
போர்ச் சூழலில் உள்ள நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டின் மக்களை உடனே நாடு திரும்புமாறு உலக நாடுகள் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ரஷ்யா உக்ரைன் போரின் போது கூட “ஆபரேஷன் கங்கா” என்ற பெயரில் உக்ரைனில் இருந்த இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதை நாம் கண்டோம்.
ஆனால், இப்பொழுது, பாசிச பாஜக ஆட்சியில் இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது. இந்திய அரசின் துறையான National Skill Development Corporation (NSDC) இஸ்ரேலைச் சேர்ந்த Population, Immigration, and Border Authority (PIBA) உடன் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டு போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டில் வேலை செய்வதற்காக ஆட்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கு ஆள் எடுத்து அனுப்பும் பணியை மேற்கொள்வதற்காக Rozgar Sangam portal என்ற பெயரில் ஒரு தனி அமைப்பை உத்திரபிரதேச மாநில பிஜேபி அரசு உருவாக்கியுள்ளது.
இஸ்ரேலில் வேலை செய்வதற்காக தினம் தோறும் 650 பேர் இந்த அமைப்பில் விண்ணப்பித்த வண்ணம் இருக்கிறார்கள். நவம்பர் 28ஆம் தேதிய கணக்குப் படி 1,069 தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது குறித்தும், இஸ்ரேலின் குடிமக்கள் கூட குண்டு வீச்சில் கொல்லப்படுவது குறித்தும் நன்கு அறிந்துள்ள நிலையில் தான் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலைக்கு செல்கின்றனர்.
படிக்க: இஸ்ரேல்-பாலஸ்தீனப்போர்: இஸ்லாமியர்களைக் குறிவைக்கும் பாசிஸ்டுகள்!
உத்தரப் பிரதேசத்தில் வேலை செய்வதன் மூலமாக தனது குடும்பத்தை பராமரிப்பதற்கு தேவையான அளவு வருமானம் கிடைப்பதில்லை என்பதற்காகவே அபாயகரமான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்வதாக அந்தத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
பிஜேபி -யின் ஆட்சியில் கீழ் தங்களால் வாழவே முடியாது என்ற நிலையில் தான் தொழிலாளர்கள் உயிரைப் பணையம் வைத்து வேலை செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஓடுகின்றனர். இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு உள்நாட்டில் தங்களது ஆட்சியின் கீழ் வேலை கொடுப்பதற்கு வக்கற்ற நிலையில் தான் பாசிச பாஜக உள்ளது.
விசயம் இத்துடன் முடியவில்லை. இஸ்ரேலுக்கு வேலை செய்வதற்கு ஐடிஐ படித்தவர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்றவர்களைத் தான் பாசிச பாஜக தேர்ந்தெடுத்து அனுப்புகிறது; தகவல் தொழில்நுட்பத் துறையை சார்ந்தவர்களையோ உயர் கல்வி கற்றவர்களையோ இப்படி அனுப்பவில்லை என்பதையும் நாம் சேர்த்து பரிசீலிக்க வேண்டும்.
உக்ரைனில் கல்வி கற்க சென்ற மேட்டுக்குடி குலக்கொழுந்துகளை தனி விமானம் வைத்து இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்து வந்த பாசிச பாஜக, அடிமட்டத்தில் உள்ள தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகிறது என்பதிலிருந்து பாஜகவின் வர்க்க பாசம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
படிக்க: யார் வீழ்த்தப்பட வேண்டும்! ஹமாஸா? இஸ்ரேல் ஜியோனிசமா?
இன அழிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு கண்டனங்களை தெரிவிப்பதற்கு பதிலாக, அந்நாட்டுடனான உறவுகளை முறித்துக் கொள்வதன் வாயிலாக போரை நிறுத்துமாறு நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக பாசிச பாஜக தனது நாட்டு மக்களை இஸ்ரேலில் வேலை செய்வதற்காக அனுப்பி வைத்து அந்நாட்டு இனவெறி அரசுக்கு ஆதரவளித்து வருகிறது.
மதவெறியர்களான பாசிச பாஜக -வினர் இஸ்ரேலிய இன வெறியர்களுடன் கைகோர்ப்பதில் ஆச்சரியம் இல்லை தான்.
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire