அவர்கள் இந்தியாவை துருவப் படுத்த ( Polarise செய்ய) முயல்கிறார்கள் – முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்!


ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (RSS) எனும் இந்துத்துவ பயங்கரவாத அமைப்பில் 30 ஆண்டுகள் காலத்தைக் கழித்த மூத்த உறுப்பினரான யஷ்வந்த் ஷிண்டே என்பவர், இப்போது மனம் திருந்திய நிலையில் ( மதவெறி கருத்துகளால் மூளை மழுங்கடிக்கப்பட்ட ஒருவர் இப்படி மாறுவது மிகவும் அபூர்வமானது) 2006 – ல் மகாராஷ்டிராவின் நான்டேடில்  ஒரு வீட்டில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை சாட்சியமாக ஆக்குமாறு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் உள்ள மிக முக்கிய குற்றச்சாட்டு, பிஜேபி கட்சியின் தேர்தல் வெற்றிக்காக RSS, VHP போன்ற இந்துத்துவா அமைப்புகள் நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தின என்பதாகும். 2006 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் நான்டேட் மாவட்டத்தில் VHP யின் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள்ளின் ஊழியர்கள் இருவர் வெடிகுண்டு தயாரிக்கும் போது குண்டு வெடித்து பலியாகினர்.

ஷிண்டே தனது வாக்கு மூலத்தில், அவர்கள் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு பெரிய மசூதியை தாக்குவதற்காக வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்ததாக கூறியுள்ளார். இறந்தவர்களில் ஒருவரான ஹிமான்ஷூ பன்சே தனது நீண்டகால கூட்டாளியாக இருந்தார் என்றும், 1999 ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி இந்திரேஷ் குமாரின் வழிகாட்டலில் ஹிமான்ஷூ உள்ளிட்ட ஏழு நபர்களை ஜம்முவிற்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். இது குறித்து scroll இணையதளம் சார்பில் பலமுறை கருத்து கேட்க முயன்றும் இந்திரேஷ்குமார் பதில் அளிக்கவில்லை.

இந்திரேஷ் குமார்

அதன் பிறகு 2003-ல் தன்னுடன் ஹிமான்ஷுவும்  புனேவில் நடைபெற்ற வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொண்டதாக ஷிண்டே கூறியுள்ளார். இந்த முகாமில் மூளையாகவும் முக்கிய அமைப்பாளராகவும் செயல்பட்ட மிலிந்த் பரண்டே இப்போது VHP-ன் தேசிய அமைப்பாளராக உள்ளார். முகாமின் முக்கிய பயிற்சியாளரான மிதுன் சக்கரவர்த்தி (அவரது உண்மை பெயர் ரவிதேவ் ஆனந்த்)  இப்போது உத்தரகாண்ட் விஹச்பியின் தலைவராக உள்ளார். இந்த முகாமுக்கு காலை 10 மணிக்கு வரும் மிதுன் சக்கரவர்த்தி வெவ்வேறு குழுக்களுக்கு பயிற்சி அளிப்பார். வெடிகுண்டுகள் தயாரிக்க மூன்று, நான்கு வகையான வெடி மருந்துகள், கம்பிகள், பல்புகள், கடிகாரங்கள், சிறு குழாய்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

“வெடிகுண்டு பயிற்சி முடிந்தவுடன் பயிற்சியாளர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனிமையான வனப் பகுதிக்குள் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை சோதனை செய்யச் சென்றனர். அங்கு சிறு குழி தோண்டி அதில் வெடிகுண்டை, டைமர் கருவியோடு வைத்து மண்மூடி அதன் மேல் பெரிய பாறாங்கற்களை வைத்து வெடிக்கச் செய்தனர் அந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது” என வாக்குமூலம் அளித்துள்ளார் ஷிண்டே. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு பரண்டேவோ, ஆனந்தோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையும் படியுங்கள்: நரக மாளிகை  நூல் அறிமுகம்

ஷிண்டே மேலும் கூறுகையில், இந்த பயிற்சிக்குப் பிறகு ஹிமான்ஷு பான்சேவிடம் குண்டு வெடிப்புகளில் ஈடுபட வேண்டாம் என்றேன். ஆனாலும் அவர் மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் 3 குண்டு வெடிப்புகளை நடத்தினார். மேலும் அவர் அவுரங்காபாத்தில் உள்ள முக்கிய மசூதி ஒன்றில் பெரிய குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டு, அதற்கான குண்டு தயாரிப்பின் போதுதான் தனது உயிரை இழந்தார். ஷிண்டே தனது பிரமாண பத்திரத்தில் குற்றம் சாட்டியதில் பெரும்பாலானவை மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு படையின் (ATS) குற்றப்பத்திரிகையை ஒத்திருக்கின்றன.

இருந்த போதிலும் இந்த வழக்கை 2013-ல் எடுத்துக்கொண்ட மத்திய புலனாய்வு குழு (CBI) நான்டேடில் நடந்த வெடிப்பு சம்பவம் ஒரு தனிப்பட்ட தற்செயல் நிகழ்வு எனக் கூறி குற்றப்பத்திரிக்கையையே மாற்றியது. ஆனால் ஷிண்டேவின் வாக்குமூலம் இதற்கு நேர் எதிராக உள்ளது. ஷிண்டேவின் கூற்றுப்படி வெடிகுண்டு தயாரிக்கும் முகாமில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான ராகேஷ் தவாடே என்பவர் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்தான். 2007-ல் நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பும், 2008-ல் மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பும் ஒரே சதியில் இருந்து உருவானவைதான் என்கிறார் ஷிண்டே.

