துருக்கி நிலநடுக்கம்! இயற்கையை புறக்கணிக்கும் முதலாளித்துவம் ஏற்படுத்திய பேரழிவு!

(தொடர்ச்சி…)

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகப்பெரும் அழிவுகளை உண்டாக்கியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியின் நிலப்பரப்பு 5 மீட்டர் அளவு நகர்ந்திருக்கிறது என்கிறார்கள் புவியியல் வல்லுனர்கள்.

பேரிடர் மற்றும் நிலநடுக்க ஆராய்ச்சி மாணவர் சரவண கணேஷ் கூறும் போது, “நமக்குத்தான் நாடு என்கிற எல்லைகள் உண்டே தவிர, புவியியல் ரீதியாக பார்த்தோமேயானால் புவியின் மேற்பரப்பைக் கொண்டு 7 பெரிய தட்டுக்களாக (Tectonic plates) பிரிக்கலாம். பூமியின் 95% பரப்பு, இந்த ஏழு தட்டுக்களின் மீதே அமைந்துள்ளது. இதுபோக பல தட்டுக்கள் உண்டு (Secondary மற்றும் Tertiary plates). நிலநடுக்கங்களைப் பொறுத்தமட்டில், இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. இந்த தட்டுகளின் விளிம்புகளில் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதாலோ, ஒரு தட்டு இன்னொரு தட்டிற்கு மேலேயோ கீழேயோ நகரும்போதோ, தட்டுகள் எதிரெதிராக நகரும்போதோ ஏற்படும் ஆற்றல் வெளிப்பாட்டால் நிகழும் நிலநடுக்கங்கள் (Interplate earthquakes), தட்டுக்களின் விளிம்புகளிலிருந்து வெகுதூரம் தள்ளி, தட்டுக்களில் உள்ளிடையாக இன்ட்ராபிளேட் பூகம்பங்கள் (Intraplate earthquakes) ஏற்படும்.” என விளக்கியுள்ளதை விகடன் முன்வைக்கிறது.

2001 குஜராத் பூஜ் நிலநடுக்கம், இன்ட்ராபிளேட் வகையைச் சார்ந்தது. இந்த வகைகளைத்தாண்டி   பெரும் அணைகளைக்கட்டி அதிக TMC தண்ணீரை தேக்குவது போன்ற அரசின் திட்டங்களால் ஏற்படும் நிலநடுக்கங்களும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் நிலத்தட்டுகள் பிளவுபடுவதுதான்.

இணையும் புள்ளியில் பிளவுபடும் நிலத்தட்டுகள்!

எவ்வகை நிலநடுக்கமாக இருந்தாலும், அவை  பூமிப்பிளவின் (faults) செயல்பாடு காரணமாகவே நிகழ்கிறது. இப்பிளவுகளை, நமது உடலில் ஏற்படும் எலும்பு முறிவுகளைப் போல உருவகப்படுத்திக் கொள்ளலாம். சில கடுமையான முறிவுகள் – என்னதான் நல்ல சிகிச்சையெடுத்து, பல வருடங்களானாலும் – மீண்டும் அடிபடும்போது அதேயிடத்தில் முறிவு ஏற்படுவதில்லையா, அதுபோலவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியிருந்தாலும் பூமியின் சில பிளவுகள் புவியில் மாற்றங்களால் அவ்வப்போது உராய்வதும், மோதிக்கொள்வதுமாக ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த ஆற்றல் வெளிப்பாட்டைத்தான் நாம் நிலநடுக்கமாக உணர்கிறோம். இப்பூமி தோன்றிய நாள்முதல் அவ்வப்போது நடந்து கொண்டேயிருக்கும் நிகழ்விது.

புவித்தட்டுகளின் மோதல் நிலப்பரப்பில் மட்டுமல்லாமல் கடலுக்கடியிலும் நடக்கிறது.  2004 இல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட 9.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் 1,600 கி.மீ. நீள நிலத்தட்டுகள் சரிந்தன. இதனால் வந்த சுனாமிக்கு  இந்தியா உளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் பேர் பலியாகினர்.

தற்போது துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது அரேபிய மற்றும் அனடோலிய தட்டுக்களின் மோதலால் ஏற்பட்டது. மோதலின் காரணமாக, பிளவுகளில் அழுத்தம் அதிகரிக்க, ஒரு பிளவு மற்றொரு பிளவிலிருந்து விலகிச் சென்றது. அதன் விளைவாக 7.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வகை பிளவு விலகலை Strike-slip fault என்பர்.

