ழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை நியதி. இதற்கு விதிவிலக்கு என்று எதுவும் இல்லை. விவசாயமும், கிராமங்களும் நலிந்து கொண்டிருக்கும் போது அதனோடு ஒட்டிப்பிறந்த கலைகள் நலிவடைவது இயற்கைதான்.

விவசாயிகளின் ஜீவ மரணப் போராட்டத்தைப் போலவே நாட்டுப்புறக் கலைஞர்களும் கலையோடும், வாழ்வோடும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் ஊடாக அழிவின் விளிம்பில் நிற்கும் கலைகளில் ஒன்றான லாவணிக்கலையோடு ஜீவ மரணப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது டேப் காதர் உருவாக்கிய தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு.

மராட்டிய மண்ணிலிருந்து தமிழகத்திற்கு இக்கதை வடிவம் வந்ததென்று ஆய்வாளர்கள் சிலர் கூறினாலும் தமிழ்மண்ணில் வேளாண்சமூக தொன்மை சடங்கையும், தமிழ் தர்க்கமரபையும் தன்னுள் காமன்பண்டிகையும், லாவணியும் பெற்றிருக்கிறது. மலையகத் தமிழர்கள் மத்தியில் உள்ள லாவணி மராட்டிய வடிவத்தைப் போலவே குழுநடன வடிவத்தின் தாக்கமும், காவிரி கடைமடை பகுதி காமன்கூத்து மரபையும் பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுன்றனர்.

ரதி-மன்மதன்-சிவருத்திரத்தாண்டவ ஆட்டங்கள் சில கிராமங்களில் சமீபகாலம்வரை இருந்தது. டேப், தபேலா, ஆர்மோனியம், ஜால்ரா ஆகிய கருவிகள் பயன்படுத்தி லாவணி பாடப்பட்டது. துந்தனா, உடுக்கை கருவிகளை சில கலைஞர்கள் பயன்படுத்தி லாவணி பாடியிருக்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

லாவணிக்கலை வடிவம் பாட்டு எதிர்பாட்டு என்பதுதான். தர்க்கவாதம் என்ற தமிழ்மரபின் தொன்மைக்கூறு தமிழ் லாவணியின் வடிவத்தில் தொடர்வதையும் அவதானிக்க முடிகிறது.

சைவ, வைணவ போராட்டம் உக்கிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் மன்மதனை சிவபெருமான் எரித்தார் என்று எரிந்த கட்சியினரும், மன்மதன் திருமாலின் அங்கம், எரிக்க முடியாது என்று எரியாத கட்சியினரும் பாடல், பேச்சு என தர்க்க வாதத்தில் ஈடுபட்டு தமிழ் மண்ணில் இக்கலையை வளர்ந்திருக்கிறார்கள்.

லாவணி பாடகர்களிடம் சைவம், வைணவம், மாயாவாதம், உலகாயதம் என்ற தத்துவப்போட்டி நடந்திருப்பதை அதன் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பாபுதாசரின் எரியாத கட்சி பாடல் செய்யுள்வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறப்பானதாகத் தெரிகிறது.

இதையும் படியுங்கள்: லாவணி கலைஞர் டேப்காதர் நினைவு விருது வழங்கல்

முன்னிரவு தொடங்கி விடியும் வரை நடைபெரும் இசை நிகழ்ச்சியில் இடையிடையே பாடகர்கள் மற்றும் பார்வையாளர் சோர்வு மற்றும் களைப்பை போக்கிக்கொள்ள கோமாளி ஆட்டக்கலைஞர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். புராண இதிகாச கதைகளிலிருந்தும், சித்தர் பாடல்கள் மூலமாகவும் தமிழ் இலக்கியங்களிலிருந்தும் தமிழ் தர்க்கமரபை பலதலைமுறையாகக் கடத்தி வந்த லாவணிக்கலை இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது.

தங்களை வாழவைத்த லாவணிக்கலையை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்ற ஆவலுடன் போராடிக்கொண்டிருக்கிறது தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு.

போதை ஒழிப்பு
நவீன விவசாயம்
சுகாதாரகேடு
பாலியல் வன்கொடுமை
மகளிர் மேம்பாடு
பள்ளி கல்வி
எது தேசபக்தி போன்ற தலைப்புகளில் லாவணிப் பாடல்கள் தயாரித்து லாவணி பாடி மீட்டுருவாக்கப் பணியில் தஞ்சை நஞ்சை லாவணிக்குழு ஈடுபட்டு வருகிறது. தமிழ் மண்ணின் தர்க்கமரபை மீட்டெடுக்க லாவணிக்கலை உதவக்கூடும் என்ற வகையில் ஊக்கமுடன் வினையாற்றிக் கொண்டிருக்கும் லாவணிக் கலைக்குழுவிற்கு ஆதரவளித்து உதவுவோம்.

  • தஞ்சை இராவணன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here