
பீமா கோரகான் 200 ஆம் ஆண்டு தினத்தை முன் வைத்து எல்கர் பரிஷத் என்ற மாநாட்டிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை முன்வைத்து சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த விதமான விசாரணையும் இன்றி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் 2018 இல் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சியாளர் ரோனா வில்சன் மற்றும் ஆர்வலர் சுதிர் தவாலே ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (ஜனவரி 8, 2025) ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் தவாலே மற்றும் வில்சன் தவிர, 14 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் வரவர ராவ், சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா, ஷோமா சென், கவுதம் நவ்லகா மற்றும் மகேஷ் ராவத் ஆகிய 8 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனை எதிர்த்து என்ஐஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மகேஷ் ராவத் சிறையில் இருந்தார். ஆனால் செவ்வாயன்று சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் அவருக்கு எல்எல்பி தேர்வில் பங்கேற்க 18 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
பீமா கொரகான் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால்…” (ONE FEARLESS STEP AGAINST THE UNDECLARED EMERGENCY…) என்ற தலைப்பின் கீழ்,
- “பீமா கொரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்”
- “ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவை கைது செய்யாதே”
- “பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!” –
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC) சார்பில் மதுரையில் பிப்.8,2019 அன்று வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டமும், கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.
“இடதுசாரி அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்வதற்கு மிகப்பெரிய சதிப் பின்னணி உண்டு. கடந்த அக்டோபர் 2015-ல் ராய்ப்பூரில் கூடிய ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட 35 இந்துத்துவா அமைப்புகள், தேசியம் – எதிர் – தேச விரோதம் என்ற கருத்தாக்கத்தை முன் வைத்து மோடி – பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்க முடிவெடுத்தன. 2015-ல் டெல்லி தேர்தலில் தோற்றபின் எடுக்கப்பட்ட முடிவு இது.

இந்தக் கருத்தாக்கம் முதலில் பிப்ரவரி 2016-ல் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் அமல்படுத்தப்பட்டது. மாணவர் போராட்டத்தில் ஏபிவிபி அமைப்பின் மாணவர்களை வைத்து பாகிஸ்தான், காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக கோசம் எழுப்ப வைத்து கண்ணையா குமார் உள்ளிட்டவர்கள் தேச விரோதிகள் எனப் பிரச்சாரம் செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகாவில் திப்பு சுல்தான் விழாவில் கலவரம் செய்தனர். பசுப் பாதுகாப்பு என கொலைகள் செய்தனர். இந்துத்துவத்தை உறுதியாய் எதிர்த்தவர்களை சனாதன் சன்ஸ்தா மூலம் கொலை செய்தனர்.
படிக்க: ♦ பீமா கொரேகான் : அரசின் உத்தரவுப்படி புனையப்பட்ட பொய் வழக்குதான் போட்டுடைத்த போலீசு அதிகாரி!
இவர்களின் நோக்கம் நாம் மோடி அரசின் தோல்விகள் குறித்து பேசக்கூடாது என்பதோடு, மக்களுக்கு ஆதரவான அறிவுத்துறையினர் இருக்கவே கூடாது என்பதும்தான். ஹிட்லரும் இதைத்தான் செய்தான். தொடர்ச்சியாகப் பிரச்சனைகள் செய்து நம்மை களைப்படையச் செய்யும் உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். நாம் சோர்ந்து விடக்கூடாது. அரசியலமைப்பு நிறுவனங்களே மோடியிடம் அஞ்சுகின்றன. பெரும்பான்மை சமூக நிலைப்பாடுகளுக்கு அரசியலமைப்பு இணங்கிச் செல்ல வேண்டும் என மிரட்டுகிறார்கள். அதுதான் சபரிமலை வன்முறை. எனவே இதனை எதிர்கொள்ள மக்கள், சிவில் சமூகப் போராட்டமே தீர்வு. நாம் மோடி-ஆர்எஸ்எஸ் கும்பலின் பயங்கரவாதத்தையும், அவர்கள்தான் மதரீதியாக நாட்டைப் பிளக்கும் பிரிவினைவாதிகள் என்பதையும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்களை எதிர்வினைக்குத் தள்ள வேண்டும்” என்று மனித உரிமை பாதுகப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசினார்.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவ்ரும் ரோனா வில்சன் மற்றும் சுதிர் தவாலே மற்றும் இன்னமும் சிறையில் வாடும் பிற செயல்பாட்டாளர்கள் இந்த வழக்கின் உண்மை நோக்கத்தை நமக்கு புரிய வைத்துள்ளனர்.
படிக்க: ♦ 2017-பீமா கோரேகான் வன்முறையும், எல்கர் பரிஷத் வழக்கும்! நடந்தது என்ன?
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்ட வருகிறது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் பாஜக முன்வைக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச அரசியலுக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவர் மீதும் சட்டவிரோதமான முறையில் தாக்குதல்கள் தொடர்கிறது.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்ற இந்திய ஒன்றிய அரசு வெளிப்படையாகவே பாசிச அடக்குமுறைகளை ஏவி விடுகிறது என்பது மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் முதல் மனித உரிமை போராளிகள் வரை அனைவரையும் நீண்ட கால சிறையில் அடைப்பது, விசாரணையின்றி தண்டனையை நிறைவேற்றுவது என்ற வகையில் செயல்படுவது பாசிசத்தின் வகை மாதிரி ஆகும்.
இந்தியாவில் இன்னும் பாசிச ஆட்சி வரவில்லை என்று உளறிக் கொண்டிருக்கின்ற சித்தாந்த குருடர்கள் மற்றும் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் திமுகவிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்று எதிரிகளையும், சமரச சக்திகளையும் ஒன்றுபடுத்துகின்ற அரசியல் பிழைப்புவாதிகள் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக ஊடகங்களில் சதிராடுவது; பிறரை உசுப்பேற்றுகின்ற வகையில் அறிக்கை விடுவது என்பதை தாண்டி எதையும் செய்வதில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது..
பீமா கோரகான் முன்வைத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்விதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதையும், கொலைகார உளவு நிறுவனமான என்ஐஏ கலைக்கப்பட வேண்டும் என்பதையும், ஊபா போன்ற கொடூரமான அரசு பயங்கரவாத சட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் முன்வைத்து தொடர்ந்து போராடுவோம் பாசிச எதிர்ப்பு போரில் முன்னேறுவோம்.
- கணேசன்.