இஸ்லாமியர்களைத் திறந்த வெளிச்சிறையில் அடைக்கத் துடிக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு!
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட சானியா தனது தற்கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் தனது தற்கொலைக்கான காரணத்தையும் கடிதமாக எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தைத் தற்போது பாசிச பாஜக ஆண்டு கொண்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை (ஜனவரி 21) அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சர் ஜோகராம் பட்டேல் “The Rajasthan Prohibition of Transfer of Immovable Property and Provisions for Protection of Tenants from Eviction from the Premises in Disturbed Areas Bill, 2026” என்று பெயரிடப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார்.

“நமது மாநிலத்தின் பல பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் தொகை அதிகரிப்பு, மக்கள்தொகை சமநிலையின்மை, சமூக மோதல்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒற்றுமை குலைவு ஆகியவற்றின் தாக்கம் காணப்படுகின்றன. பல பகுதிகளில் கலவரங்கள், சமூக விரோத கூட்டத்தின் வன்முறைகளால் அமைதியின்மை உருவாகின்றன. இதன் காரணமாக, நீண்ட காலமாக அங்கு வசித்து வந்தவர்கள் தங்கள் சொத்துகளை மிகவும் அற்ப விலைக்கு  விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், அந்தப் பகுதிகளின் மக்கள் தொகை அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது” என்பதால்தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் மேலும் இந்த சட்ட முன்வரைவு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமாக்கப்பட உள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சமூகத்தில் அமைதி நிலவவேண்டும் என்பதற்காகவும் வாடகைதாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக பாசிச பாஜகவினர் கூறுவது எவ்வகையிலும் உண்மை அல்ல. இஸ்லாமியர்களையும் பிற சிறுபான்மையினரையும் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் இருந்து அவர்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டு விரட்டியடிப்பது மற்றும் சிறுபான்மையினர் யாரும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் புதிதாக சொத்துக்களை வாங்க விடாமல் தடுப்பது, இஸ்லாமியர்களையும் பிற  சிறுபான்மை இன மக்களையும் அந்தப் பகுதியில் இருந்தே விரட்டுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுதான் ஆர் எஸ் எஸ் காவிக்கும்பல் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியை “பாதிப்பிற்குள்ளான பகுதி” என்று அரசு வரையறுத்து விட்டால் அந்தப் பகுதியில்  மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே எந்தவிதமான சொத்துக்களையும் வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். இப்படி அனுமதி பெறாமல் யாராவது சொத்துக்களை வாங்கினாலோ விற்றாலோ அந்த சொத்துப் பரிமாற்றம் சட்டப்படி செல்லாது. அதுமட்டுமின்றி இப்படி ப்பட்ட விற்றல் வாங்கலில் அ ஈடுபட்டவர்களுக்கு  மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை.

அரசு அதிகாரத்தில் உள்ள பாசிச பாஜகவினரின் விருப்பப்படி எந்த ஒரு பகுதியையும் “பாதிப்பிற்குள்ளான பகுதி” என்று முத்திரை குத்தி அந்தப் பகுதியில்   இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை செய்ய முடியும் என்பதை நாம் விளக்கமாக சொல்லமலேயே அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இதை நாம் கற்பனையாக கூறவில்லை. குஜராத்தில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1991 ஆம் ஆண்டு இதே போன்றதொரு சட்டம் (The Gujarat Prohibition of Transfer of Immovable Property and Provision for Protection of Tenants from Eviction from Premises in Disturbed Area Act, 1991) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக குஜராத்தில் ஏற்பட்டு உள்ள விளைவை நாம் இப்பொழுது பார்ப்போம்.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்கள் அடர்த்தியாக வாழும் கோமதிப்பூர் என்ற இடம் உள்ளது. இந்த கோமதிப்பூரில் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த சானியா என்ற 15 வயதே ஆன ஒரு பதின் பருவப் பெண் கடந்த ஆண்டு (ஆகஸ்ட் 9, 2025 அன்று) தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பெண்ணின் குடும்பம், 2024 ஆம் ஆண்டு, தாங்கள் வாழும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இந்துவுக்கு சொந்தமான வீட்டை ரூ.15.5 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது. முழுத் தொகையையும் கொடுத்து வீட்டை விலைக்கு வாங்கிய பிறகும், ஒரு வருடமாக, வீட்டை விலைக்கு வாங்கிய இஸ்லாமியரிடம் ஒப்படைக்காமல் அந்த இந்து குடும்பம் இழுத்தடித்து வந்துள்ளது.

