ஒரு வாரத்திற்கு முன்பு பல்வாலில் பசு கடத்தல்காரர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடத்தியதற்காக ஹரியானா காவல்துறை ஐந்து “பசு பாதுகாவலர்களை ” (பசு குண்டர்கள்) கைது செய்துள்ளது. இவர்கள் கடத்தப்பட்ட இருவரையும் கொடூரமாக அடித்ததில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடூரமான சம்பவத்தை அறங்கேற்றியவர்களில் மூன்று பேர் – பங்கஜ், நிகில், தேவ்ராஜ் – பல்வாலைச் சேர்ந்தவர்கள். பவன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் முறையே குருகிராம் மற்றும் நுஹ் நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த பசு குண்டர்கள் இருவரையும் இறந்துவிட்டதாகக் கருதி ஒரு கால்வாயில் வீசியுள்ளனர்.
ஆனால் ஓட்டுநர் பால்கிஷன் பாதுகாப்பாக நீந்திச் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் நடந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 2 ஆம் தேதி, நடத்துனர் சந்தீப்பின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஃபரிதாபாத்தில் பசு கடத்தல்காரர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு டீனேஜரையும் அவரது நண்பர்களையும் ஐந்து பேர் பல கி.மீ தூரம் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு ராஜஸ்தானில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு இரண்டு கறவை மாடுகளை ஏற்றிச் சென்ற இருவரும் தாக்குவதற்கு உள்ளாகினர்.
பசு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள், பசு கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரையும் கடத்தி, அடித்து, குருகிராமின் சோஹ்னாவில் உள்ள ஒரு கால்வாயில் வீசினர்.
பால்கிஷனின் புகாரின் அடிப்படையில், முகாம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றது காவல்துறை.
ஹரியானாவில் பசு பாதுகாவலர்களால் தொடரும் வன்முறை:
கடந்த 2015 ஆம் ஆண்டு ஹரியானா பாஜக அரசு, பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவில், பசுவை கொன்றால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல், மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், இறைச்சிக்காக மாடுகளை கொல்வது ஜாமீன் பெற முடியாத குற்றம்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அப்படி மாடு கடத்துபவர்களாக கருதப்படுபவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் உருவாக்கிய பசு பாதுகாவலர்களால் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமே தொடர்கிறது. சட்டத்தை அமல்படுத்தாமல் பாசிசத்தை நடைமுறைபடுத்துகிறது பாஜக அரசு.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 12 ஆம் வகுப்பு மாணவனை சுட்டுக் கொன்றதாக ஐந்து பசு பாதுகாவலர்களை ஹரியானா போலீசார் கைது செய்தனர்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் 12 ஆம் வகுப்பு மாணவன் பயணித்த காரை துரத்திச் சென்று, சிறுவனை கால்நடை கடத்தல்காரன் என்று தவறாக நினைத்துச் சுட்டதாகக் காவல்துறை கூறியது.
அதே மாதத்தில், ஹரியானாவின் சர்கி தாத்ரியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 26 வயது புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பசு பாதுகாவலர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார் . பாதிக்கப்பட்ட சபீர், மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும், அஸ்ஸாமைச் சேர்ந்த ஆசிருதீன் என்ற மற்றொரு புலம்பெயர்ந்தவரும் தாக்கப்பட்டார்.
படிக்க:
🔰 ஹரியானா பிளஸ் டூ படிக்கும் மாணவன் படுகொலை: பசு காவல் பெயரில் நடக்கும் பயங்கரவாதம்!
பிப்ரவரி 2023 இல், ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜுனைத் என்ற இரண்டு முஸ்லிம் ஆண்கள் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களின் எரிந்த உடல்கள் ஹரியானாவில் கண்டெடுக்கப்பட்டன.
யார் இந்த பசு (குண்டர்கள்) பாதுகாவலர்கள்:
பாஜக,பசுவை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளான பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளில் உள்ளவர்களை கொண்டு ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 2017 ஆகஸ்டில், ஹரியானா மாநிலத்தில் பசு பாதுகாவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்தது அரசு.
அன்று முதல் ஹரியானா பாஜக அரசின் துணையோடு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது இந்த கும்பல். குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து தாக்குவதோடு கொலையும் செய்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற அமைப்பாக செயல்படும் இந்த அமைப்பை ஹரியானா மாநில அரசு நேரடியாக ஆதரிக்கிறது.
இந்தியாவில் பசுவை வைத்து அரசியல் செய்வது முடிவுக்கு வருமா, வராதா?
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி க்கு எப்போதெல்லாம் கும்பல் கலவரம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் பசுப்பாதுகாப்பு இயக்கத்துக்கான (கோரக்ஷக் சமிதி) குண்டர்களும் தேவைப்படுகிறார்கள். எப்போதெல்லாம் அவர்களுக்கு இவ்வியக்கம் அரசியல் காரணங்களுக்காகத் தேவைப்படுகிறதோ அப்போது பிரச்சினையைக் கிளப்புவார்கள்.
காவி மதவெறி பாசிஸ்டுகளான பசு காவலர்களின் ஒரே நோக்கம் மக்களை மதரீதியாக மோத விட்டு பிளவுபடுத்த வேண்டும். அதன் மூலம் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் வேண்டும் என்பதுதான்.
மக்களின் ரத்தம் குடிக்க துடிக்கும் மதவெறி ஓநாய்களை விரட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு வரும் பணியில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஈடுபட வேண்டும். இதை செய்ய தவறினால் இந்த ஓநாய்களால் நாடும், நாட்டு மக்களும் கடித்துக் குதறப்படுவதை நம்மால் தடுக்க முடியாது போய்விடும்.
– பரூக்
செய்தி ஆதாரம்: https://thewire.in/communalism/five-arrested-for-killing-man-injuring-companion-on-suspicion-of-cow-smuggling-in-haryana
கலவரம் செய்வதற்கே RSS என்ற கலவர அமைப்பு துணை அமைப்புகளை வைத்துள்ளார்கள். ஒருவனை அடித்தே கொல்கிறார்கள் என்றால் காவி குண்டர்களின் சிந்தனை எப்படி பட்டதாக இருக்கும். நாளை தமிழகத்தில் பாஜக சங்கிகள் வளர்ந்தால் நமக்கும் இது போல் தான் நடக்கும்.