இப்படி ஒரு பிரதமரை இனி பார்க்கத்தான்  முடியுமா?

வலுவான தலைவராக இருந்தால், அமெரிக்காவால் இந்தியர்கள் அவமானப்படுத்தப் பட்டதற்கு டிரம்பின் முன் குறைந்த பட்சம் தனது அதிருப்தியையாவது வெளிப்படுத்தி இருக்க வேண்டும் அல்லவா?

0
இப்படி ஒரு பிரதமரை இனி பார்க்கத்தான்  முடியுமா?
கிர் தேசிய பூங்காவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் மோடி

குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் தலையில் தொப்பியும், கையில் கேமராவும் வைத்துக் கொண்டு திறந்த ஜீப்பில் இராணுவ உடையில் மோடி பயணிக்கும் காட்சி பாஜகவினருக்கு புல்லரிப்பை கொடுத்திருக்கக் கூடும். ஆனால் இப்படி அவர் வேடமிட்டு வலம் வருவது நமக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது.

மணிப்பூரில் பல மாதங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி கண்ணீர் வடிக்கும் பெண்களின் துயரம் அவரது மனசாட்சியை துளியேனும் உலுக்கியதாகத் தெரியவில்லை. தங்களது வாழ்வையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக போராடிய விவசாயிகளின் பதை பதைப்பு மோடிக்கு எவ்வித கவலையையும் உருவாக்கவில்லை.

தனது கட்சியின் எம்.பி ஒருவனால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் நீதி கேட்டுப் பல வகையில் போராடிய போது, அவர்களது வேதனை மோடிக்கு உரைக்கவே இல்லை. இது போன்ற காட்சிகளை பாராமுகமாய் கடந்து செல்லும் மோடியின் கண்களுக்கு காட்டு விலங்குகளை ரசிப்பதில்தான் ஆர்வமும் ஆனந்தமும் அடங்கியுள்ளது என்றால் இந்த மனிதர் இத்தனை கோடி மக்களின் பிரதமராக இருக்க தகுதியுடையவர்தானா என்றக் கேள்வி எழுகிறது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக நடைபெற்ற விடுதலைப் போராட்ட இயக்கம் இந்தியாவுக்கு ஒரு புகழ்வாய்ந்த மரபை வழங்கியுள்ளது. இம்மரபு இந்திய மக்களிடம் ஜனநாயகம் பற்றிய உணர்வை ஒரளவு உருவாக்கியது.

ஜனநாயக மரபுகளை மொத்தமாய் மீறும் மோடி!

பல பத்தாண்டுகளாக அரசியல் கலாச்சாரமும், பெயரளவு ஜனநாயகமும் படிப்படியாக சீரழிவுக்கு ஆளாகியுள்ளது எனினும் அதன் முக்கியமான மையமே அரிப்புக்கு ஆளாவது இந்த பாசிச கும்பலின் ஆட்சியில் தான். அதனை எப்படி ஏற்க முடியும்? மோடிக்கு முன்பிருந்த பிரதமர்கள் அரசியல் நெருக்கடி காரணமாக மக்கள் குரலுக்கு அவ்வப்போது கவனம் கொடுப்பவர்களாக இருந்தனர்.

ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை அரசியல் அமைப்பு இயந்திரத்தை இவர் அளவுக்கு சீர்குலைக்க யாருமே முயன்றதில்லை. ஓராண்டுக்கு மேலாக ஒரு மாநிலமே பற்றி எரியும் நிலையிலும் எந்தப் பிரதமராவது அங்கு போகாமல் இருப்பதை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? ஆனால் மோடி போகாமல் திமிருடன் திரிகிறார். அதேபோல  தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியில் கடுங்குளிர், மழை, வெயில் அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி நூற்றுக்கணக்கானோர் இறந்த போதும் ஒரு அனுதாப வார்த்தை கூட உதிர்க்காத பிரதமரைத் தான் நாம் கற்பனை செய்ய இயலுமா?

ஆளும் வர்க்கத்தின் அடிவருடிதான் மோடி!

