சீனாவில் மக்கள் சீனம் அமைந்து 75-வது ஆண்டு இந்த மாதம் அக்டோபர் 1 அன்று நிறைவு பெற்றது. 1848 ஆம் ஆண்டு தோழர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முன்வைத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டும் சிவப்பு புத்தகமாக மாறியது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 69 ஆண்டுகளுக்குப் பிறகு 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மகத்தான சோசலிசப் புரட்சி நிறைவேறியது.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், பெரும்பான்மை உழைக்கும் மக்களையும் அணி திரட்டிய ஆயுதந்தாங்கிய பேரெழுச்சிப்பாதை ஒன்றின் மூலம் புரட்சியை சாதித்து காட்டுவது என்ற நடைமுறையை முதலாளித்துவ நாடுகள் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை ரஷ்ய புரட்சி உலகிற்கு எடுத்துக்காட்டியது.
முதலாளித்துவ வளர்ச்சி பெறாத காலனிய, அரைக்காலனிய, நவீன காலனிய நாடுகளில் முதலாளித்துவ புரட்சியை நடத்துவதற்கு முதலாளித்துவ வர்க்கம் தயாராக இல்லாத நிலையில் பாட்டாளி வர்க்கம் அந்த சுமையையும் தனது தோள்களில் சுமந்து கொண்டு புதிய ஜனநாயக புரட்சியை முன்வைத்து மக்களை அணி திரட்டியது.
தோழர் மாசேதுங் தலைமையில் 1949 ஆம் ஆண்டு மக்கள் சீனம் அமைந்தது. சரியாகச் சொன்னால் அக்டோபர்-1,1949 தியானன் மென் சதுக்கத்தில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்களுக்கு முன்னிலையில் புதிய ஜனநாயக சமுதாயமாக சீனா உருவெடுத்தது.
இந்த இரண்டு பாதைகளின் வழியில் உலகப் புரட்சி முன்னேறிச் செல்லும் என்பதை ஏற்று உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச இயக்கங்கள் பின்பற்றத் துவங்கினர். குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சியும், காலனிய அரைக்காலனிய, நவீன காலனிய நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியும் என்பதை புரட்சிக்கான பாதையாக முன்வைத்து செயல்பட துவங்கின.
இதன் ஒளியில் இந்தியாவின் புரட்சிப் பாதையானது சீனாவை ஒத்த புதிய ஜனநாயக புரட்சிதான் என்பதை மார்க்சிய லெனினிய இயக்கங்கள் 1968 களில் முன் வைக்கத் துவங்கி துவங்கி 70-களில் தனது கட்சி திட்டமாகவே அறிவித்து இன்று வரை செயல்பட்டு வருகிறது.
சீனாவின் புதிய ஜனநாயகப் புரட்சி படிப்படியாக சோசலிசத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான் புரட்சியை சாதித்து காட்டிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியமாக அமைந்தது.
தோழர் மாவோவின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் ஊடுருவி இருந்த முதலாளித்துவ பாதையாளர்களான டெங் தலைமையிலான முதலாளித்துவ திரிபுவாதிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை அதன் புரட்சிகர திசை வழியில் இருந்து திசை திருப்பி முதலாளித்துவ-நரகப் பாதைக்கு கொண்டு சென்றனர்.
இந்த வரிசையில் தற்போது சீனாவை ஆண்டு வரும் ஷி ஜின்பிங்கின் ஆட்சியின் கீழ் சீனா முழுக்க நவீன சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து உலக மேலாதிக்க போட்டியில் அமெரிக்கா விற்கு இணையாக வளர்ந்து வருகிறது.
சோசலிச புரட்சியை முன்வைத்து செயல்படுகின்ற கம்யூனிஸ்டு கட்சிகள் அந்தந்த நாட்டின் வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்திலிருந்தும், அரசியல் மற்றும் சமூக காரணிகளைப் புரிந்துக் கொண்டு பொருத்தமான சமூக அமைப்பை முன்வைத்து நாட்டையும், மக்களையும் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் மார்க்சிய லெனினியமாகும்.
படிக்க: உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
சீனப் புரட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு பெற்ற இன்றைய தருணத்தில் உலகம் முழுவதும் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் சந்தர்ப்பவாத வழிமுறைகளை கையாள்வதிலும் திருத்தல்வாத போக்குகளை உயர்த்தி பிடிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது.
சோசலிச புரட்சியை சாதிப்பதற்கு பொருத்தமான தோழர்கள் லெனின், ஸ்டாலின் முன் வைத்த கட்சி ஒன்றை, போல்ஷவிக் மயமான கட்சி ஒன்றை நிறுவுவதற்கு தயாரில்லாத நிலையில் கட்சிக்குள் தாராளவாதத்தையும், திருத்தல்வாத நடைமுறையையும் கடைபிடிப்பதும், மார்க்சிய லெனினிய விஞ்ஞானத்தின் அடிப்படையான போர் தந்திரங்கள் மற்றும் செயல் தந்திரங்களை வகுத்து புரட்சியை முன்னெடுத்து செல்வதையும் கைவிட்டு சாகச வழிமுறைகள் அல்லது பாராளுமன்ற சரணடைவுப் பாதையில் வீழ்வதற்கு உலகம் முழுவதும் மட்டுமின்றி, இந்தியாவிலும் வரிசைக் கட்டி நிற்கின்றன.
