நாம் அதிபர் கட்சியும் புதிய ஜனநாயகப் புரட்சியும்..
அன்றைய காலைச் சூரியன் ஹேங் ஓவர் ஆகிவிட்ட குடிகாரனைப்போல மந்தமாய்ப் பொழிந்தபோதும் புது நம்பிக்கையோடு விடிந்தது ஹிட்லருக்கு.
ஆம்லெட்டின் மீது தூவப்படும் பெப்பர் தூளைப்போல சிலுசிலுவென லேசாகத் தூரிக்கொண்டிருப்பது மழையா இல்லை பனியா என்று பூக்களெல்லாம் குழம்பிக்கிடந்த ஒரு அடர்ந்த வனத்தின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தற்காலிகக் கொட்டகையின் உள்ளே ஹிட்லரோடு இன்னும் நான்குபேர் இருந்தனர்.
வெட்டப்பட்ட இருநூறாண்டுப் பழைய மரத்தின் எஞ்சிய துண்டொன்று அங்கு மேஜைபோல அமைந்திருந்தது. அதன்மீது விரிக்கப்பட்டிருந்த மங்கள தேசத்தின் வரைபடத்தின் மீது பென்சிலில் சில புள்ளிகளையும் கோடுகளையும் குறிப்பிட்டு அன்றைய திட்டத்தை அவன் விவரிக்க விவரிக்க அனைவரின் முகத்திலும் ஒருவிதப் பரவசம் ஒளியாய்ப் பரவியது. திட்டத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அனைவரும் தங்களது வலது கையை முன்னோக்கி நீட்டி சத்தியப் பிரமானம் செய்துகொண்டனர்.
“வடுக வந்தேறிகளின் சதிகளால் இப்போது நம் தேசம் சந்தித்தித்திருக்கிற இந்தத் துயரை நீக்கும் வரை ஓயமாட்டோம். காணாமல்போன அதிபரை மீட்டு மீண்டும் அவரை அரியணையில் அமர்த்தி, எளிய தமிழ்ப் பிள்ளைகளின் நல்லாட்சி மீண்டும் மலரும் வரை ஊண் உறக்கமின்றிப் போராடுவோம். துரோகிகளைக் கருவறுப்போம். இரத்தத்தில் கை நனைப்போம். இந்தப் புரட்சிகர நடவடிக்கையில் எங்கள் உயிரையும் இழக்கத் தயங்கமாட்டோம்.”
உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைவரும் பஸ்ஸில் சீட் கிடைக்காத பயணி மேற்கூரைக் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதுபோல கையை உயர்த்தி கோரசாக கோசமிட்டனர்.
“அதிபர் வாழ்க..”
ஹிட்லரின் முகத்தில் லேசாகப் புன்னகை விரிகிறது. அதிபரின் மீது ஆழமான விசுவாசம் கொண்டவன் ஹிட்லர். மார்ட்டின் லூதர் கிங் சொன்னவற்றை, ஹெலனா ப்ளாவ்ஸ்கி எழுதியவற்றையெல்லாம் ஹிட்லர் சொன்னதாக மேடையில் அதிபர் பேசுவதைக் கேட்டுக்கேட்டு அந்தப் பெயரின் மீது ஆர்வம் கொண்டு காத்தவராயன் என்கிற பெயரை ஹிட்லரென்று மாற்றிக்கொண்டான். சொல்லப்போனால் கோயபல்ஸ் பெயரை வைக்கத்தான் முதலில் நினைத்தான், அதிபர் கோபித்துக் கொள்வாரோ என்று அதை விட்டுவிட்டான்.
