சாத்தான்குளம்
காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் இந்தக் கொடூரக் கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் படுகொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ள மரண தண்டனை தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த தீர்ப்பு மேல்முறையீட்டில் குறைக்கப்படலாம். ஆனால் மிக முன்னுதாரணம்மிக்க, வானளாவிய அதிகாரம் கொண்டதாக தன்னை நினைத்துக் கொள்ளும் காவல்துறையின் அதிகாரம் மமதையில் விழுந்த சம்மட்டி அடியாகும்.

சாத்தான்குளம் பென்னிக்ஸ்- ஜெயராஜ் படுகொலை என்பது காவல்துறையின் கோர முகத்தையும் அது ஒரு அடக்குமுறை இயந்திரமாகச் செயல்படுவதையும் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திய சம்பவமாகும். இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதியையும், அதற்குப் பின்னால் இருக்கும் காவல்துறையின் அதிகாரத் திமிரும் மக்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

அரசு பயங்கரவாதத்தின் சாட்சி: சாத்தான்குளம் தீர்ப்பு

காவல்துறை உலகம் முழுக்கவே மக்களுக்கு எதிரான, அவர்களிடமிருந்து அந்நியப்பட்ட ஒரு அமைப்பாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டு மக்களும் அவர்களே புரிந்துக் கொள்ளும்படியான அனுபவத்தையும் காவல்துறை வழங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் காவல்துறை செய்த அடக்குமுறை படுகொலைகள் ஏராளம். வாச்சாத்தி, ஸ்டெர்லைட், சாத்தான்குளம், மாஞ்சோலை என பல உதாரணங்கள் உள்ளது. அதில் சாத்தான்குளம் நம் கண் முன் உள்ள சாட்சியாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டு தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மார்ச் 23, 2026 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைத்து காவலர்களும் “குற்றவாளிகள்” என்றும், இது தற்கொலையோ அல்லது இயற்கையான மரணமோ அல்ல, திட்டமிடப்பட்ட “கொலை” என்றும் நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் இந்தக் கொடூரக் கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இந்தத் தீர்ப்பில் லத்திகளில் இருந்த ரத்தம் டிஎன்ஏ ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்த ரத்த மாதிரிகளும் மிக முக்கிய ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டன.

போலீசின் அதிகாரத் திமிரும் காட்டுமிராண்டித்தனமும்

இந்தக் கொலைகளின் பின்னணியைப் பார்த்தால், காவல்துறையினர் மக்களைப் பாதுகாக்கும் நண்பர்கள் அல்ல, மாறாக அதிகாரத் திமிர் கொண்ட பாசிச மனப்பாங்கு கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது. கொரோனா காலத்தில் கடையைச் சற்று கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, எவ்விதக் காரணமுமின்றி ஜெயராஜைக் கைது செய்தனர்.

தனது தந்தையைக் கைது செய்ததைத் தட்டிக்கேட்ட பென்னிக்சையும் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளை அரங்கேற்றினர்.

படிக்க:

 பெனிக்ஸ் – ஜெயராஜ் கொலை வழக்குத் தீர்ப்பும் நிரந்தர தீர்வும்: மா-லெ பார்வை

 திருப்புவனம் –காவலாளி அஜீத் குமார் அடித்துப் படுகொலை! தமிழ்நாடு போலீசு படு அட்டூழியம்!

ஊரே மயான அமைதியாக இருந்த அந்த இரவில், காவல் நிலையத்திலிருந்து இவர்களின் அலறல் சத்தம் தெரு முழுவதும் எதிரொலித்ததாக அப்பகுதி மக்கள் சாட்சியம் அளித்தனர்.

சித்திரவதையின் காரணமாகக் கடுமையான ரத்தப்போக்கு இருந்தபோதிலும், பொய் வழக்குகளைப் புனைந்து அவர்களைக் கோவில்பட்டி சிறைக்கு அனுப்பினர். இதில் அரசு மருத்துவர் உடல் தகுதிச் சான்றிதழ் வழங்கிக் காவல்துறையினருக்குத் துணையாகச் செயல்பட்டது கிரிமினல் தனத்தின் உச்சமாகும்.

கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்ததற்காகத்தான் இருவரும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனரா? இல்லை. “விலையுயர்ந்த செல்போனை இலவசமாகத் தரும்படி சாத்தான் குளம் போலிசார் ஜெயராஜிடம் கேட்டதற்கு, அவர் மறுத்திருக்கிறார். இதற்குப் பாடம் புகட்டுவதற்குத்தான் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் சித்திரவதை செய்து கொன்றுவிட்டதாக” ஜெயராஜின் மகள் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

காவல்துறை: Trained Dogs

ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரையும் கைகளை கயிற்றால் கட்டி மேலிருந்து தொங்கவிட்டு தாக்கி உள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்கி உள்ளனர். இருவரையும் காவல்துறையினர் தாக்கும் போது நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்துள்ளனர் எனவும், இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என்றும் காவல்துறையினர் அவர்களுக்குள் பேசியுள்ளனர்.