ஒரு பிரதமர் ஷிகர் தவான் எனும் கிரிக்கெட் ஆட்டக்காரருக்கு விரலில் ஏற்பட்ட காயம் சீக்கிரம் ஆற வேண்டும் என டிவீட் செய்ய முடிகிறது. ஆனால் அவரது அமைச்சர் ஒருவரின் மகன் வேண்டுமென்றே காரை ஏற்றி அப்பாவி விவசாயிகளைக் கொன்றது குறித்து கள்ள மவுனம் சாதிப்பது எத்தகைய இழிசெயல் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுதான் பாசிஸ்டுகளின் அறநெறி!

படிக்க:

🔰  வல்லரசு ஜம்பம் எதற்கு மோடி! சுரங்கத்தில் புதைந்தவர்களின் உடலை  மீட்க கூட வக்கில்லை!

🔰  அமெரிக்கக் குடியுரிமை: மோடியை அவமானப்படுத்தும் ‘தேஷ்பக்தாள்கள்!’

கிர் தேசியப் பூங்காவிற்கு செல்லும் முன், கார்ப்பரேட் பெரு முதலாளியும், மோடியின் நண்பருமான முகேஷ் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான வண்டாரா மிருகக்காட்சி சாலையை பார்வையிட்டார் மோடி. இதன் மூலம் அவர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன? கார்ப்பரேட் முதலைகளுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை காட்டிக் கொள்ள விரும்புகிறாரா? அல்லது வனவிலங்கு சாலைகளை அதிகாரம் மிக்க பணக்காரர்கள் பராமரிப்பதை ஊக்குவிக்க முயல்கிறாரா?

இல்லையேல் தன் மீதான எத்தகைய விமர்சனத்திற்கும் பதில் அளிக்காமல் இப்படித்தான் என் இஷ்டப்படி சுற்றித் திரிவேன் என்ற ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறாரா? அன்றாடம் வயிற்றுப் பசி போக்கவே அல்லல் படும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது, பணக்காரர்களுடனும் அதிகாரம் மிக்கவர்களுடனும் நேரத்தைக் கழிப்பதை விட முக்கியமானது என்பதை அவருக்கு யார் எப்படி உணர்த்துவது?

கிரிமினல்களோடு கைகோர்க்கும் பாசிச மோடி!

இளம் பாபா தீரேந்திர சாஸ்திரி என்பவன் கொச்சையாகவும் அருவருக்கத்தக்க வகையிலும், இந்துராஷ்டத்தை வெளிப்படையாக ஆதரித்தும் பேசுபவன். அவனது விழாவில் மோடி கலந்து கொள்கிறார். ஆசாராம் பாபு மற்றும் ராம் ரஹீம் போன்ற கிரிமினல் பாபாக்களுடனும் இவருக்கு தொடர்பு உள்ளது. இவர் சந்திக்கும் நபர்கள் இத்தகைய பாபாக்களாகவோ அல்லது அதானி அம்பானிகளாகவோ இருந்தால், பிரதமர் என்றப் பதவியின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகும் என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு துளியும் கவலையோ, அச்சமோ கிடையாது.

உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாட்டில், ஏழைகள் மலிந்துள்ள நாட்டின் பிரதமர் துளியும் கூச்சமே இல்லாமல் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகளை அணிந்து திரிவதும், ஒரு நாளில் பலமுறை உடையை மாற்றிக் கொள்வதும், விலையுயர்ந்த உணவு வகைகள், குடிநீர், கண்ணாடி மற்றும் பேனாவை பயன்படுத்துவதும், செல்லும் இடமெல்லாம் புகைப்படக் கலைஞரும், வீடியோ கிராபரும் தொடர்ந்து இவரது அசைவுகளைப் பதிவு செய்வதும் எனப் பெரும்பான்மை மக்கள் துயரமான வாழ்க்கையுடன் போராடுகையில் இப்படி ஒரு குரூரமான பிரதமர் நமக்கு வாய்த்திருப்பது வேதனைக்குரிய துயரம்தான்.

