தெலுங்கானாவில் உள்ள நாகல்கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலத்தில் தோண்டப்பட்டு வரும் சுரங்கத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்துக்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இது ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (எஸ்எல்பிசி) என அழைக்கப்படுகிறது. இப்பணியில் 42 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகர் கர்னூல் மாவட்டம், தோமலபெண்டா 14-வது கி.மீ. அருகே சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தான் விபத்தும் நடந்துள்ளது.
அனைத்தும் தனியாருக்கு! அகால மரணம் உழைப்பாளிக்கு!
42 கிலோமீட்டர் தூரம் தோண்ட இலக்கு வைத்து வேலைகள் முன்னெடுக்கப்பட்டது. 14 கிலோமீட்டர் தூரம் பாறைகளை குடைந்து தோண்டப்பட்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பொறியாளர்கள் இரண்டு ஓட்டுநர்கள் நான்கு தொழிலாளர்கள் என மொத்தம் எட்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக அரசு அறிவித்தது.
சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் என அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு டெண்டர் விடப்பட்டு கொழுத்த லாபத்துடன் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏற்கனவே சில்க்யாரா சுரங்கமும் அப்படி தனியாருக்கு விடப்பட்டு தோண்டப்படும் போதுதான் விபத்தில் சிக்கியது. தற்போது தெலுங்கானா, ஸ்ரீசைலத்தில் எந்த நிறுவனத்தின் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டது என்ற விவரம் இதுவரை மீடியாவில் வெளிவரவில்லை. விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார் என்பதும் கூட விவாத பொருளாக மாறவில்லை.
படிக்க:
🔰 41 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு! மோடியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக எலி வளை சுரங்க தொழிலாளர்கள்!
🔰 41 உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கிய நவயுகா இஞ்சினியரிங் கம்பெனி!
கவைக்கு உதவாத மீட்பு படைகள்!
சிங்கரேணியைச் சேர்ந்த சுரங்க நிபுணர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), இந்திய ராணுவம் மற்றும் பிற நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு முயற்சி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஆரம்பத்தில், நாங்கள் 20 பேரை பணியில் அமர்த்தினோம், நேற்றும் இன்றும் 200 பேரை பணியில் அமர்த்த உள்ளோம்” என்று கூட மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் நம்பிக்கையூட்டி வந்தனர்.
இதுவரை அரசு மற்றும் அதிகாரிகளின் தரப்பில் தரப்பட்ட அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக தற்போதைய நிலை உள்ளது.
வல்லரசு இந்தியாவின் முகத்தில் உமிழும் மக்கள்!
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் 9 நாட்களையும் கடந்துவிட்ட நிலையில் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என டிசம்பர் 28 இல் அறிவித்தனர்.
உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்களின் உடலையாவது மீட்பார்கள் என்று உறவினர்களும், சக தொழிலாளர்கள் காத்துக் கிடந்தனர். அதுவும் சாத்தியமில்லை என கைவிரித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. எங்கே போனார் 56 இன்ச் பிரதமர்?
மோப்ப நாய்கள் உதவாத நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் விஞ்ஞானிகளை உதவிக்கு அழைத்து தரையை ஊடுருவும் ரேடாரின் உதவியுடன் கண்டறியும் முயற்சி தொடர்கிறது. இவர்கள் முதலில் கண்டுபிடித்து சொன்ன இடத்தில் தோண்டியும் இயந்திரங்களைத் தவிர ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் வேறு இடங்களில் இருக்கிறார்களா என தேட முயற்சிப்பதாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்னர் உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களை உதவிக்கு அழைத்து கொலைப்பழியில் இருந்து தப்பித்துக்கொண்ட மோடி அரசு தற்போது ரோபோக்களை மீட்பு பணியில் ஈடுபடுத்தவும் ஆலோசனை செய்வதாக செய்திகள் கசிய விடப்படுகின்றன.
“செய்நன்றி கொன்ற” காவிகள்!
காரியம் முடிந்தவுடன் கை கழுவி விடும் காவி பாசிஸ்டுகள் “செய்நன்றி” கொன்றார்கள். தமக்கு உதவிய எலிவளை சுரங்க தொழிலாளியின் வீட்டை டெல்லியின் புறநகரில் இடித்து தள்ளியதையும், அவர்கள் நடுத்தெருவில் நின்று கதறியதையும் யும் கூட நாடு பார்த்தது.
இம்முறை மீண்டும் தெலுங்கானாவில் உள்ள மீட்பு பணிகளில் எந்த நம்பிக்கையில் அவர்கள் இறங்குவார்கள்? ஒரு முறை குடைந்து உள்ளே சென்று விட்டு நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையென திரும்பியும் விட்டனர்.
நரபலிக்கு தீர்வுதான் என்ன?
விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது என தெரிந்து துணிந்து தான் கால் வயிற்று கஞ்சியாவது குடிக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் சுரங்கப் பணிகளில் இறங்குகிறார்கள். அடுக்கு மாடி கட்டடங்களுக்கான அஸ்திவாரம் தோண்டும் வேலைகளிலும் இறங்குகிறார்கள். மேம்பாலங்களை கட்டுவதற்காக பள்ளம் தோண்டுவதிலும் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் திட்டமிட்டு மண் பரிசோதனை உள்ளிட்டவற்றை முறையாக செய்ய வேண்டிய அதிகாரிகள் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கண்களை மூடி கொள்கின்றனர். உழைக்கும் மக்களின் உயிரை தமது கூந்தலுக்கு சமமாகத்தான் அதிகார வர்க்கமும் கார்ப்பரேட்டுகளும் மதிக்கின்றனர்.
மலையில் சுரங்கம் தூண்டும்போது மண் சரிய காரணம் எது? தவறு எங்கு உள்ளது? இத்தகைய கேள்விகளை கார்ப்பரேட் நல அரசு எப்போதும் கேட்பதே இல்லை. கார்ப்பரேட்டுகளின் பிடியில் உள்ள மீடியாக்களும் கண்டு கொள்வதில்லை.
அரசுத் துறைகளை சரி கட்டி விட்ட கார்ப்பரேட்டுகள் லாப வெறிகொண்டு வேலைகளை தமது விருப்பத்தின்படி முன்னெடுப்பதால் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. தொழிலாளர்களும் புதைந்து கொண்டே உள்ளனர்.
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்து கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தூக்கியெறிவோம். ஜனநாயக கூட்டரசை நிறுவ ஒன்றிணைவோம்.
- இளமாறன்.