கம்யூனிஸ்டுகள் உயர்ந்த இலட்சியத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்கின்ற வாழ்க்கையை தேர்வு செய்து கொண்டு வாழ்கிறார்கள்.
ஆனால் நிலவுகின்ற சமுதாயத்தில் வாழ்கின்ற போது, அந்த வர்க்க சமுதாயத்தின் தாக்கங்களுக்கு ஆட்பட்டு பல சமயங்களில் நாம் தேர்வு செய்த பாதை சரியா? தவறா? என்ற உணர்ச்சி குழப்பத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

கம்யூனிச லட்சியம் என்பது உன்னதமானது தான்! ஆனால் அதற்கு நாம் நம்மை உட்படுத்திக் கொள்ள வேண்டுமா? மொத்தமும் மாறும் போது நாம் நம்மை மாற்றிக் கொள்ளலாம் என்பது போன்ற இரட்டை கருத்துகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது தான். ஆனால் கொள்கை, சித்தாந்தம் இவற்றை வைத்து மட்டுமல்ல! இவற்றை கடைபிடிக்கின்ற மனிதர்களையும் சேர்த்துத்தான் மக்கள் மதிப்பிடுகிறார்கள்.

இவர் சொல்வது சரி! ஆனால் இவரே அதற்கு தகுந்தார்போல் வாழ்ந்து காட்டுகிறாரா என்றுதான் பெரும்பான்மை மக்கள் பரிசீலனை செய்கிறார்கள்.
இத்தகைய சமூகச் சூழலில் அலோக் சாகர் போன்றவர்கள் போற்றுதலுக்கும், பின்பற்றுதலுக்கும் உரியவர்கள்.

♦♦♦

படத்தில் நீங்கள் பார்ப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; இவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இன்று இவர் இருக்கும் இடம் தெரிந்தால் மேலும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!

அலோக் சாகர் இவரது பெயர்.ஐ.ஐ.டி டெல்லியில் படித்து பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அதன்பின் புகழ்பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எச்.டி என்னும் முனைவர் பட்டம் பெற்று ஐ.ஐ.டி பேராசிரியராகப் பணிபுரிந்தும் வந்தார்.

ஒருநாள் திடீரென அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு புறப்பட்டுவிட்டார். அவர் வந்தடைந்த இடம் 750 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம்!

ஆம்..கடந்த 35 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமத்தில் வசித்து வருகிறார்; மேலும் அங்கு வாழும் மக்களுக்கு சேவை செய்தும் வருகிறார். சுற்றியுள்ள எல்லா பழங்குடியின மக்களின் மொழிகளையும் இவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் இவருடைய முன்னாள் மாணவர். அவரைப் போன்று இன்று புகழ் பெற்று விளங்கும் பலரும் இவரிடம் பயின்றவர்கள்.

ஐஐடி வேலையை ராஜினாமா செய்ததும் மத்தியபிரதேசத்தில் உள்ள பேட்டுல் மற்றும் ஓசங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடி கிராமங்களில் முதலில் பணி செய்ய ஆரம்பித்த அவர் தன் இருப்பிடமாக ஒரு சின்னம் சிறு குடிசையை கொசாமு என்கிற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் ஏற்படுத்திக் கொண்டு வசிக்க ஆரம்பித்துவிட்டார்.

அங்குள்ள பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இருக்கிறார். கிராமவாசிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கி மரம் நடுவதற்கு ஊக்கப்படுத்துகிறார்.

“நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர மக்கள் பாடுபட வேண்டும்.

“இங்கு அறிவை பெருக்குவதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தான் மக்கள் தங்கள் குறிக்கோளுடன் இருக்கிறார்களே தவிர கஷ்டப்படும் ஏழை மக்களின் துயர் துடைப்பதில்லை” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய பின்புலம் பற்றி மக்கள் முதலில் அறியவில்லை. ஒரு தேர்தலின் போது தான் இவரைப் பற்றிய உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிய வந்து இருக்கிறது.

அது வரை மக்களோடு மக்களாக ஒரு எளிய வாழ்க்கை முறையைத் தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலே வாழ்ந்து வந்தார்.

சாகர் டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரியும் போது கிராமப்புற மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறார். மாணவர்களிடம் இது குறித்த அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். விவசாயிகளின் துயர் துடைக்கத் தானே களத்தில் இறங்குவது என முடிவு செய்த அன்றே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

விவசாயம் செய்ய இயலாத மக்களுக்கு விதை நெல்களை இலவசமாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரைப்பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் இவரை வீட்டிற்குப் போகும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் சாகர் அதை மறுத்து விட்டார்.

இவரது தந்தை ஐ.ஆர்.எஸ். அலுவலராக இருந்தவர் 2015- இல் மரணித்து விட்டார். தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்; தம்பி ஐஐடி டெல்லியில் பேராசிரியர்.

இன்று 69 வயதாகும் இவர் தினசரி 60 கிலோமீட்டர் கிராமங்கள்தோறும் சோர்வில்லாமல் பயணித்து மக்கள் பணியாற்றி வருகிறார்.

“கல்வி என்பது சக மனிதரின் துன்பத்தைப் போக்குவது மற்றும் எளிய மக்களுக்குச் சேவை செய்வதே” என சாகர் அடிக்கடி கூறுவதுண்டு. “தொழில்நுட்ப வளர்ச்சியோ, பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியோ ஏழைகளைச் சென்றடைவதில்லை. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் மூலமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும்”

எளியவர்களைக் காப்போம் என வெற்றுக் கூச்சலிடுவோர் மத்தியில் சாகர் ஒரு மகத்தான மனிதர். அவரிடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு சைக்கிள், மூன்று ஜோடி உடைகள் மட்டுமே. கல்வி என்பது வியாபாரப் பொருளென மாறிவிட்ட நிலையில் இம்மாதிரியான மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் தான். ஆனாலும் ஏழைகளை, வறுமையில் வாடுபவர்களை நாம் நினைத்தால் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு சாகரின் வாழ்க்கையே சான்று!

  • அம்ரா பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here