இமாச்சலப்பிரதேசத்தில் வரும் நவம்பர் 12 , 2022 – ல் தேர்தல். தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜக – வை எதிர்த்து      அரசியல் கருத்து வேகமாகத் திரண்டுவருகிறது.

மாநிலத்தில்   ஓராண்டில் 5500 கோடிக்கு வருவாய் கொடுக்கிற, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தருகிற   முதன்மையான ஆப்பிள் விவசாய உற்பத்தி ஒன்றிய, மாநில அரசாங்கங்களால்  தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது; விலைவாசி உயர்ந்து, வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது.  இதுதான் அங்குள்ள கொந்தளிப்பான நிலைமை. அந்தப் பகுதிக்கே ஆப்பிள் கிண்ணம் என்று பேர். கிண்ணம் இப்போது கொதிக்கிறது.

தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வரவு – செலவு ( பட்ஜெட் ) திட்டம் போடுகிறார்கள். அதிலேயே எல்லா சிக்கலையும் கணக்கில் எடுத்துக்கொண்டுவிட்டால்  பிறகு ஏன் பிரச்சினை வருகிறது ?  வேண்டப்பட்ட பணக்காரன்/ முதலாளிகளுக்கு  ஆட்சியா, மக்களுக்காக ஆட்சியா என்பதுதான் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. அதாவது,  இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு என்ன வேண்டும் என்பதிலிருந்து தொடங்கியிருந்தால் பிரச்சினையே இல்லை.  அப்படிச் செய்யவில்லை. விவசாயிகளை ஒதுக்கச் சொல்லிக்கூட நம்ம ஏழை நாட்டுல ஒருத்தன் சொல்லமுடியுமா ? அப்படி அரசுக்குச் சொல்லித்தரும்  ‘சாணக்கியன்’ யார் என்று  விசாரிச்சுத் துப்பு அறியவேண்டும்.

ஆப்பிள் விவசாயிகள் கேட்பது எளிய கோரிக்கைகள். பயிர்    நன்றாக வளரணும், விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கணும்.  பாரம்பரிய விவசாயிகள் வேறு பெரிய கற்பனைகளில் இல்லை. குறிப்பான  வேறு சில அடிப்படைகள் அவர்களுக்குத் தேவை. அவற்றைப் பார்ப்போம் :

ஆப்பிளை அழிக்கும்  பூஞ்சையிலிருந்து பயிரைக் காப்பாற்ற மருந்து தெளிக்கவேண்டும். அதற்கான மானியத்தை ஒன்றிய அரசு வெட்டிவிட்டது.  (காரணம் ஒன்றிய பட்ஜெட்டில் ஒவ்வாத  செலவுகளை/ மானியங்களை  வெட்டச்சொல்லி உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம் இரண்டும் உத்தரவு போட்டுவிட்டது, யாரும் அதை  மீறக்கூடாது, அதாவது மீறமுடியாது.)  இனி, மானியம் கிடையாது,  முதலுக்கு எங்கே போய் எந்தக் கதவைத் தட்டுவார் விவசாயி ?

இமாச்சலப்பிரதேச ஏழை விவசாயிகளின் உழைப்பு விளைச்சல்.

**மேலும் உரம், பூச்சிமருந்து, அறுவடைக்குப் பிறகு அரசு  குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிட்டங்கிகள் இவைகளைப்  போராடி ஒவ்வொன்றாகப் பெறுவதற்குப் பல பத்தாண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் பெற்ற அத்தனைப் பலன்களையும் ஒரே வெட்டில் சாய்ப்பது போல, அரசு எல்லாவற்றையுமே  தனியாருக்கு  மாற்றிவிட்டது. ஏழை விவசாயிகளுக்கான மானியங்களை கைகழுவியது; கிட்டங்கிகளைத் தனியாருக்கு ஒதுக்கியதால்  சந்தையில் ஏழை விவசாயிகள்  விளைந்த  பழங்களை விற்பதற்கு அரசிடம் போய் நின்றனர் ; உடனே விற்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலை ; அரசோ ஆதரவு விலையை  கடைசிநேரத்தில் கிலோ ஒன்றுக்கு  உற்பத்திச் செலவை விடக் குறைவாக அறிவிக்கிறது . இதிலேயே  துண்டு விழுந்தால் , அறுவடைக்குப்பிறகு கூடுதலாகப்  போக்குவரத்து மற்றும் உதிரிச் செலவை எப்படித் தாக்குப்பிடிப்பது என்று ஏழை விவசாயிகள் தவிக்கிறார்கள்.

**ஆப்பிள் விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கையில் வெளிநாட்டிலிருந்து  இறக்குமதியாகும் ஆப்பிள்மீது 100% வரி போடுவோம் என்று  ஒன்றியம் சொன்னது. ஆனால் செய்யவில்லை,  அது பொய் வாக்குறுதி. அந்தப் போட்டியையும் விவசாயி சமாளித்து முடிவு எடுக்கவேண்டும்.

