லாபத்தில் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சொற்ப தொகையையும் கொடுக்காமல், அதை தீபாவளிக்கு போனஸ் என்ற பெயரில் தருவதே பெரும் மோசடி. அப்படி கொடுப்பதையும் நிறுத்தி தொழிலாளர்களை நிர்கதியில் நிறுத்தியுள்ளது மணலி எஸ்.ஆர்.எஃப் ஆலை நிர்வாகம். போனஸ் மட்டுமல்லாமல் கடந்த 4 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை சுரண்டி வருவதோடு, சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதால், பழிவாங்கும் நோக்கத்தில் சங்க செயலாளரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
மோசடி, திருட்டுத்தனம், உழைப்புச் சுரண்டல், வரி ஏய்ப்பு போன்ற வேலைகளில் திறமைசாலிகளாக இருக்கும் எல்லா முதலாளிகளைப் போலவே ஸ்ரீராம் ஃபைபர்ஸ் ஆலை முதலாளியும் தொழிலாளிகளைச் சுரண்டுவதில் முன்னணியில் இருக்கிறார். எல்லா சூழ்நிலைகளிலும் “கொடுப்பதை வாங்கிக் கொள். சட்டம், உரிமைகளை பேசாதே” என்பது தான் தொழிலாளர்களுக்கும் அவர்கள் தெரிவு செய்யும் சங்க தலைமைகளுக்கும் திருவாளர் அருண் பரத் ராம் அவர்களின் பதில்.
ரூ.7000-த்துக்கு 20% போனஸ் என கணக்கிட்டு வழங்கி வந்தது எஸ்.ஆர்.எஃப் நிர்வாகம். சங்கத்தின் தொடர் நடவடிக்கையால் கடந்த இரு வருடங்களாக கடைசியாக பெற்ற போனஸ் தொகையிலிருந்து கூடுதலாக ஒரு சிறிய தொகையை வழங்கி வந்தது. 2014 போனஸ் சட்டத்திருத்தத்தின் படி குறைந்தபட்ச ஊதியம் அல்லது ரூ.7000, எது அதிகமோ அதனடிப்படையில் 20% போனஸ் வழங்க வேண்டும் என்கிற சட்டத்திருத்தத்தை காட்டி எஸ்.ஆர்.எஃப் தொழிலாளர் சங்கம் கடந்த ஆண்டு (2024) கோரிக்கை வைத்தது. ஆனால் நிர்வாகம் ஏற்க மறுத்ததால், last year plus என்கிற முறையிலேயே போனஸ் முடிக்கப்பட்டது.
இந்த ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தை துவங்கியபோதே குறைந்தபட்ச ஊதியத்தில் போனஸ் தரவேண்டுமென தமிழ்நாட்டில் உள்ள மூன்று ஆலை தொழிற்சங்கங்களில் ஒரே குரலாய் ஒலித்த போதும் நிர்வாகம் வழமையான நடைமுறையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. 50 ஆண்டுகளாக இயங்கி வரும் மணலி எஸ்.ஆர்.எஃப் நிறுவனத்தில் இதுவரை குறைந்தபட்ச ஊதியம் வரையறுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. மணலி தொழிற்சங்கம் விடாப்படியாக போராடி, தொழிலாளர் துறையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உற்பத்தியின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் வரையறை ஆவணத்தை பெற்று பேச்சுவார்த்தையில் கொடுத்தபோதும் நிர்வாகம் ஏற்க மறுத்து, ”கடந்த முறை கொடுத்ததை விட அதிகமாக தொகை வேண்டுமானால் தருகிறோம் ஆனால் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் தர முடியாது” என அறிவித்து விட்டது. மூன்று ஆலைகளில் உள்ள தொழிற்சங்கமும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது.

போனஸ், ஊதிய உயர்வு, சங்க செயலாளர் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் டிஸ்மிஸ் என்கிற பலமுனை தாக்குதலை எதிர்கொண்டுள்ள மணலி தொழிற்சங்கம், கடந்த அக்டோபர் 03-ம் தேதி முதல் கண்டன முழக்க அட்டை அணிந்து பணிபுரிந்து வருவதோடு, அனைத்து ஷிஃப்ட் முடிவிலும் ஆலைவாயில் கூட்டம் நடத்தி தொழிலாளிகளுக்கு சங்க நடவடிக்கைகளை தெரிவித்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 15.11.25 தேதியில் பட்டினி போராட்டம் நடத்தியது. அமைதியான வழியில் போராடவும் அனுமதி மறுத்த மணலி காவல் நிலைய ஆய்வாளர், தொழிலாளர்களை அச்சுறுத்தும் பொருட்டு மணலி பேருந்து நிலையம் முழுவதும் போலிசை குவித்து, தொழிலாளர்களை அச்சமூட்டினார். தற்போதுள்ள நிலையில் போலிசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாமென்ற தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் தொழிற்சங்க அலுவலகத்தில் பட்டினி போராட்டம் நடத்தப்பட்டது.
வடசென்னை தொழிற்சங்க கூட்டமைப்பு, வடசென்னை பகுதியில் உள்ள ஆலைத்தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள். மணலி எஸ்.ஆர்.எஃப் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து உரையாற்றியதோடு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் எஸ்.ஆர்.எஃப் தொழிற்சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுப்போம் என உறுதியளித்து பேசினர். ஆலைக்குள் பல்வேறு தலைமைகளின் கீழ் அணிகள் செயல்பட்டாலும், நிர்வாகத்தின் சதித்தனத்தை எதிர்க்க ஒற்றுமையுடன் இணைந்து நிற்பதன் விளைவாக இந்த பட்டினி போராட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஓர் ஆலைக்குள் இருக்கும் ஒற்றுமையை போல வட்டாரம் முழுவதுமாக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் உருவாக்கி தொழிலாளர்கள் ஒற்றுமையை கட்டிக்காக்கும் பட்சத்தில் எந்த முதலாளியின் அடக்குமுறைகளையும், சுரண்டலையும் தடுக்க முடியும்.
படிக்க:
♦ பற்றி எரிய காத்திருக்கும் வடசென்னை தொழிலாளர்கள் போராட்டம்!
♦ வடசென்னையில் தொடரும் துயரம்! கார்ப்பரேட்டுகளால் விழுங்கப்படும் எண்ணூர் பகுதி!
சுற்று வட்டார தொழிலாளர்களின் ஆதரவுடன் தொடர் போராட்டங்களுக்கு தயாராகி வரும் மணலி எஸ்.ஆர்.எஃப் தொழிற்சங்கம் அடுத்தகட்ட நடவடிக்கையாக மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பூர்வ வேலைநிறுத்தம் செய்வதென 26.11.25 தேதியிட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. உழைப்பை உறிஞ்சி தொழிலாளிகளை ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை எதிர்த்து அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ள எஸ்.ஆர்.எஃப் மணலி தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பது நம் கடமை.
பொருளாதார கோரிக்கைகளோடு, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் என்ற பெயரில் நூற்றாண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளைப் பறிக்கும் பாசிச தாக்குதலையும் எதிர்த்து முறியடிக்க வடசென்னை தொழிலாளி வர்க்கம் முன்கையெடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் தாக்குதல்களை எதிர்த்து இந்திய தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராட வேண்டும்.
- இளமதி








முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக தொழிற்சங்கமாய் அணிந்திரளுவோம் !
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக தொழிற்சங்கமாய் அணிந்திரளுவோம் !