மலேகான் குண்டுவெடிப்பில் கைதான இப்போதைய பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூர்

ஆர்எஸ்எஸ் இன் மூத்த நிர்வாகிகளில், தற்போதைய தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலரை தான் சந்தித்து பேசியதாகவும், அப்போது பண்டேராவின் சூழ்ச்சிகளைப் பற்றி எச்சரித்ததாகவும் ஆனால் அவர்கள் யாரும் காது கொடுத்து கேட்கவில்லை என்றும் ஷிண்டே கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் விஹச்பியின் மூத்த தலைவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிப்பதாகவும், 2014 ஆம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்ட விதத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கிறார்.

இப்போது இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது ஏன் என்ற கேள்விக்கு “ஆர்எஸ்எஸ்-ஐ சுத்திகரிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தால் உந்தப்பட்டு இம்முடிவை எடுத்தேன். சமீப காலங்களில் தவறானவர்களின் கைகளில் அமைப்பு சென்று விட்டது” என்கிறார் ஷிண்டே. ஏன் இவ்வளவு காலதாமதம் என்பதற்கு, தான் இதயபூர்வமாக ஆர்எஸ்எஸ் காரன்தான் என்றும் இந்துத்துவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டிருந்ததால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த விரும்பாமல் இருந்ததாகவும் கூறினார்.

இது குறித்து பல மூத்தவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்லி கடுமையாக முயற்சித்தும் அது பலன் அளிக்கவில்லை எனக் கூறும் இந்த 49 வயதான ஷிண்டே, தற்போது வேலையில்லாமல் தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசிக்கிறார்.  RSS – ல் தனது முதல் 9 ஆண்டுகளை ஜம்மு காஷ்மீரில் இந்திரேஷ்குமார் பயிற்சியின் கீழ்  கழித்த அவர், 1999-ல் மும்பைக்கு திரும்பியதும் பஜ்ரங் தளின் தலைவராக நியமிக்கப்பட்டார். தான் 13, 14 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமைப்பு செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்பதை நிறுத்தி விட்டதாகவும் ஆனால் உறுப்பினராக நீடித்ததாகவும் கூறுகிறார்.

தற்சமயம் நிலைமைகள் மிகவும் மோசமாக மாறியுள்ளன. அவர்கள் ஆட்சியில் நீடிக்க நாட்டை துருவப்படுத்துகிறார்கள். எனவேதான் நான் இதை செய்ய வேண்டும் என நினைத்தேன். மேலும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும் முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா- வுக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறுகிறார். நீங்கள் சொல்வதை எல்லாம் எப்படி நம்புவார்கள் என்ற கேள்விக்கு ஷிண்டே,” சங்பரிவாரில் உள்ள நிறைய பேர் தலைவர்கள் மீது வருத்தத்தில் உள்ளனர். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் தாங்கிக் கொண்டுள்ளனர். ஆனால் நான் இப்போது பேசி இருக்கிறேன். விரைவில் அமைப்புக்குள் ஒரு வெடிப்பு ஏற்படுவதை காண்பீர்கள். நான் பேசுவது உண்மை என அனைவரும் புரிந்து கொள்வார்கள்” என்கிறார்.

இதையும் படியுங்கள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மீள்பதிவு!

ஷிண்டே கூறும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. பாஜக ஆட்சி அதிகாரத்தில் தொடரவும், அவர்களது இந்து, இந்தி, இந்தியா மற்றும் அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றவும் எதையும் செய்வார்கள் சங்கிகள் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்தான் இந்த பிரமாணப் பத்திரம். இதே போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் வேறொரு அமைப்பின் மீது வந்திருந்தால் இந்நேரம் தேசிய விவாதமாக மாறி அந்த அமைப்பே தடை செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் ஆர்எஸ்எஸ் விஷயத்தில் இது அரங்கேறுமா என்ன? ஏற்கனவே குஜராத்தில் இவர்களால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையும், அதை அரங்கேற்றியவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலங்களும் வீடியோ ஆதாரமாக இருந்த போதிலும், குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்படும் அநியாயத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதேபோல சம்ஜவுதா ரயிலிலும், மாலேகனிலும், அஜ்மீரிலும் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்று 2010 – ல் அசீமானந்தா எனும் சாமியார் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமும் மோடியின் ஆசியால்  நீர்த்துப்போக வைக்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படி பல்வேறு சம்பவங்களில் அநீதி இழைக்கப்படுவதை நாம் கையறு நிலையில் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.

இந்த ஒப்புதல் வாக்குமூலமும் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான அனைத்து வெகுஜன ஊடகங்களும் ஏன் இது குறித்து பேச மறுக்கின்றன? தனது தீவிரவாத செயல்பாடுகளுக்காக ஏற்கனவே மூன்று முறை தடை செய்யப்பட்ட ‘புகழ்’வாய்ந்த அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீண்டும் தடை செய்யப்படுவதுதான் நாட்டுக்கு நல்லது. மக்களின் எழுச்சிகரமான போராட்டங்களில்தான் அதை சாதிக்கும் வல்லமை அடங்கியுள்ளது.

செய்தி ஆதாரம்: scroll.in இணைய இதழ்.

தமிழில் ஆக்கம் : குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here