கூற முடியும்.

40 உடல்களையும் கட்டிப்பிடித்து தாங்க இயலாமல் கதறுகின்ற உற்றார்- உறவினர்- மற்றையோர் என அனைவரது கொடுந் துயரங்கள் அனைத்தையும் தொலைக்காட்சிகளில் இன்ன பிற ஊடகங்களில் பார்த்த அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் கசியாதவர் எவரும் இருந்திட மாட்டார்.

கரூர் மரணச் சம்பவத்தை எப்படிப் பரிசீலிப்பது?

அரசியலற்ற கோமாளி விஜய், தனக்கு இருக்கும் – தரம் தாழ்ந்த சினிமா கவர்ச்சியைக் கொண்டு, முன்னவர் எம்ஜிஆர் போல், தானும் அரசியலில் ஈடுபட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராய் அமர்ந்து விடலாம் என மனப்பால் குடிக்கிறார்.

இவர் குத்தாட்டம் போட்டு இளைஞர்களை சீரழித்த திரைப்படங்களில் படம் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை சம்பாதித்தவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடி கோடியாய் அசையும் மற்ற அசையாச் சொத்துக்களைச் சேர்த்துக் குவித்து வைத்திருப்பவர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து கால் பதிக்க இயலாமல் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் பாஜக-வின் அமித்ஷா-மோடி கும்பல், புதிய யுக்தியாக வீசிய வலையில் (ரஜினிகாந்த் சிக்காததால்) இந்தக் கழிசடை விஜய்யை பி டீம்-ஆகப் பவனி வரச் செய்துள்ளது. ஆம், படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த பொழுது அமலாக்கத்துறை இழுத்து வந்தபின் அரசியலில் சரண்டர் ஆனவர்தான் இந்த விஜய்.

அந்த அமலாக்கத்துறையிலிருந்து விடுபட்டு தவெக-வில் ஒரு ஐ ஆர் எஸ் அதிகாரியும் இணைந்து முக்கிய நிர்வாகப் பொறுப்பையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். இதன் பின்னணியில் எல்லாம் காவிக் கூட்டம் கலந்தே இருக்கிறது. ஆதவ் அர்ச்சுனா, புஸ்ஸி ஆனந்த் போன்ற கழிசடைகளும் இவ்வகையைச் சேர்ந்தவர்களே.

இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் விஜய் பின்னால் திரண்டு இருக்கக்கூடிய இருபால் இளைஞர் பட்டாளம் முற்றும் முழுதாக சினிமா ரசிகர்களே. அப்படிப்பட்டதொரு கூட்டம் எப்படி விஜய் முற்றிலும் அரசியலற்ற தன்மையில் சினிமா பாணியில் பயணிக்கிறாரோ, அதே பாணியில் ரசிகர்களும் (தொண்டர்களும்) பயணிக்கிறார்கள். ஆகவே, தலைவரும் தொண்டர்களும் ஒரே மாதிரி அரசியலில் சூனியங்களே.

ஆனால் விஜய்யைப் பொருத்த மட்டிலும் முற்றும் முழுதாக சுயநலம் சார்ந்த பிழைப்பு வாதத்தைக் கொள்கையாக வடித்துக் கொண்டவர். அவனை ஒட்டி இருக்கக்கூடிய மேல்மட்டத்தில் உள்ளோரும் அவ்வித உணர்வு கொண்டவர்களே. பணம் கொழுத்தவர்களே.

ஆனால் அவருடன் தொண்டர்கள் என்ற பெயரில் திரண்டிருக்கக் கூடிய ரசிகர்கள் உழைக்கக்கூடிய மக்கள் பிரிவிலிருந்து அறியாத்தனமாக பின் செல்பவர்களே ஆகும். அவர்களை பெற்றோரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்குத் தான் நாம் சரியான அரசியலைப் புகட்ட வேண்டும். நல்வழிப்படுத்த வேண்டும். அதற்கு கரூரில் நிகழ்ந்த 40 பேர் மரணங்களை முந்நிகழ்வாகக் கொண்டியங்க வேண்டும்.

