ஆர்.என்.ரவி வழியில் திருவள்ளுவரை ‘காவிமயமாக்கும்’ சங்கி ஆளுநர் அர்லேகர்!

திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த இடத்திலும் அவருக்கே உரிய வெள்ளுடையும், மதச்சார்பற்ற தோற்றமும் தான் வெளிப்பாடு கொண்டவையாக அமைக்கப் பெறல் வேண்டும்!

0

லகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி  “திருவள்ளுவர் தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மே 30 அன்று ‘திருவள்ளுவர் பிறந்த தினம்’ – என்ற பெயரில் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படம் அமைக்கப்பெற்று, மாலை அணிவிக்கப்பட்டு ஆளுநர் ஆர்.என்.அர்லேகரால் மலர் தூவி ‘மரியாதை’ செலுத்தும் இழிவான நிகழ்வு நடந்தேறி உள்ளது.

இதில் மிக மட்ட ரகமான நிகழ்வு என்னவென்றால் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் – கரங் களில் விபூதி பட்டையடித்து, கழுத்தில் உத்ராட்ச கொட்டை  அணிவித்து திருவள்ளுவரை அசிங்கப்படுத்தும் காரியத்தை ஆளுநர் மாளிகை அராஜகமாக அரங்கேற்றம் செய்துள்ளது.

தமிழ் பண்பாடு தெரியாதோர்க்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? 

இதற்கு முன் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையை  ஆர்எஸ்எஸ் – பாஜக மாளிகையாகவே – தலைமையக மாகவே மாற்றிக் கொண்டிருந்தார்.

தற்போதைய ஆளுநரைப் போலவே திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் உட்பட அனைத்து இழிவுகளையும் செய்து கொண்டிருந்தார்.

மேற்கண்ட இரு அமைப்பினர்களை அடிக்கடி வரவழைத்து காவி பாசிச ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்வதற்கு எண்ணற்ற சதிச் செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் இயக்கங்களும், தமிழ் ஆர்வலர்களும், கல்வியாளர்களும், ஏன், தமிழ் மக்களும் கூட கடுமையான எதிர்ப்புகளை – போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளினார் ரவி. ஓரளவுக்கு அவரது கொட்டம் ஒடுக்கப்பட்டது. இவரோ பீகார் பார்ப்பனர்.

இவருக்கு தமிழ் பண்பாடு, அறிஞர்கள் பற்றிய வரலாறு, தமிழ் இலக்கியங்கள், மரபுகள்… இது குறித்து எல்லாம் என்ன தெரியும்?

வரலாற்றையே மாற்றி திரிக்கும் – மறைக்கும் வேலைகளைத் தான் பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக இந்துத்துவக் காவிக் கூட்டம் அரங்கேற்றம் செய்யும். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஆளுநருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் துச்சம் என தூக்கி எறிந்து விட்டு, தமது எஜமானர்களின் (மோகன் பகவத் – மோடி – அமித்ஷா) கட்டளைப்படியே சர்வாதிகாரி போல ஆளுநர் மாளிகையை ‘அலங்கரித்து’க் கொண்டிருந்தார் RSS ரவி!

காவிக்கு எதிராகப் போராட்டக் களம் காண்போம்!

போய்த் தொலைந்தார் ரவி – என்று லேசாக மூச்சு விட ஆரம்பித்தது தமிழ்நாடு.

அதற்குப் பின்னர் வந்த பொறுப்பு ஆளுநர் ஆர்.என். அர்லேகரும், ஆர்.என். ரவி செய்த அதே வேலையை ஆளுநர் மாளிகையில் செய்யத் துவங்கி உள்ளார். இவரும் கோவா மாநிலத்தில் RSS-ன் தீவிர செயற்பாட்டாளராக இருந்து ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலால் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டு முன்னாள் இடதுசாரி அரசாங்கத்திற்கு மிகவும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவரே!