இன்னொன்றும் சொன்னார் மோடி : ” பெப்சி கோலா பானத்தில் ஆப்பிள் ஜூஸ் கலந்து விற்கச் சொல்வேன் .” அது தமாஷ் – பொய் கலந்த  வாக்குறுதி. அந்தக் கம்பெனி தனி ஃபார்முலா வைத்து தயாரிக்கும்போது  ஆப்பிள் ஜூஸை எப்படிக் கலப்பார்கள்  என்று படிக்காத பாமர விவசாயிகள் கேட்கிறார்கள்.

** ஒரு பெட்டி ஆப்பிள்  மதிப்பின்மீது 18% ஜிஎஸ்டி வரி,                 தோல்உரிக்கும் வரி,  யாரையோ வாழவைக்க எங்களை ஏன்டா  உரிக்கிறாய் என்று கதறுகிறார்கள்.

** இமாச்சல் பிரதேஷ் ஆப்பிள் மெக்கின்டோஷ்  ரகம் என்பார்கள். 1838 – ல் இங்கிலாந்து லிவர்பூலில் இருந்து கொண்டுவரப்பட்ட  ஆப்பிள் பயிர் டேராடூன் முஸூரிக்குக் கொண்டுவரப்பட்டுப் பயிரிடப்பட்டது. சிறப்பு என்ன ? மிருதுவான ஏடுபோல  தோல், மாவுபோலப்  பதம் கொண்ட மங்கல் வெள்ளை நிறக் கதுப்பு.

இந்த மார்கெட்டில் அமோகவிளைச்சல் (HyV) ரகங்களில் நுழைந்தால் லாபம் என்று  அம்மாநில  நிலவரம் அறிந்துகொண்டார் அதானி. அறிவியல்பூர்வமான விளைச்சல்  முறைகளில்  பயிரிட  மூலதனம் அதிகம் வேண்டும். அரசு உதவாமல் உற்பத்தி செய்யமுடியாது.  மானியத்தோடு நிலம், சீரான குளிர்  ஊட்டிய  கிட்டங்கிகள் கட்ட  அரசு மானியம் என்பதையெல்லாம்  மோடிமூலம் அதானி பக்காவாகஉறுதிப்படுத்திக்கொண்டு கிட்டங்கிகளை  உடனே கட்டினார்.  ஏழை விவசாயிகள், தங்கள் கண் எதிரேயே  தாங்கள் இத்தனைக்காலம் பெற்ற மானியத்தை எல்லாம் கொத்தாகப் பிடுங்கி  ஒரே ஆளுக்கு அரசு  கொடுக்கிறதே,  நமக்கான மானியத்தை வெட்டிவிட்டதே, என்னடா சட்டம்  என்று கொதிக்கிறார்கள்.

மோடி மானிய அருள் ஆசியோடு அதானியின் குளிர் சேமிப்புக் கிட்டங்கி . இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் கொள்ளையன் அதானி.

10% உள்நாட்டு கொழுத்த பணக்காரர்களின்  நுகர் சந்தை மற்றும்  உலகச்சந்தையைக் குறிவைத்துப்  பண்ணைகள் தொடங்க அடியெடுத்துவைத்துள்ள அதானி எப்படிக் கொள்ளையை ஆரம்பித்துள்ளார் பாருங்கள் !

இந்தப் பிராந்தியத்தில் அதானி வாங்கும்  ஆப்பிள் விலை கிலோ  ரூ.70 என்றால் விற்கும் விலை கிலோ  ரூ. 300. அதானி தந்திரம் ரொம்ப நுணுக்கமானது. விவரம் இதோ  :

80 முதல் 100 % கண்ணுக்கு நிறைவான சிவப்பு : கிலோ ரூ  42  முதல்  ரூ 72 வரை ;

60 முதல்  80 % குறை சிவப்பு  : கிலோ  ரூ 27 முதல்  57 வரை;

60 – ல் மட்ட நிறம்  : கிலோ 15 ரூபாய் ;

அதைவிட மட்ட அளவும் நிறமும் : கிலோ 12 ரூபாய்.