கடந்த செப்டம்பர் 13 சனிக்கிழமை துவங்கி 20, 27 தேதிய சனிக்கிழமைகள் வரை திருச்சி, நாகை, திருவாரூர், நாமக்கல் முடித்து கடைசியாக கரூரில் 39 பேர் மரணம் அடையும் வரையில் இந்த இழிவான கொள்கைகள் கொண்ட விஜய்யின் அரசியல் வாக்கு சேகரிப்பு பரப்புரைக் கூட்டம் சோகத்தில் முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டங்களில் கைகளில் சில துண்டு சீட்டுகளை வைத்துக் கொண்டு அதிகபட்சம் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் தனது உரையை முடித்துக் கொண்டு வந்துள்ளார்.

எந்தக் கூட்டத்திலாவது உருப்படியான ஓட்டுக் கட்சி அரசியலையாவது ஒழுங்காக பேசி இருக்கிறாரா? முற்றிலும் பொய், சவடால், திமுக எதிர்ப்பு, ‘ஸ்டாலின் அங்கிள் பதில் சொல்லுங்கள், மிஸ்டர் சி.எம். சார் உங்கள் மிரட்டலுக்கெல்லாம் பணியக் கூடியவன் நான் அல்ல’ இதுதான் அவரது பேச்சு ஸ்டைல். அதுவும் எழுதி வைத்ததை ஒழுங்காக ஒப்பு விக்கத் தெரியாமல், தப்பும் தவறுமாக உளறுவது; பின்பு சாரி (sorry) கேட்பது… இவற்றைத் தான் அனைவரும் கேட்டு வருகிறார்கள்.

இவற்றை தொலைக்காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தலை முதல் நுனிவரை விடாமல் கூட்டத்தை பெரிதாக காண்பிப்பதும், விஜய்யை மகத்தான தலைவராக மக்கள் முன்னிருத்துவதும் 24 மணி நேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சியைப் பொருத்தமட்டிலும் புதிய தலைமுறை, தந்தி டிவி போன்றவை முதன்மைப் பாத்திரம் வகிக்கின்றன. அதனைத் தொடர்ந்து இன்னும் சில தொலைக்காட்சிகளும் முக்கியத்துவம் கொடுக்கத்தான் செய்கின்றன. அச்சு ஊடகங்களை பொருத்தமட்டில் தினமலர், தினமணி, தமிழ் இந்து போன்ற நாளேடுகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.

இவற்றால் தான் மாபெரும் தலைவராக உருவெடுத்துவிட்டதாக கண் தெரியாத வண்ணம் வானில் பறக்கிறார் விஜய்.

பெரியார் -அம்பேத்கர் -அண்ணா -வேலு நாச்சியார் போன்ற படங்களை வைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்களின் கொள்கைகளில் ஒரு வரி கூட அவருக்கு தெரியாது. இதுதான் உண்மை நிலை.

மறைந்த நடிகர் எம் ஆர் ராதா சொல்வார்: ‘சினிமாக்காரர்கள் கூத்தாடிகள். அவர்களை சினிமாவில் பார்ப்பதோடு விட்டுவிடுங்கள். அவர்களை அரசியல் கொள்கை தலைவர்களாக என்றும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்’ என்பார்.

அவர் என்றோ சொன்னதை இன்றும் கூட நினைத்துப் பார்க்க இளைஞர் கூட்டம் முன் வராதது வேதனை அளிக்கிறது.

மாவீரன் பகத்சிங் நாட்டு விடுதலைக்காக தூக்குக் கயிற்றை முத்தம் கொடுத்து தியாகம் செய்தான்.

நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் இப்படி ஒரு கூத்தாடிக்கு கலாச்சார சீரழிவு ஏற்படுத்திய ஒரு சீரழிவு நடிகனுக்காக உயிரை பணயம் வைக்கின்றீர்களே என்று எண்ணும் பொழுது தான் மனம் கொதிக்கிறது. உங்களால் நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம்.

