”அசமத்துவத்துக்கு எதிரான போரட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்”
பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்களின் உரை:


த்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் மசோதாக்களையும்,அவை இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தையும் பற்றி உரை நிகழ்த்துமாறு என்னை அழைத்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பூவுலகின் நண்பர்கள்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு நான் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில்,இப்போது அவை மசோதாக்கள் அல்ல.அவை நாடாளுமன்றத்தில் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டு விட்டன.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேலவையில் இருந்து தூக்கி வெளியே எறியப்பட்டனர். எந்த வித விவாதமும் இன்றி சட்டங்களாக அவை நிறைவேற்றப்பட்டன.அதே நாளில் மூன்று தொழிலாளர் நலத் திருத்தச்சட்டங்களும் மேலவையில் ஜனநாயக விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டன.அவை தொழிற்சங்க உரிமைகளை,வேலை நிறுத்த உரிமைகளை,இவ்வளவு காலமாகப் போராடிப் பெற்ற அனைத்துத் தொழிலாளர் உரிமைகளையும் முற்றிலுமாகப் பறிப்பவை. அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதில் குடியரசுத் தலைவர் காட்டிய அவசரம் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தும் உடனடியாகக் கையெழுத்திட்டார். நாட்டின் எல்லா முதன்மையான செய்தி ஊடகங்களுமே வேளாண் பாதுகாப்புத் திருத்தச்சட்டங்கள் ஆதரித்துத்தான் பெரும்பாலும் எழுதியிருந்தன.சட்டங்களை மேலவையில் நிறைவேற்றிய விதத்தைத்தான் அவை குறைகூறினவே தவிர,அவை விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

இந்த நாசகரமான சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதிலும் விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப்,ஹரியானா போன்ற ஓரிரு மாநிலங்களில் மட்டுமே போராட்டங்கள் நடப்பதாக அரசு சொல்வது உண்மையல்ல. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கர்னாடகா, ஆந்திரம், மஹாராஷ்டிரம் முதலான பல மாவட்டங்களில் தீவிரமான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடன் அந்தக் குறிப்பிட்ட நாளில்,அதாவது செப்டம்பர் இருபத்தி ஐந்தாம் நாள்,விவசாய மக்கள் தீவிரமாகத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கத் திரண்ட அதே நாளில்,மத்திய அரசின் ஏமாற்று வேலைகள் தீவிரமாக நடந்தன. பீகார் மாநிலத்தின் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அன்று பத்திரிகையாளர்களைத் திரட்டி அறிவித்தது.அந்தத் தேதிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தன; அவற்றை ஐந்து நாள்களுக்கு முன்பே அறிவித்திருக்கலாம்.அல்லது குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாளன்று அறிவித்திருக்கவும் முடியும். அதை அவர்கள் திட்டமிட்டு அன்றைய தினமே அறிவித்தது,ஊடகங்களையும்,மக்களையும் திசை திருப்பும் நோக்கத்தில்தான். அதே தினத்தில், நார்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ அமைப்பினால் மிகவும் புகழ் பெற்ற சுமார் முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படக் கலைஞர்கள் போதை மருந்துகள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்கு வந்தாக வேண்டுமென்று அழைக்கப்படுகின்றனர். தீபிகா படுகோனே கோவா விமான நிலையத்தில் வெளியே வர முடியாமல் முடங்கியிருந்த போதும், அவரை விசாரணைக்குக் கொண்டு வருவதில் நார்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ தீவிரமாக இருந்தது. அவர் விசாரணைக்கு வரும்வரை நூற்றுக்கணக்கான பத்திரிகைக்காரர்கள் அங்கேயே தவம் கிடந்தார்கள். தீபிகாவின் செயலர் அங்கே வந்தாக வேண்டுமென்று ஆணையிடப்பட்டது. விவசாயிகளின் போராட்டங்களின் பால் மக்களோ ஊடகங்களோ கவனமே திருப்பாமல் இருக்க என்னென்ன நாடகங்களை அரங்கேற்ற வேண்டுமோ அனைத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களைக் கொண்டு அரங்கேற்றினார்கள்.

இவ்வளவு திசைதிருப்பல்களையும் மீறி அதே நாளில் என்ன நடந்தது என்று நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.அன்றைய தினம் சமூக ஊடகமான ட்விட்டரில் டிரெண்டிங் ஆன முதல் பத்து இடங்களில், ஒன்று முதல் நான்கு இடங்களைப் பெற்ற பதிவுகள் எவை தெரியுமா? பொதுமக்கள் தரப்பிலிருந்து சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாய மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்ததுதான் முதல் நான்கு இடங்களில் இடம்பெற்றிருந்தது. சுமார் ஒன்பதுமணி நேரம் வரையில், விவசாய மக்கள் போராட்ட ஆதரவுக் குரல்களே முதல் நான்கு இடங்களைப் பெற்று முன்னிலை வகித்திருந்தன.

தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் எவையும் இந்தச் சட்டங்கள் பற்றி வாயே திறக்காத அன்றைய தினம், அந்த முழு நாளில் ஒரு பத்து நிமிடங்கள் மட்டும் வேளாண் மசோதா பற்றி தொலைக்காட்சிகள் பேசின. எதற்குத் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் போராட்டங்கள் பற்றி கடுமையாக விமரிசனம் செய்து, அவர்கள் எல்லாரும் மோசடிப் பேர்வழிகள், ஏமாற்றுக்காரர்கள், தேசவிரோதிகள் என்று வசைபாடினார்.

அந்தப் பத்து நிமிடங்கள் மட்டுமே அவருடைய பேச்சை நேரடி ஒலி/ஒளி பரப்பிய ஊடகங்கள், விவசாயிகள் போராட்டம் பற்றி ஒட்டு மொத்தமாகக் கள்ள மவுனம் சாதித்தன.

மேலே குறிப்பிட்டது போல, இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் ட்விட்டரில் தமக்கென்று கணக்குகளைப் பராமரிக்க விவசாயிகளால் முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.அவ்வளவு பணவசதி அவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு ட்விட்டரில் விவசாய மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்கள் விவசாயத்துடன் எவ்விதத் தொடர்புமில்லாத மத்தியதர வர்க்கப் பொதுமக்களே. இதற்கு மாறான இன்னொரு முயற்சியை அக்டோபர் இரண்டாம் நாளன்று ,மகாத்மா காந்தி பிறந்த நாளில் ஒரு தரப்பினர் மேற்கொண்டார்கள்.அன்று ட்விட்டரில் ட்ரண்டிங் ஆக இடம் பெற்ற முழக்கம் : ”நாதுராம் கோட்சே ஜிந்தாபாத்”. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயைக் கொண்டாடிப் போற்றும் முழக்கங்களை எண்பத்தி மூன்றாயிரம் பேர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர். இதை யார் ஏற்பாடு செய்து முன்னெடுக்க முடியும்? கோட்சேயைக் கொண்டாடும் அவர்களிடம் உள்ள சமூக ஊடக,ட்ரோல் ராணுவம் விவசாயிகளுக்கு ஏது? ஆனாலும் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது நாம் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி.

காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து இப்போது பேசுகிறது.அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். இதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், ஒரு விஷயத்தைக் கூறாமல் இருக்க முடியாது.இதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,2014-ஆம் ஆண்டு இதே ப.சிதம்பரம்தான் இப்போது பி,ஜே.பி. அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களைத் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப் போவதாக வாக்குறுதி தந்தவர்.இது ஏதோ இந்த ஆட்சியின் போதுதான் முதல் முறையாக நடந்திருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம்.இவை எல்லாமே கடந்த 1991-ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் ஆண்ட அரசுகள் கொண்டு வந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் –எல்.பி,ஜி.- பொருளாதாரக் கொள்கைகளின் தொடர்ச்சிதானே தவிர, இப்போது பி,ஜே.பி.அரசு திடீரெனப் புதிதாக இந்த மோசமான கொள்கைகளைக் கொண்டு வந்து விடவில்லை.

எவ்வளவு நடைமுறை பிரச்சினைகள் இருந்தபோதிலும், இப்போதுள்ள ஏபிஎம்சி சந்தைப்படுத்தல் முறையில், குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காவிட்டால் தனது விளைபொருளை விற்க முடியாது என்று விவசாயிகள் மறுப்பதற்கு உரிமை உண்டு.ஆனால், இனிமேல் அப்படிக் கூற முடியாது.இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் அனைத்துமே தொண்ணூறுகளில் தொடங்கிய தாராளமயக் கொள்கையின் தொடர்ச்சிதானே தவிர,இன்று திடீரெனப் புதிதாக வந்ததல்ல.2014 –ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதே சட்டங்களை நிறைவேற்றப் போகிறோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார்கள். அதாவது, விவசாயமோ, தொழிற்துறையோ எந்தத்துறையாக இருந்தாலும்,சுதந்திரமான சந்தையைத் திறந்து விடுவதுதான் சுதந்திரம்.அதற்கு மாறாக,அரசின் ஆதரவு என்பது அடிமைத்தனம் என்பதுதான் அவர்களின் முழக்கம்.

