கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், அதற்கு முன்பும் பின்பும் மகாராஷ்டிரா, ம.பி., அரியானா உள்ளிட்ட பல மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் EVM மோசடி வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி பாசிச பாஜக தில்லுமுல்லு மோசடிகள் மூலம் வெற்றியை குறுக்கு வழிகளில் பறித்துக்கொண்டது பற்றியும், இதற்கு தேர்தல் ஆணையம், நீதித்துறை முதலானவை பக்கபலமாக இருந்தது பற்றியும், எதிர்க்கட்சிகளை ஒடுக்க ED, IT, CBI, IAS, IPS, Military, All Police Forces இன்னபிற அனைத்துத் துறைகளையும் பாசிசமயமாக்கிக் கொண்டு மதவாத ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை மோடி – அமித்ஷா கும்பல் இட்டுச் செல்வது குறித்தும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி கட்டுரைகள் பல இதே மக்கள் அதிகாரம் இணையதளத்தில் யாம் வெளியிட்டு இருக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தை தேர்வு செய்யும் குழுவில் ஏற்கனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒருவராக இருந்தார். பின்பு மோடி பிரதமரான பின் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பிரதமர், (உச்ச நீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக) உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் – இந்தக் குழுவே தேர்தல் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றன. ஆக, பாஜக சார்புடைய இருவர் பெரும்பான்மை பெறுவதால் பாஜக-வால் முன்மொழிவு பெற்றவர்களே தேர்தல் ஆணையாளர்களாக(அதாவது சங்கிகளே) நியமிக்கப்படும் அவலம் ஏற்பட்டது.
இந்த அவலத்தைப் போக்கவும், EVM வாக்கு இயந்திர தில்லுமுல்லு மோசடிகளைக் களைய வாக்குச்சீட்டு முறையிலான தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை எதிர்க்கும் அனைத்து ஓட்டு கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், இடதுசாரி – புரட்சிகர இயக்கங்களும் மக்களை அணி திரட்டி வீதியில் இறங்கிப் போராடினால் ஒழிய இந்தக் காவிக் கும்பலை வீழ்த்துவது மிகக் கடினம் என்பதாகவும் ஏற்கனவே எமது கட்டுரைகளில் வெளிப்படுத்தி இருக்கிறோம். பல்வேறு பத்திரிக்கையாளர்களும் அம்பலப்படுத்தி இருக்கின்றனர்.
தற்போது தான் ராகுலின் கண்கள் விசாலமாகத் திறந்துள்ளன!
தற்போது இப்பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமது எக்ஸ் தளப் பிரிவில் “பீகாரில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் பாஜக, மேட்ச் பிக்சிங் செய்ய திட்டமிட்டுள்ளது” என்றும், “தேர்தலை எப்படி திருடுவது? 2024ல் மகாராஷ்டிராவில் பேரவைத் தேர்தல்கள் ஜனநாயகத்தை மோசடி செய்வதற்கான ஒரு திட்டம்” – என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
How to steal an election?
Maharashtra assembly elections in 2024 were a blueprint for rigging democracy.
My article shows how this happened, step by step:
Step 1: Rig the panel for appointing the Election Commission
Step 2: Add fake voters to the roll
Step 3: Inflate voter… pic.twitter.com/ntCwtPVXTu— Rahul Gandhi (@RahulGandhi) June 7, 2025
அத்துடன் “ஜனநாயகத்தில் முறைகேடு செய்வதற்கான வரைபடமாக மகாராஷ்டிரா பேரவை தேர்தல் அமைந்து போய்விட்டது. தேர்தல் முறைகேடுகளை எவ்வாறு செய்வது?
- தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவை கையகப்படுத்துவது.
- போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க வேண்டும்
- எங்கெல்லாம் பாஜக வெற்றி பெற வேண்டுமோ அங்கெல்லாம் போலி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
- ஆதாரங்கள் அனைத்தையும் மறைக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் பாஜக ஏன் இவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை புரிந்து கொள்வது கடினமானது அல்ல; ஆனால் மோசடி என்பது மேட்ச் பிக்சிங் போன்றது. ஏமாற்றுபவர்கள் விளையாட்டில் வெற்றி பெறலாம்; ஆனால் அது அமைப்புகளை சேதப்படுத்தும். பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கும்.
