பெட்ரோல் டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டுமாம்!


சாத்தான் வேதம் ஓதுகிறது!

மோடி பெட்ரோல் மீதான கலால் வரியை ஏற்கனவே குறைத்து விட்டாராம்.  ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தான் வாட் வாரியை குறைக்காமல்  இருப்பதாக பாசிஸ்ட் மோடி புலம்பியுள்ளார்.

இதன் மூலம் மாநிலங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது வரிச்சுமையை தொடர்ந்து ஏற்றி வருவதைப்போல முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

பெட்ரோல் விலையில் உயர்வது எப்படி?

கச்சா எண்ணெய் விலை உயர்வதால் அல்ல. பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதிலிருந்து பெட்ரோலை பிரித்து எடுத்து ஏற்றுமதி செய்கிறார் ரிலையன்ஸ் அம்பானி.

ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்  மூலம் குஜராத் துறைமுகத்தில் அம்பானி விற்கும் பெட்ரோலுக்கு ரூபாய் 40 க்குள் தான் விலை வைக்கிறார். நாடு முழுவதுமுள்ள தனது பெட்ரோல் பங்கில் அதே பெட்ரோலை நமக்கு மட்டும் 110 க்கு விற்கிறார்.

இதையேதான் பாரத் பெட்ரோலிலியமும், இந்தியன் ஆயிலும் செய்கின்றன. இதில் மக்களிடம் வழிப்பறி கொள்ளை அடிக்கும்  முழு பணத்தையும் அம்பானி கணிசமாக எடுத்துக்கொண்டு அரசுக்கு கையை காட்டுகிறார்.

அரசுகள் நடத்தும் வழிப்பறி :

நாம் போடும் பெட்ரோலில் இருந்து ஒரு லிட்டருக்கு தரும் பணத்தில் பெரும் தொகை வரியாக போகிறது. மோடி கும்பல் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீது 200% டீசல் மீது 500% கலால் வரியை போட்டுக் கொள்ளையடிக்கிறது.

பெட்ரோலின் உண்மை மதிப்பிற்கு மேல்  230% வரியாக மட்டும் அரசுகள் பிடுங்கிக்கொள்கின்றன . மாநில அரசை குற்றம் சுமத்துவதற்கு முன்னால் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த விலைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தயாரா என்று மோடி கும்பலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுகவின் பழனிவேல் தியாகராஜன்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க மோடி வித்தை காட்டுகிறார். மோடி வித்தையை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ளலாம்.

அதாவது ஒவ்வொரு முறை பஸ்ஸில் ஏறும் போதும் ஒரு பிக்பாக்கெட் காரன் நமது சட்டையில் இருந்து நூறு ரூபாயை பிடுங்கிக் கொள்கிறான். போனால் போகிறதென்று பத்து ரூபாயை திருப்பி தந்துவிட்டு மற்றொரு கூட்டாளியிடம்  “நீயும் ஒரு ஐந்து ரூபாய் கொடு: அவன் டீ சாப்பிட்டுக் கொள்ளட்டும்” என்று கூறினாள் எந்த அளவிற்கு பிக்பாக்கெட் காரன் நேர்மையானவனோ அதுபோலத்தான் மோடி வித்தையும்.

அந்த பிக்பாக்கெட்காரன் கதை போல “மாநில அரசுகள் வரியை குறைக்க வில்லை” என்று மோடி கும்பல் திடீர் கரிசனம் காட்டுவதற்கும் கலால் வரி, வாட் வரி குறைப்பு கோரிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

லோக்கல் சரக்கை ஃபாரின் சரக்கு விலைக்கு விற்பது:

வளைகுடா பெட்ரோல்தான் 30 ரூபாய் குறைந்தபட்ச விற்பனை விலை ஆகிறது. சில்லறை விற்பனையில் கிரிக்கெட் ஸ்கோர்போல செஞ்சுரி அடிக்கிறது.

ஆனால் இந்தியாவில் பன்னா முக்தா  படுகை, கோதாவரி கிருஷ்ணா  படுகை, நாகை நரிமணம் எண்ணெய் படுகை ஆகியவற்றில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் என்னவாகிறது? அதில் தயாராகும் பெட்ரோல் விலை என்னவென்று நமக்கு சொல்கிறார்களா?

உள்ளூர் கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கும் பெட்ரோலுக்கும் அதே 110 ரூபாய் விலை வைப்பது எந்த வகையிலும் நியாயமானது இல்லை.

அதாவது ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிளும் ஊட்டியிலிருந்து கோயம்பேடு வரும் ஆப்பிளும் ஒரே விலையில்  – இறக்குமதி ஆப்பிளின் விலைக்கே விற்கப் படுவது எப்படி சரியானது?

இதையெல்லாம் பெட்ரோலியத்துறையில் இருக்கும் மனசாட்சி உள்ளவர்கள் பரிசிலிக்க வேண்டும். அத்துறையிலுள்ள சங்கங்கள் இதை அம்பலப்படுத்த வேண்டும்.

கார்ப்பரேட்களின் வழிப்பறிக் கொள்ளையை மறைப்பதை புரிந்து கொள்வோம். காவி பாசிஸ்டுகளின் முதலைக்கண்ணீரை இனம்காண்போம்!

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here