பிற ஓட்டுக் கட்சிகளின் நிலை என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கரூர் வந்து துக்கம் விசாரித்து விட்டு ஊடகவியலாளர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு இதற்கு அரசாங்கமும், மு.க.ஸ்டாலின் தான் காரணம் என அவர் பங்கிற்கு தேர்தல் அரசியல் பரப்புரை செய்து விட்டுப் போயிருக்கிறார். இப்படிப்பட்ட நேரங்களில் தமது ஆட்சிக் காலத்தில் ஒழுங்கு முறையை கடைப்பிடித்ததாகவும் பீற்றிக்கொள்கிறார். அதுதான் பார்த்தோமே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனப் பிதற்றியது, ஜெயராஜ்-ஃபெனிக்ஸ் போலீஸ் கொட்டடிக் கொலைகளை இயற்கை மரணங்கள் என அறிவித்தது… இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகளைப் பட்டியலிடலாம். எனவே வாக்கு வாங்குவதற்காக துக்க வீடுகளிலும் அரசியல் பண்ண வந்து விட்டார் எடப்பாடி.

படிக்க:

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் பலி! நடிகர் விஜய்-ஐ உடனடியாக கைது செய்!

 நடிகர் விஜய்-ன் பரந்தூர்  பயணமும் திமுகவின் கார்ப்பரேட் கொள்கையும்!

விசிக தலைவர் திருமாவளவன் கூட இறந்தோருக்கு 50 லட்சமும் காயமுற்றோருக்கு 5 லட்சமும் அரசு வழங்க கோரிக்கை விடுக்கிறார். அரசு அறிவித்தது போக எஞ்சிய தொகையை விஜய்யும் அவரது கட்சியுமே ஏற்க வேண்டும் எனக் கூறியிருந்தால் சரியாக இருக்க முடியும். அதற்கான பணத் தகுதி விஜய்யிடம் கணக்கில் அடங்காத வகையில் குவிந்தே கிடக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை போன்றவர்கள் ஒப்புக்கு சிலவற்றை கூறி இருக்கிறார்கள்.

நடிகர்கள் சிலர் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள். சிலர் ஆறுதல் தெரிவித்திருக்கிறார்கள்.

காவல்துறை அந்த இடத்தை கொடுத்தது தவறு என்றும் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

காவல்துறையோ அவர்கள் குறிப்பிட்டுக் கோரிய முதன்மையான இடத்தையே வழங்கியதாகவும், பத்தாயிரம் பேர் வரை தான் கூடுவர் என்றும் 11 மணி முதல் 12 மணிக்குள் கூட்டம் தொடங்கி விடப் போவதாகவும் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் கூறிய எண்ணிக்கை விட பல மடங்கு கூடிவிட்டது; காலையில் நாமக்கல் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூட அப்படியே கரூர் கூட்டத்திற்கு வந்து விட்டார்கள். 12 மணிக்குள் வந்து விடுவதாக சொன்ன விஜய் இரவு 7:40 தான் வருகை புரிந்தார்; எனவே, அனைத்தையும் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக செய்துவிட்டு காவல்துறை மீது பழி போடுவது சரியல்ல எனப் பதில் உரைக்கிறார்கள். இவர்கள் கூற்றிலும் சற்று உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் கடந்த சில கூட்டங்களில் கூடிய கூட்டத்தைக் கொண்டு விஜய் போன்ற கூத்தாடிகளின் கூட்டங்களுக்கு ஊரின் நடுவே இடம் ஒதுக்காமல் ஊரின் வெளிப்புறத்தில் உள்ள காடுகளில் தான் இடம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கமும் காவல்துறையும் இதிலிருந்து படிப்பினையாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதல் நாள் இரவு முதல் படிப்படியாக காலை 10, 11, 12 மணிக்கெல்லாம் குறுகிய அகலம் கொண்ட அப்பகுதியில் கூட்டம் சேர்ந்த வண்ணம் இருந்திருக்கிறது. குடிக்கத் தண்ணீர் இல்லை; உண்ண உணவு இல்லை; கூட்டத்தை ஏற்பாடு செய்த தவெக இதில் எள்ளின் முனையளவும் அக்கறை செலுத்தி கொண்டிருக்கவில்லை. கூட்டத்தை சமாளித்து வெளியில் சென்று தண்ணீரோ, உணவோ எவராலும் வாங்கி வர இயலவில்லை.

