
டிசம்பர் 2, 1984 நள்ளிரவுக்கு சற்று முன் சுமார் 11 மணியளவில் போபால் நகரின் உழைக்கும் மக்கள் உழைப்பின் களைப்பில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்நகரின் அருகிலிருந்த பூச்சிக்கொல்லிகளை உற்பத்திசெய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து டன் கணக்கில் வெளியான மெத்தில் ஐசோசயனேட் (MIC) வாயுமேகம் வளிமண்டலத்தில் கசியத் தொடங்கியது. தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீரென இருமல், கடுமையான கண் எரிச்சல், மூச்சுத் திணறல், சுவாசக் குழாய் எரிச்சல், கண் இமைகள் செயலிழப்பு, மூச்சுத் திணறல், வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு துடிதுடித்து என்ன ஏது என்று தெரியாமலேயே இறந்துபோயினர். தப்பிப்பதற்காக இங்குமங்கும் ஓடியவர்கள் அதிகமாக சுவாசித்ததால் ஆங்காங்கு செத்து விழுந்தனர். மெத்தில் ஐசோசயனேட் (Methyl Isocyanate – MIC) வாயு காற்றை விட இரு மடங்கு அடர்த்தியாகவும், திறந்த சூழலில் தரையில் விழும் தன்மையுடனும் இருப்பதால், உயரம் குறைவான குழந்தைகளும், படுத்துக்கொண்டிருந்தவர்களும், கால்நடைகளும் அதிக எண்ணிக்கையில் இறந்துபோயினர்.
இக்கொடூர கார்ப்பரேட் படுகொலையில் 22,000-க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்தனர். 500,000-க்கும் அதிகமானோர் புற்றுநோய் மற்றும் இதர நிரந்தர பாதிப்புகளை அடைந்தனர். நேரடியான பாதிப்புகளைத் தவிர, அப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு உடல் மற்றும் DNA குறைபாடுகளுடன் பிறக்கின்றன.
இத்தகைய மிகப்பெரும் கொடூர விபத்து ஏற்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான வாரன் ஆண்டர்சன் டிசம்பர் 7-ல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போதைய பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி நேரடியாக தலையிட்டு அதே நாளில் இரவோடு இரவாக இந்திய அரசு விமானத்தில் அமெரிக்காவுக்கு பத்திரமாக அவனை அனுப்பிவைத்தார். பின்னர் தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல முக்கிய குற்றவாளியை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு 1987-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் ஆன்டர்சன், மற்ற எட்டு நிர்வாகிகள் மற்றும் இரண்டு துணை நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு பதிலளித்த யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்க குடிமகனை இந்திய கோர்ட்டுகள் ஒன்றும் செய்யமுடியாது என்று விளக்கமளித்து அச்சம்மன்களை குப்பையில் போட்டுவிட்டது.
படிக்க: போபால் விஷவாயு புதிய ஜனநாயகம் சிறப்பிதழ் மீள் பதிவு
1989-ல் இத்துயர சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களை கலந்தாலோசிக்காமலேயே இந்திய அரசாங்கமும் யூனியன் கார்பைடு நிறுவனமும் ₹1,055 கோடி இழப்பீட்டுத் தீர்வை நீதிமன்றத்திற்கு வெளியே செய்துகொண்டன. இந்தத் தொகையானது அரசாங்கத்தால் கோரப்பட்ட ஆரம்பத் தொகையில் 15 சதவீதத்திற்கும் குறைவானது. அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதத்தின் மதிப்பை விட மிகக்குறைவு. அதையும்விட நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்களில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்யப்படவில்லை என்பது இன்னும் ஒரு அநீதி.
இந்த பயங்கர சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் அன்று முதல் இன்றுவரை 40 வருடங்களாக நீதிவேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள். தன்னார்வல குழுக்களை ஏற்படுத்தி விஷவாயுவால் தாக்கப்பட்டவர்களுக்கும், அத்தாக்குதலின் பக்கவிளைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பல உதவிகளை செய்துவருகின்றனர். அவர்களின் தொடர் சட்டப்போராட்டத்தின் விளைவாக 2010-ல் போபால் நகர நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பணிபுரிந்த ஏழு இந்திய அதிகாரிகள் மற்றும் அந்நிறுவனத்தின் இந்திய துணைநிறுவனத்தின் மேல், ‘அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக’ குற்றம் சாட்டியது. ஆனால் ரொனால்டு ரீகன் முதல் பராக் ஒபாமா வரையிலான அமெரிக்க அதிபர்களின் தயவால் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.
