பத்திரிக்கைச் செய்தி


அன்புடையீர் வணக்கம்!

மக்கள் அதிகாரம்  அமைப்பு இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் அல்லது உள்ளாட்சி தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்ததில்லை.  ஆனால் இந்தியாவில் நிலவுகின்ற தற்போதைய கார்ப்பரேட்-காவி பாசிச அபாய சூழலில் 2024 தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்து மக்களிடையே பிரச்சாரம் செய்வது என முடிவு எடுத்துள்ளோம்.

தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த மக்களையும் ஏறி தாக்கி வரும் கார்ப்பரேட் காவி பாசிசம், பாராளுமன்றத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தின் மூலமே சட்டபூர்வ வழிமுறைகளில் பாசிசத்தை திணிக்கிறது. நிலவுகின்ற அரசு கட்டமைப்பின் வழியாகவும், சாதி, மத வெறுப்பு அரசியல் வழியாகவும், வர்ணாசிரம பார்ப்பனீய சித்தாந்த அடிப்படையில், “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே மொழி” என்று அனைத்திலும் ஒற்றைத் தன்மை கொண்ட, ஜனநாயக விரோத பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கிறது. ’இந்து ராஷ்டிரத்தை’ அமைக்கும் நோக்கிலும் வெறித்தனமாக செயல்படுகிறது.

இதற்குப் பொருத்தமாக ’ஜனநாயகத்தின்’ அனைத்து தூண்களையும், பாசிசத்தின் ஏவல் துறையாக மாற்றி வருகிறது. மேலும் பல்வேறு பாசிச நடவடிக்கையால் மக்களிடையே  பாசிசத்தை இயல்பானதாக மாற்றி வருகிறது.  இத்தகைய மிக மோசமான சூழலில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டி உள்ளது.

எனவே, பாசிச பாஜகவின் தகிடு தத்தங்களுக்கு மயங்காமல், எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சாமல் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவை தோற்கடித்தாக வேண்டும். அதனை சாதிக்க வேண்டுமென்றால், ”பாசிசத்தை வீழ்த்துவது அல்லது ஆதரிப்பது” என்ற இரு எதிரெதிரான நிலைப்பாடுதான் நிலவுகிறது என்பதை பாசிச எதிர்ப்பை முன்னிறுத்தும் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஐக்கியப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது வரலாற்று கடமையாகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற எண்ணி தனக்கு ஆதரவான கருத்து உருவாக்கத்தில்  கார்ப்பரேட்-காவி பாசிசம், மிருக பலத்துடன் அனைத்து வழிகளிலும் செயல்பட்டு வருகிறது. அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கின்ற வகையில் பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மிகப்பரந்த ஐக்கியத்துடன், மக்களிடம் அரசியல் பணிகளை செய்ய வேண்டும். தேர்தலிலும் பாசிசத்தை தோற்கடிப்பது என்ற ஒற்றை கோரிக்கையில் பிரச்சாரம் செய்வது அவசியம்.

எனவே வருகிற 2024 தேர்தலில் பா.ஜ.க கூட்டணியை வீழ்த்தும் விதமாக I.N.D.I.A கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்றும், அதே நேரத்தில் கார்ப்பரேட் காவி பாசிச அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகள் மீண்டும் தலையெடுக்காத வண்ணம்  பெரும்பான்மை மக்கள் சார்ந்த, வாழ்வாதார கோரிக்கைகளை குறைந்தபட்ச செயல் திட்டமாக I.N.D.I.A கூட்டணி அமல்படுத்த நிர்பந்திக்கவும், போராட அறை கூவும் வகையில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது என்றும், எமது  மக்கள் அதிகாரம் அமைப்பும், தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்ணனி, மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியவையும்  ஒரு சேர முடிவு எடுத்துள்ளோம்.

பாசிச எதிர்ப்பு தேர்தல் கட்சிகளும், தேர்தலுக்கு வெளியே சமூக மாற்றத்திற்காக செயல்படும் பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி, தேசிய இன உரிமை அரசியல் இயக்கங்களும் ஒன்றிணைந்து பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டிய அவசியத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில்,

திருச்சியில்  வருகிற 07-01-2024 ஞாயிறு  மாலை 4-00 மணிக்கு பேரணிமாநாடு நடத்த உள்ளோம்.

தேர்தல் வரை மக்கள் மத்தியில் பதிய வைக்கும் வகையில் ”பாசிச BJPயை தோற்கடிப்போம்! I.N.D.I.A  வை ஆதரிப்போம்!” என்ற லோகோவை அறிமுகம் செய்கிறோம்.

பங்கேற்பாளர்கள்


வழக்கறிஞர் சி.ராஜு, பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம்

தோழர். காளியப்பன், பொருளாளர், மக்கள் அதிகாரம்

தோழர். செழியன், இணைச்செயலாளர், மக்கள் அதிகாரம்

தோழர். மருது, துணைச்செயலாளர், மக்கள் அதிகாரம்

தோழர் கோவன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்

தோழர்.லோகநாதன், பொதுச் செயலாளர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

தோழர். அன்பு, பொதுச் செயலாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

தோழர். மோகன், மாநிலஒருங்கிணைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here