நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தொடர்போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது அன்றைய எடப்பாடி தலைமையிலான அரசு நடத்திய துப்பாக்கு சூடு – படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி மக்களும் போராட்ட குழுவினரும் மாவட்ட ஆட்சியரிடம் 12.12.22 இல் மனு தந்தனர்.

அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரை!

தூத்துக்குடியில் மே 22 இல் திட்டமிட்ட தாக்குதல் படுகொலைதான் நடத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனால் இன்றைய திமுக அரசாங்கம் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுத்துள்ளது. இதனால் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட போராடி வருபர்களுக்கு, படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நீதி வேண்டும் என்பதையும் சேர்த்து போராடவேண்டிய நிலை நீடிக்கிறது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.

ஒன்றிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பினர்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என்பது கால் நூற்றாண்டு வரலாறு கொண்டது. இதில் வெவ்வேறு காலகட்டங்களில் பலரும் போராடி வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் களத்தில் ஒன்றிணைத்தது 2018 ஆம் ஆண்டு. அதாவது ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு தரப்பட்ட அனுமதியும் அதைத்தொடர்ந்த குமரெட்டியாபுரத்து மக்கள் போராட்டத்தில் இறங்கியதன் தொடர் நிகழ்வும்தான் மொத்த தூத்துக்குடியும் ஒன்றிணைய காரணமானது.

உலகறிய அரசே திட்டமிட்டு நரவேட்டையாடியதையும் தாங்கிக்கொண்டு நீதிகேட்டு போராட்ட களத்தில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த சூழல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுக்களை ஒன்றிணைய தூண்டியுள்ளது. அதன்படி ஐக்கியப்பட்டுவிட்ட வரவேற்கத்தக்க இந்த முன்னேற்றத்தினூடாக, ஒரே அணிவரிசையில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவையும் தந்துள்ளனர். இதை சகிப்பார்களா கார்ப்பரேட்டுகள்?

அச்சுறுத்தும் கார்ப்பரேட் கைக்கூலிகள்!

உறுதியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முன்நிற்பவர்களை போலீசு முதல் பொறுக்கிகள் வரை அச்சுறுத்துவது தொடர்கிறது. விடாப்பிடியாக போராடும் மக்கள், கூட்டமைப்புகள் ஐக்கியப்பட்டு ஒன்றிணைவதை தாங்க முடியாத கைக்கூலிகளால் சமீபத்திய முயற்சியாக பேராசிரியர் பாத்திமா பாபுவுக்கு கடந்த 09.12.2022 அன்று போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடுபவர்தான் பாத்திமா பாபு. தூத்துக்குடி மக்களில் ஒருவராக இன்றுவரை களத்தில் நின்று போராடும் இப்பேராசிரியருக்கு போலிப்பெயரில் அச்சுறுத்தல் தருகின்றனர் கார்ப்பரேட் கைக்கூலிகள்.

இது வெறும் மிரட்டலா – சதித்திட்டமா?

கடித்த எலும்புத்துண்டுக்கு விசுவாசமாக, பல ஆண்டுகளாக குரைக்கும் நாய்களான ஸ்டெர்லைட்டின் அடியாட்கள் இம்முறை அடுத்த கட்ட முன்னேற்றமாக தனது முகத்தை மறைத்துக்கொண்டு மக்கள் அதிகாரத்திலிருந்து பேசுவதாக கூறி மிரட்டி உள்ளனர். இது கார்ப்பரேட் கிரிமினல்களின் வேலை என்பதை உணர்ந்ததால் அழைப்பு வந்த அலைபேசியின் எண்ணை தந்து, தன்னை மிரட்டிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தந்துள்ளார் பேராசிரியர் பாத்திமா பாபு. இதைத்தொடர்ந்து தனது சமூகப்பணியில் இருந்து பின்வாங்காமல், மக்களுடன் சென்று கலெக்டரிடம் நீதி கேட்டு மனு தருவதிலும் முன்னின்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி எங்கே?

இம்முறை போராடும் அமைப்புகளை, அதன் முன்னணியாளர்களை பிளவுபடுத்தவும், சட்டவிரோத, பயங்கரவாதிகளைப்போல் முத்திரை குத்தவும் மட்டும் இந்த அலைபேசி மிரட்டல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை. மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் அரிராகவன் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு பேசியிருப்பதால் இதைவிட விரிவான சதி இருக்க கூடும். பேராசிரியைக்கு தாங்கள் போன் செய்யவில்லை என மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு, படுகொலை குறித்து ஆதாரபூர்வ காணொளியாக தொகுத்து அரசை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர் முகிலன் போலீசின் கைதுக்கு பின்னர் அரசியல் களத்திலிருந்தே அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார். மற்றவர்களையும் அப்படி விரட்டிவிட எத்தனிக்கிறதா அரசு?

அரசு பேராசிரியரின் புகாரை எப்படி அணுகுகிறது என்பதிலிருந்து நாம் முடிவுக்கு வருவோம். ஒருவேளை நேர்மையாக விசாரணை நடந்தால் இத்தகைய மிரட்டலில் கார்ப்பரேட்டுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கொலைகார அதிகார வர்க்கத்தினரின் தொடர்பு பற்றி பின்னர் அம்பலமாகக்கூடும்.

2018 மே 22 இல் நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி நீதிகேட்கும், சட்டமன்றத்தில் தனிச்சட்டம் போட்டு ஸ்டெர்லைடுக்கு நிரந்தர தடை கேட்கும் தூத்துக்குடியின் குரலுக்கு ஆதரவு தருவது நம் அனைவரின் கடமை.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here