இப்படிப் பிளவுகள் விலகிச் சென்றதால், துருக்கியின் பெரும்பான்மையான நிலப்பரப்பு அமைந்திருக்கும் அனடோலிய தட்டு 3 – 6 மீட்டர்கள் வரை நகர்ந்திருப்பதாக உலகின் பல முக்கிய புவியியல் அமைப்புகள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான நகர்வின் விளைவாக சாலைகள், நிலத்தடி அமைப்புகளான குடிநீர் குழாய்கள், வடிகால் குழாய்கள் போன்றவைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில் மேலும் கொடுமையான விஷயம், உள்நாட்டு போரினால் துருக்கியில் தஞ்சமைடைந்த சிரியா மக்களின் முகாம்கள் பலவும் பலத்த சேதமடைந்துள்ளன.

நமது பூமி ஒரு – முட்டையைப்போல்; வெளிப்புற ஓடு, வெள்ளைக்கரு, அதற்குள் மஞ்சள் கரு என பல அடுக்குகளை கொண்டது. நாம் வாழும் மேற்புறத்தில் லித்தோஸ்பியர் மேலோடு உள்ளது; அதற்கு கீழே, பெரும்பாலும் திடமான பாறை; பின்னர் இன்னும் ஆழமாக, திரவ இரும்பினால் ஆன வெளிப்புற கோர் உள்ளது; நம் பூமியிம் உட்புற மையமானது, திடமான இரும்பினால் ஆனது.

மேற்பரப்பானது லித்தோஸ்பியர் தட்டுகள் எனப்படும் பல பெரிய தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பசிபிக் தட்டு முழு பசிபிக் பெருங்கடலுக்கு கீழே உள்ளது, மேலும் வட அமெரிக்க தட்டு வட அமெரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. தட்டுகள் ஒருவித புதிர் துண்டுகள் போன்றவை, அவை தோராயமாக ஒன்றாகப் பொருந்துகின்றன மற்றும் பூமியின் மேற்பரப்பை மூடுகின்றன என விளக்குகிறது டவுன் டு எர்த்தின் கட்டுரை.

புவித்தட்டுகள் இணையும் பகுதிதான் நடுக்கத்திற்குள்ளாகிறது. அந்த வகையில் துருக்கியைத் தொடர்ந்து பிப்ரவரியில் மட்டும் நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியாவில் என சங்கிலித்தொடர்போல நிலநடுக்கம் வந்துள்ளது. சிலியில் 5.5, ஈரானில் 5.3, அமெரிக்க கடற்பரப்பில் 5.4,  மொரிசியசில் 5.3, தஜிகிஸ்தானில் 6.8, ஆப்கானிஸ்தானில் ஐந்து முறை 4 – 6.8, இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர்  அளவுகளில் நில நடுக்கம் வந்துள்ளது.

இந்தியாவிலும் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று தட்டுகள் இணையும் பகுதியாக இந்தியா இருப்பதால், அதன் விளிம்புகள் எந்நேரமும் மோதி உடையும் வாய்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்தியத் தட்டு யூரேசியாதட்டின்மேல் ஆண்டுக்கு 47 மிமீ வேகத்தில் செல்கிறது. இந்தோ-ஆஸ்திரேலிய தட்டுக்கு இடையே யூரேசிய தட்டு மோதுவதால் இந்தியாவில்  நிலநடுக்கங்கள் அவ்வப்போது வருகின்றன.

இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இமயமலையின் மலைத்தொடர்கள் ஐரோப்பியப் புவியியல் தட்டுக்களுடன் இணைந்து உருவானது. எந்த நேரமும் நகரும் தட்டுக்களின் விளிம்பில் இம்மலைப்பகுதியானது இருப்பதினால், இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகம்.

இந்திய நிலப்பரப்பை நில அதிர்வியலாளர்கள் மண்டலம் 2,3,4,5 என நான்கு நில அதிர்வு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். ஆபத்தான மண்டலங்களான 4, 5 இல் தான் முழு இமயமலைப் பகுதி, வடகிழக்கு இந்தியா, மேற்கு மற்றும் வடக்கு பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத்தின் பகுதிகள் வருகின்றன.

இந்தியாவை குலுக்கிய நிலநடுக்கங்கள்!

இந்தியாவில், கடந்த 150 வருடங்களில் 1897 இல் சில்லாங்,  1905இல் கங்கார , 1934 இல் பீகார்- நேபாள் இடையே8.2 ரிக்டர் பூகம்பத்திற்கு 10 ஆயிரம் பேர் பலியாகினர். மற்றும் 1950 இல் அசாமில் நான்கு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 1991 இல் உத்தரகாசியில் 6.8 ரிக்டர் நிலநடுக்கத்திற்கு 800 பேர் பலியாகினர்.

