கும்பமேளா யாருக்கு லாபம்?

தான் புதிதாக இறக்கியுள்ள கெம்பகோலா என்ற பிராண்ட் குளிர்பானத்தை சந்தைப்படுத்துவதற்கு இந்த கும்பமேளாவை ரிலையன்ஸ் கும்பல் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

கும்பமேளாவை தனது வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தும் அம்பானி, அதானி

ந்தியாவில் ஜனவரி 13, 2025 ல் தொடங்கியுள்ள கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர். உலகின் அதிகளவிலான மக்கள் கூடும் விழாவாக இது கருதப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திங்கள்கிழமை தொடங்கியது. அடுத்த ஆறு வாரங்களுக்கு, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி(வேத, புராணங்களில் கூறப்படும் நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது) ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் நீராடுவார்கள்.

“கும்பமேளாவின் போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்குகிறது, ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைய உதவுகிறது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், இந்து மதத்தின் இறுதி இலக்கு முக்தி அடைவதாகும்.” என்று பிபிசி எழுதுகிறது.

பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியின் கீழ் இது போன்ற பார்ப்பன இந்து மதத்தின் பெயரால் தூண்டப்படும் நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்வதும் அதனை தனது ஊடகங்களின் மூலம் அன்றாட பேசு பொருளாக மாற்றி புதிதாக பார்ப்பன (இந்து) மதத்தின் மீது நம்பிக்கையை உருவாக்குவதும் ஒரு திட்டமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

பார்ப்பன (இந்து) மதத்தின் சாரம், “நீ உருவாக்கிய இந்த உலகில் உள்ள பொருட்களின் மீது உரிமை பாராட்டுவது சிற்றின்ப நாட்டம் என்பதும், எப்போதும் உனது மனதும், உடலும் பேரின்பத்தை அடைவதை பற்றி தான் சிந்திக்க வேண்டும்” என்ற போதிக்கிறது.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள், மேல்நிலை வல்லரசுகள் அடைந்த தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அதிநவீன கருவிகள் பயன்பாடு, இயற்கையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது ஆகிய அம்சங்களை போல அடைவதற்கு இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் ஆகிறது என்பதற்கும் இந்த தத்துவத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது என்பதுதான் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

“காண்பதும் மாயை; காணப்படும் பொருளும் மாயை” என்று மாயவாதத்தை முன்னிறுத்தி உபதேசிக்கின்ற பார்ப்பன பண்டாரங்கள், சன்னியாசிகள், நாக சாதுக்கள் உள்ளிட்ட அனைவரும் முன்வைக்கின்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சுமார் 45 கோடி பேர் கும்பமேளாவில் கூட இருக்கிறார்கள்.

சாதுக்கள் என்ற பெயரில் திரிகின்ற கஞ்சா பேர்வழிகள் கார்ப்பரேட் சாமியார்கள் முதல் அன்றாடம் காட்சி ரெக்ரூட் சாமியார்கள் வரை இந்த கும்பமேளாவில் கலந்து கொண்டு கும்மியடிக்க இருக்கிறார்கள் என்பதும் உடல் முழுக்க சாம்பலை பூசிக்கொண்டு அகோரமாக திரிந்துக் கொண்டும் அரை, முழு நிர்வாணமாக வலம் வருவதும் இந்த கும்பமேளாவில் படம் எடுக்கப்பட்டு சமூக ஊடகங்கள் முதல் மைய நீரோட்ட ஊடகங்கள் வரை பரப்பப்படுகிறது.

சென்ற கும்பமேளாவில் கலந்து கொண்ட மக்கள் மூலம் திரட்டப்பட்ட லாபம் சுமார் 1.24 லட்சம் கோடி ரூபாய் என்பதால் இந்த கும்பமேளாவை அந்த அடிப்படையிலேயே கணக்கீடு செய்துள்ளார்கள்.

படிக்க: ♦ மகாகும்பமேளா: காவிகளுடன் கைகோர்க்கும் கார்போரேட் பாசிஸ்டுகள்!

இவர்கள் 5000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கினால் அதன் வருவாய் 2 லட்சம் கோடி என்றும் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் அதன் மூலம் கிடைக்கப் போகும் வருவாய் நான்கு லட்சம் கோடி என்றும், இந்த வருமானமானது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜிடிபி யில் ஒரு சதவீதத்தை உயர்த்தப் போகிறது என்றும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகளை அதாவது மக்கள் இயல்பாக ஏதோ ஒரு காரணத்திற்காக கூடுகின்ற நிகழ்வுகளை தனது சந்தையாக மாற்றுவதற்கு துடித்துக் கொண்டுள்ள கார்ப்பரேட் முதலாளிகள் கடந்த மூன்று மாத காலமாகவே பிரயாக்ராஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை குறி வைத்து விளம்பரங்களை நடத்தி வருகின்றனர்.

படிக்க:  மகா கும்பமேளா: மக்கள் வரிப்பணத்தில் மூடத்தனத்தை வளர்க்கும் பாஜக அரசு!

குறிப்பாக தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவரும் இந்த மிகப்பெரும் மக்கள் கூடுகையை தனது வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் மாயவாதம் பேசுகின்ற சன்னியாசிகளுக்கும், அதையே காசாக்குகின்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உள்ள உறவு.

இந்த ஆண்டு சுமார் 45 கோடிக்கும் அதிகமானவர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு தங்கள் பிராண்டை மக்களிடம் சேர்க்க வேண்டும் என பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான ரிலையன்ஸ் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் எனப்படும் ஆர்பிசிஎல் நிறுவனத்தின் வாயிலாக பிரயாக்ராஜில் கேம்பா ஆசிரமம் என்ற பெயரில் ஒரு பிரத்தியேக இடத்தை அமைத்துள்ளது.

அதுமட்டுமின்றி தான் புதிதாக இறக்கியுள்ள கெம்பகோலா என்ற பிராண்ட் குளிர்பானத்தை சந்தைப்படுத்துவதற்கு இந்த கும்பமேளாவை ரிலையன்ஸ் கும்பல் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் இஸ்கான் நிறுவனத்தோடு இணைந்து கும்பமேளா நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. மேலும் பக்தர்களுக்கு மந்திரங்கள் அடங்கிய ஆர்த்தி சங்கரா என்ற புத்தகத்தின் 1 கோடிக்கும் அதிகமான பிரதிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தனது வர்த்தகத்தை மக்கள் மனதில் புகுத்துவதற்கு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் முயற்சி செய்கிறார்கள்.

இந்த இரு தேசங்கடந்த தரகு முதலாளிகளின் மூலதனத்தின் மீதான பற்றும், அப்பாவி இந்து பக்தர்களின் வீடு பேறு குறித்து புரிந்து கொண்டுள்ள துறவறம் பற்றிய அல்லது பற்றற்று இருப்பது என்பதும் நேர் எதிரானது என்பதை புரிந்து கொண்டால் மட்டும் தான் கும்பமேளாவை பயன்படுத்தி லாபத்தை குவிக்க போகின்ற அயோக்கிய சிகாமணிகளின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here