
மகாராஷ்டிர மாநிலம் பீமா கொரேகானில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் 8 பேருக்கு மட்டுமே ஏற்கனவே பிணை கிடைத்துள்ளது. சமீபத்தில் ஜனவரி 9 அன்று பம்பாய் உயர் நீதிமன்றம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்த மனித உரிமை பாதுகாவலர்களான ரோனா வில்சன் மற்றும் சுகீர் தவாலே ஆகியோருக்கு பிணை வழங்கியுள்ளது.
இவர்கள் இருவரும்தான் எல்கர் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி முதலில் கைது செய்யப்பட்டவர்கள். விசாரணை நீதிமன்றத்தால் அவர்களது பிணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் ஏ எஸ் கட்டாரி மற்றும் கமல் கட்டா அமர்வு விசாரித்து இப்போது இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி!
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று புனேவிற்கு அருகில் எல்கர் பரிஷத் (உரத்த பிரச்சாரத்துக்கான ஒன்று கூடல்) எனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மோடி அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகவும், இந்துத்துவ சக்திகளின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அனைவரும் பேசினர்.
இந்தக் கூட்டத்துக்கு அடுத்த நாளான ஜனவரி 1, 2017ல் பீமா கொரேகான் எனுமிடத்தில் மகாராஷ்டிராவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் மஹர் (தலித்) மக்கள் ஒன்று கூடி பார்ப்பனர்களுக்கு எதிரான தமது வெற்றியின் 200 ஆம் ஆண்டு தினத்தை கொண்டாடினர். தமக்கு எதிரான வெற்றியை தலித் மக்கள் கொண்டாடுவதை சகித்துக்கொள்ள முடியாத இந்துத்துவ மத வெறியர்கள் திட்டமிட்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
மதவெறி கும்பல் மீது ஆதாரப்பூர்வமாக வழக்குகள் பதியப்பட்ட போதும், அவர்களைக் கைது செய்யக் காவல் துறை அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக முந்தைய நாள் நிகழ்வில் பங்கேற்றவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதால்தான் இந்தக் கலவரம் நிகழ்ந்தது என்பதாக புனே போலீஸ் புதுக்கதையை கூறியது. அதன் அடிப்படையில் தான் ரோனா வில்சன் உள்ளிட்ட 16 பேரை அடுத்தடுத்து காவல்துறை கைது செய்தது.
கேரளாவைச் சேர்ந்த வில்சன் சிறைக் கைதிகளின் உரிமைக்காக பல ஆண்டுகளாக டெல்லியில் இருந்து செயலாற்றி வருபவர். அவரை டெல்லி சென்று காவல்துறை கைது செய்தது. தவாலே, “வித்ரோஹி” எனும் இதழின் ஆசிரியராகவும், மனித உரிமைப் போராளியாகவும் இருந்தார். அவர் மும்பையில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
புனே காவல்துறையால் கையாளப்பட்டுக் கொண்டிருந்த இந்த வழக்குகள், 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி கவிழ்ந்து, காங்கிரஸ் – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த வழக்கின் உண்மைத் தன்மை வெளிப்பட்டு தனது திருட்டுத்தனம் அம்பலமாகி விடுமோ என அஞ்சிய மோடி அரசு இந்த வழக்குகளை தேசியப் புலனாய்வு முகமை (NIA) வசம் ஒப்படைத்தது.
புனே காவல்துறையும் அதன் பிறகு என்ஐஏ-வும் “நகர்ப்புற நக்சல்” இயக்கத்தின் மூளையாக செயல்பட்டவர்களில் வில்சன் முக்கியமானவர் என்றும், பல்கலைக்கழக மாணவர்களை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்துபவராக தொடர்ந்து செயல்பட்டதாகவும் கூறி வந்தன. வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தன. கைது செய்யப்பட்டவர்களின் காவலை நீட்டிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தின.
வில்சன் மற்றும் தவாலேவின் வழக்கறிஞர்கள், “இவர்கள் இருவரும் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் துணைக் குற்றப்பத்திரிகைகளில் 300 – க்கும் மேற்பட்ட சாட்சிகளை என்ஐஏ குறிப்பிட்டுள்ளது. இந்த சாட்சிகளை விசாரிக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதால் இவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை விரைவு படுத்துகிறோம் எனக் கூறிய NIA தரப்பு அதிசயமாக ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை. அதேபோல இருவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் எதையும் கோரவில்லை. கடந்த காலங்களில் பிணை வழங்கப்பட்ட வழக்குகளில் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே பம்பாய் உயர்நீதிமன்றம் மகேஷ் ராவத்துக்கு பிணை வழங்கியதை எதிர்த்து NIA மேல்முறையீடு செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.
பொய்யாக புனையப்பட்ட வழக்குகள்!
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேர் மீதும் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் போலியாக புனையப்பட்டவைதான். இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், மோடியைக் கொலை செய்ய (ராஜீவ் காந்தியை கொலை செய்தது போல) திட்டமிட்டதாகவும் வழக்கு பதியப்பட்டது.
பெகாசஸ் எனும் உளவு மென்பொருளை ஒன்றிய அரசு பயன்படுத்தி வில்சன் உள்ளிட்ட மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைப்பேசிகளை வேவு பார்த்தது. இதை அம்பலப்படுத்தும் வகையில் “தி பெகாசஸ் ப்ராஜெக்ட்” என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் “தி வயர்” இணைய இதழ் செயல்பட்டது.