2001 இல் குஜராத்தின் பூஜ்ஜில்  7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், கட்ச் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் பலியாயினர். 1,67,000 மக்கள் படுகாயம் அடைந்தனர். (4,00,000)4 இலட்சம் வீடுகள் தரைமட்டம் ஆயின. குஜராத்தில் 2020, 2022 இல் சிறிய அளவில் மீண்டும் நிலநடுக்கம் வந்தது. இந்த நகர்வுகள் ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்க உள்ளது.

எதிர்காலத்தில் உருவாகவுள்ள சூப்பர் கண்டம்!

பெருங்கடல்களின் கீழ் உள்ள டெக்டோனிக் தட்டுகளின் (பூமியின் அடிப்பகுதியின் நகர்வுகளை கொண்டு உருவான நிலப்பரப்புகள்) இயக்கம் தான் கண்டங்களை நகர்த்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பசிபிக் பெருங்கடல் சில சென்டிமீட்டர்கள் சுருங்குவதாக கணினி மாடலிங் தரவுகள் தெரிவிக்கின்றன. முதலில் ஆஸ்திரேலியா ஆசியாவுடன் மோதி பின்னர் இறுதியில் பசிபிக் பெருங்கடல் மறைந்தபிறகு அமெரிக்காவுடன் இணைக்கப்படும். இப்படி அனைத்து நிலப்பரப்புகளும் இணைந்து ஒரே கண்டமாகி  விடும்.

ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ள இந்த ஆராய்ச்சியின்படி, அமெரிக்கா மேற்கு நோக்கியும் ஆசிய கண்டம் கிழக்கு நோக்கியும், அண்டார்டிகா தென் அமெரிக்காவை நோக்கியும் நகர்ந்து, ஆப்பிரிக்கா ஒருபுறம் ஆசியாவையும் மறுபுறம் ஐரோப்பாவையும் இணைத்து அமேசியா சூப்பர் கண்டம் உருவாகும் என நேஷனல் சயின்ஸ் ரிவ்யூவில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

பொதுவாக, சூப்பர் கண்டத்தின் உருவாக்கம் கடல் மட்டம் குறைவதற்கும், பல்லுயிர் பெருக்கம் குறைவதற்கும், பரந்த வறண்ட நிலம் உருவாகுவதற்கும் வழிவகுக்கும். இதற்கு நேர்மாறாக, ஒரு சூப்பர் கண்டத்தின் முறிவின் போது, ​​கடல் மட்டம் உயரும், பல்லுயிர் பெருக்கப்படும், மேலும் பல கண்டங்கள் உயிர் வாழ்வதற்கு ஆதரவாக இருக்கும்.

இயற்கையின் இத்தகய நிகழ்வுக்கு 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும். ஏகாதிபத்தியங்களோ நிரந்தரமற்ற இப்புவிப்பரப்பை தமது செல்வாக்கிற்குள் கொண்டுவர பல ஆக்ரமிப்பு – பதிலிப் போர்களை நடத்தியபடி இருக்கும். இத்தகைய நாடுகளில் நிலநடுக்கம் வாரமலேயே – தொடர் ஏவுகணை வீச்சால் கட்டிடங்கள் தகர்க்கப்படும்.  இதற்கு ஓராண்டாக நடந்துவரும்  ரஷ்ய – உக்ரேன் போர் ஒர் உதாரணம்.

ஏகாதிபத்தியங்கள் லாப வெறி பிடித்து முன்னெடுக்கும் உலகளாவிய உற்பத்திமுறையானது துருக்கியைப்போல் தரமற்ற கட்டுமானங்களில்தான் உழைக்கும் மக்களை வாழ நிர்பந்திக்கும். பங்களாதேசத்தின் கார்மெண்ட் நிறுவனங்களைப்போல வியர்வைக் கூடங்களை உருவாக்கி நெருப்பில் பொசுக்கி அழிக்கும்.

இழவு வீட்டிலும் லாபம் பார்க்க ஏகாதிபத்தியம் தயங்கியதில்லை. பேரழிவுக்குபின் உதவி என்ற பெயரில் துருக்கி, சிரியாவுக்கு டாலர்களை தந்து மீளமுடியாத கடன்வலையிலும் வீழ்த்தும். நம்மால் புவித்தட்டுகள் உராய்ந்து வரும் பூகம்பங்களை தடுக்க முடியாது. மாறாக, பூகம்பத்தை காட்டிலும் பேரழிவைத்தரும் ஏகாதிபத்தியங்களையும், கார்ப்பரேட் – காவி பாசிஸ்ட்டுகளையும் மோதி வீழ்த்த முடியும்.

புதிய ஜனநாயகம் (மார்ச் 2023)

  • கரிகாலன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here