மூன்றாவது குழந்தைக்கு 30000 நான்காவது குழந்தைக்கு 40,000 ஊக்கத்தொகை என அறிவித்த ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் மூடத்தனம்.

ஆந்திர மாநிலத்தின் சரிந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சிப் போக்கை மாற்றி, உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு, மூன்றாவது குழந்தை பிறந்தால் ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தை பிறந்தால் ரூ.40,000 ரொக்க ஊக்கத்தொகையாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்த முட்டாள்தனமான, பிற்போக்கு கொள்கையை அறிவித்த சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களாக பிரிந்துள்ள ஒன்றுபட்ட ஆந்திராவில் 1946 முதல் 1951 வரை நடைபெற்ற மாபெரும் விவசாயிகளின் ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் ஆந்திரா இந்தியாவின் முன்னோடி விவசாய புரட்சியின் மாநிலமாக விளங்கியது.

தெலுங்கானா விவசாயிகள் எழுச்சி மற்றும் மாபெரும் ஆயுதப் போராட்டம் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மகத்தான மக்கள் போராட்டமாகும். அது நிஜாம் மாநிலத்தின் நிலப்பிரபுத்துவ நவாப்பிற்கு எதிரானதும், அதிகார வர்க்க நிலப்பிரபுத்துவ மிராசுதாரர்களின் கொடுமையான சுரண்டலுக்கு எதிரானதும், மற்றும் நிஜாம் மாநிலத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பாதுகாக்க நுழைந்த நேரு அரசின் இராணுவத்துக்கு எதிரானதுமான ஆயுதந்தாங்கிய விவசாயிகளின் ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியாகும். நிலத்திற்காகவும், உணவுக்காகவும், தங்களின் விடுதலைக்காகவும் தெலுங்கானா மக்களால் நடத்தப்பட்ட ஆயுதந்தாங்கிய ஒரு மகத்தான விவசாயப் புரட்சியாக அது விளங்குகிறது.

ஆந்திராவின் மொத்த விவசாய நிலங்களும் பெரும்பகுதி பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம் கட்டுப்பாட்டிலும் அதற்கு பின்னர் ரெட்டி, நாயுடு, பட்டேல் போன்ற சாதிகளின் கட்டுப்பாட்டின் கீழும் சென்றுள்ளது. தெலுங்கானா போராட்டத்திற்குப் பிறகு வெடித்து எழுந்த நக்சல்பாரி உழவர் எழுச்சி ஆந்திராவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக நிலச் சீர்திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆந்திர மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் அதிலிருந்து பிரிந்த கட்சிகள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழலில் 90களில் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் ஆந்திராவிலும் பின்னர் அதிலிருந்து பிரிந்த தெலுங்கானாவிலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி குறிப்பாக கார்ப்பரேட் தொழில் வளர்ச்சி பற்றி கீழ்க்கண்டவாறு விவரங்களை அறிவித்துள்ளது.

“ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய தொழில் மற்றும் ஏற்றுமதி சார்ந்த மாநிலமாகும். வலுவான துறைமுக உள்கட்டமைப்பு, ஒற்றைச் சாளரத் தொழில் அனுமதிகள் மற்றும் மின்னணுவியல், சூரிய சக்தி, உணவு பதப்படுத்துதல், மருந்துத் தொழில்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் கொள்கைகள் இதற்கு ஆதரவளிக்கின்றன. 2026 நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட ரூ. 18.3 டிரில்லியன் (US$ 214.2 பில்லியன்) மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) மற்றும் 2025 நிதியாண்டில் ரூ. 1.84 டிரில்லியன் (US$ 20.8 பில்லியன்) ஏற்றுமதியுடன், இந்த மாநிலம் பொறியியல் பொருட்கள், கடல்சார் பொருட்கள் மற்றும் மருந்துத் தொழில்களில் முன்னணியில் உள்ளது.

படிக்க 

  கூலியடிமைகள் எண்ணிக்கையைப் பெருக்கவே சந்திரபாபு நாயுடுவின் பிறப்பு ஊக்குவிப்புத் திட்டம்!

 மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!