விளம்பரப் பிரியன், கபட வேடதாரி மோடி!

மோடி விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சந்தர்ப்பத்திற்கு ஏற்ற உடைகளையும் வேடங்களையும் அதிகம் விரும்பி ஏற்கும் புகழ் விரும்பியாகவும் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் சுயமோகியாகவும் இருக்கிறார்.

ராணுவ வீரர்களை சந்திக்க செல்லும்போது ராணுவ உடையணிந்தும், குகைக்குள் சென்று தியானம் செய்யும் நாடகத்தை அரங்கேற்றம் போது காவி அங்கியிலும் கோயில்களில் பூஜை செய்யும் போது பூசாரியின் அலங்காரத்திலும் தன்னை வெளிக்காட்டுகிறார். தான் செய்யும் அனைத்து காரியங்களிலும் அதீத ஈடுபாடு உடையவன் என்பதை தனது ஆதரவாளர்களுக்கு நம்ப வைக்கவே இத்தகைய நாடகத்தை நடத்துகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

வலிமையான தலைவரா, காமெடி பீஸா?

அகில உலகமே அஞ்சி நடுங்கும் 56 இன்ச் அகன்ற மார்பு கொண்ட வலிமையான தலைவர் என்று சங்கிகள் போற்றுகின்றனர். அப்படி வலுவான தலைவராக இருந்தால், அமெரிக்காவால் இந்தியர்கள் அவமானப்படுத்தப் பட்டதற்கு டிரம்பின் முன் குறைந்த பட்சம் தனது அதிருப்தியையாவது வெளிப்படுத்தி இருக்க வேண்டும் அல்லவா?

ராணுவ உடையணிந்து போஸ் கொடுப்பதால் மட்டும் வலிமையை உணர்த்தி விட முடியுமா என்ன? அது வெறும் வேடம்தான் – வெட்டி பந்தாதான் என்பது மக்களுக்கு புரியாதா? வலிமையான தலைவரை போல உடை அணிவதும், நெஞ்சை நிமிர்த்தி நடப்பதும், ஆனால் நடைமுறையில் கோழையாக பம்முவதும் ஒரு ஏளனமிக்க செயலாகத்தானே கருத முடியும். ஒரு காமெடி பீஸாக மட்டும்தானே இவரை பார்க்க முடியும்.

உண்மையில் வலிமையான தலைமை எனில், சீனாவின் ஊடுருவல்களுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் வெறும் முணுமுணுப்பை கூட காட்டவில்லையே! டிரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டல்களுக்கு எதிராக  பதிலடி கொடுத்திருக்க வேண்டும். பங்குச்சந்தை ஓராண்டிற்குள் 90 லட்சம் கோடிக்கு மேல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர் வீழ்ச்சியில் உள்ளது.

இதையெல்லாம் சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்,  ஊர் சுற்றுவதும், மிருகங்களைப் பார்வையிடுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வுடன் நாடும், மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறித்த அக்கறையும் இன்றி இருந்தால் அதற்கு என்ன பொருள்?

நாட்டில் செயல்படும் அனைத்து தன்னாட்சி நிறுவனங்களையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல், ஊடகங்களை சந்தித்து கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கும் ஜனநாயக பண்பே இல்லாமல், மேடையில் டெலிபிராம்டர் இல்லாமல் அந்த சவடால் பேச்சைக் கூட பேச முடியாமல் திண்டாடும் ஒரு தற்குறித் தலைவரை இப்படியான ஒரு பிரதமரை இனி நாம் பார்க்கத்தான் முடியுமா?

ஊடக பொய் பிரச்சாரங்களுக்கு வலிமை உண்டுதான் எனினும் உண்மைக்கு முன் அது வெகு காலம் நீடித்திருக்க முடியாது. மோடியின் போலி பிம்பம் நொறுங்கி விழும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதை துரிதப்படுத்த தொடர்ந்து அவரது கபட நாடகங்களை அம்பலப் படுத்துவோம்.

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here