இப்போது விவசாயிகள் கேட்பது என்ன? தமது விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒரு நிலையான நீடித்த வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றைத்தான்.இப்போது உள்ள நிலையில் கிடைக்கும் குறைந்தபட்சப் பாதுகாப்பான இந்த எம்.எஸ்.பி. யையும் இனிமேல் அரசுகள் வழங்க மாட்டா. இதை அவர்கள் வெளிப்படையாகக்கூறவில்லை; ஆனால், குறைந்த பட்ச ஆதரவு விலை என்ற அம்சம் இப்போது வந்துள்ள மூன்று சட்டங்களிலுமே எந்த இடத்திலும் ஒரே ஒரு வார்த்தையாகக் கூட இடம் பெறவில்லை.

முதலாவது சட்டம், விவசாயிகள் உற்பத்திப்பொருள்கள் வர்த்தகம் மற்றும் தொழில் மேம்படுத்துதல் சட்டம்.பாமரர் மொழியில் சொன்னால்,ஏபிஎம்சி சட்டம். அதாவது,வேளாண் விளைபொருள்கள் சந்தைப்படுத்தல் கமிட்டி சட்டம். இந்தச்சட்டம் விவசாயிகளை விடுதலை செய்து சுதந்திரமானவர்களாக ஆக்குவதாக அரசு சொல்கிறது.இனிமேல்,விவசாயிகள் தமது விளைபொருள்களை எங்கே வேண்டுமானாலும் கொண்டு போய் யாரிடம் வேண்டுமானாலும் விற்க சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறதாம் ! அப்படியானால், இதுவரை ஏபிஎம்சி அமைப்பின் கீழ் விவசாயிகள் எப்படி இருந்து வந்தார்கள்?

ஏபிஎம்சி அமைப்பு இந்திய வேளாண்துறையைப் பொறுத்தவரை ஓர் ஏகபோக ஆதிக்கம் உள்ள மாபெரும் அமைப்பாகத்தான் இருந்திருக்கிறது.ஆனாலும் கூட எல்லா விவசாயிகளும் தங்களின் விளைபொருள்களை இந்தக் கமிட்டியிடமே விற்று வரவில்லை.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறபடி, சுமார் அறுபத்தி ஐந்து சதவீத நெல், ஐம்பத்தி எட்டு சதவீத கோதுமை –இவையெல்லாம் ஏற்கெனவே ஏபிஎம்சி அமைப்புக்கு வெளியே,தரகர்கள்,வியாபாரிகள்,மண்டி உரிமையாளர்கள்,கந்து வட்டிக் கடன்காரர்கள்–ஆகியோரிடம்தான் விற்கப்பட்டு வந்துள்ளன.காரணம், விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருள்கள், உரம் போன்றவற்றுக்குத் தேவைப்படும் பணத்தைக் கடனாகவோ,முன்பணமாகவோ மேற்கண்ட தனினபர்கள்தாம் தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே,இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள்,ஏபிஎம்சி அமைப்பின் ஏகபோக ஆதிக்கத்தைத் தகர்க்கவில்லை; மாறாக,மாபெரும் பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தை விவசாயத்தின் மேல் திணிக்கவே போகின்றன.

இந்தச்சட்டங்களுக்குக் கடும் எதிர்ப்பு இப்போது ஏற்பட்டதும்,பிரதமர் நரேந்திர மோடிதிரும்பத் திரும்ப,விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தான் தரப்போவதாக உறுதி அளிக்கிறார். அது மட்டும் இல்லாமல்,வரும் இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தப் போவதாகவும் கூறுகிறார். மேலும்,அரசாங்கம் தானியங்களைக் கொள்முதல் செய்வதில் எந்தக்குறையும் இருக்காது என்று பேசிக்கொண்டே இருக்கிறார்.ஆனால், இந்த உறுதிமொழிகள் எதுவுமே வந்துள்ள வேளாண் சட்டங்களில் ஒரே ஒரு வார்த்தையாகக்கூட இடம் பெறவில்லை.

