அமெரிக்க தொழிலதிபரும் தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், இந்தியாவில் முதலீடு செய்யாமல் சீனாவில் தனது முதலீட்டை அதிகரித்திருப்பதன் மூலம் மிகப்பெரிய தோல்வியை அடையப் போகிறார் என்று தொழிலதிபர் விவேக் வாத்வா தெரிவித்துள்ளார்.
கல்வியாளர், தொழில்முனைவோர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட அமெரிக்க வாழ் இந்தியரும், சங்கியுமான விவேக் வாத்வா, டெஸ்லாவின் உற்பத்திகளை இந்தியாவுக்கு மாற்றக் கோரியதை கருத்தில் கொள்ளாத மஸ்க்கின் முடிவு குறித்து விமர்சித்து மே-13, 2024 அன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மூலம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து தொழிற்சாலையை அமைப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு இந்தியா வரவிருந்த பயணத்தை எலான் மஸ்க் சமீபத்தில் ஒத்திவைத்தார்.
உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வரவிருந்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
யார் இந்த எலான் மஸ்க்.
இன்றைய தினத்தின் தரவுகளின்படி 215 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகின் முதல்நிலை பணக்காரனாக உள்ளார் எலான் மஸ்க். இவர் தனது தொழிலை 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தின் மூலமாக தொடங்கினார். பின்னர் ஜிப்-2 குழுமத்தைத் தொடங்கி அதனை சில காலம் கழித்து விற்றார். எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை 1999-ல் தொடங்கினார். 2002-ல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற குழுமத்தையும், 2003-ல் தானியங்கி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் என்ற குழுமத்தையும் தொடங்கினார். 2012 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டை அனுப்பினார்.
2013 இல் ஹைபர்லூப் என்னும் புதிய கருத்தை முன்வைத்து அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி பெரு நகரங்களிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்தக் குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் விரைந்து செல்ல முடியும். வானுர்தி, தொடர்வண்டி ஆகிய ஊர்திகளை விட வேகமாகச் செல்ல முடியும். இந்த் திட்டம் நிறைவேற 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார் 2016-ல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார். 2022 –ல் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி x என்று பெயரை மாற்றினார்.
ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக செயற்கை நுண்ணறிவு சந்தையை கைப்பற்ற துடித்துக் கொண்டுள்ளார்.. இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார். இந்த கார்ப்பரேட் முதலாளியைதான் நேரடியாக வரவேற்று தனது புகழை நிலைநாட்டிக் கொள்ள ஆசைப்பட்டார் பாசிச மோடி.
எலான் மஸ்க் வருகையை தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தயாராக இருந்தார். நடைபெற்று வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது பிராண்ட் வேல்யூவை உயர்த்த கனவு கண்டார். அப்படி நடந்திருக்கவும் கூடும். சுழற்சி முறையில் கொடுக்கப்படும் G20 தலைவர் பதவியை வைத்துக் கொண்டு உலக நாடுகள் தன்னை ’விஸ்வகுருவாக’ ஏற்றுக்கொண்டதாக காட்டிய பிராடு தானே மோடி.
அதுபோலவே சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸுடனான சந்திப்பையும் அப்படி பயன்படுத்திக் கொண்டவர்தான் பிராடு மோடி. அந்த சந்திப்பில் பில்கேட்ஸுக்கே தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து வகுப்பெடுத்தார் என்பது வேறு கதை.
எலான் மஸ்க் கால்கள் ’பாரதத்தில் ‘பட
மோடி அரசு செய்த காணிக்கைகள்!
ஸ்டார்லிங்க் என்பது மஸ்க்கின் விண்கலம் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களின் வலையமைப்பாகும். தி எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை தொடங்குவதற்கான உரிமத்திற்கு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் மோடி அரசிடம் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் எலான் மஸ்க்கின் திட்டமிட்ட வருகை, இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடுகள் பற்றிய திட்டங்களையும், செயற்கைக்கோள் இணைய முயற்சியான ஸ்டார்லிங்க் பற்றிய திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இதனால் மஸ்கின் பயணத்திற்கு முன்னதாக, மத்திய நிதி அமைச்சகம் ஏப்ரல் 16 அன்று, சில விண்வெளித் துறை நடவடிக்கைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில் அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிகளை அறிவித்தது. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைக்காக மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்கிற்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் முதன்மை ஒப்புதல் வழங்கியது. இது இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளைத் தொடங்குவதற்கு அடித்தளம் அமைத்தது. GMPCS அல்லது செயற்கைக்கோள் சேவைகள், உரிமம் மூலம் உலகளாவிய மொபைல் தனிப்பட்ட தொடர்பு, செயற்கைக்கோள் இணைய சேவையை அமைப்பதற்கான முதல் படியாகும்.
இதற்கு முன்பாக, முகேஷ் அம்பானியின் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் ஆதரவு ஒன் வெப் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்தியா GMPCS உரிமத்தை வழங்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு.
அது போலவே மார்ச் 15 அன்று, EV-களுக்கான உற்பத்தி இடமாக இந்தியாவை மேம்படுத்துவதற்காக E-Vehicle (EV) கொள்கைக்கு ஒன்றிய மோடி அரசு ஒப்புதல் அளித்தது. அந்த கொள்கையின் படி E-Vehicle நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. இதுவும் எலான் மஸ்கின் தேவைக்காக கொண்டுவரப்பட்டது தான்.
மேற்கண்ட அத்தனை சேவைகளையும் செய்து மோடி அரசு காத்திருந்த வேளையில் எலான் மஸ்க்கின் ட்வீட் சங்கிகளின் நெஞ்சில் இடியாய் வந்து விழுந்தது.