சம்பந்தப்பட்ட அனைத்து இந்தியர்களும் ஆதாரங்களை பார்க்க வேண்டும். ஏனென்றால் மகாராஷ்டிரா பேரவை தேர்தலில் நடந்த மேட்ச் பிக்சிங், அடுத்து பீகார் பேரவை தேர்தலிலும் நடக்கும். அதேபோல் பாஜக தோற்கும் மாநிலங்களிலும் (தமிழ்நாடு, கேரளா, மே.வ., பஞ்சாப் இன்ன பிற என எடுத்துக் கொள்வோமாக) மேட்ச் பிக்சிங் நடக்கும். தேர்தலில் மேட்ச் பிக்சிங் என்பது ஜனநாயகத்துக்கு தரும் விஷம்.”
– என்பதாக ராகுல் காந்தி கடுமையாக மோடி அரசின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் கடும் குற்றம் சுமத்தியுள்ளார். இது மறுக்க முடியாத உண்மை தான்.
‘யோக்கியவான்’ தேர்தல் ஆணையம் மழுப்புவது என்ன?
ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், “மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகும். இது போன்ற நடவடிக்கைகள் சட்டத்தை முழுமையாக புறக்கணிப்பதை மட்டும் அல்லாமல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் நேர்மையை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகும். மேலும் தேர்தலின் போது அயராது வெளிப்படையாக பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகளின் மன உறுதியை குலைக்கும் வகையில் உள்ளது. வாக்காளர்களின் எந்த ஒரு சாதகமற்ற தீர்ப்புக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் சமரசம் செய்துள்ளது என்று கூறி அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது” என்று தேர்தல் ஆணையத்தின் எந்த ஒரு அதிகாரியின் கையொப்பமின்றி பொத்தாம் பொதுவாக தேர்தல் ஆணைய அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தியின் பதிலடி!
மேற்கண்ட தேர்தல் ஆணையத்தின் மலுப்பலுக்கு ராகுல் கீழ்க்கண்டவாறு பதிலடி கொடுத்துள்ளார்.
“அன்புள்ள தேர்தல் ஆணையமே, நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. கையொப்பமிடாத, தவிர்த்து செல்லும் குறிப்புகளை வெளியிடுவது தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வழி அல்ல; உங்களிடம் மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து அதை நிரூபிக்க வேண்டும். மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான சமீபத்திய தேர்தலுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுதல் மற்றும் மஹாராஷ்டிரா வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிடுதல் வேண்டும். இதைத் தவிர்ப்பது உங்கள் நம்பகத் தன்மையைப் பாதுகாக்காது. உண்மையைச் சொல்வதே பாதுகாக்கும்”- என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தியின் நியாயபூர்வமான கேள்விகளுக்கும், அதற்கு முன்னர் பல்வேறு ஜனநாயக – புரட்சிகர சக்திகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வக்கற்ற மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முதலானோர் வானத்துக்கும் பூமிக்குமாக தேர்தல் ஆணையத்தை காக்கும் முகத்தான், தங்களின் தேர்தல் தில்லு முல்லு மோசடிகளை மறைக்கும் முகத்தான் குதியோ குதி என்று குதித்துத் தள்ளுகின்றனர்.
மிதப்பில் இருக்கின்றார்களா ஓட்டு கட்சி எதிர்க்கட்சியினர்?
பாஜகவை வீழ்த்தாமல் விடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும்…
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியாக இருக்கட்டும்; அகில இந்திய அளவில் செயல்படும் ‘இந்தியா கூட்டணி’யாக இருக்கட்டும்; தனி இயக்கங்களாக செயல்படும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உட்பட அனைத்து கட்சிகளுமே பிரச்சனைகளின் வீரியத்தை உணர்ந்து அதற்குத் தகுந்த முழக்கங்களை முன்வைப்பதாக அதற்காக குரல் எழுப்பி வீதியில் இறங்கி போராடும் நிலையில் இல்லாமல் இருக்கின்றனர்.
படிக்க:
🔰 டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!
🔰 பாஜகவுக்கு 8 ஓட்டு! அம்மணமாக நிற்கும் தேர்தல் ஆணையம்!
