சொரணை கெட்டு போன வடக்கே என்ன வாழுதாம்!

வடக்கே என்றால் ஒன்றிய அரசின் பாசிச ஆட்டங்கள் தான் வரிசைக்கட்டி ஊர்கோலம் வருகிறது. வடக்கு மாநிலங்களில் ஒன்றிரண்டு சமூக அவலங்கள் ndtv.in போன்ற ஊடகங்களில் பார்த்து நான் தெரிந்து கொள்வது கசிந்து வருபவை மட்டுமே.

NDTV-யில் ஜூன் 8, 2022: இரவு 12 மணிக்கு ஒரு செய்தி பார்த்தேன், படித்தேன். உறக்கம் போய்விட்டது. பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் நகரம். ஒரு தம்பதியர் பணத்துக்காக மடிப் பிச்சை எடுக்கிறார்கள் – “எங்கள் மகன் காணாமல் போனான், தேடினோம் கிடைக்கவில்லை. அப்போது, சாகர் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் உடல் இருப்பதாக சொன்னார்கள். ஓடினோம்… சவக்கிடங்கில் இருந்து மகன் உடலை வெளியே எடுக்க ரூ.50,000/- கேட்டார்கள். நாங்கள் ஏழைகள்… ஐயா அம்மா பணம் கொடுங்க, ஐயா உங்க குடும்பத்துல ஒரு ஆளா நெனச்சு பணம் கொடுங்க ஐயா…” அந்த அப்பாவின் பெயர் மகேஷ்(தாக்குர்).

முதலில் மருத்துவமனை ஊழல் என்று வெளிப்பட்ட ஒரு சின்ன விஷயம், அடுத்தடுத்து அடுக்கடுக்காக பல ரகசியங்களை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அந்த அரசு மருத்துவமனையில் சுகாதார ஊழியர்கள் அனேகமாக அனைவருமே ஒப்பந்தக் கூலிகள். மாதாமாதம் குறித்த நாளில் அவர்களுக்கு சம்பளமும் கிடைப்பதில்லை. அவர்கள் நோயாளிகளிடம் கையேந்தி காசு வாங்குவதற்கான காரணத்தை மக்களே சர்வசாதாரணமான சொன்னார்கள்.

இப்போது மகேஷ் மகனின் விஷயம் நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததுமே ”இது சம்பந்தமாக தவறான தகவல் உள்ளது; என்ன என்று பார்க்கிறோம் உடனே கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம், யார் காரணமோ அவர்களைச் சும்மா விடமாட்டோம்” என்று உருகி உருகி பேசி சமாளிக்கிறது.

“ஒவ்வொரு நாளும் நடந்து வரும் கேடு கெட்ட விஷயத்துக்கு பெயர் தவறான தகவலா?”

“நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறாயே இதுவரை எடுத்த நடவடிக்கைக்கு நிர்வாக டீன்(DEAN) முதல் சர்ஜன் வரை பொறுப்பாக்கி எத்தனை வழக்குகள் போடப்பட்டது?’’

”ஊழியர்களுக்கு ஒப்பந்தக் கூலிகளுக்குச் சம்பளம் போடாதவர்களுக்கு என்ன தண்டனை? எத்தனை வருடமாக இந்த நிலைமை? கஜானாவில் ஏன் இதற்கு நிதி இல்லை? அதிகாரிகளுக்கோ, எம்எல்ஏ இத்தியாதி செலவுக்களுக்கோ எங்கேயிருந்து நிதி வந்ததாம்?”

படிக்க:

தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிற டாக்டர்களுக்கு படிப்புச் செலவை ஏன் அரசாங்கம் கட்ட வேண்டும் – அதற்கு மானியம் என்று கௌரவமான பெயர் வைப்பது ஏன்? வெட்கமாயில்லை?”

“பட்ஜெட்(மக்கள்) பணம் அரசாங்க மருத்துவமனை செலவுக்கா? அல்லது வேறு எதற்கு?”

“ஆடு நனைகிறது என்று ஓநாய் வருந்த வேண்டுமா?

கௌரவமான இறுதி அஞ்சலிக்கு வழி கொடுக்க வக்கற்ற அரசு.

மகேஷ் போன்ற ஏழை குடும்பங்கள் இனியும் புழு போல வாழ வேண்டுமா?

முதலில் இனி பொறுக்க முடியாது என்ற ஒரே கருத்துக்கு வருவோம், இதெல்லாம் விதியினால் வருவதல்ல;

போராடுவோம், அதைத் தொடர்ந்தும் போராடுவோம்!

ஆக்கம் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here