பாரதீய ஜனதா கட்சி எம்.பி பிரக்ஞா – தாக்குர் கடந்த 25.12 .2022 கர்நாடகா சென்றார். ஒரு பஜ்ரங்தள் உறுப்பினர் கொல்லப்பட்டதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். “உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள்; காய்கறி நறுக்க கத்திகள் வைத்திருப்பீர்கள் அல்லவா? அவற்றைக் கூர்தீட்டுங்கள், தயாராக வைத்திருங்கள்……காய்கறிகளை வெட்டுவது போலவே (உங்கள் முன்னால் பேசிய) வாயையும், (சிந்தித்த) மூளைகளையும் வெட்டுங்கள்” இப்படிப் பேசினார். வழக்கமான வெறுப்பும் நெருப்பும் கலந்து பேசினார். சடங்கு போல ஒருவழக்கும் அவர்மீது பதியப்பட்டது, அது கர்நாடகாவில் வாடிக்கையாக நடப்பதுதான்.

2019-ல் மக்களவைக்கு தேர்தலில் நின்றார் பிரக்ஞா தாக்குர். அப்போது மோடிக்கே குடைச்சல் கொடுத்தார். மகாராட்டிர ‘பயங்கரவாத எதிர்ப்புக் குழுத் தலைவரும் அசோக்சக்ரா விருது பெற்றவருமான’ கார்கரேவை ராவணனோடும் கம்சனோடும் ஒப்பிட்டுப் பேசினார். “அவர் பம்பாய்த் தாக்குதலில் கொல்லப்பட்டார், ஏன்தெரியுமா? 2008 மலேகாவ்(ன்) குண்டுவெடிப்பு வழக்கில் என்னைக் கைது செய்ததால் வந்த சாபம் தான்! அந்த கார்கரே அழிக்கப்படுவார் என்றேன், அதுபோலவே நடந்தது” என்றார்.

இதையும் படியுங்கள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மீள்பதிவு!

அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தார்கள், விமரிசித்தார்கள். தேர்தல்கமிசன் ‘ஷோ – காஸ்’ (காரணம் கேட்கும்) அறிக்கையை அனுப்பியது. அன்று அந்த நேரம் கமுக்கமாக இருந்து சமாளிக்கும் வேலையைச் செய்தது பாஜக. “கார்கரேவை நாங்கள் ஒரு தியாகியாகவே கருதுகிறோம். இது பிரக்ஞா தாக்குரின் சொந்தக் கருத்து. மனதால் உடலால் சித்திரவதைப் பட்டதால் அவ்வாறு பேசியிருக்கலாம்”, என்றது பா.ஜ.க. பாம்புக்கும் நோவு இல்லை, தடிக்கும் நோவு இல்லை.

சம்பவத்தை ஒட்டி, தொலைக்காட்சிப் பேட்டியில் மோடி அசத்தலாகச் சவால்விட்டார்; இப்படிபட்ட எல்லா விவாதங்களிலுமே 5000 வருஷப் பழமை கொண்ட பண்பாட்டை, “வசுதைவ குடும்பகத்”தில் தீவிரநம்பிக்கை கொண்ட பண்பாட்டை காங்கிரஸ் பழிக்கிறது . பிரக்ஞா  தாக்குர் போன்றவர்களை பயங்கரவாதிகள் என்று ஏசுகிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து இப்போது (பிரக்ஞா தாக்குரை தேர்தலில் நிறுத்துகிறோம் என்பது) ஒரே பதில், ஒரே குறியீடு. காங்கிரஸ் அழிந்துபோகும். “ஆனால் ‘அன்றைய’ பிரக்ஞா தாக்குர் தன் பேச்சைத் திரும்பப் பெற்று வெற்றிகரமாக வாபஸ் வாங்கினார். அப்போதுகூட, “நாட்டின் எதிரிகளுக்கு லாபம் என்றார்”, ‘கெத்து’ குறையாமல். வடக்கத்திய அரசியல்வாதி ஒருவர் சொன்னதுபோல, பாஜகவுக்குள் கடைக்கோடியில் இப்படிச் சில உதிரிகள் வாலாட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். பிரக்ஞா-தாக்குர் என்ற அந்த உதிரி ஒரே மாசத்தில் பிறகு வாய் திறந்தது. “காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் ” , “அன்றும் தேசபக்தர், அவர் தேசபக்தராகவே வாழ்ந்தார், வாழ்கிறார், என்றும் வாழ்வார். அவரைப் பயங்கரவாதி என்பவர்களை ஆத்ம பரிசோதனை செய்யவேண்டும்… இந்தத் தேர்தலில் ஒரு பதில் நிச்சயம் கிடைக்கும் ” என்று பற்ற வைத்தது.