முதல் குற்றவாளியான ஸ்ரீதர், அடிக்கச் சொல்லி கூறினார். அடிப்பதை யாரும் பார்க்கிறார்களா என்பதை கண்காணிக்க காவல் நிலையத்தில் வெளியே இருந்து தாமஸ் பிரான்சிஸ் கண்காணித்து வந்தார் என குற்றப்பத்திரிகையில் உள்ளது.ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்னை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் கொடூரமாக  தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியும் அடக்குமுறை எந்திரமும்

சிபிஐ விசாரணையின் போது காவல்துறையினர் நடந்து கொண்ட விதம், அவர்கள் தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதுவதை உறுதிப்படுத்தியது. குறிப்பாக, இந்த விவகாரத்தை விசாரிக்கச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனை ஒரு காவலர் “உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது” என்று திமிராகப் பேசியது, காவல்துறையின் அதிகாரத் திமிரைக் காட்டுகிறது.

படிக்க:

 வேப்பந்தட்டை பட்டியல் இன இளைஞர் படுகொலை! சாதிவெறியர்களுக்குத் துணை போன காவல்துறை!

 கொலைகார ஸ்டெர்லைட்டிற்கு அடியாள் வேலை பார்க்கும் தூத்துக்குடி காவல்துறை!

மேலும், சாட்சியங்களை அழிக்கச் சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் தினந்தோறும் அழியும்படி மாற்றப்பட்டிருந்ததும் அம்பலமானது.

காவல்துறை என்பது எப்போதுமே ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாயாகவே இருந்து வந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடங்கி சாத்தான்குளம் படுகொலை வரை, காவல்துறையின் நடவடிக்கைகள் யாவும் உழைக்கும் மக்களையும், எளியவர்களையும் ஒடுக்கி, கார்ப்பரேட் மற்றும் ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

சீர்திருத்தம் தீர்வாகுமா? கட்டமைப்பைக் கலைப்பதே முடிவு!

ஒவ்வொரு முறை லாக்-அப் மரணங்கள் நடக்கும்போதும், காவல்துறையினருக்குப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் இருப்பதாகக் கூறி அவர்களின் குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவை மன அழுத்தத்தால் நடப்பவை அல்ல; மாறாக, எந்தக் குற்றம் செய்தாலும் தங்களை அரசு மற்றும் நீதிமன்றங்கள் காப்பாற்றிவிடும் என்ற தைரியத்தால் நடப்பவை.

“நாய் வாலை நிமிர்த்த முடியாது, போலீசைத் திருத்த முடியாது” என்ற சொல்லுக்கு ஏற்ப, சட்டங்களைப் போடுவதாலோ அல்லது சீர்திருத்தங்கள் செய்வதாலோ இந்த அடக்குமுறையை நிறுத்திவிட முடியாது. காவல்துறையினருக்கு ஆயுதம் ஏந்தவும், கைது செய்யவும் வழங்கப்பட்டுள்ள மிதமிஞ்சிய அதிகாரமே அவர்கள் சட்டத்தை மதிக்காமல் இருக்கக் காரணமாகிறது.

எனவே, தற்போதுள்ள காவல்துறை கட்டமைப்பையே கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்னெப்போதையும் விட இன்று அவசியமாகிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு படுகொலைக்கு எதிராக எழுப்பப்பட்ட “காவல்துறையைக் கலைப்போம்” என்ற முழக்கத்தைப் போல, இங்கும் மக்களின் அதிகாரத்தைப் நிலைநாட்டும் மாற்று அமைப்புகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. இந்தத் தீர்ப்பு ஒரு வெற்றி என்றாலும், இது போன்ற படுகொலைகள் தொடராமல் இருக்கக் காவல்துறையின் வேர் வரை உள்ள அதிகார மமதையை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

  • நலன்

3 COMMENTS

  1. 2020 ஆம் ஆண்டு நடந்த இந்த லாக்கப் டெத் காவல் துறைக்கு அடித்த சம்பட்டி அடி சரிதான் தமிழகத்தில் நடந்த பல்வேறு காவல் துறை கஸ்டடி கொலைகள் பலவாயினும் இது ஒரு வரலாற்று மிக்க தீர்ப்பாக பார்க்க முடிகிறது இது மாற்ற மேல்முறையீடு செய்தாலும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்திருக்கக் கூடிய தீர்ப்பு காவல்துறையின் ஆணிவேரை பிடுங்கி எறிய வேண்டும் என்பது உண்மையே