இவ்வாறு போட்டியில் முந்திக்கொண்டு எல்லா ரகங்களையுமே  வாரி அள்ளி முடித்துக் கொண்டுவிடுகிறார் அதானி .   “தோட்டத்துக்கு அருகே அதானி மார்க்கெட் இருக்கிறது ,   உத்திரவாதமான  சக்தியுள்ள கோடீசுவர தரகனான, முகவரான அதானி நமக்காக இருக்கிறார் .  வேறு உள்ளூர் தனியார் மண்டிகள் நம்புவதற்கே இல்லை. மரத்திலேயே பழத்தை விட்டுவிட்டு  மார்க்கெட் கணக்குப் போடுவது  ஆபத்து. அதானியை நம்புங்கள். “என்று பரப்பப்படும் கருத்துக்கு சிலர் மயங்கி அதானியின் கிட்டங்கிக்குச் செல்கிறார்கள். ஆனால்,  ஏழை விவசாயிகள்  இதற்குப் பணியாமல்” விவசாய விளைபொருள் சந்தைக் கமிட்டி ( APMC ) ” என்றழைக்கப்படும்  ஸோலோன், பர்வானூ பகுதிகளின் அரசுக் கமிட்டிகளிடம் சென்று கிலோ ஆப்பிள் 90 முதல் 125 வரையிலான ஓரளவு நியாயமான விலைக்குப் போட்டிருக்கிறார்கள். இவற்றை ஒருமித்த போராட்டம்( 1990 ) மூலம் அவர்கள் பெற்ற வெற்றியின்  நீட்டிப்பாகவே கருதுகிறார்கள். அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அரசுக்கமிட்டிகள் அதானியின் பக்கம் சாயமாட்டார்கள் என்பது நிச்சயமானதா ? இது ஏழைவிவசாயிகளின் தொடர்ந்த ஒற்றுமையைப் பொறுத்தே இருக்கிறது.

1990 ல் ஏழை ஆப்பிள் விவசாயிகள் போராட்டம்.

எப்படி இருந்தாலும் போக்குவரத்துச் சாலைகள் ஒழுங்கின்றி இருப்பதும் அவற்றுக்கு ஆகும் செலவை, இழப்பைச் சமாளிக்க முடியாமல் திணறுவதும் தொடரவே செய்கிறது. அரசே பொறுப்பெடுத்து பகுதிக்கே வந்து கொள்முதல் செய்தால் என்ன என்று முழக்கம் எழுப்பி,  விவசாயிகள் கமிட்டி  உருவாகி உரிமைக்குப் போராடவேண்டும்; ஆனால், அவர்கள் அரசியல் தெளிவு அத்திசையில் நகரவில்லை ; 1990களில்   போராட்ட வெற்றி கிடைத்தபோது வெற்றியை  (1993 இடைத் தேர்தலில்  அப்போதைய முதல்வரை வீழ்த்தி) தேர்தல் வெற்றியாகமட்டுமே அறுவடை செய்யமுடிந்தது; வெற்றி அடைந்தவர் சிபிஐ (எம்) வேட்பாளர்; பழைய நக்சல்பாரி ஆதரவுகள் அங்கே குறைந்துபோய்விட்டன;  விவசாயப் போராட்டங்களை அரசியல்ரீதியாக வளர்க்காததால் நாடாளுமன்ற வாதத்துக்கும் மந்தத்துக்கும் பணிய நேர்ந்துள்ளது ; தவிர, இப்போது அதானி பகுதியில் நுழைந்தபிறகு  கார்ப்பரேட் ஏகபோகத்துக்கு எதிரான போராட்டமாக இன்று  கொண்டு செல்லவும் இயலாமல் ,  இருக்கிற நிலைமையைச் சமாளித்தால் போதும் என்று  கிட்டப்பார்வையில் மட்டும் கணக்குப் போட்டு தடுமாறி  நிற்கின்றனர்.

மோடி – ஆதரவு அதானி வளர்ச்சியா,  ஆப்பிளோடு  பலவகைத் தோட்டப்பயிர்களையும்  கொண்ட ஒருங்கிணைந்த ஏழை விவசாயிகளின்  அரசியல் தொலைநோக்கு கொண்ட அரசியல் தொலைநோக்கு கொண்ட விவசாயக் கமிட்டிகளின் வளர்ச்சியா?  பின்னதற்கு  பாட்டாளிப்பார்வையும்  அதை முழுமையாக முன்வைத்த  கார்ப்பரேட் – காவிப்பாசிச எதிர்ப்புமே  அடியுரம் கொடுக்கும் !

நவம்பரில் என்ன நடக்கும் ?

” மீண்டும் பாஜகவுக்கே ஓட்டு! ” என்ற ஒற்றை முழக்கத்தோடு தற்போதுள்ள  பாஜக ஆட்சி குத்துச் சண்டையில் குதிக்கிறது, பணக்கார விவசாயி, அதானிப் பணமூட்டை பக்கபலமாக இருக்கலாம். ஆனால் ஏழை விவசாயிகளின் போராட்ட நினைவுகளும்  அக்டோபர் 1991 போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட   3 சக தோழர்களின் நினைவுகளும்  ” பாஜகவுக்கு வைப்போம் வேட்டு!” என்ற முழக்க  முத்திரையை நிச்சயம் பதிக்கும் என நம்புவோம் !

ஆக்கம் : இராசவேல்.

ஆதாரங்கள் :  அக்டோபரில் வெளியான தரவுகள் ராஜேஷ் சந்தர், இந்தியன் எக்ஸ்பிரஸ்;

தி ஒயர். இன் ;

டிரிப்யூன் இந்தியா. காம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here