படிக்க: ♦ எல்கர் பரிஷத் வழக்கு: ரோனா வில்சன், சுதிர் தவாலே ஜாமீனில் விடுதலை!
தனிப்பட்ட முறையில் புலன் விசாரணை செய்யும் பலரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வில்சன் உள்ளிட்டவர்களின் கைபேசியில் இந்த உளவு மென்பொருள் திருட்டுத்தனமாக புகுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியது. ஆனால் நீதிமன்றங்கள் இந்த ஆதாரங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இது தவிர ரோனா வில்சனின் கணினியிலும் ஹேக்கரைப் பயன்படுத்தி ஊடுருவல் மென்பொருளை (Malware) உபயோகித்து குற்ற ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் திருட்டுத்தனமாக புகுத்தப்பட்டன. ஸ்டேன் சாமியின் மடிக்கணினியிலும் இதுபோன்ற ஊடுருவல் மூலம் குற்ற ஆவணங்கள் உள்ளீடு செய்யப்பட்டன.
இப்படி மோசடியாக காவல்துறையின் கயவாளித்தனத்தால் உள்ளீடு செய்யப்பட்ட ஆவணங்களைத்தான் ஆதாரமாக காட்டினர். வழக்கு தொடுத்த பிறகுதான் சாவகாசமாக நயவஞ்சகமான முறையில் இது போன்ற ஆதாரங்களை உருவாக்கினர். அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்சனால் கன்சல்டிங் இந்த ஆவணங்கள் சதித்தனமாக உள்ளீடு செய்யப்பட்டதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தது. இதனை வாஷிங்டன் போஸ்ட் செய்தியாகவும் வெளியிட்டது.
பிணையில் வந்தவர்களும் சிறையில் வாடுபவர்களும்!
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பல ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு ஆந்திரக் கவிஞர் வரவரராவ், மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், கல்வியாளர் ஷோமா சென், சமூக ஆர்வலர் கோன்சல்வேஸ், வழக்கறிஞர் அருண் ஃபெரேரா, கல்வியாளரும் எழுத்தாளருமான ஆனந்த் தெல்டும்டே, பத்திரிகையாளரும் ஆர்வலருமான கௌதம் நவ்லகா போன்றோர் வெவ்வேறு தருணங்களில் பெரும் நீதிமன்ற போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் இன்னும் பிணை கிடைக்காமல் டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனிபாபு, சமூக ஆர்வலர் மகேஷ் ராவத், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், கலாச்சார ஆர்வலர்களான சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர் மற்றும் ஜோதி ஜக்தாப் ஆகியோர் சிறையில் இன்னும் வாடுகின்றனர். இவர்கள் அத்தனை பேரின் பிணை மறுப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன.
படிக்க: ♦ 2017-பீமா கோரேகான் வன்முறையும், எல்கர் பரிஷத் வழக்கும்! நடந்தது என்ன?
ஸ்டேன் சாமி எனும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய பாதிரியார் ஜூலை 2021 – ல் சிறை கொட்டடியிலேயே இறந்து போனார். அவருடன் சிறையில் இருந்த சக சிறைவாசிகள், சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அவருக்கு சரியான மருத்துவ சேவை வழங்க தவறியதால்தான் இந்த மரணம் ஏற்பட்டது என குற்றம் சாட்டினர். கைகள் நடுங்கக்கூடிய நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நீர் அருந்தும் உறிஞ்சு குழல் டம்ளர் கூட கொடுக்காத மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலும் ஒரு காரணம் என்பதை நாம் அறிவோம்.
மேற்கூறியவாறு இந்த வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள்தான் என்பது நிரூபணம் ஆகியுள்ள நிலையிலும், இன்னும் 6 பேரை பிணையில் கூட விடுவிக்காத நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிகவும் கொடுமையானவை. பாசிச மோடியின் ஆட்சியில் நீதித்துறையும் ஆள்பவர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதற்கு எடுப்பான உதாரணம் இதுதான்.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகள் கமிஷன் (USCIRF) தனது அறிக்கையில், “இந்த வழக்கில் வில்சன் மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட மற்ற ஆர்வலர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், கைதும் இந்தியாவில் உள்ள தலித், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கும் மனித உரிமை பாதுகாவலர்களின் குரலை நசுக்கும் நடவடிக்கையாகும் என்று ஐநா மனித உரிமை நிபுணர்கள் தங்களது கவலையையும், எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்” என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தியாவில் பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இடதுசாரி சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மோடியின் ஆட்சியை அம்பலப்படுத்தும் விதமாக கூர்மையாக விமர்சிப்பவர்கள் அனைவரையும் முடக்கும் செயலையே முன்னெடுத்து வருகிறது.
பாசிஸ்டுகள் விமர்சனங்களுக்கு அஞ்சி தன்னை திருத்திக் கொள்ள மாட்டார்கள். உலகெங்கிலும் இருந்து எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும் கண்டுகொள்ளாத ஆணவப் போக்கில்தான் மோடி அரசும் ஆட்டம் போடுகிறது. பெருவாரியான மக்கள் எழுச்சியின் மூலம்தான் பாசிஸ்டுகளின் அராஜகத்துக்கு முடிவு கட்ட முடியும்.
- குரு