இப்படிப்பட்டதொரு நிலையில் மக்களை 7 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை காக்க வைத்து விட்டு முன்னும், பின்னும் ஆயிரம் பேர் இருசக்கர வாகனங்களில் பவனி வர நடுவில் இவர் ரோடு ஷோ காண்பித்தவாறு கூட்டத்திற்குள் புகுந்து வாகனத்தின் மேலே ஏறி கை அசைக்கிறார்; வழக்கம் போல் சில நிமிடங்கள் சினிமா சூட்டிங் பணியில் வசனங்களை தப்பும் தவறுமாக ஒப்புவிக்கிறார்.

கூட்டத்தில் சில பெண்கள் தண்ணீர் தண்ணீர் என்று கதறிய சத்தம் கேட்டு ஆதவ் அர்ச்சனாவிடம் கூற, அவர் ஆம்புலன்ஸ்லிருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்து ஒவ்வொன்றாக கூட்டத்தினரை நோக்கி வீச, மக்கள் தண்ணீர் பாட்டில்கள் என்று தெரியாமல் ஏதோ விழுகிறது என்று முண்டியடித்துக் கொண்டு நகர்வுகளை மேற்கொண்ட பொழுதுதான் கடுமையான இடிபாடுகளுக்கிடையில் இவ்வித மரணக் கொடுமைகள் பெருமளவில் நடைபெற காரணமாக அமைந்து விட்டன என செய்திகள் வரலாகின்றன.

நாட்டில் இந்தி திணிப்பு, நீட் பிரச்சனை, புதிய கல்விக் கொள்கை திணிப்பு; அதன் மூலம் மும்மொழிக் கொள்கைத் திணிப்பு; விலைவாசி உயர்வு; வேலையில்லா திண்டாட்டம்; சாதி மத கலவரங்கள்; பாலியல் வக்கிர வன்கொடுமைகள், கார்ப்பரேட் காவிப் பாசிசம் படர்ந்து வருதல்… இப்படி எண்ணற்ற பிரச்சனைகள் நாட்டில் வளர்ந்தோங்கி வருகின்றன.

விஜய் தமது கட்சியின் விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத அரசியல் தற்குறி என்பதனை நிலைநாட்டியவர். அப்படிப்பட்டவருக்கு மேலே பட்டியலிடப்பட்ட சமூக நிலைமைகள் பற்றியோ, சரியான அரசியல் பற்றியோ துளி அளவும் தெரியாது. அப்படிப்பட்ட அரசியல் தற்குறி பின்னால் திரண்டிருக்கும் தொண்டர்கள் அந்த மாய வலையில் இருந்து விடுபட வேண்டும். சரியான சமூக அரசியல் பொருளாதார கண்ணோட்டம் உடைய புரட்சிகர அரசியலை நோக்கிப் பயணப்படல் வேண்டும். இதற்கு விஜயின் ரசிகர்களுக்கு பொறுமையுடன் வகுப்பெடுப்பது நம் கடமை.

  • எழில்மாறன்

1 COMMENT

  1. சரியான அரசியல் பார்வை…இந்த கொலைகள் தமிழகத்தில் இருக்கும் அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய லெனினிய செயல்பாட்டாளர்களுக்கு ஒர் எச்சரிக்கையாக எடுத்து கொண்டு , இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here