இது பெரிய மின் உற்பத்தித் திறன் (28.4 ஜிகாவாட்), வலுவான சாலை மற்றும் துறைமுக இணைப்பு, மற்றும் நக்கப்பள்ளி மொத்த மருந்துப் பூங்கா, அமராவதி தலைநகர் மேம்பாடு போன்ற முக்கிய முதலீடுகளைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் மீன்வளம் ஆகியவை முக்கிய பலங்களாகத் தொடர்கின்றன; ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் மீன் உற்பத்தியில் 40%-க்கும் மேல் பங்களிக்கிறது. அதே நேரத்தில், தற்போதைய சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்புச் செலவினங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த நிர்வாகம் ஆகியவை இந்த மாநிலத்தை உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒரு போட்டித்தன்மை வாய்ந்த இடமாகத் தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன.

ஆந்திரப் பிரதேச தொழில்துறை உள்கட்டமைப்பு கழகத்தின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் முறையான ஒப்புதல்களுடன் கூடிய 10 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கொள்கை ரீதியான ஒப்புதலுடன் கூடிய ஐந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட 32 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உட்பட மொத்தம் 47 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருந்தன. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஜவுளி மற்றும் ஆடை, உணவு பதப்படுத்துதல், காலணி மற்றும் தோல் பொருட்கள், பல்வகை பொருட்கள், மருந்து, தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் பரவியிருந்தன” என்று முன் வைக்கிறது இந்தியா பிராண்ட் ஈகிவிட்டி பவுண்டேஷன் என்ற அமைப்பு.

இந்த நிலைமையில் ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சரும் பாசிச மோடியின் பங்காளியுமான திருவாளர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள மக்கள் தொகை அதிகரிப்பு பற்றிய கொள்கை பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலேயே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அறிவியல் பூர்வமான கொள்கைக்கு பதிலாக இதுபோன்ற கோமாளித்தனமான மக்கள் தொகை அதிகரிப்புக் கொள்கைகள் அனைத்தும் ஆந்திராவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்வைக்கின்றனர் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள்.

“2047-ஆம் ஆண்டுக்குள், தனிநபர் ஆண்டு வருமானம் 18,000 அமெரிக்க டாலர் (15.3 லட்சம்) அல்லது அதற்கும் அதிகமாகவும், பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராகவும் கொண்ட ஒரு விக்சித் (வளர்ந்த) நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் கனவு , ஒரு எட்டாக்கனியாகவே முடிந்துவிடக்கூடும்” என்றும் “வீழ்ச்சியடைந்து வரும் நாணய மாற்று விகிதம், அதிகரித்து வரும் பாதுகாப்புவாதக் கொள்கை, சவாலான புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புச் செலவினங்களுக்கான அதிக ஒதுக்கீடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பது நிச்சயமாக ஒரு தவறான கொள்கைத் தேர்வாகவே இருக்கும்.” என்றும் விமர்சனமாக முன்வைக்கின்றனர் என்.கே.ஷர்மா, சஞ்சய் குமார் மற்றும் சிராஜ் ஹுசைன் போன்ற இந்திய புள்ளியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள்.

ஆந்திராவின் வளர்ச்சி என்பதும் ஆந்திர மக்கள் தொகை என்பதும் ஒட்டுமொத்த மக்களுக்கும் முன்னேற்றத்தை கொடுக்கின்ற வகையிலான சுயசார்பு பொருளாதாரம் மற்றும் விவசாய நிலங்களை பெரும்பான்மை உழைக்கும் மக்களான பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு பகிர்ந்த அளிப்பதில் தான் உள்ளது.

இதன் மூலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக ஆந்திராவை முன்னுக்கு கொண்டு வர முடியுமே தவிர மக்கள் தொகையை அதிகரிப்பது என்பதன் மூலம் ஆந்திராவை சூறையாடி வருகின்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குறைந்த கூலிக்கு தனது ரத்த வியர்வையை சிந்துவதற்கு உழைப்பாளி மக்களை பணயம் வைப்பதற்கான முயற்சி தான் இந்த மக்கள் தொகை அதிகரிப்பு என்ற வகையில் அதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

மாசாணம்

புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here