பாஜக கருத்து அதுவல்ல என்றார் மோடி . பிரக்ஞா தாக்குரை லேசாகக் குட்டினார். அதற்குப் பிறகும் வெளியே விமரிசனங்கள் குறையவில்லை. News 24 தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் ஒரு பதில் கொடுத்தார். “காந்தி பற்றி, கோட்சே பற்றி அவ்வாறு பேசியது கடுமையான தவறு (‘பயங்கர் கரப்’). வெறுப்பாகப் பேசக்கூடாது. இதை எல்லாவழியிலும் கண்டிக்கவேண்டும். அப்படி ஒரு மொழிப் பிரயோகத்தை நாகரீகமான சமூகத்தில் சிந்திக்கவே முடியாது. வருங்காலத்தில் அப்படிச் செய்வதற்கு முன் நூறுமுறை யோசிக்கவேண்டும். அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பது வேறு விஷயம். இதயபூர்வமாக என்னால் மன்னிக்க முடியவில்லை.” என்றார் மோடி.

மேலே உள்ள மோடியின் பதிலுக்கு இரண்டுபக்கம் உண்டு. நுணுக்கம் உண்டு. அதன் பொருள்: “காந்தியைக் குறை சொல்லாதே; கோட்சேவைப் பழி சொல்லாதே.” என்பதே. அப்போது பொதுக்கருத்தால் பாஜக கொஞ்சம் ஆடிவிட்டது. அமித்ஷா கூட “கோட்சேவைப்பற்றிக் கருத்து சொல்பவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிக்கைவிட்டார் . கவனிக்கவும், காந்தி பற்றி அல்ல, கோட்சே பற்றி. எவ்வளவு நரித்தனம்?

இதையும் படியுங்கள்: காந்தி கொலையை திருவிழாவாக மாற்ற முயற்சிக்கும் சங்கிகள்!.

பிதா நரி மறுபடி வாலை ஆட்டியது. 2020 நவம்பரிலேயே பிரக்ஞா தாக்குர் நாடாளுமன்றத்தில் கோட்சேவைப் புகழ்ந்து பேசினார். அந்த நாளில் “சிறப்புப் பாதுகாப்புப்படை (திருத்தச்) சட்டம்” விவாதத்துக்கு வந்து , தி.மு.க உறுப்பினர் ஆ.இராசா கோட்சேவின் மலிவான “மகாத்மாவை ஏன் கொன்றேன் ?” என்ற வாக்குமூலம் பற்றி விமரிசித்துப் பேசினார்; உடனே பதிலடியாக பிரக்ஞா தாக்குர் கோட்சேவைப் புகழ்ந்து பேசினார்; கோபம்கொண்ட எதிர்க் கட்சியினர்
“பிரக்ஞா தாக்குர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கோரினார்கள். பல பாஜக உறுப்பினர்கள் பிரக்ஞா தாக்கூரை உட்காரச் சொல்லிக் கெஞ்சியதை நாடாளுமன்றமே வேடிக்கை பார்த்தது; அன்றைய அவைக் குறிப்பிலிருந்து ” கோட்சே புகழ்ச்சி ” நீக்கப்பட்டது.

000

பிரக்ஞா தாக்குர் அம்புறாத்தூணியின் ஸ்டாக்கில் எப்போதும் முசுலீம் சமுகம் பற்றியும், கிறித்தவச் சமுகம் பற்றியும் விமரிசனங்கள் இருக்கும்; கேடுகெட்ட சாதிச் சமூகத்தைப் புகழ்ந்து தள்ளும் பூமாரியும் இருக்கும். இப்போது “கத்தி கூர்தீட்டச் சொன்ன” விசயத்தில் திரிணாமுல் பிரதிநிதி சாகேத் கோகலே, அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனாவாலா இருவரும் ஈ-மெயில் புகார் கொடுத்தார்கள். “நேரில் வரச்சொல்லி “யும், “புகாரை எழுத்துபூர்வமாகக் கொடுக்கச் சொல்லியும் கர்நாடக போலீஸ் மறுத்துவிட்டது. பூனாவிலிருந்து அடுத்தநாளே நேரில்வரவேண்டுமாம். உத்தரவு எப்படி? எதிர்தரப்பு ஆட்களும் சும்மா விடுவதாக இல்லை. பதிலாக உள்ளூர் நபரை அனுப்பி புகாரைச் சேர்த்துவிட்டார்கள். ஒருவழியாக இழுத்துப்பறித்து பிரக்ஞா தாக்குர் மீது வழக்கு பதியப்பட்டது.

பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசக் குண்டர்படையின் அன்றாடப் பேச்சும் நகர்வும், இதோ இப்படி பிரக்ஞா தாக்குர் நடவடிக்கை போலத்தான். இதெல்லாம் ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு வெல்லம்போல.

ஆதாரம் :
தி ஒயர், 27.12.2022.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, 28.12.2022,
கவுரிலங்கேஷ் செய்திப்பிரிவு, 29.12.2022.

  • இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here