(தங்கள் கிராமங்களில் வறட்சி மற்றும் வெள்ளத்திலிருந்து தப்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெங்களூரின் கடுமையான தண்ணீர் நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்)

இது குறிப்பாக ரம்ஜான் நொம்பு இருக்கும் மாதம்.  ஆம்! மார்ச் மற்றும் ஏப்ரலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், பெங்களூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.  இந்த சூழலில், அப்துல்லாவின் குடும்பத்தில் உள்ள ஆறு குடும்ப உறுப்பினர்கள் காலை முதல் மாலை வரை ரோஜாவை (உருதுவில் உணவு மற்றும் தண்ணீர் ஏதும் உட்கொள்ளாமல் இருக்கும் விரதம்) கடைப்பிடிப்பதற்கும், நமாஸ் செய்வதற்கும் அடிப்படை தேவையாக உள்ளது.  இதற்கு, தங்களை சுத்தமாக பராமரித்துக்கொள்ள போராடி வருகின்றனர்.  கிழக்கு பெங்களூரிலுள்ள பெல்லந்தூரில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடிகளுக்கு பின்புறம் அமைந்துள்ள கரியம்மன அக்ரஹாரா  என்ற இடத்தில்தான் அதிகபடியான புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த குடிசை தகரக் கூரை கொண்ட கொட்டகையாகவும், வீட்டைச் சுற்றி தூசிகள் சூழ்ந்தும் காண முடிகிறது.

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில், இங்கு வசிக்கும் அனைத்து புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் வாரத்திற்கு ஒரு முறை வீட்டு உரிமையாளர் டேங்கர் லாரி மூலமாக வழங்கும் தண்ணீர் மட்டுமே ஒரே நீர் ஆதாரம்.  ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே வரிசையாக மூன்று நீல நிற பிளாஸ்டிக் டிரம்கள் (சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்டது) தண்ணீர் நிரப்புவதற்காக வைக்கப்பட்டுள்ளன.  “வாரத்திற்கு இரண்டு முறையாவது எங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.  அதில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வாரத்திற்கு குறைந்தது ஆறு டிரம்கள் தேவைப்படுகிறது. ஆனால், இப்போது இவர்கள் கொடுக்கும் இரண்டு அல்லது மூன்று டிரம்களை வைத்து குளிப்பது, துணி துவைப்பது மற்றும் சமைப்பது உள்ளிட்ட முழு குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய எங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது; இதனை வைத்து சமாளிக்கவும் முடியாது” என்று தனது பெயரால் மட்டுமே இஸ்லாமியர் என்று அடையாளம் காண முடிகின்ற 36 வயதான அப்துல்லா கூறினார்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய பெருநகரமான பெங்களூருவில், நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டுள்ளது. இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெள்ளம் மற்றும் தொடர் வறட்சி காரணமாகவும், தங்கள் கிராமத்தில் விவசாய விளைச்சல் குறைந்து வருவதாலும், குறைந்த ஊதியங்கள் மற்றும் குறைந்த வாழ்வாதார தேவைகள் காரணமாக இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

பரந்து விரிந்த நகரத்தின் தண்ணீர் நெருக்கடியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர். கட்டுமானம், துணிக்கடை, துப்புறவு, வீட்டு வேலை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் என பல்வேறு சேவைத் துறைகளில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.  அதுமட்டுமின்றி, இந்த தொழிலாளர்கள் நகரத்தின் முக்கியமான தகவல் தொழில்நுட்பத் துறையை இயக்க உறுதுணையாக உள்ளனர்.  மேலும், வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தையை முன்னெடுத்து செல்ல ஆதரமாக பயன்படுத்தப்படுகின்றனர்.  இருப்பினும்கூட, அவர்கள் உள்ளூர் மக்களுடன் சமமற்ற நிலையில்தான் இருக்கிறார்கள்.  அதிகரித்து வரும் தண்ணீர் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதை நம்மால் இந்த கட்டுரையில் காண முடியும்!

அப்துல்லா என்பவர் அசாம் மாநிலத்திலுல்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து, தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணிபுரிகிறார்.

கோடையில் இந்த மக்கள் நகரத்திலுள்ள நீர் நெருக்கடியின் காரணமாக கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  இந்த கடுமையான வறட்சி, குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் குறைவான குழாய் நீர் விநியோகத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமடைந்துள்ளது. பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூருவில் ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் லிட்டர் (MLD – Millions of liter per day) தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.

பெருகிவரும் தண்ணீர் பிரச்சனைகள்!