எம்.எஸ்.பி.-(மினிமம் சப்போர்ட் பிரைஸ்), ஏபிஎம்சி –என்றால் என்ன? அது என்ன சொர்க்கமா? இந்த அமைப்பில் பிரச்சினைகளே இல்லையா? இருக்கின்றன.அவற்றைத் சீர் திருத்திக் குறைகளைப் போக்க வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை.எடுத்துக்காட்டுக்காக நான் அரசுப்பள்ளிகளின் நிலைமையை எடுத்துக் கொள்கிறேன்.இந்தியாவில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் நிலை ஒப்பு நோக்கில் மிகவும் நன்றாக உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை,போதிய நிதி வசதி இன்மை போன்ற குறைகள் இருக்கின்றன.அதே போல, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையும் ஏராளமான பிரச்சினைகளுடன்தான் இருக்கின்றன.எனவே, அரசுப் பள்ளிகள் அனைத்தையும் மூடி விடலாமா? அப்படி மூடிவிட்டால் என்ன நடக்கும்? பலப்பல கோடிக்கணக்கான ஏழைக் குழந்தைகள் குறைந்தபட்சக் கல்வியைக் கூடப் பெற முடியாத நிலைக்கு ஆளாவார்கள்.இப்போது அந்தக் குழந்தைகளுக்கு தினமும் ஒரே ஒரு வேளையாவது கிடைத்துக் கொண்டிருக்கும் ஒரு சுமாரான மதிய உணவும் கூடக் கிடைக்காமல் போய் விடும். அந்த விதத்தில், அரசாங்கப் பள்ளிகள் கல்வித்துறையின் ஏபிஎம்சி அமைப்புகள் எனலாம். அதேபோல, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நல வாழ்வுத் துறையின் ஏபிஎம்சிகள். இப்போது எத்தனை குறைகளோடு அவை இருந்தாலும், மேலே சொன்ன வசதிகளும், சேவைகளுமே மக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகள்.இந்த விதத்தில்தான் நாம் ஏபிஎம்சி அமைப்பின் ஏகபோகம், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகத்தை விடவும் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்கிறோம்.

கடந்த ஓர் ஆண்டுக்குள்,இந்தியாவில் சுமார் ஐம்பத்தி ஐந்து மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுவிட்டனர் என்று அமர்த்யா சென் தலைமையில் நடைபெற்ற ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடன்சுமையால் தற்கொலை செய்து கொண்ட சுமார் தொள்ளாயிரம் விவசாயிகளின் குடும்பங்களை நான் நேரடியாகப் போய் ஆய்வு செய்த போது தெரிய வந்த உண்மை என்ன என்றால்,அந்தக் குடும்பத்தில் யாராவது ஒருவரின் உடல்நலக் குறைவின் காரணமாகவே அவர்கள் கடன் சுமைக்கு ஆளானார்கள் என்பதே. இரண்டு லட்சம்,மூன்று ,நான்கு லட்சம் என்று மருத்துவச் செலவுகளுக்காகக் கடன் வாங்கி,திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்வது என்ற முடிவுகளை எடுத்தவர்கள் அவர்கள். ஆகவேதான் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கும் ஏபிஎம்சி அமைப்பை நாம் வேளாண் துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்கிறோம்.

இன்னோர் அம்சத்தையும் கவனிக்க வேண்டும் : எற்கெனவே இந்திய விவசாயிகள் தமது விளைபொருள்களை ஏபிஎம்சி அமைப்பிடம் விற்பதே குறைவாக இருக்கிறது.காரணம், விவசாயிகளின் பொருளாதார நிலை.ஒரிசா மாநிலம் காலகண்டி என்ற இடத்தில் ,விவசாயிகள் தமது 2022, 2023- ஆம் ஆண்டுகளின் பயிர்களைக்கூட இப்போதே தரகர்களிடம் விலை பேசி விற்று விட்டனர்.தமிழ்நாட்டிலும் ராமனாதபுரம் மாவட்ட மிளகாய் விவசாயிகள் தமது மிளகாய் விளைச்சலை இந்த ஆண்டுக்கும், அடுத்த அண்டுக்கும் கூட முன்னதாகவே முன்பணம் வாங்கிக் கொண்டு விற்றுள்ளனர். இதுதான் கள நிலைமை.

இரண்டாவது சட்டம், மத்திய அத்தியாவசியப் பொருள்கள் விலை நிர்ணய திருத்தச்சட்டம். இது போன்ற ஒரு சட்டம் ஏன் வந்தது என்று நாம் அறிய வேண்டும். 1969- ஆம் ஆண்டு, விவசாயிகள் பெரும் போராட்டங்களில் இறங்கினார்கள். அதையடுத்து,எழுபதுகளின் தொடக்கத்தில் ,விவசாய விளை பொருள்களைக் கள்ளச்சந்தைக்காரர்கள் மொத்தமாக வாங்கிப் பதுக்கி வைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக வந்த சட்டம் தான் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்.

