மக்களை ஆட்டுவிக்கும் “மஞ்சள் பிசாசு” ஒழியப் போவது எப்போது?

உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப்படி, 2023இல் 761 டன் தங்கம் விற்பனையானது. 2024இல் இது 802.8 டன்னாக உயர்ந்தது. அதேபோல, கடந்த இரு ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வதும் இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது.

0
மக்களை ஆட்டுவிக்கும் “மஞ்சள் பிசாசு” ஒழியப் போவது எப்போது?
2025ஆம் ஆண்டில் இந்தியாவில் 700 முதல் 800 டன் தங்கம் விற்பனையாகும் என உலக தங்க கவுன்சில் கணித்திருக்கிறது.

“மஞ்சள் பிசாசு தன்னுடைய முகத்தை மாற்றிக் கொள்ள முடியும். அது முன்னேற்றம், கடன், வசதி, தொழில்நுட்பம் மற்றும் கலை என்ற கௌரவமான முகமூடிக்கு பின்னால் மறைந்து கொள்கிறது. முதலாளித்துவம் நீடிக்கின்ற வரை மஞ்சள் பிசாசும் உயிரோடு இருக்கும். முன்பிருந்ததைப் போலவே அது மக்களுடைய மனங்களில் முதலாளித்துவ நாகரிகத்தின், பண நாகரிகத்தின் சின்னமாக இருக்கிறது. அதுவும் தகுந்த காரணங்களோடு தான்.”என்று மஞ்சள் பிசாசின் முகத்திரையை கிழித்தெறிகிறார் பேராசிரியர் அனிக்கின்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கூறுகளின் படி ஒரு நாட்டில் புழங்குகின்ற பணத்தின் மதிப்புக்கு ஏற்ப அதற்கு சமமான அளவு தங்க கட்டிகள் கையிருப்பாக வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று முன்வைக்கின்றனர்.

பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை, கள்ளப் பணத்தை ஒழிக்க போகிறோம் என்று மிகப்பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு இழப்பு என்ற நடவடிக்கை சந்தையில் அதாவது மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக அறிவித்துக் கொண்டது.

ஆனால் ரிசர்வ் வங்கியில் இருந்து புழக்கத்தில் விடப்பட்ட பணத்தை விட அதிகமான தொகை வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை அம்பலமானது. அதனால் இது கமுக்கமாக அமுக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்ற அடிப்படையில் ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ள தொகைக்கு நிகராக தங்க கையிருப்பு இருக்கின்றதா இல்லையா என்பதை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள முடியாது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானது என்பது மட்டுமின்றி உத்தரவாதமானது என்ற கருத்து நடுத்தர பணக்காரர்கள் மத்தியில் நிலவுகின்றது என்ற போதிலும் சாதாரண உழைப்பாளி மக்கள் மத்தியிலும் தங்கத்தில் முதலீடு செய்வது அதாவது திருமணம் மற்றும் முக்கியமான நாட்களில் தங்கத்தை வாங்குவது என்பது ஒரு போக்காகவே மாறியுள்ளது.

“இந்தியாவில் உள்ள மக்கள் இடுப்பு கயிற்றின் கீழ் ஒட்டு துணி கட்டி இருந்தாலும் கூட, கையில் வளையல் போடுவதற்கோ அல்லது காதில் கடுக்கன் போடுவதற்கோ மூக்கு குத்தி கொள்வதற்கோ தயங்குவதில்லை. அதாவது இந்தியர்கள் ஆபரணங்களின் மீது விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர்” என்று இந்தியாவைப் பற்றி முன் வைத்தார் காரல் மார்க்ஸ்.

ஒரு ஆபரணம் என்ற முறையில் குறைந்த மதிப்பு கொண்ட உலோகங்களில் தயாரிக்கப்பட்ட ஆபரணங்களை பயன்படுத்துவது என்ற ஆரம்ப கால பழக்க வழக்கங்கள் படிப்படியாக தங்கத்தில் ஆபரணங்களை செய்து அணிந்து கொள்வது என்பது அந்தஸ்தின், கௌரவத்தின் அடையாளமாக தங்கம் மாற்றப்பட்டுள்ளது என்பது புதிய நிலைமையாக உருவாகியுள்ளது.

இந்தியாவில் அதிக படிப்பறிவு மிக்க மாநிலம் என்று பீற்றிக் கொள்ளப்படும் கேரளாவில் திருமணங்கள் தங்கத்தினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பது சமீப ஆண்டுகளில் அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளது. குறைந்தபட்சம் 100 பவுன் முதல் அதிகபட்சம் அளவிட முடியாத அளவிற்கு தங்கத்தை மாப்பிள்ளைக்கு கொட்டிக் கொடுத்து சந்தையில் விலைக்கு வாங்குகின்றனர் மணமகளின் பெற்றோர்.