ஹிட்லர்தான் தலைமைத் தளபதி. மற்ற நால்வரும் துணைத் தளபதிகள். ஒவ்வொருவருக்கும் கீழே தலா எட்டுப்பேர் என்று மொத்தம் முப்பத்தெட்டுப் பேர் இந்த புரட்சிகர நடவடிக்கைக்கு தங்களை அற்பணித்திருந்தனர். கணக்குப்படி முப்பத்தேழுதானே இருக்க வேண்டும், அந்த முப்பத்தெட்டாவது ஆள் யாரென்றுதானே குழம்புகிறீர்கள். அவர்தான் தலைமைப்பூசாரி சிங்கரப்பா. பூசாரியென்றால் பூசாரி மட்டுமல்ல. கிட்டத்தட்ட அதிபரின் ராஜகுருவைப்போல. கட்சி அறிக்கை, கட்சித்திட்டம், அரசு நிர்வாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் என அனைத்தையும் வகுத்துக் கொடுத்தவர் அவர்தான்.
அதிபர் கடத்தப்பட்டபின்பு ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டாம் கட்டத் தலைவர்களோடு ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றதாகவும், சிங்கரப்பாவை பக்கத்தில் வைத்திருப்பதும் சாரைப்பாம்பை கக்கத்தில் வைத்திருப்பதும் ஒன்றுதான் என்று உளவுத்துறை எச்சரிக்க, ’உதைப்பதற்குள் ஓடிவிடு’ என்று அவர்கள் விரட்டி விட்டதாகவும் ஊருக்குள் உலவிக்கொண்டிருந்த கதையெல்லாம் நமக்குத் தேவையில்லை. சிறிதுகாலம் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தவர் இப்போது இந்தப் புரட்சிப்படைக்கு ராஜகுருவாக இருக்கிறார் என்பது மட்டும் போதும்.
தளபதிகள் கொட்டகையிலிருந்து வெளியே வரும்போது ஆக்ரோசமாக கொம்புகள் ஊதப்பட்டன. உருமியும் பறை இசையும் அந்தக்காட்டின் அமைதியைக் கிழித்துப் போட்டன. அந்தச் சத்தத்தைக் கேட்டு பறவைகளும் விலங்குகளும் அலறிக்கொண்டு திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடின.
எதிரே இருந்த முப்பாட்டன் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்து ஐவரின் நெற்றியிலும் செந்தூரங்களைப் பூசினார் பூசாரி சிங்கரப்பா. இவர்களுக்காக காத்திருந்த மொத்தக் கூட்டமும் உணர்ச்சி மிகுதியில் தன்னிலை மறந்து கோசமிட்டுக்கொண்டிருந்தனர்.
”அதிபர் வாழ்க.. அதிபர் வாழ்க..”
”அதிபர் வாழ்க.. அதிபர் வாழ்க..”
முன்கதைச் சுருக்கம்.
சரியாகச் சொன்னால் மங்கள தேசம் உருவாகி அன்றோடு மூன்றரை வருடங்கள் முடிந்திருந்தது. அதற்கு முன்னால் அது சிந்திய தேசத்தின் ஒரு மாநிலமாகத்தான் இருந்தது. மூன்று பக்கம் கடல்களாலும் ஒரு பக்கம் கடன்களாலும் சூழப்பட்ட அழகிய நிலப்பரப்பு சிந்திய தேசம். அதன் ஆளுகைக்குட்பட்ட ஒரு பகுதியாக இருந்த தமிழ்நிலம் என்ற பகுதியில்தான் அதிபர் பிறந்தார். அதிபரின் வரலாற்றை எழுத பதினைந்தாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால் அங்கு அதிபர் சரக்கடித்து மட்டையாகிக் கிடப்பார் என்பதால், சரியாகப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றால் அதிபரின் அரசியல் பிரவேசத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன்புவரை அதிபர் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் கோமாளியாக நடித்துக்கொண்டு இருந்தார். அவரது சலிப்பூட்டும் நடிப்பு ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறாததால் அங்கிருந்து விரட்டப்பட்டார். போதிய வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருந்த அதிபர் குடிநோயாளியாய் மாறிப்போய், ஒரு ஞானியைப்போல தன் பாட்டுக்கு சுற்றிக்கொண்டு இருந்தார்.
