கடன் வாங்கியாவது தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடியே தீரவேண்டும் என்று பெரும்பான்மையான நகர்ப்புரத்து மக்கள் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வரும் தீபாவளி (அக்டோபர் 31) அன்று அனைத்து கிக் தொழிலாளர்களையும் “டிஜிட்டல் வேலை நிறுத்தத்தில்” ஈடுபடுமாறு தில்லியைச் சேர்ந்த கிக் தொழிலாளர் சங்கமான, “கிக் அண்ட் பிளாட்ஃபார்ம் ஒர்க்கர்ஸ் யூனியன்” (Gig and Platform Workers Union (GIPSWU)) அழைப்பு விடுத்துள்ளது.
கித் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? என்று தெரியாத வாசகர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டுமானால், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுப்பொருட்களை மக்களின் வீடுகளுக்கு கொண்டு வந்து தரும் Swiggy, Zomato பணியாளர்கள், ஊபர், ஓலா கார் ஓட்டுபவர்கள் போன்றோரை கிக் தொழிலாளர்கள் என்று கூறலாம்.
உணவுப் பொருளை தயாரிக்கும் உணவகத்தில் இருந்து விலை கொடுத்து அந்த உணவைப் பெரும் நபருக்கு அந்த உணவை, உணவகத்தில் இருந்து கொண்டு போய் சேர்ப்பது (Swiggy, Zomato போன்றவற்றில் இருக்கும்) கிக் தொழிலாளியின் வேலை.
அதேபோல வாடகை கார் தேவைப்படும் நபரின் விபரங்களை ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அந்த நபர்களை காரில் ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடங்களில் சேர்ப்பதும் தொழிலாளர்களின் வேலை.
இந்தத் தொழிலாளர்களின் வேலை நிலைமை என்பது வெளிப் பார்வைக்கு சுதந்திரமானதாக தெரியும். தங்களின் டெலிவரி ஆர்டர்களை பெறுவதற்கான இவர்களின் காத்திருப்பு கடும் மனச்சோர்விற்கு உள்ளாக்க வல்லது. குறித்த நேரத்திற்குள் தங்களது உணவு ஆர்டர்களை டெலிவரி செய்து தீர வேண்டும் என்பதற்காகவாகன நெரிசல்கள் மிகுந்த மாலை, இரவு நேரத்து சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றி அலைவது கடும் மன உளைச்சலை ஏற்படுத்த வல்லது.
இப்படிப்பட்ட கடும் துயரத்துடன் வேலை செய்து கொண்டிருக்கும் இவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்பது மிகவும் சொற்பமானது. நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கும் சேவை கட்டணத்தில் மிகப் பெரும் பகுதியை ஸ்விக்கி சுமோடோ போன்ற நிறுவனங்கள் பிடுங்கிக் கொண்டு மிகமிக சொற்பமான தொகையை தான் swiggy Zomato போன்ற நிறுவனங்கள் தங்களின் கிக் தொழிலாளர்களுக்கு வழங்குகின்றன.
அதேபோல, வாடகைக்குக் காரை அமர்த்திக் கொள்ளும் நபருக்கும் வாடகை கார் வைத்துள்ள நபருக்கும் இடையில் இருந்து கொண்டு வாடகை பணத்தில் பெரும் பகுதியை கொள்ளையடித்துக் கொண்டு ஒரு அற்ப தொகையை மட்டும் ஊபர் ஓலா போன்ற நிறுவனங்கள் வாடகை கார் வைத்துள்ள நபருக்கு (கிக் தொழிலாளர்களுக்கு) கொடுக்கின்றன.
இவர்களுக்கு வழங்கப்படும் சொற்ப தொகையில் இருந்து தான் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது வாகனங்களை பராமரித்துக் கொள்வது போன்ற செலவுகளையும் கிக் தொழிலாளர்கள் செய்ய வேண்டி உள்ளது.
தங்களின் இந்தப் துயர நிலையைப் பற்றி “நாங்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறோம்; கடினமாக உழைக்கிறோம். ஆனால் அதற்கு ஈடாக எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்ய சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அது வெறும் பொய். எங்களுக்கு எவ்வளவு மோசமான விஷயங்கள் உள்ளன என்பதை அனைவருக்கும் காட்ட நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நீங்கள் பார்த்து, எங்களது முதல் டிஜிட்டல் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்,” என்று பெங்களூரைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் செல்வி கூறுகிறார்.
கிக் தொழிலாளர்கள் அற்பக் கூலிக்கு சுரண்டப்படுவதை தடுப்பது, இவர்கள் பணியின் போது தாக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ., பிஎப், இன்சூரன்ஸ் போன்ற கோரிக்கைகளுக்காக இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் தீபாவளி அன்று கிக் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிடப் போவதாக இந்த GIPSWU சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் எந்த அளவிற்கு வெற்றியடைகிறதோ அந்த அளவிற்கு Swiggy, Zomato போன்ற நிறுவனங்களின் வருமானத்தில் மிகப்பெரும் அளவில் இடி விழும். அதேசமயம் தொழிலாளர்களின் சேவைகளை பயன்படுத்தி வரும் மக்கள் மத்தியில் மிகப் பெரும் சலசலப்புகள் ஏற்படும். இந்த சலசலப்பின் ஊடாக கிக் தொழிலாளர்களின் மீது நடத்தப்படும் மிகப்பெரும் சுரண்டல் நாட்டு மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வரும்.
இதன் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவை பொருத்தும் கிக் தொழிலாளர்களின் உறுதியான தொடர்ச்சியான போராட்டங்களை பொருத்தும் இத்தொழிலாளர்கள் மீதான சுரண்டல் குறைவதற்கும் இவர்களின் கோரிக்கைகள் வெற்றி அடைவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த கிக் தொழிலாளர்களின் டிஜிட்டல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பது உழைக்கும் மக்களின் கடமை.
வெல்லட்டும் கிக் தொழிலாளர்களின் டிஜிட்டல் வேலை நிறுத்தம்!
— குமரன்
வெல்லட்டும் கிக் தொழிலாளர்களின் டிஜிட்டல் வேலை நிறுத்த போராட்டம்..
கிக் தொழிலாளர்களின் நிலைமையை நாம் ஏற்கனவே ஓரளவு புரிந்து இருந்தாலும் இந்த சங்கத்தின் போராட்டத்தை பற்றிய அறிவிப்பும், சங்க நிர்வாகி பட்டவர்த்தனமாக போட்டுடைத்துள்ள கிக் தொழிலாளர்களின்
கொத்தடிமை வாழ்க்கை முறை, அற்பக் கூலி
போன்ற பரிதாபகரமான நிலைமைகளை அறியும் பொழுது மிக மிக வேதனையாக உள்ளது. அப்பரிதாபகரமான தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! அனைத்து பொதுமக்களும் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்!!