மிழ்நாட்டில் போலீசு காவலில்  இருக்கும் விசாரணைக் கைதிகளை அடித்து அம்மணமாக்கி கை, கால்களை உடைப்பது, ஸ்டேசனில் தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பது, நகக்கண்ணில் ஊசி குத்தி சித்திரவதை செய்வது,  பெண்களை நிர்வாணப்படுத்தி அடிப்பது, கும்பல் பாலியல் வன்புணர்வு செய்வது என சொல்ல முடியாத அளவிற்கு துன்புறுத்தப்படுவதும் இதனால் பயத்தில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வது மற்றும் அடித்தே கொலை செய்யப்படுவது எனும் போலீசின் அதிகார வெறிக்கு நீண்ட வரலாறு உண்டு. பணக்காரனிடம் பல்லைக் காட்டி இளிக்கும் போலீசு என்ற அடக்குமுறை நிறுவனம் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை கட்டிங் பிளையரை வைத்து கொடூரமான முறையில் பிடுங்கியும், பிறப்புறுப்பினை குண்டூசியால் குத்தி சேதப்படுத்தியும்  சித்ரவதையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது திராவிட மாடல் அரசின் போலீசு.

திராவிட மாடல் ஆட்சி என்று பேசி வருவதால், போலீசும் திராவிட மாடல் போலீசாக மாறாது; போலீசின் வர்க்க குணமும் மாறிவிடாது. போலீசு  என்பது ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் சட்டப்பூர்வ கிரிமினல் படையே. இதன் தன்மை யார் ஆட்சியிலும் மாறாது.

போலீசு மக்களின் நண்பனா?
ஆளும் வர்க்கத்தின் குண்டாந்தடியா?

மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களை  ஒடுக்குவதே போலீசின் முதன்மைப் பணி. இதனை தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் படித்து, பட்டமளிப்பு விழாவில் தான் படித்த பட்டத்தை வாங்க வந்த, இந்திய மாணவர் சங்கத்தின் திருவிடைமருதூர் மாவட்டத் தலைவர் அரவிந்த்சாமியின் ஆடைகளை கழட்டி பார்த்து நிரூபித்துள்ளது. ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்டி விடுவார் என அரவிந்தசாமியின் ஜட்டிக்குள் கையை விட்டு பார்த்து ஆளுநர் ரவிக்கான பாதுகாப்பை ஓர் இளைஞனின் ஜட்டிக்குள் தேடியுள்ளது திருவிடைமருதூர் போலீசு. ஆளுநரை கருப்பு கொடியில் இருந்து காப்பாற்றி, இளைஞரை அவமானப்படுத்திய போலீசார் உயரதிகாரிகளால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனால் மக்கள் காறித் துப்பினார்கள் என்பதே உண்மை!.

கைதிகளின் பல்லை பிடுங்கிய சம்பவத்திற்கு, அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இது பல்லைப் பிடுங்கிய பல்பீர் சிங், இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து ஜட்டிக்குள் கைவிட்ட அதிகாரி ஆகியவர்களின் தனிப்பட்ட குணாதிசயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து பேசும் வரை எங்களுக்கு ஏதும் தெரியாது என்று தங்கள் மீதான குற்றத்தை மூடி மறைக்கப் பார்க்கும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய அனைவருமே துணை நின்றுள்ளனர் – நிற்பார்கள். ஏனெனில், ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் போலீசுக்கு அதிகாரம் கொடுத்தே கட்டியமைக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால் போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ கிரிமினல் கூட்டம் தான்.

டாணாக்காரன் படத்தில், போலீஸ் பயிற்சிக்கு வரும் நபர்களுக்கு பயிற்சி தரும் கொடூர பயிற்சியாளருக்கு பக்கபலமாய் எல்லா உயரதிகாரிகளும் நிற்பார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் தலைமை உயரதிகாரி “இந்தப் பக்கம் ஈஸ்வர மூர்த்தி. அந்தப் பக்கம் என் பையன் என்றால் கூட, நான் ஈஸ்வரமூர்த்தியைத் தான் ஆதரிப்பேன். ஈஸ்வரமூர்த்தி என்பது ஒரு தனி ஆள் இல்லை. இந்த சிஸ்டத்தின் ஒரு பகுதி. நாங்க எல்லோரும் சேர்ந்தது தான் ஈஸ்வரமூர்த்தி” எனச் சொல்வார். இந்த வசனத்தில் ஈஸ்வரமூர்த்திக்கு பதில் பல்பீர் சிங் என பொருத்திப் பார்த்தால் போலீசு – மாவட்ட ஆட்சியர் – அதிகார வர்க்கத்தின் கூட்டு புரியும்.

இதையும் படியுங்கள் : தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு! போலீஸ் குண்டர்களின் திட்டமிட்ட கொலை வெறியாட்டம் என்பது நிரூபணம்!

‘போலீசு உங்கள் நண்பன்’ என்று காவல் நிலையத்தின் சுவர்களில் மட்டுமே உள்ளது. காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி வைத்து காகிதத்தை நக்கினால் இனிக்காது என்பதைப் போலத்தான் சுவற்றில் நண்பன் என் எழுதி வைத்து விட்டாலே நண்பன் ஆகிவிட முடியாது. அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்ய, அவர்களின் நலன்களைப் பாதுகாக்க  போலீசு தனது கையில் வைத்திருக்கும் லத்தியைக் கொண்டு தினம் தினம் மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சட்டம் என் கையில்!
ஒழுங்கு என் காலடியில்!

காவல் நிலையத்திற்கு வரும் சாதாரண மக்களை ‘வாடா போடா’ என்பது, நியாயத்தைப் பேசினால், ‘என்னிடமே சட்டம் பேசுகிறாயா?’ என்று ஏளனமாகவும், அதிகாரத் திமிரிலும் பேசும் போலீசு எப்போதும் மக்களின் நண்பர்கள் ஆக முடியாது. இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, தனது சக அதிகாரியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலும் கான்ஸ்டபிள் முதல் டி.எஸ்.பி. வரை யாராக இருந்தாலும் போலீசுக்கு எதிராகப் பேசினால் அவர்களுக்கும் அதே நிலைமைதான். தன்னை எதிர்க்கும் அனைவரும் பார்த்து அஞ்சி நடுங்கும் பயங்கரவாத படையாகத் தான்  போலீஸ் துறையே கட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் மட்டும் போலீசின் கொட்டடி கொலைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை-100, இது 2018-ல் 70, 2019-ல் 83, 2020-ல் 76 2021-ல் 88. அதுபோலவே தமிழகத்தில் இதன் எண்ணிக்கை-2017-ல் 8, 2018-ல் 12, 2019-ல் 11, 2020-ல் 6 என்று கணக்கிடுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். அதாவது போலீசு கிரிமினல்கள் செய்த கொட்டடிக் கொலைகளின் எண்ணிக்கை தான் இது. இதைத் தாண்டி என்கவுண்டர், கலவரங்களை அடக்குவது எனும் பெயரில் கொல்லப்படுவது தனி கணக்கு.

இந்த கொட்டடி கொலைகள் தொடர்பாக போலீசார் மீது பல வழக்குகள் பதிவாகியிருந்தாலும்,  காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டது அரிதிலும் அரிது. இந்தப் பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் உள்ளது.

குறிப்பாக, இந்தியா முழுவதும் 2017 –  2021 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் காவல் நிலையத்தில் நடந்த மரணங்கள் தொடர்பான வழக்குகளுக்காக சுமார் 286 நீதி விசாரணைகள் தொடங்கப்பட்டன. இதில், இந்த மரணங்களில் தொடர்புடையதாக 114 போலீசார் கைது செய்யப்பட்டதாகவும், 79 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் 39 நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டன, ஆனால், ஒரு போலீஸ்காரன் மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவில்லை. அதிகார வர்க்கத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் தண்டிக்கப்படப் போவதுமில்லை.

போலீசை திருத்த முடியாது!
கலைப்பது ஒன்றே தீர்வு!

பொதுவாக நிலவுகின்ற இந்த அரசு கட்டமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போலீசு இருப்பதாக வெளியில் அறிவிக்கப்பட்டாலும் போலீசு தனிவகை நிறுவனமாக, தனிவகை சாதியாக, ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாயாக செயல்படுவதால் கட்சிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருப்பதில்லை.

ஒரு சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது, தனக்கு வேண்டியவர்களை அதாவது தனது விசுவாசிகளை மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து மாநில காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பு வரை நியமித்துக் கொள்ளும் அற்ப உரிமை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு உள்ளது.

இதனால் அதிமுக ஆட்சிக்கு பதிலாக திமுக, காங்கிரசுக்கு பதிலாக கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்டுக்கு பதிலாக திரிணாமூல் அல்லது பாஜக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்ட பூர்வ கிரிமினல் கும்பலான போலீசு என்ற நிறுவனத்தின் கொடூரமான சிந்தனையையும், வரம்பற்ற அதிகாரத்தையும் கட்டுப்படுத்தவே முடியாது என்பதுதான் இத்தனை ஆண்டு காலம் போலீசின் நடைமுறையில் இருந்து நமக்கு கிடைத்துள்ள அனுபவம்.

எனவே, போலீசு நேர்மையாக மாறி மக்கள் பக்கம் நிற்கும் என்பதெல்லாம் நீரில் எழுதிப் படிக்கும் கதைதான். உழைக்கும் மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க தெருவில் இறங்குவதோடு, அன்றாடம் போலீசின் சித்திரவதைக்கும், பொய் வழக்குகள், அடக்குமுறைகளுக்கும் ஆளாகி, கொடுமைகளை அனுபவிக்கும் தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஆயுதம் ஏந்தும் ஜனநாயக உரிமையை பெறுவதற்காகப் போராடுவதும், அதிகார அத்துமீறலில் ஈடுபடும் சட்டப்பூர்வ கிரிமினல் கும்பலான போலீசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைக்கப் போராடுவதும் தான் ஒரே வழியாகும்.

  • மதியழகன்

புதிய ஜனநாயகம் (மா – லெ)
மே மாத இதழ் 2023 

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here