அரசியல், கொள்கை, கொட்டமுத்து, என்றெல்லாம் எந்த இழவுமே இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தவருக்கு சிந்திய தேசத்தில் நிலவிய அரசியல் கொந்தளிப்பு மூலமாக அடித்தது ஜாக்பாட். சிந்திய தேசத்துக்குக் கீழே இருந்த சின்னஞ்சிறு தீவான சலங்கையில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்போர் இரத்த வெள்ளத்தில் முறியடிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களோடு சுதந்திரச் சிங்கங்கள் அமைப்பும் அழித்தொழிக்கப்பட்டதில் தமிழ்நிலத்து மக்களெல்லாம் கொந்தளிப்பாக இருந்தனர். அதை மட்டுப்படுத்தவேண்டிய தேவை சிந்திய தேசத்துக்கு இருந்தது. அதற்குச் சரியான நபர் யாரென்று சிந்திய தேசத்து உளவுத்துறை நாடு முழுதும் கரன்சி வீசித் தேடிக்கொண்டிருந்தது.
அதே நேரத்தில் அதிபர் தன் வீட்டுப் பரனிலிருந்த டிரங் பெட்டிக்குள் எதையோ பரபரப்பாகத் தேடிக்கொண்டிருந்தார். எதையோ பார்த்து அவரது சிவந்த கண்கள் தாமரைப்பூவைப்போல அகல விரிந்தது. பலமாதங்களாகத் துவைக்கப்படாத அதிபரின் அழுக்கு வேட்டிகளுக்குக் கீழே சுதந்திரச் சிங்கங்கள் அமைப்பின் தலைவர் புலித்தேவனோடு அதிபர் எடுத்துக்கொண்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம் கசங்கிய நிலையில் கிடந்தது.
அதிபர் நிமிர்ந்து அமர்ந்தார். சிந்திய தேசத்தின் உளவுத்துறை புன்னகைத்தது.
சலங்கைத்தீவின் ஒரு போர் நிறுத்த சமாதானக் காலத்தில் தன் படையணிகளை மகிழ்விக்க சிந்திய தேசத்திலிருந்து சில சர்க்கஸ் கலைஞர்களை வரவழைத்திருந்தார் சுதந்திரச் சிங்கங்கள் தலைவர் புலித்தேவன். அப்படிப் போன ஒரு குழுவில் அதிபரும் இருந்தார். அப்போது புலித்தேவனோடு சேர்ந்து பல கலைஞர்களைப்போலவே அதிபரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம்தான் பிற்காலத்தில் அவருக்கு அரசியல் துருப்புச்சீட்டாக மாறுமென்று அப்போது சொல்லியிருந்தால் அதிபரே நம்பியிருக்க மாட்டார்.
அப்படியொன்றும் அதிபரின் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்ததாகச் சொல்லிவிட முடியாது. நிறைய மேடைகள், விசிலடிக்க ஊருக்கு ஊர் தவளைக் குஞ்சுகள், ஒரு தலைவரென்ற அங்கீகாரம் எல்லாம் சரிதான்.
ஆனால் அதிபர் எதிர்பார்த்தது இவற்றையல்ல. அதிகாரம். விரல் நுணியில் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரம். சர்வாதிகாரம் மட்டுமே நாட்டைப் பாதுகாக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் அவர்.
சுதந்திரச் சிங்கங்களின் ஆதரவாளர்களின் வெளிநாட்டு நிதியால், ஆடம்பர வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஆனால் ஓட்டு தமிழ்நிலத்து மக்கள்தானே போட வேண்டும்.?
அதிபரால் மக்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. மேடை போட்டால் கூட்டம் சேர்கிறது. பேசினால் கை தட்டுகிறார்கள். ஆனால் ஓட்டு மட்டும் போட மாட்டேன் என்கிறார்கள். இதுவரை ஒரு இடத்தில் கூட டெபாசிட் கிடைத்ததில்லை. தன் முன்னோடியாக வரித்துக்கொண்ட ஜெர்மனியின் ஹிட்லரைப்போல தொண்டைத் தண்ணீர் வறள கத்திப்பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார், அழுது பார்த்தார், ஆத்திரப்பட்டுக்கூட பார்த்தார். எதுவுமே வேலைக்கு ஆகவில்லை.