உலகெங்கும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஒரு விஷயம் தெரியும் : விவசாயிகளின் கைகளில் அவர்களுடைய விளைபொருள்கள் இருக்கும் போது அவற்றின் விலை சரிந்து வீழ்ச்சி காணும். அதே பொருள்கள் வியாபாரிகள்,மண்டி உரிமையாளர்கள் கைகளுக்குப் போனதுமே விலைகள் தாறுமாறாக ஏறி விடும். இதனால்தான் அவர்கள் விவசாய விளைபொருள்களை வாங்கி இருப்பு வைத்து கருப்புச்சந்தையை உருவாக்குகிறார்கள்.தனிநபர்கள் இவர்களுக்கு இருக்கும் இந்த வலிமையை விடவும் பல நூறு மடங்கு பொருளாதார பலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உண்டு.எனவே,அவர்களை இந்தச்சட்டங்கள் வரவேற்று ஏபிஎம்சி அமைப்பை ஒழிக்கத் தொடங்கி விட்டன.எற்கெனவே இந்த அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து பல முக்கியமான விளைபொருள்களை நீக்கியுள்ள நிலையில்,இப்போது முற்றிலுமாக எந்தப் பொருளையும் பதுக்கி விடும் கள்ளச்சந்தைக்குக் கதவைத் திறந்து விடுகிறார்கள்.

இந்தச்சட்டத்தின்படி, இனிமேல் ஒரு பொருளின் விலை நூறு சதவீதத்துக்கும் மேல் அதாவது இரண்டு மடங்காக விலை உயர்ந்தால் அல்லது,போர் , கடும் பஞ்சம் பொன்ற அசாதாரணமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் என்று அவற்றை அறிவிப்பார்களாம் ! விவசாயிகளைப் பொறுத்தவரை இந்தச்சட்டம் எப்போதுமே அவர்களுக்குப் பயன் அளிப்பதாக இருந்ததில்லை.ஆகக்கூடி, இனி விவசாயிகள் விளைபொருள்களின் விலைகள் சரிந்து வீழும் ; கார்ப்பரேட் நிறுவன விலைகள் உயர்ந்து கொண்டே போகும். இதனால் யாருக்குப் பயன்? பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ,விவசாயத் தொழிலாளர்களுக்கோ அல்ல;மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களே நன்மையடையும்.காரணம், விவசாய விளைபொருள்களின் விலைகள் ஏறட்டும் என்று இருப்பு வைத்து விற்பதற்குத் தேவையான இடமோ,பொருளாதார வசதியோ விவசாயிகளுக்குக் கிடையாது.

மூன்றாவது சட்டம், விவசாயிகளுக்குத் தமது விளைபொருள்களின் விலைகளை நிர்ணயிக்கும் வலிமையைத் தரும் ஒப்பந்தச்சட்டம். இதன்படி, ஒரு விவசாயி யாரேனும் ஒரு கார்ப்பரேட் நிறுவன பிரதிநிதியிடம் தனது விளைபொருளை நாட்டின் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் விற்க ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.எழுத்து மூலம் ஒப்பந்தம் இருக்க வேண்டியது கட்டாயம் என இந்தச்சட்டம் சொல்லவில்லை. விரும்பினால் இருக்கலாம், எழுத்து மூலம் இருப்பது விரும்பத்தக்கது என்றுதான் சொல்கிறது.ஆனால், இந்த ஒப்பந்தங்களுக்கு அரசாங்கம் மூன்றாவது தரப்பாக நின்று எந்தவித உத்தரவாதமும் அளிக்காது. இந்த நிலையில், எதேனும் ஓர் ஒப்பந்தம் மீறப்படும் போது பாதிக்கப்படும் ஏழை விவசாயி என்ன செய்ய முடியும் ? இன்னொரு விஷயம், இப்போதைய சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகார வரம்பை சிவில் நீதிமன்றங்களிடமிருந்து பிடுங்கி தகராறுகள் தீர்ப்பாயம் வசம் விடுகிறது.பிரச்சினை வரும்போது, ஓர் ஏழை விவசாயி எத்தனை முறை அங்கே போய் வாய்தாவில் கலந்து கொள்ள முடியும்? இரண்டு முறைக்கு மேல் போக அவரால் முடியாது. அதே சமயம், கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை வக்கீல்களை வேண்டுமானாலும் அமர்த்தும்;அப்படியே ஒருவேளை தீர்ப்பாயத்தில் அதற்கு எதிராகத் தீர்ப்பு வந்தாலும் அபராதத் தொகையை கட்டி விட்டுப் போய்க் கொண்டே இருக்கும். பாதிக்கப்படும் விவசாயியின் வக்கீலே கூட,கார்ப்பரேட் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டு அவருக்கு எதிராகக் களவாணித்தனம் செய்யவும் வாய்ப்புண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை,குத்தகை விவசாயிகள் பயிர் செய்யும் நில உரிமைகள் பற்றிய வாய்மொழி ஒப்பந்தங்களே 95 % இருந்து வந்துள்ளன. எழுத்து மூலம் அவற்றில் ஒன்று இரண்டுதான் இருக்கும். அந்தக்காலத்தில்,ஒரு குடும்பத்தினர் ,தனக்கு நன்கு அறிமுகமான,தான் சொல்லும் வார்த்தைக்கு மறு பேச்சுப் பேசாமல் அடங்கி நடக்கும் விவசாயிக்குக் குத்தகைக்கு நிலத்தைப் பயிர் செய்யக் கொடுப்பார்கள்.எல்லாம் வாய்மொழியில்தான் இருக்கும். இன்றைய நிலையில்,ஒரு கார்ப்பரேட் நிறுவனம்,தனக்கு ஒரு குறிப்பிட்ட ரகத் தக்காளிதான் வேண்டும் என்று ஓர் ஒப்பந்தம் போடும்;அந்த ரகத் தக்காளியை விளைவிக்கத் தேவையான விதைகளைக் கூட முதல் தடவை இலவசமாகக் கொடுக்கும். அவ்வாறு பஞ்சாப்பில் ஒரு விவசாயியிடம் ஒப்பந்தம் போடும்போது ஆயிரக்கணக்கான குவிண்டால் தக்காளி தேவை என்றும், அதற்காக ஆண்டு ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபாய் தருவதாகவும் ஒப்பந்தம் போட்டது.அதன்படி அந்த சர்தார் சிங் படாதபாடுபட்டு தக்காளியைப் பயிர் செய்து நிறுவனத்திடம் கொடுத்து விடுவார்.அதற்குப் பணம் கேட்கப் போகும் போது, அந்த நிறுவன உரிமையாளர் உலக மார்க்கெட் நிலவரப்படி, இப்போது விலை வீழ்ந்து விட்டதால் ஒர் இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் தான் தர முடியும் என்கிறார். இப்போது அந்த ஏழை விவசாயியால் என்ன செய்ய முடியும்? அந்தத் தக்காளியை உள்ளூர்ச் சந்தையிலும் விற்க முடியாது.காரணம், அந்த ரகத் தக்காளி சாஸ் செய்யப்பயன்படுமே தவிர, உள்ளூர் மக்கள் உணவுக்கு அதைப் பயன்படுத்துவதில்லை. ஆகக்கூடி,அந்த சர்தார்சிங் செய்வதறியாமல் நொடித்துப் போய் நிற்பார்.

