ந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டே போகிறது. பெரும்பான்மை மக்களுக்கு விலைவாசி உயர்வு என்பது கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி என்பது ஒன்றரை மடங்கு உயர்ந்துள்ளதாக விலைவாசி உயர்வு பற்றிய புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றது.

ஆனால் தொழிலாளி வர்க்கத்திற்கு சம்பள உயர்வு ஒரு மடங்கு கூட கூடவில்லை. மாறாக ஏற்கனவே கிடைத்த சம்பளத்தை விட குறைத்து கொடுப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நிரந்தர வேலை வாய்ப்பு கொண்ட தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு தன்னுடைய வருமானம் போதவில்லை என்று கணவன், மனைவி இருவரும் வேலை பார்ப்பதன் மூலமே ஈடுகட்டி வருகின்றனர் என்பது தான் நாடு தழுவிய நிலவரமாகும்.

அதே போல விவசாயிகள் மற்றும் கூலி விவசாயிகள் நிலைமை மேலும் மோசம் அடைந்து கொண்டே செல்கிறது. அன்றாட தினகூலிகளுக்கு உத்திரவாதம் இன்றி விவசாயத்தில் இறங்கி வேலைகள் செய்வதை விட்டுவிட்டு கட்டிட வேலைகள், சாலை போடுகின்ற வேலைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் மூட்டை சுமக்கின்ற வேலைகள் துவங்கி பல்வேறு விதமான வேலைகளையும் செய்துதான் தனது வாழ்க்கையை ஓட்ட முடிகிறது.

கிராமப்புறங்களில் விவசாயிகள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி வாழ்க்கையை நடத்த முடியவில்லை. வீட்டிற்கு ஒருவர் அல்லது இருவர் விவசாயத்திற்கு வெளியில் உள்ள பல்வேறு வகையான வேலைகளில் ஈடுபட்டு தான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் விலைவாசி கட்டுப்படுத்த முடியாமல் ஏறிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு குடும்பமும் சில லட்சங்கள் துவங்கி பல லட்சங்கள் வரை கடனாளியாக வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர்.

கல்விக் கடன், விவசாய கடன், குழுக்களில் பெறுகின்ற சுயஉதவி கடன்கள் மற்றும் வங்கிக் கடன், தனிநபர்களிடம் பெறுகின்ற கந்துவட்டிக் கடன்கள், அரசு சாராத நிறுவனங்களிடம் பெறுகின்ற கடன் என்று ஒவ்வொருவரும் கடன் வருவாய் மூலம் தான் தனது செலவுகளை ஈடு கட்டி வருகின்றனர் என்பது தான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் பொருளாதார நிலவரமாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச மோடி அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று வாய்ச்சவடால் அடித்தது. ஆனால் இரட்டிப்பாக்குவது கிடக்கட்டும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி தனது வாழ்க்கை ஓட்ட முடியாது என்ற அளவிற்கு விவசாயத்தை நாசமாக்கி வருகிறது மோடி அரசு.

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டு, பாரம்பரிய விவசாயத்தையும் பல நூற்றாண்டுகளாக விவசாயிகள் செய்து வரும் உழவு தொழிலையும் கைவிட்டு வெளியேறுவதற்கு கார்ப்பரேட் கொள்கை காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு நாடு தழுவிய அளவில் பல்வேறு நெருக்கடிகள், வாழ்வதற்கே வசதி இல்லாத சூழலில் சிக்கித் தவித்து வருகின்றது இந்திய உழைப்பாளி வர்க்கம். அவர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், உள்நாட்டு முதலாளிகள் என்று பல்வேறு வர்க்க வாழ்க்கையில் இருந்தாலும் நெருக்கடியில் இருந்து தப்ப முடியவில்லை. அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த நெருக்கடியில் இருந்து தப்ப முடியவில்லை என்பதுதான் எதார்த்த உண்மையாக உள்ளது.

இத்தகைய சூழலில் பாபர் மசூதி வழக்கில் முழு வெற்றியடைந்ததை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க போவதாகவும் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி மசூதியை இடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் – பாஜக உள்ளிட்ட பார்ப்பன (இந்து) மதவெறி கும்பல்.

