ர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம்(IHD) இணைந்து நடத்திய ஆய்வின் படி 2012 முதல் 2022 வரையிலான பத்தாண்டுகளில் வழக்கமான சம்பளம் பெறும் ஊழியர்களின் மாத  உண்மையான வருவாய் ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் குறைந்துள்ளது என்கிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையும், கொரோனா தொற்று முடக்கத்தின் தாக்கமும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் மூலம் ILO செய்த ஆய்வின்படி ஒரு கூலித்  தொழிலாளியின் சராசரி உண்மையான மாத ஊதியம் 2012ல் ரூ.12000 லிருந்து  2022-ல் ரூ.10925 ஆக குறைந்துள்ளது என்கிறார்கள்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 இன் படி கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் ஊதியம் வேகமாக குறைந்துள்ளது 2012ல் ரூ.13616 இல் இருந்து 2022-ல் 12616 ஆகவும் அதே காலகட்டத்தில் கிராமப்புறங்களில் ரூ.8966 இல் இருந்து ரூ.8623 ஆகவும் இருந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து இருந்தாலும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களின் எண்ணிக்கை குறைவே. தனியார் துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களே சம்பளத்தில் பெரும் தேக்க நிலையை அனுபவித்து வருகிறார்கள் என்கிறார் IHD இயக்குனர் அலக் என் சர்மா.

முதல் காரணி என்னவென்றால் வீட்டு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கும், செக்யூரிட்டிகளுக்கும் அவர்களின் முதலாளிகள் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி சம்பளத்தை உயர்த்துவது கிடையாது. அதனாலேயே அவர்கள் தேக்க நிலையை அடைந்துள்ளதாக கூறுகிறார்.

மற்றொரு காரணியாக நகரப்புறங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனியார் துறை நிறுவனங்கள் லாபம் அடைந்தாலும் சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை என்கிறார்.

அறிக்கையின் படி நிரந்தர தொழிலாளர்களில் 2022ல் கிட்டத்தட்ட 39 சதவீதம் பேர் சராசரியாக ரூ.5001 முதல் ரூ.10,000 வரை உண்மையான ஊதியம் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 23 சதவீதம் பேர் சராசரியாக ரூ.2001 முதல் ரூ.5000 வரை சம்பாதித்துள்ளனர். நிரந்தர தொழிலாளர்களில் 14.9% பேர் மட்டுமே 2022 இல் ரூ.20,000 சம்பளம் பெற்றுள்ளனர் இது 2012ல் 17.9% இருந்தது.

நிரந்தர ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் காண்ட்ராக்ட், பயிற்சி தொழிலாளரின் நிலைமை படு மோசம். இவர்களே இன்று அத்துக்கூலிக்கு கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

கொரோனா தொற்று நோய் ஏற்படுத்திய தாக்கத்தால், அரசு அறிவித்த  பொது முடக்கத்தால் சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் கொரோனா முடக்கம் பெறும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் சிறுகுறு நிறுவனங்கள் மீண்டும் திறக்கமுடியாமல் மூடுவிழா கண்டன. அதில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 2019 க்குப் பிறகு வேலைவாய்ப்பின் அதிகரிப்பு பெரும்பாலும் சுயதொழில் செய்யும் தொழிலாளர்களால் உந்தப்பட்டது, கணிசமான பகுதி ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்கள், முக்கியமாக பெண்கள்.  முறைசாரா வேலை என்பது கிட்டத்தட்ட 90 சதவீத தொழிலாளர்களைக் கொண்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை. இதன் விளைவாக, மீண்டும் விவசாயத்தை நோக்கி கணிசமானவர்கள் தள்ளப்பட்டனர். அங்கும் வருமானம் முன்னேறவில்லை.

2012 இல் இருந்து 2022 வரை 10 ஆண்டுகளில் ILO வின்  ஆய்வறிக்கை தொழிலாளர்களின் வருமானம்  பெருமளவு குறைந்துள்ளதை காட்டுகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையின்மையை பயன்படுத்திக்கொண்ட முதலாளித்துவம் தொழிலாளர்களை அத்துக்கூலிகளாக வேலையில் அமர்த்துகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் படித்து வெளிவரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே நேரத்தில் வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வேலையில்லாதவர்களில் 83% இளைஞர்கள் என்கிறது அந்த ஆய்வு அறிக்கை. 2014ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று வெற்று அறிவிப்பை நம்பி ஏமாந்த இளைஞர்கள் இன்று இருக்கும் வேலையையும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் மோடியும் அமித்ஷாவும் பக்கோடா விற்பதும் வேலை தானே என்கிறார்கள். பக்கோடா விற்பதும் வாழ்வதற்குரிய வருமானத்தைக் கொடுப்பதில்லையே.

கொரோனா முடக்கம் தொழிலாளர்களுக்கு வேலையை பறித்தது. சம்பளத்தை குறைத்தது. தொழிலாளி வர்க்கத்தை நடுத்தெருவில் நிறுத்தியது. ஆனால் அதே காலகட்டத்தில் தான் அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது நினைவிருக்கலாம்.

2021 ஆம் ஆண்டில் அதானின் நிகர சொத்து மதிப்பு 2021 ஆம் ஆண்டில் 1.7 லட்சம் கோடி உயர்ந்து 3.6 லட்சம் கோடியாக அதிகரித்தது. அந்த ஆண்டில் உலக பணக்காரர்களான அமேசானின் ஜெஃப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அந்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டிய நபரானார் அதானி. அதே காலகட்டத்தில் முகேஷ் அம்பானி 58 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டினார்.

இதையும் படியுங்கள்:

ஒருவேளை சோற்றுக்கு தொழிலாளர்கள் ரோட்டில் கையேந்தி கொண்டிருந்த அதே ஆண்டில் தான் அதானியின் வருமானம் 50% உயர்ந்தது. நண்பனின் சொத்து மதிப்பு உயர்ந்தால் மோடிக்கு பெருமை தானே.

மோடியின் ஆட்சி காலத்தில் தான் இந்தியாவில் பட்டினி குறியீடு உயர்ந்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. விவசாயி விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளார்கள் இதற்கெல்லாம் அடிப்படையாய் வேலைவாய்ப்பின்மையும்,  வேலை கிடைத்தால் கூட அதிகமான உழைப்பு சுரண்டலும் குறைவான கூலியும் உழைக்கும் வர்க்கத்தை பசி பட்டினியிலும்,  வறுமையிலும் தள்ளுகிறது.

இந்தியா மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் சங்பரிவார் கும்பலும் அதன் அடிவருடிகளும் அதானி அம்பானிகள் வளர்ச்சி தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்று அறியாதவர்களா என்ன?

கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பல் காவிகளின் துணையுடன் இந்தியாவின் இயற்கை வளத்தையும், தொழிலாளர்களின் மீது  உழைப்புச் சுரண்டலையும் கட்டற்ற முறையில் நடத்துகிறது.

இதையெல்லாம் தொழிலாளர்கள் அறியாமல் இருக்க  சாதி, மத போதையில் ஆழ்த்தி விடுகிறார்கள் காவி பாசிஸ்டுகள். அற்ப கூலிக்கு தான் சுரண்டப்படுவதை உணராத வரையில் தொழிலாளர் வர்க்கத்திற்கு விடுதலை சாத்தியமில்லை.

  • நலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here