வீட்டைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியபொழுது வீட்டை விற்ற இந்துக் குடும்பத்தினர் மேலே கூறிய சட்டத்தை காட்டி வீடு விற்பனையை ரத்து செய்யப் போவதாக இஸ்லாமியர் குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர்.  தற்கொலை செய்து கொண்ட சானியாவின் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்துடன் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட சானியா தனது தற்கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் தனது தற்கொலைக்கான காரணத்தையும் கடிதமாக எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இப்பொழுது குற்றவாளியான இந்துக் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்கான வேலையில் அந்த மாநிலத்தின் காவல்துறை இறங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதுமட்டுமின்றி, இப்பொழுது பாதிக்கப்பட்ட அந்த இஸ்லாமிய குடும்பத்தினர் வீதிகளில் நடக்கும் பொழுதெல்லாம் ‘இந்து’க்களால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்படி இந்த சட்டத்தால் பல்வேறு அளவுகளில் பல்வேறு வகைகளில் குஜராத் மாநிலத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் துன்புறுத்தப்படுகின்றனர். இதை ஒத்த ஒரு நிலை தான் இனி ராஜஸ்தானிலும் இஸ்லாமியர்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் ஏற்பட உள்ளது.

படிக்க:

 லஞ்சம் வாங்குவதில் புது முறையை அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் அரசு அதிகாரி!

 ஊழல் செய்வதற்காகவே பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட “பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா” !

ராஜஸ்தானில் இப்படிப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட்டது குறித்து, அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான கோவிந்த் சிங் டொடாஸ்ரா “உங்கள் அரசின் தோல்வியை மறக்க விரும்பும் நீங்கள் அச்சமூட்டும் குஜராத்தின் மாதிரியை இங்கே முன்னிறுத்துகிகிறீர்கள்” என்று மாநில பாஜக அரசை  கடுமையாக சாடியுள்ளார்.

அதனால் குஜராத்தில் 1991 ஆம் ஆண்டு ஜனதாதள் அரசால் இதே போன்றதொரு சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது அந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்கள்தான் இந்த காங்கிரஸ்காரர்கள். அப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்கள் ராஜஸ்தானில் அதே போன்றதொரு சட்டம் கொண்டுவரப்படும் பொழுது இப்படிப் பேசுவதற்கு சிறிதாவது அருகதை உள்ளவர்களா என்பதை அந்தக் கட்சியினர் பரிசீலிக்க வேண்டும்.

‘குஜராத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதற்கு ஆதரவளித்தது தவறுதான்’ என்று மக்கள் மத்தியில் சுயவிமர்சனம் செய்து கொண்ட பிறகுதான் இப்பொழுது பாசிச பாஜகவால் ராஜஸ்தானில் கொண்டு வரப்படும் இந்த சட்டத்தை கண்டித்து பேசுவதற்கான – எதிர்ப்பதற்கான அருகதையை காங்கிரஸ் காரர்கள் பெறுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட நேர்மையாளர்களாக காங்கிரஸ்காரர்கள் இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவின் வட மாநிலங்களில் செய்ததைப் போலவே தமிழகத்திலும் மக்களை மதரீதியாக பிரித்து மோதவிட்டு குளிர்காய துடித்துக் கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் பாஜகவினர் எப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு தற்போதைய சான்று.

இந்து மதவெறி பாசிஸ்ட்டுகள் ஒரு மாநிலத்தில் காலூன்றுவதற்காக மக்களை மதரீதியாக மோதவிடுவதும் மாநிலத்தில் காலூன்றிய பிறகு – ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து மத மோதல்களை உருவாக்குவது, சிறுபான்மை மக்களை தனியே பிரித்து குறிப்பிட்ட பகுதிக்குள் விரட்டுவதற்காக இம்மாதிரியான சட்டங்களை போடுவதுடன் அந்த வேலைக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்வது என்பதை மிகவும் லாவகமாக செய்து வருகிறார்கள்.

இந்த மாதிரியான ஒரு நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் ஏற்கனவே இந்த நிலை ஏற்பட்டுவிட்ட பிற மாநிலங்களையும் இந்து மதவெறி பாசிஸ்ட்டுகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைவரும் தீவிரமாக மக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

  • குமரன்

ஆதாரம்: TheWire

1 COMMENT

  1. சிறுபான்மை மக்களை சமூக ரீதியாக ஒடுக்கும் வேலையை ,தனிமைப்படுத்தும் வேலையை ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல் சட்டத்தின் மூலமாகவே சாத்தியமாக்குகிறது.
    அவர்கள் இந்த தேர்தல் ஜனநாயகத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து தான் சாத்தியமாக்குகின்றனர் .
    மதவாத கும்பலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here