இந்தியை திணிக்கும் தேசிய, கல்விக் கொள்கை!
மறுக்கும் தமிழகத்திற்கு கல்வி நிதி மறுப்பு!
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மாநில தன்னாட்சியே ஒரே தீர்வு!
ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரங்களே
உங்கள் பாசிச சர்வாதிகாரத்துக்கு
அடிபணியாது தமிழ்நாடு!
மார்ச் 23 – ஆளுநர் மாளிகை முற்றுகை!
காலை 10 மணிக்கு
கிண்டி, சென்னை.
மாணவர்களே, இளைஞர்களே!
மார்ச் 23 – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பிரிட்டன் காலனியாதிக்க ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்ட நாள்! மாவீரன் பகத்சிங்கும் அவரது தோழர்களும் சாதி, மத பாகுபாடற்ற, ஏற்றத்தாழ்வு இல்லாத சுதந்திர சோசலிச இந்தியாவை தங்கள் லட்சியமாக கொண்டு செயல்பட்டவர்கள்.
அன்று அவர்கள் பிரிட்டன் ஆட்சியாளர்களும், இந்திய தரகு முதலாளிகளும் இணைந்து இந்தியாவை கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது எனப் போராட்டக்களம் புகுந்தார்கள்.
இந்திய விடுதலைக்காக அவர்கள் உயிர்த்தியாகம் செய்து 93 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கும், பல்வேறு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் அடிமை சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்- பாஜக பாசிச கும்பலின் பாசிச பயங்கரவாத ஆட்சியை எதிர்கொண்டுள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ் தங்கள் கனவுத் திட்டமான, பார்ப்பன சாம்ராஜ்யமான இந்து ராஜ்யத்தை நிறுவவும் இந்த நாட்டை மறுகாலனியாக்கவும் கார்ப்பரேட் கொள்ளைக்கு முழுதாக தூக்கிக் கொடுக்கவும் பல்வேறு பொருளாதார திட்டங்களைகொண்டு வருகின்றன.
இதுவரை போராடிப் பெற்ற உரிமைகளை பறித்தும் வருகின்றனர். தொழிலாளர் உரிமை, மாணவர் உரிமை, விவசாயிகளின் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை அனைத்தையும் பறித்து வருகின்றனர்.
இதில் முக்கியமாக தேசிய இனங்களின் வழியில் அமைந்த, மாநில உரிமைகளைப் பறிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள். அதற்கு வடக்கு எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு நடந்ததும், தெற்கு எல்லையில் உள்ள தமிழ்நாட்டுக்கும் நடந்து கொண்டிருப்பதுமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடாரமாக இருந்து வரும் வேளையில் அதனை ‘ஒரே நாடு, ஒரே சந்தை’ என்ற நோக்கத்தில் பாசிச ஒடுக்கு முறையின் கீழ் ஒரே நாடாக உருவாக்கி பல்வேறு தேசிய இனங்களின் கொடுஞ்சிறையாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல். இந்த நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுக்க அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்தி ஒன்றுகுவித்து வருகிறது.
ஒரே நாடு- ஒரே வரி, ஒரே மொழி, ஒரே ஆணையம், ஒரே ரேசன், ஒரே தேர்தல், ஒரே கனிமவளக் கொள்கை, ஒரே கல்விக் கொள்கை என அனைத்தையும் ஒன்றிய அதிகாரத்தின்கீழ் கொண்டு வருவதற்கான திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. சில மாதங்களுக்கு முன் மாநில அரசின் ஒப்புதலை பெறாமலே தமிழ்நாட்டில் வேதாந்தாவுக்கு டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விட்டதும் இப்படிப்பட்ட ஒரே நாடு, ஒரே கனிமவள கொள்கையின் அடிப்படையில் தான்.
இவற்றை ஏற்காத மாநிலங்களுக்கு பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கிறது பாசிச மோடி அரசு. கவர்னர் மூலம் மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை கிடப்பில் போடுவது, துணைவேந்தர் நியமனத்தில் தலையிட்டு மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை சீர்குலைப்பது என்று பலவாறாக இது தொடர்கிறது. குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர UGC யின் புதிய வரைவு விதிகளை கொண்டு வருவது, தமிழகத்தில் 6 பல்கலை கழகங்களை துணைவேந்தர் நியமிக்காமல் சீரழிப்பது, தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி பறிப்பு, நீட், கியூட், கேட் போன்ற பொது நுழைவு தேர்வுகள் திணிப்பது, மேலும் பள்ளி படிப்பில் இருந்து ஏழை மாணவர்களை வெளியேற்றும் வகையில் 3,5,8 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என தேசிய கல்வி கொள்கையை திணிப்பது, ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களை புறக்கணிப்பது, கல்வி நிலையங்களில் சாதி மத மோதல்களை ஏற்படுத்துவது என தமிழகத்தின் மீது பாசிச மோடி அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது.
படிக்க:
🔰 தமிழகத்தின் கல்விக் கட்டமைப்பைத் தகர்க்கும் பாசிச மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
🔰 கல்வி நிதியில் கை வைக்கும் சங்கி தர்மேந்திர பிரதான்!
தற்போது தேசிய கல்விக் கொள்கை மற்றும் இந்தித் திணிப்பை ஏற்காத தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ரூ2152 கோடி நிதியைத் தர முடியாது என மிரட்டுகின்றனர். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாடு தரும் 1 ரூபாய் வரி பணத்தில் 29 பைசாவையே ஒன்றிய அரசு திருப்பித் தரும் நிலையில் இது மாநிலத்தின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டும் செயலாகும். இது கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் சண்டையல்ல. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி தொடர்பான பிரச்சினை.
மாநிலங்களின் உரிமை என்பதை அதன் ஆட்சியாளர்களுக்கான உரிமை என்பதாக புரிந்து கொள்ள கூடாது. மாநிலங்கள் என்பவை பெரும்பான்மையாக தனித்தனி தேசிய இனங்களைப் பிரநிதிபடுத்தக்கூடியவை. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களும் பல்வேறு வகையான நிலப்பரப்பிலும், சமூக வளர்ச்சி அளவிலும், கல்வி, சுகாதார, தொழில் வளர்ச்சி அளவிலும் இருப்பவை. மொழி, பண்பாட்டிலும், வரலாற்று உணர்விலும் வேறுபட்டு இருப்பவை.இவற்றுக்கெல்லாம் ஒரே வகையிலான திட்டத்தை அமல்படுத்த முயல்வதே பாசிசமாகும்.
மாநிலங்களின் உரிமையை தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பாசிச முறையில் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், மாநில தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் போராடுவதன் மூலமே கல்வி, சுகாதாரம், நிதி, தொழில் போன்றவற்றில் அந்தந்த தேசிய இனங்களின் வாழ்நிலைக்கேற்ப முடிவுகள் எடுக்க முடியும்.
அத்தகைய நிலைமை தற்போதுள்ள கார்ப்பரேட்- காவிப் பாசிச மயமான அரசு கட்டமைப்பை வைத்துக் கொண்டு சாத்தியமில்லை. ஆர்.எஸ்.எஸ்- பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறிவதோடு ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதுமே தீர்வாகும்.
அதற்கான போராட்டத்தில் குறைந்தபட்ச ஜனநாயக திட்டத்தின் அடிப்படையாக பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கட்டியமைப்பதில் இருந்து தொடங்குவோம்..
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. 9500792976.