குறிப்பாக EVM வாக்கு இயந்திரத்தை அப்புறப்படுத்தி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தக் கோருவது; சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை உருவாக்க குறைந்தபட்சம் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி-இவர்களைக் கொண்ட குழுவினை அமைக்கக் கோருவது; தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடியில் தேர்தல் முடிந்தபின் படிவம் 17 படி வாக்குச் சாவடியின் மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? பதிவான வாக்குகள் எவ்வளவு? என்ற கணக்கு வாக்குச்சாவடி அலுவலரால் பூர்த்தி செய்யப்பட்டு அனைத்துக் கட்சி தேர்தல் முகவர்களுக்கும் வழங்கப்படுகிறதா? அதன்படி வாக்குகள் எண்ணுகின்ற பொழுது சரியாக இருக்கின்றதா? என்பதனை சோதிக்க திட்டமிட வேண்டும்; சட்டமன்றத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ-பதியப்பட்ட வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் இருக்கவே கூடாது; வாக்குகள் கூடினாலோ, குறைந்தாலோ அங்கே மோசடி நடந்திருக்கிறது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்; அரியானா, மகாராஷ்டிரா மாநில தேர்தல்களில் எண்ணற்ற மோசடிகள் நடந்ததை ஆதாரப்பூர்வமாக காங்கிரஸ் உட்பட பல்வேறு இயக்கங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட பொழுது, தேர்தல் ஆணையமோ ‘காங்கிரசிற்கும் மற்றவர்களுக்கும் இப்படி குறை சொல்வதே வேலையாக போய்விட்டது’ என்று போகிற போக்கில் தானும் ஒரு காவிக்கட்சிக்காரன் தான் என பறைசாற்றிக் கொண்டது; அதற்கு உச்ச நீதிமன்றமும் ஒத்திசைவு தந்தது; இப்படி எல்லாம் இருக்கின்ற பொழுது எப்படி வியூகங்களை திட்டமிடுவது; களப்போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டுவது; பிரதான எதிரியை வீழ்த்துவதற்கு எதிர்நிலை சக்திகள் அனைத்தும் சிதறுண்டு கிடக்காமல் ஒருமுகப்படுத்தும் பணியை மேற்கொள்வது; நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல் முறையில் நம்பிக்கை அற்ற இடதுசாரி புரட்சிகர சக்திகளையும்கூட உறுதுணையாக அணிதிரட்ட முற்படுவது…
என்ற விடயங்களில் மிக மிக பின்தங்கிப் போய் உள்ளனர். எனவே எதார்த்தத்தை கூடுதலாக புரிந்து கொண்டு மோடி தலைமையிலான பாசிசக் காவிக் கூட்டத்தை வீழ்த்திட அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
ஆப்பரேஷன் சிந்தூர் & ஆப்பரேஷன் காகர் – பாசிஸ்டுகள் ‘சரியாகவே’ காயை நகர்த்துகிறார்கள்!
காஷ்மீரில் சுற்றுலாத்தலமான – அதே நேரத்தில் ரெட் அலர்ட் பகுதியான பெஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற 26 அப்பாவி மக்கள் ‘ஏதோ ஒரு தீவிரவாத’ கும்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டதும், அதற்குக் காரணம் பாகிஸ்தான் தான் என முத்திரை குத்தி, மோடி தலைமையிலான காவிக் கூட்டம் தேசவெறியூட்டி, இஸ்லாமிய எதிர்ப்புணர்வை தூண்டி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பாகிஸ்தானுக்கு எதிரான ‘வெளிநாட்டுப்போரை’ நான்கு நாட்கள் மட்டும் நடத்தி, மோடியின் எஜமானன் அமெரிக்க டிரம்ப் உத்தரவிட்டதும் இந்தியாவும், பாகிஸ்தானும் போரைக் கைவிட்டதும் நாம் அறிந்ததே.
ஆனால் சுற்றுலாப் பயணிகளை சுட்டுப் பிணமாக்கிய ‘தீவிரவாதிகள்’ யார் என இந்தியாவுக்கும் தெரியாது; பாகிஸ்தானுக்கும் தெரியாது. ஆனால் இரு நாடுகளுமே மிகப்பெரிய வெற்றியை ஈட்டி விட்டதாக சுயதம்பட்டமடித்துக் கொள்கிறார்கள். மோடியோ ஒரு படி மேலே போய் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி உலகம் முழுமையும் பரப்பிட – அதாவது மோடியின் புகழ் பரப்பிட 59 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட – எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய – ஏழு குழுக்களை உலகம் முழுமைக்கும் ‘சுற்றுலா’ அனுப்பி மோடி விரும்பியதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவமானம் என்னவென்றால் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்களும் வெட்கமின்றி பயணப்பட்டு இருப்பதுதான்.
ஆப்பரேஷன் சிந்தூருக்காக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி சென்னையில் நடத்திய ராணுவ வீரர்களுக்கான பேரணியாக இருக்கட்டும்; வெளிநாடுகளுக்கு மோடி அனுப்பிய குழுக்களில் கனிமொழி எம்.பி. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட பலரும் பங்கேற்றதாக இருக்கட்டும்; இவை யாவும் ‘இதில் நாம் பங்கேற்காவிட்டால் தனிமைப்பட்டு விடுவோமோ; தேசப்பற்று இல்லாவர்களாக முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ’ என்ற சுயநலக் காரியவாதப் பிற்போக்கு கண்ணோட்டத்தில் தான் இவைகள் யாவும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. சங்கிக் கூட்டத்தின் 2019 புல்வாமா துப்பாக்கி சூட்டு இழப்புகளை அனைவருமே கெட்டிக்காரத் தனமாக மறந்து போயினர்.
அதேபோல சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ம.பி., ஒடிசா பல்வேறு மாநில எல்லைகளின் காடுகளிலும், மலைகளிலும் குவிந்து கிடக்கும் பல லட்சம் கோடிக்கணக்கான மதிப்பிலான கனிம வளங்களை சூறையாடுவதற்கு அதானி, அம்பானி, மிட்டல், அகர்வால் உள்ளிட்ட ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகள் கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் மலைகளும் வனங்களும் தோன்றிய காலம் தொட்டு அவற்றை பாதுகாத்து வரும் பூர்வப் பழங்குடியின மக்கள் அப்பகுதியை விட்டு அகல மறுக்கின்றனர்.
அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற துடிக்கிறது பாசிச மோடி அரசு. எதிர்த்து நிற்பவர்களை சுட்டுப் பொசுக்குகிறது பாசிசக் காவிப்படை. இவர்களுக்கு அரணாக நின்று ஆயுதமேந்தி போராடுகிறார்கள் மாவோயிஸ்டுகள். தற்போது ‘ஆபரேஷன் காகர்’ என்ற பெயரில் மாவோயிஸ்டுகளையும் அதன் முக்கியத் தலைவர்களையும், பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் என்ற முத்திரை குத்தி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோரை சுட்டுப் பொசுக்கி சாகடிக்கிறது மோடி அமித்ஷா பாசிசக் காவிக் கூட்டம். இதற்குப் பெயர் ‘ஆபரேஷன் காகர்’ என்ற ‘உள்நாட்டுப் போர்’. இதைப் பற்றி எல்லாம் எதிர்க்கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் – ‘பாசிச மோடியை வீழ்த்த வேண்டும்’ என்று முழங்குபவர்கள் எவரும் இந்தக் கொடுஞ்செயல்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ‘கிரீன் ஹண்ட்’(Green Hunt) என்றால், மோடியின் பாஜக ஆட்சிக்காலத்தில் ‘ஆபரேஷன் காகர்’. அவ்வளவுதான் வித்தியாசம்.
எனினும் எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும் இன்று குறைந்தபட்சம் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கல்விக் கொள்கை, ஒரே கலாச்சாரம் என்ற பாணியில் ஒற்றை சர்வாதிகாரத்தை ஆம், பாசிசத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் இந்தக் காவிக் கூட்டத்தை அப்புறப்படுத்த அனைத்து அரசியல் இயக்கங்களும் வெகு மக்களை ஒன்று திரட்டி அனைத்து வழிமுறைகளிலும் களம் கண்டு வெற்றி வாகை சூடியே தீர வேண்டும்.
பாசிசத்தை வீழ்த்த வேறு குறுக்கு வழி இல்லை.
◾எழில்மாறன்