திருமண அந்தஸ்தையும், வாழ்க்கைக்கான அந்தஸ்தையும் தீர்மானிப்பதில் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கருதுகின்றனர் கேரளாவில் உள்ள ‘படித்த மக்கள்’. இதுதான் பிற மாநிலங்களிலும் உள்ள மக்களின் மனநிலை.

தங்கத்தின் மீதான ஆசையும், கவர்ச்சியும் தொடர்ச்சியாக தங்க நகை வியாபாரிகளான பகல் கொள்ளையர்களினால் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக அட்சய திருதியை போன்ற நாட்களில் தங்கம் வாங்குவது மேலும் மேலும் பெருகச் செய்யும் என்று பிற்போக்குத்தனமான மூட நம்பிக்கைகள் மூலமாக தங்கத்தின் விற்பனையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கையில் தனது தேவைக்கு அதிகமாக பணத்தை வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் நடுத்தர, பணக்கார வர்க்கத்தின் முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்ற கேள்வியும் இருக்கிறது.

“நிரந்தர வைப்புத் தொகை, பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் என முதலீட்டாளர்கள் முன்பாகப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் மிகச் சிறந்த முதலீடுகள் என எடுத்துக் கொண்டாலும் 10-12 சதவிகித வருவாயே கிடைக்கும் என்ற நிலையில், தங்கம் 19 சதவிகித வளர்ச்சியைக் கொடுக்கும் என்கிறது தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி முன் வைக்கப்படுகின்ற ஒரு கணிப்பு.

படிக்க: 

🔰 அட்சய திருதியை தங்க விற்பனை அதிகரிப்பு! ஆணாதிக்க சமூகத்தின் அசிங்கம்!

🔰 கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் ! பாகம் 1 – நெஞ்சை உருக்கும் சுரங்க வாழ்க்கை! மீள்பதிவு

“எல்லா நாணயங்களுக்கும் எதிராக நிலையாக இருக்கக்கூடியது தங்கம் மட்டும்தான். ஒருவர் தனது முதலீட்டில் குறிப்பிட்ட அளவை தங்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன்” என்கிறார் முதலாளித்துவ பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

தங்கத்தின் விலை பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் விற்பனையாகும் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலர் மாற்று விகிதம், திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பது, சர்வதேச சந்தைகளில் விலை உயர்வு, அரசியல் காரணங்கள் ஆகிய காரணங்களாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அது எட்டு கிராமுக்கு ரூபாய் ஒரு லட்சம் என்ற அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இன்றைய நிலவரப்படி தங்கம் எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் விலை சுமார் 72 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. உலகில் தனிநபர்கள் தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் 700 முதல் 800 டன் தங்கம் விற்பனையாகும் என உலக தங்க கவுன்சில் கணித்திருக்கிறது.

உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப்படி, 2023இல் 761 டன் தங்கம் விற்பனையானது. 2024இல் இது 802.8 டன்னாக உயர்ந்தது. அதேபோல, கடந்த இரு ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வதும் இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது. 2023இல் 185.2 டன் தங்க மதிப்பிற்கு முதலீடு செய்யப்பட்டது. 2024இல் இது 239.4 டன் தங்கமாக உயர்ந்தது.

இந்த தங்கத்திற்கு மஞ்சள் பிசாசு என்ற பெயரை முன் வைத்தார் மக்கள் எழுத்தாளரான தோழர் மாக்சிம் கார்க்கி. முதலாளித்துவ பொருளாதாரத்தை பற்றி குறிப்பிடுவதற்காக மட்டுமல்ல பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையையும் சூறையாடுகின்ற கொடூரமான உலோகம் என்ற முறையிலும் இந்த வார்த்தையை அவர் பிரயோகித்துள்ளார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தங்கத்தை அடிப்படையாக வைத்து அதாவது மஞ்சள் பிசாசை முன்னிறுத்தி கட்டமைக்கப்படுகின்ற முதலாளித்துவ பொருளாதரத்தை முற்றாக குழி தோண்டி புதைக்கும் போது மட்டும் தான் தங்கத்தை மதிப்பிழக்கச் செய்ய முடியும் என்பது மட்டுமின்றி மஞ்சள் பிசாசின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டுள்ள கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களை மீட்கவும் முடியும்.

கணேசன்.

நன்றி:புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here