இதையும் படியுங்கள்: பாப்ரி மசூதியிலிருந்து கியான்வாபி வரை; இந்திய நீதிமன்றங்கள்!

மதுராவில் உள்ள சாஹி ஈத்கா மசூதியானது ஏறக்குறைய 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாக நான்கு நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார் என்று ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச சக்திகள் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

1968 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சங்கம் மற்றும் ஷாஹி ஈத்கா மசூதி இரண்டும் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் “இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே எந்த சர்ச்சையும் இல்லை. அவரவர்கள் நிலங்களை அவரவர்கள் பயன்படுத்துவதற்கும் அதில் அவர்கள் விரும்புகின்ற வகையில் வழிபடுவதற்கும், வேறு வகையில் பயன்படுத்துவதற்கும் எந்த தடையும் இல்லை” என்ற புரிந்துணர்வு இந்துக்கள், முஸ்லிம்கள் இருவரிடையே ஏற்பட்டது.

இந்தப் பிரச்சனையை 2020 ஆம் ஆண்டு மதுராவில் உள்ள உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில் வெளியிலிருந்து அதாவது டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் இருந்து இந்து மத வெறியர்கள் சிலர் வழக்கு தொடுத்த போது மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி சாயா சர்மா இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்தார்.

அப்போது மதுரா ஆலய பூசாரிகள் அமைப்பான அகில இந்திய தீர்த்த புரோகித மஹாலயா சங்கத்தின் தலைவர் மகேஷ் பாதக் “50 ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கப்பட்ட விவகாரத்தை வெளியில் இருந்து சிலர் சுயலாபத்திற்கு தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், அயோத்தியை போன்ற ஒரு சம்பவத்தை மதுராவில் நடத்துவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

தற்போது வாரணாசி ஞானபாபி மசூதி வழக்கில் வீடியோவின் மூலம் ஆதாரத்தை பதிவு செய்யலாம், ஆய்வு செய்யலாம் என்று புதிதாக உத்தரவு போடப்பட்டதை தொடர்ந்து புத்துணர்ச்சி அடைந்துள்ள ஆர் எஸ் எஸ்- பாஜக பார்ப்பன (இந்து) மதவெறி பாசிஸ்டுகள் தற்போது மீண்டும் இந்து சேனா என்ற அமைப்பின் தலைவனான விஷ்ணு குப்தா என்பவனையும், துணைத்தலைவனான சுர்ஜித் சிங் என்பவனையும் தூண்டிவிட்டுள்ளது அவர்கள் இருவரும் இணைந்து மதுராவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

ஷாஹி ஈத்கா மசூதியை சுற்றியுள்ள 13.37 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரி வழக்கு தொடுத்ததுடன் மட்டுமின்றி மசூதியையும் எடுக்க வேண்டும் என்று அதற்கு முதலில் மசூதியை ஆய்வு செய்ய வேண்டும், சர்வே நடத்த வேண்டும் என்றெல்லாம் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள மதுரா நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சோனிகா வர்மா என்பவர் வாரணாசி கியான்வாபி மசூதியைப் போல இங்கும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனை எதிர்த்து ஷாஹி ஈத்கா மசூதியின் சார்பில் நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் தன்வீர் அகமது வழக்கை பதிவு செய்துள்ளார்.

இந்திய வழிபாடுகள் சட்டத்தின் கீழ் 1947-க்கு முன்பு கட்டப்பட்ட மசூதிகள் அல்லது கோவில்கள், சர்ச்சுகள் போன்ற வழிபாட்டுத் தலங்களை இடிப்பது பற்றி எந்த விதமான ஆட்சேபனையும் எழுப்பக் கூடாது என்று சட்டத்தில் உள்ள போதும் நீதிமன்றத்தில் மசூதியை ஆய்வு செய்வதற்கு உத்தரவு பெற முடிகிறது.