    • இது மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு அல்ல; மதுரை மாவட்ட நீதிமன்ற தீர்ப்பே இது.
      இதற்கு அடுத்து தான் குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்வார்கள். எல்லாவற்றிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிப்பார்கள். அனைத்தையும் கடந்து செல்கின்ற பொழுது இந்த மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரனின் தீர்ப்பு எக்கதியில் முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

      காக்கிச்சட்டை ரவுடிகளின் மன அழுத்தம், பணிச்சுமை இவற்றால் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்து விடுகின்றன என்ற அவர்களது பொய்மாலங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லை‌. நீதிபதி முத்துக்குமரன் கூறியது போல் ஜெயராஜ்-பெனிக்ஸ் இவர்கள் இருவர் மீதும் இதற்கு முன் ஒரு சாதாரண வழக்கு கூட பதியப்படவில்லை; நிலுவையில் இல்லை! அப்படிப்பட்ட அப்பாவிகளின் மீது ஒரு பத்து நிமிடம் கொரோனா காலத்தில் கூடுதலான நேரம் கடையை திறந்து வைத்திருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இப்படிப்பட்ட தாக்குதலை அவர்கள் தொடுக்கவில்லை. இப்படிப்பட்ட கொடும் மரண தண்டனையை வழங்க முன் வரவும் இல்லை. இலவசமாக கேட்ட விலை உயர்ந்த அலைபேசியை கொடுக்க மறுத்ததே பிரதான காரணம் என்பதும் ஊர்ஜிதம் ஆகிறது.

      குற்றவாளிகள் பட்டியலில் இந்த ஒன்பது பேரைத் தவிர அன்றைய காலத்தில் தாக்குதலில் ஈடுபடுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்ட சாத்தான்குளம் ‘போலீஸ் காவல் நண்பர்கள்’ (Police Friends) மற்றும் சிறையில் அடைப்பதற்கு தகுதி சான்றாக தவறான முறையில் சான்று வழங்கிய மருத்துவர், சிறையில் அடைக்க உத்தரவிட்ட அன்றைய நீதிபதி இவர்கள் அனைவரும் கூட குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படல் வேண்டும். தண்டிக்கப்படல் வேண்டும்.

      இந்த போலீஸ் ரவுடிகளுக்கு மன அழுத்தம் – வேலைச் சுமை தான் காரணம் என சில ‘அறிவாளிகள்’ பேசித் திரிவதில் உண்மை இருக்குமாயின், உண்மையான குற்றவாளிகளான கார்ப்பரேட்டுகள், பணக்காரர்கள், காவிப் பாசிஸ்ட்டுகள் மீது இப்படிப்பட்ட கொடுமைகளை மேற்கொள்ள துணிந்து இருப்பார்களா? மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் எந்த வர்க்கத்திற்காக சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டார்களோ அதில் சரியாகவே இருக்கிறார்கள். எந்த வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்டார்களோ குற்றமே செய்யாவிட்டாலும் இப்படிப்பட்ட அரக்கத்தனமான கொடூரமான காரியங்களில் செய்வதில் பின் வாங்குவதே இல்லை. உண்மை உணர்வோம்! கட்டுரையாளர் குறிப்பிட்டது போல சமூகத்திற்கு தேவையில்லாத தசை பிண்டங்களான
      இந்த காக்கிச்சட்டை ரவுடிப் ‘படை’யை கலைக்கப் போராடுவோம்! அனைத்து அதிகாரங்களும்உழைக்கும் மக்கள் கமிட்டிகளுக்கே என உரத்துக் கூறுவோம்!

  2. காவல்துறையின் வானளாவிய அதிகாரம் தான் மக்களை மாடு போல் அடிக்கலாம் சுட்டுத் தள்ளலாம் போன்ற படும்பாதக செயலை செய்ய வைக்கிறது.
    இந்த அதிகாரத்தை பயன்படுத்தி கிரைனைட் கொள்ளையன் பிஆர்பி பழனிசாமியையோ தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ ஏன் அம்பானி அதானி போன்ற நாட்டை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை பதம் பார்க்குமா?
    மக்கள் என்ன கிள்ளூ கீரையா என்ற அதிகார மமதை தான் இச்சம்பவங்களுக்கு காரணம்.
    மக்களிடம் வரி வாங்கி சம்பளம் இவர்கள் மக்கள் தண்டிக்கும் அளவில் மக்களுக்கு அதிகாரம் இல்லை எனவே அதற்கான போராட்டம் அரசியல் அமைப்பு சட்ட மாற்றங்கள் தான் தீர்வாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here