அந்த ஒற்றைப் போட்டோவை வைத்துக்கொண்டு புலித்தேவனோடு டைனோசர் கறி சாப்பிட்டேன், உண்டிவில்லில் ஒடக்கான் அடிக்கப் பயிற்சி எடுத்தேன், அரிசிக்கப்பலைச் சுட்டேன், இட்லிக்குள்ள கறி, ஓட்டுப்போடாதவங்க மேல வெறி என்றெல்லாம் பேசியும் இந்த மக்கள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்ற ஆற்றாமை அதிபரின் மனதில் ஆமையோடாய் மிதந்தது.
ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா எனக்கு ஓட்டுப்போடுங்க என்றுகூட சொல்லிப்பார்த்து விட்டார். எனக்கு ஓட்டுப்போடாதவங்க அம்மா எல்லாம் சிலுக்கு என்று மட்டும்தான் சொல்லவில்லை. ம்ஹூம். எதுவுமே பயன்படவில்லை.
அதிபர் தன் இறுதி அஸ்திரத்தை ஏவ முடிவு செய்தார்.
வழக்கமாக ஆவி எழுப்புதல் கூட்டங்கள் நடைபெரும் அந்த பிரம்மான்டமான அரங்கை வாடகைக்குப் பிடித்து ஒரு அரசியல் மீட்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டார். அரங்குக்கு வரும் வழியெங்கும் பல கிலோ மீட்டர்களுக்கு அதிபரின் ஆளுயர கட் அவுட்டுகளும் கட்சிக்கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததில் அரங்கு மூச்சுத் திணறியது. உள்ளூர் மட்டுமின்றி தேசிய, சர்வதேசப் பத்திரிக்கையாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். எல்லோருடைய கண்களும் அந்தப் பிரம்மாண்டமான மேடைக்குப் பின்னாலிருந்த கதவையே பார்த்துக் கொண்டிருந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்க சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க கதவைத் திறந்து வெளியே வந்தார் அதிபர். முழு கருப்பு உடையில் ஒரு மெசையாவைப் போல இருந்தார். விண்ணதிர முழங்கிய கோசத்தில் வாத்திய ஒலிகள் ஊமையாகின.
அதிபர் வாழ்க..
அதிபர் வாழ்க..
தொடரும்…
நன்றி:
எழுத்தாளர்: சம்சுதீன் ஹீரா.
(சம்சுதீன் ஹீரா நிகழ்கால அரசியலை கண் முன்னே படம்பிடித்து காட்டும் நல்ல எழுத்தாளர். கோவையில் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தூண்டிய இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதல்களை சமகாலத்தில் நின்று இலக்கியமாக வடித்தவர்.
“வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று பயம் கொள்ளும் பலர் மத்தியில் துணிச்சலுடன் சமகால அரசியலில் ஊடாடும் எழுத்தாளரை போற்றுவோம்)
மிகவும் அருமை தோழரே… அடுத்தடுத்து பதிவுகளுக்காக ஆவலைத் தூண்டுகிறது.
அதிபர் விழித்துக்கொண்டு இருக்கும்போதேஅவருமூக்கிலே “குத்தூசி “சொருகி வாய் வழியாக வெளியில் எடுத்தது போல் மிக அருமையாக அதிபரின் ஆரம்பகாலம் தொட்டு இன்றைய நிலை வரை புட்டு புட்டு வைத்துள்ளார் படிப்பதற்கு மகிழ்ச்சியாகவும் எளிமையாக உள்ளது.
அதிபரின் கோமாளித் தனத்தை நம்பிகள் தம்பிகள் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ!