பத்திரிக்கைச் செய்தி
நாள் – 05 – 04 – 2023
தமிழகத்தை நாசமாக்கும்
புதிய நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க முடியாது!
காவிரி படுகையில் ஐந்து புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. என்று ஒன்றிய அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இதை ஏற்கமுடியாது திரும்ப பெற வேண்டும் என கடிதம் எழுதி உள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமவெளி பிரதேசம் நெற்களஞ்சியம், வளம் மிகுந்த காவிரி டெல்டா மாவட்டங்கள், கடந்த 40 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி, நிறுவனங்களாலும்.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஆபத்தாலும், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், அமைப்புகள், கட்சிகள், சமூக ஆர்வலர்களும்.. டெல்டாவின் மண்ணையும் மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க சமரசமின்றி, அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, போராடியதால்.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது, ஒன்றிய அரசு.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3ஆவது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ. 3556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் 21.07.2022 அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்தவுள்ளது.
காவிரி படுகையில் சுரங்கம்
என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் படக் கூடும். இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றது, இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.. என்ன விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து, டெல்டா மக்களை அகதிகளாக்கவும், கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றவும், பாலைவனமாக்கவும், துடிக்கும்.. இந்த திட்டத்தினை தடுத்து நிறுத்த மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுப்போம்! ஒன்றிணைவோம்!
தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு – புதுவை