இம்மாதிரியான நிலைமைக்கு விவசாயிகளைத் தள்ளி,அவர்களைப் பலவீனப்படுத்தி, நிரந்தரமாக கார்ப்பரேட் நிறுவனத்தைச் சார்ந்தே அவர்கள் இருந்தாக வேண்டிய நிலைக்கு ஆளாக்குவதே இந்தப் புதிய ஒப்பந்தச்சட்டத்தின் நோக்கம். எங்கே விவசாயிகள் ஒரு வலிமைமிக்க அமைப்பின் கீழ் திரண்டு இருக்கிறார்களோ அங்கே ஓரளவுக்கு இம்மாதிரி ஒப்பந்தங்கள் பயன் தரலாம். முன்பு கேரளாவில் வெனிலா விவசாயிகள் விஷயத்தில் அப்படி ஒரு சாதகமான நிலை இருந்தது. இந்தியாவின் விவசாயிகளுள் 75 % பேருக்கு மேல் மிகச்சிறிய விவசாயிகள். இவர்கள் தமது உணவுத் தேவைக்கான தானியங்களைக் கூட சந்தையில் விற்று விட்டுத்தான் கடன்களைக் கட்டுகிறார்கள். பிறகு சந்தையில் தமது தேவைகளுக்கு அதே தானியங்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறவர்களாக உள்ளனர். சந்தையில்,விவசாயிகளுக்கு விளைபொருள் விலைகளைக் குறைவாகவே நிர்ணயிப்பார்கள் ஆனால், அவர்களே நுகர்வோர் ஆகப் போகும்போது நுகர்பொருள்களின் விலைகளை கூடுதலாக நிர்ணயிப்பார்கள். இது இன்று புதிதாக உருவாகப் போகும் நிலை அல்ல. 1991 –ஆம் ஆண்டு முதல் நமது அரசுகள் பின்பற்றி வரும் நவ தாராளமயக் கொள்கைகளின் தொடர்ச்சிதான் இதெல்லாமே.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா? தொழிலாளர் சட்ட திருத்த மசோதா | தொழில் யுகம் (thozhil yugam)
தொழிலாளர் நலச்சட்டத் திருத்தங்களும் இதே போலத்தான் தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்கப் போகின்றன. தொழிற்சங்க அங்கீகாரம் என்பது இனிக் கனவாகவே இருக்கும். வேலை நிறுத்த உரிமை ,கூட்டு பேர உரிமை எதுவும் இருக்காது. ஏற்கெனவே இருந்து வரும் சமமற்ற நிலை–அசமத்துவம்– இன்னும் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. இந்தச்சூழலில், நான் நரேந்திர மோடி அரசுக்கு ஒரு தீர்வு யோசனை சொல்ல விரும்புகிறேன். அது கூட, கடந்த காலத்தில் மோடி மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைத் தொகுத்து ஐந்தே பத்திகளில் அடக்கும் வகையில் அமைந்த ஒரு மசோதாதான். அதைச்சட்டமாக நிறைவேற்றினால் நாடே அதை வரவேற்கும். எந்தக்கட்சியும் அதை எதிர்க்காது.எல்லாக் கட்சி எம்.பி.க்களுமே அதற்கு ஆதரவாக நிற்பார்கள்.மோடிஜி இப்போது மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறாரே, அதை அவர் சட்டமாக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்குத் தான் உத்தரவாதம் தருகிறேன் என்கிறார். அதை, எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி சட்டத்தில் ஒரு பாராவாக ஆக்க வேண்டும். அடுத்து, 2011-ஆம் ஆண்டில்,மோடி ஒரு நுகர்வோர் ஆணையக் குழுவின் தலைவராக இருந்து அரசுக்கு அளித்த பரிந்துரையை இன்னொரு பாராவாக எழுத வேண்டும். அது-’ விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே நிகழும் எந்த விற்பனைப் பரிவர்த்தனையும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடவும் குறைவாக எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது’.

2014- 2019 –இந்தக்காலகட்டத்துக்குள் இந்த எம்.எஸ்.பி.பற்றி பி,ஜே.பி தன் நிலைப்பாடுகளை ஆறு தடவை மாற்றி மாற்றி மக்களிடமும், நாடாளுமன்றத்திலும்,உச்சநீதிமன்றத்திலும் கூறியிருக்கிறது.இப்போது பிரதமர் தான் பொறுப்பு எற்றுக்கொண்டு இருக்கிறார். அதை சட்டத்தின் ஒரு பத்தியாக எழுத்து மூலம் தர வேண்டும். இன்னும் 20 மாதங்களில்–அதாவது 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கிவிடப் போவதாகக் கூறி வரும் பிரதமர், அது யாராலும் செய்யச் சாத்தியமில்லாதது என்பதை அறிவார். அவர், இப்போது நம் விவசாயிகள் அனைவருக்கும் இன்றைய தேதியில் உள்ள கடன்களை எல்லாம் ரத்துச்செய்வதாக இன்னொரு பத்தியைச் சட்டத்தில் சேர்த்தால் போதும். ஆக,மொத்தமே நாலு பாராவில் இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றினாலே போதும்,நாடே அவரை ஆதரித்து நிற்கும்.செய்வாரா ?

இன்றைக்கு நாட்டில் ஆழமாகிக் கொண்டே போகும் பிரச்சினை எது ? வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போகும் பிரச்சினை எது ? அசமத்துவம்தான் ! மக்களிடையே நிலவும் சமமற்ற நிலைமை மாற வேண்டும். சாதி,வர்க்க, பாலின,பல்வேறு பகுதிகளிடையே நிலவும் அசமத்துவம்தான் ஆகப்பெரிய பிரச்சினை. இந்த அரங்கில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் பலர் இருக்கிறீர்கள். நமது கடமையை இந்த நெருக்கடியான தருணத்தில் நாம் ஆற்ற வேண்டும். வெறும் 120 கோடீசுவரர்கள் கைகளில் இந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அளவில் –ஜிடிபி யில் – 22 % குவிந்து விடுகிறது. ஆனால், கோடானுகோடி மக்களின் நிலைமை என்ன?

இந்திய விவசாயிகள் இப்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் போர்க்குணம் மிக்கவர்களாக விளங்குகிறார்கள். சமீபத்தில்,மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரில் இருந்து மும்பை வரை 192 கி.மீ.தூரம் வெறுங்கால்களுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்து மும்பைக்குப் போய் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தியதை நாம் கண்டோம். தொடங்கிய இடத்தில் இருநூறு பேர்தான்;அந்த நகர் எல்லையைத் தாண்டுமுன் 4000 பேராக ஆனார்கள்.

