
மேலே இருக்கும் படத்தில் உள்ள இளைஞரின் முதுகில் உள்ள காயங்கள் அந்த முஸ்லிம் இளைஞனின் தனிப்பட்ட காயங்கள் அல்ல; ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் மக்களின் முதுகில் உள்ள காயங்களுக்கு ஒரு வகை மாதிரி; பெரும்பான்மை இந்து சமூகம் வேடிக்கை பார்க்க ஆர்எஸ்எஸ் காலிகள் நிகழ்த்திய வன்முறையின் அடையாளம்; காவல்துறை, நீதித்துறை, பாராளுமன்றம் என ஒவ்வொரு அரசு கட்டுமானமும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் முகப்பில் பெருமையாக அணிந்திருக்கும் “மதச்சார்பற்ற” என்ற சொல்லின் விழுமியத்தைத் தூக்கி எறிந்ததும் அடையாளம்.
கடந்த மார்ச் 13ஆம் தேதி மாலை, மஹாராஷ்டிரா மாநிலம், புனே, கோந்த்வா பகுதியில் உள்ள ஒரு குளத்தங்கரையில் இப்தார் விருந்து உண்ட 14 முஸ்லிம் இளைஞர்களின் மீது 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காவிக் கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்!” எனும் கத்திக் கொண்டே பெரும் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. அங்கிருந்து தப்பி ஓடி வந்த இளைஞர்கள் மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள். அதில் ஒரு முஸ்லிம் இளைஞன் முதுகில் ஏற்பட்ட காயத்தை தான் மேலே உள்ள படத்தில் பார்க்கிறோம்.
இது ஏதோ புனேவில் நடந்த ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல, வாரணாசி, கங்கை நதியில் படகில் சென்றவாறு இப்தார் விருந்தை உண்ட 14 முஸ்லிம் இளைஞர்களின் காணொளி பரவலாகியது, கடந்த மார்ச் 16ஆம் தேதி பாஜகவின் இளைஞர் அமைப்பு முஸ்லிம் இளைஞர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு அதன் மிச்சங்களை கங்கை நதியில் தூக்கி எரிந்ததன் மூலம் கங்கையின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள் என்று புகார் அளித்தது. இந்து பக்தர்களின் மலமும், கார்ப்பரேட் ஆலைகளின் கழிவுகளும், பாதி எரியூட்டப்பட்ட பிணங்களும் கலந்து தான் கங்கையின் புனிதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது வேறு கதை. புகாரின் பேரில் அவர்கள் மீது “மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும்”, “இரு பிரிவினரிடையே மோதல் உருவாக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும்” வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது உத்திர பிரதேச பாஜக அரசின் போலீஸ்.
கடந்த பிப்ரவரி மாதம் லக்னோ பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் ரமலான் தொழுகை நடத்தும் லால் பராதாரி மசூதியை மூடியது பல்கலைக்கழக நிர்வாகம். அந்த மாணவர்களோ வெளியில் நின்று தொழுகை நடத்தினர். அதற்கு அரணாக அங்கு படிக்கும் இந்து மாணவர்கள் நின்றுள்ளனர். இங்கு முஸ்லிம் பகையை விளக்க வேண்டும் சிறுபான்மையினரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட லக்னோ பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இது பெரும் இடியாக இறங்கியது. உடனே அங்கு தொழுகை நடத்திய மாணவர்கள் மீதும், அவர்களுக்கு அரணாக நின்று மாணவர்கள் மீதும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.
மேலே உள்ள சம்பவங்கள் வெகு சில உதாரணங்களே. மேலும் முஸ்லிம் மக்களின் மீதான இந்த தாக்குதல்கள் புதிதாக நிகழும் ஒன்றும் அல்ல. கடந்த ஆண்டுகளில் அனுமன் ஜெயந்தி விழாவின் போது மசூதிகளுக்கு முன்பாக நின்று ஜெய் ஸ்ரீராம் கோசமிடுவதும், அதற்கு அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது கல்லெறிவதும், மாட்டுக்கறி வைத்திருந்தகாகக் கூறி கும்பல் படுகொலை செய்வதும் நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகளாக மாறிக் கொண்டு வருகின்றன.
மேலும் இந்த காவிக் கும்பலின் தாக்குதல் இஸ்லாமிய மக்கள் மீது மட்டுமல்ல, கடந்த கிறிஸ்மஸ் விழா காலத்தில் கிருத்துவர்கள் மீதும் இதே போன்றதொரு தாக்குதலைத் தொடுத்தது காவிக் கும்பல்.
இதையேதான் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நடத்த வேண்டும் என்று துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பல் திருப்பரங்குன்றம் மலை மீது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் சிக்கந்தர் தர்காவைக் குறி வைப்பதும் அதற்காகத்தான்.
படிக்க:
♦ இஸ்லாமியர்களைத் திறந்த வெளிச்சிறையில் அடைக்கத் துடிக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு!