படிக்க: ஆந்திரா ஆலைப் படுகொலை 17 பேர் பலி! இன்னும் எத்தனை பேரை பலி கொடுப்பது?
பாதுகாப்பு நடவடிக்கைகளால் இலாபத்தில் ஏற்படும் சிறிது இழப்பைக்கூட இழக்கவிரும்பாமல் நடத்தப்பட்ட இந்த கோர விபத்தில் ஏற்பட்ட உயிர்பலிகள் ஒருபுறம் என்றால், ஆயிரக்கணக்கான டன் நச்சுக் கழிவுகள், கைவிடப்பட்ட அந்த நிறுவனத்திலும் அதைச் சுற்றியும் புதைந்து கிடக்கின்றன, இதனால் அப்பகுதியில் நிலத்தடிநீரும் விஷமாகி வருகிறது. இவ்விபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தன்னுடைய ஆலையிலிருந்து கசிந்த MIC-யின் நச்சுயியல் பண்புகள் தொடர்பான தகவல்களை யூனியன் கார்பைடு நிறுவனம் அளிக்காததால் மருத்துவர்கள் என்ன தடுப்பு மருந்தை கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது எனப் புரியாமல் திணறினர். இதுதொடர்பாக அந்நிறுவனம் அன்றுமுதல் இன்றுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையையும் தரவில்லை என்பதோடு எந்தவிதமான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிக்கொண்ட டவ் கெமிக்கல்ஸ் நிறுவனமும் இவ்விபத்து தொடர்பான எந்தஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் தன் நிறுவனத்துக்கும் அவ்விபத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நிவாரணத்தை வழங்காமல் நிராகரித்துவிட்டது.
இவ்விபத்து தனது எஜமானனான அமெரிக்காவின் கார்ப்பரேட் கம்பனி நடத்தியதால் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அனைத்தையும் பொத்திக்கொண்டு உள்ளது. 2008-ஆம் ஆண்டில் உயிர் பிழைத்தவர்களின் நீண்டகால மருத்துவ, பொருளாதார மற்றும் சமூக மறுவாழ்வுக்காக மருத்துவ ஆணையத்தை அமைக்க மன்மோகன் சிங் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்களாகவும், ஏழைகளாகவும் இருந்ததால் அப்போதைய மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் எதிர்ப்பால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
யூனியன் கார்பைடின் சொந்த ஆவணங்கள் MIC கசிவால் ஏற்படும் உடல்நலக்கேடு நிரந்தரமானது என்று தெளிவாகக் கூறியபோதிலும் இழப்பீடு கோருபவர்களில் 93% பேர் “தற்காலிக” பாதிப்பு மட்டுமே அடைந்திருப்பதாக அம்மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்து அம்மக்களுக்கு தனது பங்கு துரோகத்தை செய்து ரூபாய் 769/-ஐ நிவாரணத் தொகையாக வழங்கிவருகிறது.
அமெரிக்க கார்ப்பரேட்டால் அன்று நிகழ்த்தப்பட்ட போபால் படுகொலைகள் இன்றும் தேசங்கடந்த அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற இந்திய கார்ப்போரேட்டுகளாலும் ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒடிசா மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப்போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன. தற்போது மதுரை அரிட்டாபட்டியில் அதானியின் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அப்பகுதி மக்களை அங்கிருந்து விரட்டும் வேலையில் அதிகார வர்க்கம் முனைப்புடன் உள்ளது. இதுதான் கார்ப்பரேட் பாசிசம் என்பதும், கார்ப்பரேட்டின் நலனுக்காகவே இந்தியாவில் காவி பாசிசம் வேலைசெய்கிறது என்பதையும் புரிந்துகொண்டு சரியான எதிர்வினை ஆற்றுவதும்தான் உழைக்கும் மக்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டுவரும். அப்போதுதான் கார்ப்பரேட் பாசிசத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் கிடைக்கும்.
– ஜூலியஸ்