நீதித்துறையில் புகுத்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார கும்பலின் அடியாட்களான கருப்பு அங்கி அணிந்த சாத்தான்கள் நீதிபதிகளாக உலவுகின்றனர். பாபர் மசூதி வழக்கிலும் சரி, இட ஒதுக்கீடு வழக்கிலும் சரி, தற்போது மதுரா வழக்கிலும் சரி இத்தகைய நீதிபதிகள் சமூக நல்லிணக்கத்தை ஒழித்துக் கட்டுவது உடன், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை உருவாக்குகின்ற வகையில் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் வழங்கி வருகின்றனர்.

இது பாசிசத்தின் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்ற ஒரு முகமாகும். மசூதிகளுக்கு அடியிலும் சர்ச்சுகளுக்கு அடியிலும் தனது முன்னோர்கள் கட்டிடங்கள் கட்டியுள்ளதாக பிதற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலுக்கு முகத்தில் அறையும் வகையில் சில கேள்விகளை எழுப்புவோம்.

தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உயர்ந்திருக்கும் கோவில்களில், கருவறைக்குள் நுழைவதற்கு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைப்பாளி மக்களுக்கு வேறு யாருக்கோ அனுமதி இல்லை என்ற நிலைமைக்கு என்ன பதில்? கருவறைக்குள் நுழைந்து பூசை செய்வதற்கு அர்ச்சகராகும் உரிமை பார்ப்பானை தவிர வேறு யாருக்கும் இல்லை என்ற கேடுகெட்ட நிலைமைக்கு என்ன பதில்? இவை அனைத்தும் இந்துக்கள் என்று நம்புகின்ற பெரும்பான்மை மக்களின் மீது திணிக்கப்படும் அடக்குமுறையாக உன் கண்ணுக்குத் தெரிவதில்லையா?. போன்ற கேள்விகளை எழுப்பி முகத்தில் அறைவோம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி தீண்டாமை கொடுமைகளையும், இரட்டை குவளை முறை, மாட்டு கறி உண்ண தடை, பொது இடத்தில் புழங்குவதற்கும், கல்வி சாலைகளில் அமர்ந்து படிப்பதற்கும் தடை என்று கொடூரமான தீண்டாமை குற்றங்கள் பார்ப்பன (இந்து) மதத்தில் அருவருக்கத்தக்க வகையில் இன்று வரை தொடர்கிறது. சனாதன தர்மத்தின் கீழ் பெரும்பான்மை மக்களின் மீது இந்து தர்மத்தின் படியே சாதி தீண்டாமை கொடூரம் திணிக்கப்படுகிறது இதை கேள்வி கேட்பதற்கு ஆர்.எஸ்.எஸ் பாஜகவினராகிய உங்களுக்கு துப்பு கிடையாது. ஏனென்றால் நடத்துபவர்களே நீங்கள் தான் என்று உரக்கச் சொல்வோம்.

இதையும் படியுங்கள்: மனிதன் வாயில் மலத்தை திணிப்பதும், குடிநீரில் மலத்தை கலப்பதும் தீண்டாமை வன்கொடுமையின் உச்ச கட்டங்கள்! 

பார்ப்பன இந்து மதம் இந்த லட்சணத்தில் கிடக்கும் போது மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி, காசி என்று பிதற்ற தொடங்கியிருப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இத்தகைய சதி திட்டங்களுக்கு எதிராக முளையிலேயே கிள்ளி எரியும் வகையில் போராட்டங்களை துவக்க வேண்டும். கண்டன குரல்களை எழுப்புவது துவங்கி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வது, சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டும் வகையில் போராட்டங்களை நடத்துவது, கருவறைக்குள் எங்களையும் அனுமதி, அர்ச்சகராகவும் உரிமையை கொடு! என்று போராடுவது என்று பல்வேறு வகைகளில் பெரும்பான்மை மக்களின் தன்மானத்தையும் சுயமரியாதையும் பாதுகாக்கின்ற வகையில் போராடுவோம்.

அதே சமயத்தில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையையும், நிம்மதியாக சுதந்திரமாக உயிர் வாழ்கின்ற உரிமையையும் பாதுகாக்கின்ற வகையில் நமது செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது தான் நமது உடனடி கடமையாகும்.

  • பா. மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here