நாம் எப்பொழுதுமே ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒரு ‘வெட்டிப் பதவி’ என்றே குரல் எழுப்பி வருகிறோம். அப்பதவி நீடித்துத் தொலையும் வரை தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்திற்குத் தனி ஆளுநர் நியமனம் செய்யாமல் பிற்போக்குத்தனமான RSS-காரரான கேரள ஆளுநரையே தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்திருப்பது வன்மையாகக் கண்டனத்திற்குரிய செய்கையாகும்.

ஆர்என்.‌ ரவியைப் போலவே, அர்லேகருக்கும் தமிழ் பண்பாடு, கலை, இலக்கியம் எதுவுமே தெரியாது.

இங்குள்ள சங்கிகள் தூண்டுதலில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், நெற்றியில் பட்டை, கரங்களில் பட்டை, கழுத்தில் உத்திராட்சக் கொட்டை அணிவித்து மதச்சார்பற்ற இலக்கியத்தை படைத்த ஒரு தமிழ் இலக்கிய படைப்பாளியை இந்துத்துவ காவிக் கூட்டத்திற்குள் கையகப்படுத்திக் கொள்ள எண்ணுவது இழிவானது! கேவலமானது! வெட்கக் கேடானது!

படிக்க: 

 திருவள்ளுவர் தொடர்ந்து அவமதிப்பு: தமிழ் மண்ணில் இருந்து R.N. ரவி விரட்டியடிக்கப்படல் வேண்டும்!

 கீதையைப் புறக்கணி! திருக்குறளை உயர்த்திப் பிடி!

ஆளுநர் அர்லேகர் இன்னும் தமிழர் விரோத செயற்பாடுகளை என்னென்ன செய்யப் போகிறார் என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

இதற்கு முந்தைய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசேனும் இப்படிப்பட்ட விடயங்களில் ஆளுநரின் நயவஞ்சகத்திற்கு எதிராக முடிந்தளவு களமாடியது!

ஆனால் தற்போதைய முதல்வர் விஜய், சினிமாத் துறை பாணியில் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ புரியவில்லை! தமிழ் தாய் வாழ்த்து பின் தள்ளப்பட்டு, வந்தே மாதரம் முன்னுக்கு வர அனுமதித்தவரே விஜய் தான்! இனி தமிழ், தமிழ் பண்பாடு, தமிழ்நாட்டு உரிமை, மக்கள் நலன் அனைத்தும் விஜய் ஆட்சியில் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தவித உத்தரவாதமும் இல்லை; இல்லவே இல்லை! தமிழர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான்! சாதி மத வெறி ஆட்டங்கள்; பாலியல் பண்புணர்ச்சிகள், கொலை கொள்ளை அனைத்தும் விஜய் ஆட்சிக்கு வந்தபின் கூடுதலாகவே அரங்கேறிய வண்ணம் உள்ளன.

எனவே,  திருவள்ளுவரை இந்துத்துவ வாதியாக சித்தரிக்க முயலும்  ஆளுநரின் இழிசெயலை வன்மையாகக் கண்டனம் செய்வோம்!

திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த இடத்திலும் அவருக்கே உரிய வெள்ளுடையும், மதச்சார்பற்ற தோற்றமும் தான் வெளிப்பாடு கொண்டவையாக அமைக்கப் பெறல் வேண்டும்!

திருவள்ளுவர் பிறந்த தினத்தை வழக்கம்போல் ஜனவரி மாதம் தான் பின்பற்ற வேண்டும்!

திருவள்ளுவரை அவமானப்படுத்திய ஆளுநர் அர்லேகர் மாறுதல் செய்யப்பட வேண்டும்!

இது விடயத்தில் ஆளுநர் ஆர் என் அர்லேகர் மற்றும் ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்துத்துவ கும்பல் செயலாற்ற துடிக்கும் அனைத்துவிதக் காவி மய செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்து இயக்கங்களும் மக்களும் களம் இறங்கிப் போராட வேண்டும்!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here