மும்பை போய்ச்சேரும் போது நாற்பதாயிரம் பேராக அந்த நடைப்பயணம் ஆனது. அடுத்து, அகில இந்திய அளவில், 21 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்கள் உள்பட நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராடியதை நாம் கண்டோம். என்னால் அவர்கள் உத்வேகம் பெறவில்லை; மாறாக, அவர்களால் நான் உத்வேகம் பெற்றேன். நாம் அனைவரும் அவர்களிடமிருந்தே உத்வேகம் பெறுவோம். அந்த டெல்லிப் போராட்டத்தில் விவசாயிகள் போராடிய போது,மிகவும் புகழ் பெற்ற, உயர் வர்க்க மாணவர்கள் படிக்கும் கல்லூரி ஒன்றின் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த காலம். விவசாயிகள் பல்வேறு ரயில் நிலையங்களில் வந்து இறங்கி ராம்லீலா மைதானத்துக்குப் போக முற்பட்ட போது,அவர்களைக் காலையிலேயே வரவேற்று அழைத்துப் போனவர்கள் அந்த மாணவர்கள்தாம். அது மட்டுமா? அதே மாணவர்கள் தேர்வுகளை எழுதி விட்டு,உடனே கிளம்பிப் போய் விவசாயிகளுக்குப் பகல் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தார்கள்.அந்த உணர்வு மட்டத்திலிருந்து நான் உத்வேகம் அடைந்தேன்.நாம் அனைவருமே அந்த மாணவர்களிடமிருந்து உத்வேகம் அடைய முடியும்.

ஒரு பத்திரிகையாளராக–சீரியஸ் ஜர்னலிஸ்டாக இருந்தவர் பகத்சிங். கே.ஏ.அப்பாஸ் ஒரு புகழ்மிக்க பெரும் எழுத்தாளர்.மாபெரும் கல்வியாளராகவும்,கவிஞராகவும் விளங்கியவர் தாகூர்.இவர்கள் மூவருமே ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அசமத்துவத்துக்கு எதிராகப் போராடியவர்கள். விவசாயிகளுக்கு ,அவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றவர்கள்.அந்தப்பாரம்பரியத்தை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். எந்த இலக்கியம்,கலை மனித மாண்புகளை,சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறதோ அந்த இலக்கியமும்,கலையும்தான் மாபெரும் இலக்கியமாக,கலையாக விளங்க முடியும். னாம் அத்தகைய இலக்கியத்தை,கலையை உருவாக்குவோம் .

அடுத்ததாக,ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை விவசாயிகள் பிரச்சினையை விவாதிப்பதற்காக மட்டுமே கூட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.நாம் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கங்களை நடத்த வேண்டும். இப்போதைய இந்த இரண்டு அல்லது மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்பதால் மட்டும் விவசாயிகளின் நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு விடமுடியாது.நாடு முழுவதும் நிலவும் அசமத்துவம் ஒழிய வேண்டும்.மாபெரும் இலக்கியம் என்பது அசமத்துவத்துக்கு எதிரானதாகவே இருக்கும். அந்த வகையில், போராட்டங்கள் இந்த நாட்டுக்குப் புதிதல்ல;அரசியலும் புதிதல்ல. எனவே, இந்தப்போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் !

♦♦♦

கடந்த ஓராண்டுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் பி. சாய்நாத் ஆற்றிய உரையின் மீள் பதிவை வெளியிடுகிறோம். ஏறக்குறைய ஒரு ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் உறுதியாக இருக்கிறது என்று ஒருபுறம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழும் நாட்டில் அனைத்து மக்களிடமும் ஒரு எழுச்சியை உருவாக்கவில்லை குறிப்பிட்ட பிரிவினரை தாண்டி முன்னேறவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்..
சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்ற வள்ளுவனின் வாக்கு பொய்யாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் உலகமயமாக்கல் சூழலில் அந்தந்த நாட்டில் விளையும் விவசாய பொருட்களை அந்தந்த நாட்டில் பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லாமல் போய்விட்டது வேளாண் வர்த்தகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்றாக விளையக் கூடிய உணவுப் பொருள்களை, உலகில் எந்த மூலையில் விளைவிக்க முடியுமோ, அங்கு உற்பத்தி செய்து கொண்டு வந்து உலகம் முழுவதும் சந்தை படுத்துகின்ற வகையில் நிலைமை மாறிவிட்டது.
விவசாயிகளின் போராட்டத்தை வெறும் மனிதாபிமானம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஆழமான பிரச்சினையைத் தீர்க்க உதவாது. சக மனிதர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று கடந்து போகிறது சமூகம், இதற்காக வெட்கித் தலைகுனிவோம். விவசாயிகளின் போராட்டத்துடன் அனைவரையும் ஒன்றிணைகின்ற வகையில் பல்வேறு பிரச்சார முறைகளை கையாளக் கற்றுக் கொள்வோம். விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் எழுச்சியாக மாற்றுவதற்கு இந்த உரை பயன்படும் என்று நம்புகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here