
கடந்த 10-ஆம் தேதியன்று மும்மொழி கொள்கை குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கொடுத்த பதிலடியாலும், நாடுமுழுவதும் எழுந்த எதிர்ப்பாலும் அம்பலப்பட்ட நிலையில் அடுத்த நாளே தனது வாய்க்கொழுப்பிற்காக 100 முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மண்டியிட்டு தான் ஒரு சாவர்க்கரின் வாரிசு என்பதை நிரூபித்தார்.
தனது கூட்டாளியை மண்டியிடவைத்ததை பொறுத்துக்கொள்ளாத ஊறுகாய் மாமி “தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது, தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை” என்று தமிழ் மொழியைப் பற்றி பெரியார் சொன்னதை வெட்டி ஒட்டி ஆவேசப்பட்டார். இதெல்லாம் தெரிந்ததுதான். ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தராமல் வேறு மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்புவதும் GST நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டுவதும், பேரிடர் நிவாரணத் தொகையைத் தராமல் துரோகமிழைப்பதும், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டு அடிமைசாசனத்தில் கையெழுத்துப் போட்டால்தான் நிதி வழங்கமுடியும் என்று பிளாக்மெயில் செய்வதும், இன்னும் பிற வழிகளிலும் தமிழகத்தின் மீதும், தமிழர்களின் மீதும் காவி பாசிஸ்டுகள் ஏன் இவ்வளவு வன்மத்தை காட்டுகிறார்கள்?

ஏனென்றால், உலகின் மூத்த மொழி மட்டுமல்லாது இன்றுவரை உயிர்ப்புடனும், இலக்கண இலக்கிய வளமுடனும் தமிழ் இருப்பதாலும், அம்மொழியைப் பேசக்கூடிய தமிழர்களின் தொன்மையான சிறப்பான நாகரிகமும், இருமொழிக் கொள்கையின் மூலம் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சியும், ஒன்றிய அரசின் பல்வேறு அளவீடுகளில் தமிழகம் முன்னணியில் இருப்பதாலும், திராவிட இயக்கத்தின் மூலம் பார்ப்பனீயத்தை ஓட ஓட விரட்டியடித்ததாலும் ஏற்பட்ட வன்மமே காரணமாகும். அதுமட்டுமில்லாது ஒன்றியத்திலிருந்து புகுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களையும், சட்டங்களையும், கொள்கைகளையும் மற்ற மாநிலங்களெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு, எந்த கேள்வியும் இல்லாமல் அவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகின்றன. ஆனால் தமிழகம் மட்டுமே அவற்றை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து பகுப்பாய்வு செய்து அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகளை அம்பலப்படுத்துவதும் மிக முக்கிய காரணமாகும்.
படிக்க:
அனைத்துக்கும் மேலாக கோவில்களும், பக்தர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும் பாஜக-வை நோட்டாவுடன் போட்டியிட வைத்திருப்பதும், என்ன முயற்சித்தாலும் கடந்த காலங்களை போன்று கலவரம் நடத்த முடியாததாலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் காவி பாசிஸ்டுகள் உள்ளுக்குள் மருகுகிறார்கள். காலம்காலமாகத் தொடரும் அந்த வன்மம் காரணமாகத்தான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி பிறகு வாங்கிக்கட்டிக்கொள்கிறார்கள். காங்கிரஸ் காலத்தில் தொடங்கிய இந்தப் போக்கு ஒன்றியத்தில் காவி பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தீவிரமடைந்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதும், தமிழ் மக்களின் தேவைகளை புறக்கணிப்பதும், தமிழர்களை, தமிழ் மொழியை அவமதித்து சூடுபட்டுக்கொண்ட காவி பாசிஸ்டுகள் இனிமேலாவது பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால்,
“….சத்தியமேவ ஜெயதே என்ற உபநிடத முழக்கம் தான் நீங்கள் அரசு முத்திரைகளில் பயன்படுத்தும் வாய்மையே வெல்லும் என்கிற வாசகம்!!!
உபநிடதம் ஹிந்துத்துவா இல்லையா??
அதை இனிமேல் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்ல உங்களால் முடியுமா?
சிங்கங்களை கொண்ட அரச முத்திரை என்பது அசோகரின் சின்னம் என்பது உங்களுக்கு தெரியுமா?
நம் தேசிய கீதம் ஜன கன மன வங்க மொழியில் பாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?
அது தமிழ் இல்லை என்பதால் உங்கள் திமுக அரசாங்கம் தேசிய கீதத்தை புறக்கணிக்க முடியுமா??”
என்று சவால் விட்டு பாஜக-வின் இராம.ஸ்ரீநிவாசன் பதிவிட்டுள்ளார். அதை அப்படியே செய்ய வைத்துவிடாதீர்கள் பாசிஸ்டுகளே. செம்மொழியாம் தமிழ் மொழியைப் போலவே தனித்தியங்கும் தன்மையுடையது தமிழ்நாடும். பல பொருளாதார அறிஞர்களும் சொல்வதுபோல தமிழகத்தின் வளர்ச்சி ஏற்கனவே வளர்ச்சிபெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. எனவே வேற்றுமையில் ஒற்றுமை என்று ஒரு துணைக்கண்டமாக விளங்கும் இந்தியாவை சிதைக்க சதிசெய்யும் காவி பாசிஸ்டுகளுக்கு உலகெங்குமுள்ள தமிழர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதுவே. அதன் ஒரு சிறு மாதிரிதான் ரூபாயின் இலச்சினையான தேவநாகரி எழுத்துக்குப் பதிலாக “ரூ” என்ற தமிழ் எழுத்தைப் பயன்படுத்தியது.
– ஜூலியஸ்
கார்ப்பரேட்-காவிப் பாசிஸ்ட்டுகளுக்கு செம்மையான செருப்படி கொடுத்துள்ள கட்டுரையாளர் ஜூலியஸ் அவர்களுக்குப்
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!