சீனப் புரட்சியின் 75 வது ஆண்டு முடிவடைந்த நிலைமையில் சோசலிசத்தை நோக்கி முன்னேறாமல் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு போட்டியாக நவீன சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்துள்ளது. இந்த சீரழிந்த போக்கை நேர்மையாக ஏற்றுக் கொள்ளாமல் இந்தியாவில் உள்ள தாராளவாத மார்க்சியர்கள் மற்றும் திருத்தல்வாதக கம்யூனிஸ்டுகள் சீனாவில் இன்னமும் சோசலிசம் பூத்துக் குலுங்குவதாகவும், அது ’சீன மண்ணிற்கு ஏற்ற மார்க்சியத்தை’ கடைபிடிப்பதாகவும் பித்தலாட்டம் புரிந்து வருகின்றனர்.
இந்த போக்கு கம்யூனிச இயக்கத்திற்கு புதியதல்ல. சீனாவில் புரட்சிக்கு முன்னர் உருவான பல்விதமான் குட்டி முதலாளித்துவ போக்குகள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சூ-என்-லாய் பின் வருமாறு முன் வைக்கிறார்.
படிக்க: செப்டம்பர் 9: தோழர் மாவோ நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!
”கட்சியின் அரசியல் வழி சம்பந்தமான பல்வேறு தவறான கருத்துக்களும் ஒரு விதத்தில் புறச்சூழ்நிலைமைகள் பற்றிய பிரதிபலிப்புகளாகும். ஆனால் கட்சி நிறுவனங்கள் போல்ஷ்விய மயமாக்கப்படாததும், இன்னமும் பாட்டாளி வர்க்கமற்ற சித்தாந்தம் நிலவுவதும் என்ற உண்மை இவை நீடிப்பதற்குப் பெருமளவு காரணமாக உள்ளது என்றும் கூறலாம். சீன பொதுவுடைமை கட்சி மே 4 இயக்கத்திற்கு பின் நிறுவப்பட்டது. அப்போது புரட்சிகரமான அரசியல் கட்சி வேறு எதுவுமில்லை. கோமிங்டாங் கட்சியோ அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் கும்பலாக இருந்தது.
இதனால்தான் பல குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் ஏன் சில முதலாளித்துவ நபர்களும் கூட நமது கட்சியில் சேர்ந்தனர். குறிப்பாக, கோமிங்டாங் கட்சிக்கும் பொதுவுடைமை கட்சிக்கும் இடையில் ஒத்துழைப்பு நிலவிய காலத்தில் பெரு எண்ணிக்கையிலான குட்டி முதலாளிகள் நமது கட்சியில் சேர்ந்தனர். இதன் விளைவாகப் புரட்சிகர நிலைமை மாறிய தருணத்தில் பல கட்சி உறுப்பினர்கள் ஊசலாட ஆரம்பித்தனர். உற்சாகம் இழந்தனர். சிலர் எதிரிகளிடம் சரணடைந்து தோழர்களைக் கைவிட்டு கட்சியைக் காட்டிக் கொடுக்கவும் செய்தனர்.
ஆகஸ்டு 7 கூட்டத்திற்குப் பின் “கட்சியை மாற்றி அமையுங்கள்” என்ற முழக்கத்தை நாம் எழுப்பினோம். ஊசலாட்டக்காரர் அனைவரையும் நமது அணிவரிசையிலிருந்து உறுதியாக வெளியேற்றினோம். தலைமை அங்கங்களை மறு உருவாக்கினோம்.” கட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கமற்ற சித்தாந்தத்தை உறுதியாக ஒழித்துக் கட்டுவது பற்றி.
அரசியல், பொருளாதார ஆய்வுகள் இன்றி அகநிலை விருப்பத்தின் அடிப்படையில் சோசலிச சமூகத்தை அடைவதற்கு பல்வேறு குறுக்கு வழிகளையும், தனது வர்க்க வாழ்க்கையில் இருந்து ஒரு தம்பிடி இழப்பு கூட இழக்க விரும்பாமல், சொகுசான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டே அதற்கு இசைவான வழிமுறைகளில் புரட்சியை நடத்தி முடிப்பதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை நுணுக்கி, நுணுக்கி ஆராய்ச்சி செய்கின்ற பல வகையான குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள் மார்க்சியத்தில் இருந்து விலகிச் செல்கின்றனர்.
– தொடரும்.
- ஆல்பர்ட்.