15-12-2022

வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம்
கைபேசி 94432 60164

பெறுதல்

காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள்
தமிழ்நாடு காவல் துறை
சென்னை

வணக்கம் !

மக்கள் அதிகாரம் எமது அமைப்பு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்புடன் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் அமைப்பாகும். தற்போது எமது அமைப்பின் நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர் என கூறிக்கொண்டு விஜயகுமார் என்ற பெயரில் 09-12-2022 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினை சேர்ந்த பேராசிரியர் பாத்திமாபாபு அவர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி உள்ளார். அந்த மர்ம நபரின் பேச்சு முழுவதும் பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடி நகரில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் பாத்திமா பாபு அவர்கள் காவல்துறையிடம் புகார் மனுவும் கொடுத்துள்ளார். அவ்வாறு பேசிய மர்ம நபருக்கும் மக்கள் அதிகாரம் எமது அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் மர்ம நபர் பேசிய செல் எண்ணுக்கு உரியவரான தருமபுரியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் தான் அவ்வாறு யாரிடமும் பேசவில்லை. அந்த குரலும் என்னுடையது அல்ல. அதே நேரத்தில் அந்த செல் நம்பர் என்னுடையதுதான் என பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார். செல்போன் உரிமையாளருக்கு தெரியாமல் அவர் செல் நம்பரை பயன்படுத்தி யாரோ ஒருவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உள்ள ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசமுடியும் என்பது சாதாரண செயல் அல்ல. அதி தொழில் நுட்பம் அறிந்தவர்கள் அல்லது காவல் துறையினர் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேரின் படுகொலைக்கு காரணமான காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் போராடும் தூத்துக்குடி மக்களோடு நாங்கள் உடன்படுகிறோம். வருகிற ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு இறுதி விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கில் மக்கள் அதிகாரமும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்த உள்ள சூழலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் பெயர் கேடான நோக்கத்துடன் பயன்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

கடந்த 12-12-2022 அன்று தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட கூட்டமைப்பினர் மற்றும் அனைத்து கட்சியின், முக்கிய பிரமுகர்கள் போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி குற்றம்சாட்டப்பட்ட காவல் தறை உயர் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை கோரி கோரிக்கை மனு கொடுத்து அதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரியுள்ளனர். இந்த சூழலில்தான் கடந்த 9-12-2022 அன்று விஜயகுமார் என்ற பெயரில் மக்கள் அதிகாரம் பெயரை பயன்படுத்தி கூட்டமைப்பில் உள்ள பேராசிரியர் பாத்திமாபாபுவிடம் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். இது தீவிரமாக விசாரிக்க வேண்டிய சைபர் கிரைம் நடவடிக்கை ஆகும்.

தொகுப்பாக ஜனவரியில் நடக்க இருக்கின்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளி காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீதான குற்ற நடவடிக்கை கோரி நடக்கும் மக்கள் போராட்டம், ஆகியவற்றை சீர்குலைக்க ஸ்டெர்லைட் நிர்வாகமும், அதன் ஆதரவு காவல் துறை அதிகாரிகளும் செய்த கூட்டு சதி செயல்தான் இந்த அதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் அதிகாரம் என்ற பெயரில் விசயகுமார் என்பவரின் ஆடியோ பேச்சு. பேராசிரியர் பாத்திமாபாபு மக்கள் அதிகாரம் அமைப்பிடம் விசாரித்து விசயகுமார் என்று யாரும் இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டார். தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளும் பேராசிரியரிடம் மிகுந்த ஆர்வமுடன் வலியுறுத்தி இது குறித்து புகார் மனுவை பெற்றுள்ளனர்.

இது போல் முன்பு 2018 நவம்பரிலும் பேராசிரியர் பாத்திமாபாபு மற்றும் தெர்மல் ராஜா பற்றிய வீடியோ ஒன்றை மக்கள் அதிகாரம் பெயரை போலியாக பயன்படுத்திதான் அறிக்கையுடன் வெளியிட்டனர். அது தொடர்பாக மறுப்பு வெளியிட்டதுடன் 27-11-2018 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். அது போல் ஸ்டெர்லைட் நிர்வாக ஆதரவு ஆட்கள் தூத்துக்குடி மக்களை மூளைச்சலவை செய்து மக்கள் அதிகாரம் அமைப்பு போராட தூண்டியது என மிக கொச்சையாக போராடும் மக்களை இழிவு படுத்தி தூத்துக்குடி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். இவ்வாறு ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் ஆலையை திறக்க எதையும் செய்யும் என்பதற்கு இது போல் பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும்.

எனவே மக்கள் அதிகாரம் எமது அமைப்பின் பெயரை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி களங்கம் கற்பிப்பதுடன், தூத்துக்குடியில் போராடும் மக்களிடையே குழப்பம் விளைவித்து ஒற்றுமையை சீர்குலைப்பதும், என செய்வது ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களின் கைக்கூலிகளாக இருக்கலாம். இவ்வாறு நிகழாதவாறு விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோருகிறோம்.

இப்படிக்கு,

வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here