மோடியின் ஆசையில்
மண்ணை வாரிப் போட்ட மஸ்க்!
“துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை தாமதமாக வேண்டும், ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று ஏப்ரல் 20 அன்று X இல் மஸ்க் பதிவிட்டார்.
சரி ஏதோ வேலை, வராமல் போய்விட்டார் என்று சங்கிகள் சமாதானப்படுத்திக் கொண்ட வேளையில் சீன பிரதமரை சந்தித்தது குறித்து எலான் மஸ்க் ட்வீட் வந்தது. இங்கு வராதது மட்டுமல்ல, நமக்கு அருகாமை நாட்டிற்கும் வந்து சென்றுள்ளார் என்பது சங்கிகளுக்கு மேலும் எரிச்சலை தந்துள்ளது.
“பிரதமர் லி கியாங்கைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். ஷாங்காய் ஆரம்ப நாட்களில் இருந்து நாங்கள் இப்போது பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம்,”என்று ஏப்ரல் 28 அன்று X இல் மஸ்க் பதிவிட்டார்.
2021 ஆம் ஆண்டு முதல், சீனாவில் டெஸ்லா கார்களால் சேகரிக்கப்பட்ட தரவுகள் ஷாங்காயில் சேமிக்கப்படுகிறது. இந்த தரவு எதுவும் அமெரிக்காவிற்கு மாற்றப்படவில்லை. சீனாவில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலா் செலவில் டெஸ்லா தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியை கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கியது. இதையடுத்து, அந்நாட்டு சந்தையில் டெஸ்லா நிறுவன கார்கள் பிரபலமடைந்தன.
அதேசமயம் கடந்த சில ஆண்டுகளில் உள்ளூா் தயாரிப்பாளா்களிடமிருந்து கடுமையான போட்டியை டெஸ்லா எதிர்கொள்கிறது. BYD போன்ற உள்ளூா் மின்சார வாகன நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், சீனாவில் டெஸ்லா கார்களின் விற்பனை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உயர்ரக மின்சார வாகனப் பிரிவில் தனது முன்னணி நிலையைத் தக்கவைக்க, வாகனங்களின் விலையை 6 சதவீதம் வரை டெஸ்லா குறைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் இப்போது தன்னாட்சி ஓட்டுநர் தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி அல்காரிதம்களை தரம் உயர்த்த அதன் தரவுகளை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கான ஒப்புதலை நாடுகிறார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
படிக்க: சீன ஆக்கிரமிப்பை வேடிக்கை பார்க்கும் மோடி! கிழிந்து தொங்கும் தேசபக்த வேடம்!!
எலான் மஸ்க் சீனாவிற்கு சென்றது தொடர்பான மேற்கண்ட செய்திகளைப் பார்க்கும்போது இந்தியாவில் கிடைக்கப் போகும் இணைய சேவை தொடர்பான ஒப்பந்தத்தை விடவும் சீனாவில் இருந்து தகவல் தொடர்பான ஒப்பந்தம் முக்கியமானதாக இருந்திருக்கலாம். மேலும் அதனைப் பெற இந்தியாவுக்கு வந்துவிட்டு சீனாவுக்குச் செல்வதை சீன அரசு விரும்பாது என எலான் மஸ்க் கருதியிருக்கக் கூடும் அல்லது பில்கேட்ஸுடனா சந்திப்பை தனது தேர்தல் நோக்கங்களுக்காக பாசிச மோடி பயன்படுத்திக் கொண்டதைக் கண்டு தனது வருகையை அப்படிப் பயன்படுத்த விரும்பாமல் இந்தியாவிற்கு வராமல் போயிருக்கலாம் அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தோற்று வெளியேறப் போகும் பிரதமரை சந்திக்கத் தேவையில்லை என்றும் முடிவெடுத்திருக்கலாம்.
இதில் எந்தவொரு காரணமாக இருந்தாலும் தனது வருகையை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டார் எலான் மஸ்க் என்பதே எதார்த்தம். இதைத் தொடர்ந்துதான் தன்னைத் தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி நடப்பதாக பிதற்றினார் நரேந்திர தாமோதர் தாஸ். அதற்கு ஆதாரமாக வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் இந்தியாவில் நடைபெற்றுவரும் சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதைக் காட்டுகிறார். இந்த சதியின் ஒரு பகுதியாக இப்போது எலான் மஸ்க் வருகை நிறுத்தமும் மாறியுள்ளது.
இந்தியாவின் உள்ள அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளும் சரி! உலக அளவில் உள்ள எலான் மஸ்க் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளானாலும் சரி! தன்னுடைய லாப வேட்டையை தான் முதன்மையாக கொண்டு செயல்படுவார்கள், தனது லாப வேட்டையை உத்தரவாதப்படுத்துகின்ற, அமைதியான சூழலை உருவாக்கித் தருகின்ற அரசாங்கங்களை தான் எப்போதும் ஆதரித்து முன்னிறுத்துவார்கள் என்பது தான் நிதி மூலதனத்தின் வரலாறாகும்.
பாசிச மோடி கும்பலை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி தேவையில்லை. மக்கள் போராட்டங்களில் மூலம் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு மக்களை அணி திரட்டி வருகின்ற புரட்சிகர அமைப்புகள் கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மாற்றுத்திட்டத்தின் அடிப்படையில் மக்களை ஓரணியில் திரட்டுவதே முதன்ம்மை பணியாகும்.
- புலவேந்திரன்