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கரியம்மன அக்ரஹாரத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் வீடுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பல தொழிலாளர்கள் குளிப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவது போன்ற அன்றாட வேலைகளுக்கு கூட குடிநீரைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரை மைல் (804 மீட்டர்) தொலைவில் அமைந்துள்ள தனியார் தண்ணீர் சப்ளையர் மூலம் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய கேன்களில் குடிநீரை வாங்குகிறார்கள்.

“கிடைக்கும் தன்மையைப் பொறுத்து ஒரு கேனுக்கு ரூ.30-40 செலவாகும். நாங்கள் இப்போது ஒவ்வொரு நாளும் குடிநீரைப் பெற சுமார் 100-120 ரூபாய் செலவழிக்கிறோம்” என்று அப்துல்லாவின் உறவினர் சாஹில் கூறினார். இவர் கரியம்மன அக்ரஹாராவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் மளிகைக் கடையை நடத்தி வருகிறார். இந்த வியாபாரத்தின் மூலமாக மாதத்திற்கு ரூ.15,000 சம்பாதிக்கிறார்.  “நோம்பின் போது மிக முக்கியமான விஷயம் தூய்மை! ஒவ்வொரு முறையும் தொழுகை நடத்துவதற்கு முன்பு நாம் நம்மை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஆனால், முகம் கழுவ கூட தண்ணீர் இல்லை; இதனால் குளிப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என்று அவர் கூறினார். தண்ணீர் டேங்கர்களுக்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட, வீட்டு வாடகையும் உயர்ந்துள்ளது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் அவ்வப்போது எச்சரிப்பதால் எங்களுக்கு நெருக்கடி இன்னும் அதிகமாகி உள்ளது. தற்போது, அப்துல்லா மற்றும் சாஹில் இருவரும் ஒவ்வொரு மாதமும் தலா ரூ.4000 வரை வாடகை செலுத்துகின்றனர்.

அதே நேரத்தில், சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மூன்று ஆழ்துளை கிணறுகளிலிருந்து உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வறண்ட நகரங்களுக்கு தண்ணீர் டேங்கர்களின்மூலம் தண்ணீர் தொடர்ந்து செலுத்தப்படுவதை அருகிலுள்ள ஒரு கொட்டகையில் வசிக்கும் அசாமைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் தினமும் ஏக்கத்துடன் பார்க்கின்றனர். ஏனெனில், “குழாய் இணைப்பு இருந்தபோதிலும், ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே எங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது” என்று அசாமின் பார்பேட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது ஆண் தொழிலாளி கூறினார்.  இவர் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். வடகிழக்கிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நகரத்தில் உள்ள உள்ளூர் கன்னட குழுக்களுக்கும் இடையே தொடர்ச்சியான மொழி பிரச்சனை காரணமாக பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும், தங்கள் மாநிலத்தில் “பெரும்மழையாலும், தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் எங்களது சொற்ப விவசாய நிலங்கள் மலடாகிவிட்டன.  எனவே, தொடர்ச்சியான வேலைவாய்ப்பு மற்றும் நிலையான சம்பளம் கிடைக்கும் நகரங்களுக்கு நாங்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

வறுமையில் வாழும் மக்கள்!

இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெப்பமாக இருப்பதாக பெங்களூரு குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இருப்பினும், இந்த கோடையில் ஐ.டி நகரத்தின் குழாய்கள் வறண்டுவிட்டன என்பது ஆச்சரியமில்லை!  ஏனெனில், 2018 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில், நீர் நெருக்கடியின் விளிம்பில் உள்ள உலகின் முதல் பத்து பெருநகரங்களில் பெங்களூரும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், மாஸ்கோ, லாகூர், டெல்லி மற்றும் பெய்ஜிங் உள்ளிட்ட ஆறு உலகளாவிய பெருநகரங்களில் பெங்களூரு நகரமும் ஒன்றாக இருந்தது.

இதையும் படியுங்கள்: “உலகத்தரத்தில் குழாயில் குடிநீர்!” தண்ணீர் கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சிக்குகிறதா ஒடிசாவின் பூரி!

பெங்களூரு நகருக்கு தெற்கே 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் நீரை இறக்குமதி செய்கிறனர். ஒவ்வொரு நாளும் மலைக்க வைக்கும் அளவு நீர் இறைக்க செலவானாலும், நகரத்தின் தேவையில் பாதி மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது.  மற்ற பாதியை நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்து வந்தனர்.  கடந்த ஆண்டு, பெங்களூரு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பற்றாக்குறையை சந்தித்தது. பெங்களூரில் காலநிலை மாற்றத்தால், புலம்பெயர்ந்த மக்களின் பொது வாழ்க்கை மிகவும் மோசமாகியுள்ளன.  இதனால், அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களும் அதிகரித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டில் பெங்களூர் நகரத்தின் விரிவான வளர்ச்சியின்போது புருஹத் பெங்களூர் மகாநகர பலிகே (BBMP) ஆல் பெங்களூரின் புறநகரில் உள்ள 110 கிராமங்களில் கரியம்மன அக்ரஹாராவும் இணைக்கப்பட்டது.  மாநில அரசு, மே மாதம் முதல் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த கிராமங்களுக்கும் காவிரி ஆற்றில் இருந்து பெறப்படும் குடிநீர் கிடைக்கும் என்றனர்.  எப்படி இருந்தாலும், இந்த குடிநீர் திட்டம் பெங்களூரின் புறநகரில் உள்ள ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளை போதுமான அளவு நிவர்த்தி செய்யாது என்று இவர்களுக்காக தொடர்ந்து போராடும் மற்றும் வழக்காடும் சமூக செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். “எங்கள் ஆய்வுகளில் மொத்தம் 986 புலம்பெயர்ந்த குடும்பங்களில் 76% பேருக்கு குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய பயன்பாடுகளுக்கான நீர் வசதிகள் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்” என்று பெங்களூருவில் உள்ள புலம்பெயர்ந்தோர் பின்னடைவு ஒத்துழைப்பின் சமூக காலநிலை நடவடிக்கை கூட்டமைப்பின் திட்டத் தலைவர் பரத் நடராஜ் கூறினார்.

“தற்போதைய தண்ணீர் நெருக்கடி நிலைமையை மோசமாக்கியுள்ளது… குடிநீரைப் பெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் குடோன்களில் வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாக புலம்பெயர்ந்தோர் புகார் கூறுவதை நாங்கள் கேட்கிறோம். இது அவர்களின் வேலை நேரம், ஊதியம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேலும் பாதிக்கிறது” என்று அவர் கூறினார்.

தண்ணீர் தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது!

பெங்களூரில் பத்தாண்டுகள் தங்கியிருந்த 40 வயதான மந்தம்மா, தான் கண்ட மிக மோசமான கோடை காலம் இது என்று விவரிக்கிறார். அவர் தனது தாய், சகோதரர், மைத்துனி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொண்ட குடும்பத்துடன், வடக்கு பெங்களூரின் ஜக்கூரில் ஒரு அறை கொண்ட கொட்டகையில் வசிக்கிறார். அங்கு குழாய் நீர் இணைப்பு மற்றும் கழிப்பறை இரண்டும் இல்லை. அவர்கள் தண்ணீருக்கு, நகராட்சியால் வழங்கப்பட்ட இரண்டு குழாய் இணைப்புகளை நம்பியுள்ளனர். இது அருகிலுள்ள மற்ற 20 புலம்பெயர்ந்த குடிசைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.  கடந்த ஆண்டை போல் இல்லாமல், இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது.  அதுவும், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரைதான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் குறைவாக இருந்தாலும் ஒரு வீட்டிற்கு குறைந்தது நான்கு குடங்களையாவது சேகரிக்க நாங்கள் வரிசையில் நிற்கிறோம். ஆனால் சில நேரங்களில், மின்வெட்டு மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது” என்று வீட்டு உதவியாளராக பணிபுரியும் மந்தம்மா கூறினார். பற்றாக்குறையை ஈடுசெய்யும் முயற்சியில், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் (BWSSB) குடிசைகளின் நுழைவாயிலில் ‘இலவச தண்ணீர்’ என்று எழுதப்பட்ட அறிவிப்புடன் ஒரு தற்காலிக வெள்ளை தொட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மந்தம்மாவின் வீட்டிற்கு வெளியே உள்ள தொட்டி கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளுக்கு மேல் அந்த தண்ணீர் நீடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தண்ணீர் டேங்கர் லாரி வரும்போது, தண்ணீரை சேகரிப்பதும் – சேமித்து வைப்பதும் ஒரு குடும்ப வேலையாக மாறுகிறது. எல்லா வயதினரும் ஓடி – ஓடி தண்ணீர் பிடிப்பதை நம்மால் பார்க்க முடியும்.  ஆம்! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீருக்காக ஓடுவார்கள். சிறுமிகளும் – சிறுவர்களும் முடிந்தவரை பல பானைகளையும், குடங்களையும் நிரப்ப வேகமாக டேங்கை சுற்றி வருகிறார்கள்.

பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள தொட்டகனெல்லியில், நாகராஜ் (29) என்பவர் ஒரு சிறிய பிளாஸ்டிக் குடம் தண்ணீருக்கு 4 ரூபாயும், ஒரு பக்கெட்டுக்கு 6 ரூபாயும் கொடுத்து தண்ணீர் வாங்குகிறார். “இப்போதெல்லாம் தண்ணீருக்காக மட்டுமே மாதத்திற்கு 700 ரூபாய்க்கு மேல் செலவிடுகிறேன்” என்று நாகராஜ் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு யூனிட் (ஒரு லிட்டர்) என்ற அடிப்படையில் தண்ணீரை வாங்குவதால், அவர்கள் முழு டேங்கர்களையும் வாங்கும் மற்ற குடியிருப்பாளர்களை விட அதிக பணத்தை தண்ணீருக்காக செலவழிக்கின்றனர்.  நில சீரழிவு மற்றும் அடிக்கடி ஏற்படும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நெருக்கடியில் இருந்து தப்பிக்க வடக்கு கர்நாடகாவின் வறண்ட பகுதிகளிலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்த ஏராளமான மக்களில் மந்தம்மா மற்றும் நாகராஜின் குடும்பங்களும் அடங்குவர்.

“சமீப காலமாக எங்கள் கிராமத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏதும் இல்லை.  ஆனால், சொந்த ஊருக்கு திரும்பினால் சம்பளம் மிகவும் குறைவாகவே கிடைக்கும். எனது மாவட்டத்தில் 700 ரூபாயுடன் ஒப்பிடும்போது, இங்கு எனது கட்டுமான வேலைக்கு ரூ.1100 சம்பாதிக்கிறேன். எனவே, கொஞ்சம் சேமிப்பை சம்பாதிப்பதற்கும், வீட்டிற்கு பணம் அனுப்புவதற்கும் ஒரே வழி புலம்பெயர்தல்” என்று நாகராஜ் கூறினார்.

விரைவுபடுத்தப்படும் நகரமயமாக்கல்:

கடந்த சில ஆண்டுகளில், பெருநகர மக்கள்தொகையின் வளர்ச்சி பெங்களூருக்கு நகர்ப்புற திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆய்வில், 1973 முதல் 2022 வரை, பெங்களூரு கட்டிட பகுதிகள் 51.86% அதிகரிப்பையும், பசுமை நிலங்கள் 26.28% குறைவையும் கண்டது. “நகரம் முழுவதும் அதிகமாக ’கான்கிரீட்’ ஆக்கப்பட்டுள்ளது, எங்கள் ஏரிகள், ஈரநிலங்கள், நீர்நிலைகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வடிகால்கள் ஆகியவற்றை நாங்கள் இழந்துவிட்டோம். அவை மழை நீரை பூமியில் நிறுத்தி நிலத்தடி நீர் மட்டங்களை மேலும் அதிகரிக்க செய்ய அனுமதிக்கின்றன” என்று ”சுற்றுச்சூழல் அமைப்புகளில் நகரமயமாக்கலின் தாக்கங்கள்” குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் சூழலியல் பேராசிரியர் ஹரிணி நாகேந்திரா விரிவாக எழுதியுள்ளார்.

மேலும், “இந்த நகரம் இன்று இருப்பதைப் போல, முன்பு ஒருபோதும் இருந்ததில்லை” என்று கூறுகிறார்.  உலகளவில், இதுபோன்ற நகரங்களில் நீர் பற்றாக்குறையை அனுபவிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2050 ஆம் ஆண்டில் இரண்டு பில்லியனைத் தாண்டும். இதன் தாக்கம் புலம்பெயர்ந்த மக்களை இன்னும் அதிக பாதிக்கப்படக்கூடியதாக அமையும். ஆனால், உறவினர் சகோதரர்களான அப்துல்லா மற்றும் சாஹில் ஆகியோருக்கு பெங்களூரை விட்டு வெளியேறுவது விருப்பமல்ல! “எங்கள் கிராமங்களில் உள்ள வீட்டில், தண்ணீர் உள்ளது; வேலைகள் இல்லை! நகரத்தில், இது நேர்மாறாக உள்ளது” என்று அப்துல்லா கூறினார். நோன்பு நோற்கும் மாதம் முடிவடையும் நிலையில், ஈத் கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், தண்ணீரைப் பற்றிய தொடர்ச்சியான கவலை குடும்பங்களின் வழக்கமான பண்டிகை உற்சாகத்தை குறைத்துள்ளது. “தண்ணீர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது, அந்த தண்ணீர் ஒருவர் என்ன செய்ய முடியும்?” என்று சாஹில் தனது வாடிய முகத்துடன் சொல்லி முடிக்கிறார்.

நன்றி: தி மைக்ரேஷன் ஸ்டோரி

  • தமிழில். சிறகினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here