♦ பீகாரில் இஸ்லாமிய தொழிலாளி கும்பல் படு*லை!
இந்த நிலைமையை புரிந்துக் கொண்டு பாசிச பாஜகவும்- அடிமை அதிமுகவும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முழக்கம் வைத்தால் “பாசிச பாஜக புகுந்துவிடும்” என போலியாக அச்சுறுத்துவதாகக் கூறி, பாசிசம் பாயாசம் என நக்கல் அடிக்கின்றனர் தம்பிகளும் தற்குறிகளும். இப்தார் விருந்திலும், கிறிஸ்மஸ் நிகழ்வுகளிலும் ஜம்பமாக பங்கேற்கும் பனையூர் பண்ணையார் இந்த தாக்குதல்கள் குறித்து கண்டிப்பதும் இல்லை. திருப்பரங்குன்றத்தில் காவிக் கும்பல் நீதிமன்றத்தின் உதவியுடன் கலவரம் செய்ய திட்டமிட்ட போது வாய் திறக்கவும் இல்லை.
மேலே உள்ள மூன்று சம்பவங்களில் காவிக் கும்பல், உத்தரபிரதேச காவல்துறை, லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம் என மூன்று வெவ்வேறு பிரிவுகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது நாட்டையே காவி பாசிசம் வேகமாக கவ்வி வருவதையே வெளிப்படுத்துகின்றது. நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கமான வாழ்வுக்கும் குந்தகம் விளைவிக்கும், ஆர்.எஸ்.எஸ் பாஜக எனும் பிரதான எதிரியை முதன்மையாக எதிர்க்காத எந்த கட்சியும் காவிக் கும்பலின் இந்துராஷ்டிர கனவுக்குத் துணை போகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த முஸ்லிம் இளைஞரின் முதுகில் உள்ள காயங்கள் சில நாட்களில் ஆறலாம். அதன் வடுக்களைப் போல பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் இந்திய சமூகத்தில் ஏற்படுத்தி வரும் பிளவுகள் எளிதில் மறையாது என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகளும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒவ்வொரு பகுதிகளும் கட்டமைப்பது இன்றியமையாத இன்றைய தேவை.
திருமுருகன்
ஆதாரம்:







இப்தார் விருந்துகளின் மீதான தாக்குதல் நாட்டையே காவி பாசிசம் கவ்வியிருப்பதின் மற்றொரு அறிகுறி !
கடந்த மார்ச்13ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனோவில் முஸ்லிம் இளைஞர்கள் இக்தார் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஆர் எஸ் எஸ் பாஜக அவர்களை அடித்து துன்புறுத்தி உள்ளது சங்கிகள் அவர்களை அடித்து துன்புறுத்தி காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்துள்ளார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது !
காவி கும்பலின் அட்டூழியத்திற்கு எதிராக உழைக்கும் வர்க்கமாக எல்லோரும் ஒன்றாக இணைந்து ஆர்எஸ்எஸ் காவி கும்பலை களத்தில் நின்று முறியடிப்போம் !
பாசிச காவி(லி)க் கும்பலின் அட்டூழியங்கள் அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சாதி மத பேதம் கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்று திரண்டு ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ சங்கிகளை வீதிகளில் இறங்கி போராடி வீழ்த்துவது தவிர மாற்று ஏதுமில்லை.
கட்டுரை அதனைத் தான் வலியுறுத்துகிறது.
நமது நாட்டிலும் சரி; உலக நாடுகளிலும் சரி; ஒவ்வொரு நிமிடமும் நடக்கின்ற கொடுமைகளை உற்று நோக்கின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு கட்டுரை அல்லது ஒரு வீடியோ உரை வெளியிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மக்களை விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய கடமையையும் வலியுறுத்துகிறது.
மக்களிடம் பாசிஸ்டுகள் மதவெறுப்பு கருத்தை மிக ஆழமாக பல ஆண்டுகளாக கடத்தி வருகிறார்கள்.
அது ஒவ்வொரு சிறுபான்மை சமூக நிகழ்வின் போது படு மோசமாக வெளிப்படுகிறது.
சாதிகயவாதிகளுக்கு எப்படி பட்டியல் சமூகங்களை அடக்கி ஒடுக்குகிறதோ அது போல் இந்த மத சிறுபான்மை தாக்குதலும் இயல்பாக அரங்கேறுகிறது.
மக்களிடம் சமத்துவ கருத்துகளையுள் நமக்கு எதிரிகள் கார்ப்பரேட் கும்பல் தான் என்பதையும் தீவிரமாக பிரச்சாரத்தை அனைத்து அமைப்பு கட்சிகள் நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் அது திட்ட வகைபட்டதாக இருக்க வேண்டும்.
அதன் மூலம் தான் இந்த காவி பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த முடியும்.