மே 1  அன்று சென்னை அதானி அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்காக தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பல்வேறு பிரச்சார வடிவங்களிலும், சுவரெழுத்து எழுதுவது, சுவரொட்டி தயாரிப்பது என்று வேலைகளை செய்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தின் முழக்கங்களான ஆர்எஸ்எஸ்-ம் அதானியும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு, கொலைகார ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்! கொள்ளைக்கார அதானி சொத்துக்களை பறிமுதல் செய்! ஆகியவற்றை போராட்ட விவரங்களையும் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் சுவரெழுத்து எழுத ஒரு ஓவியரையும் அவரது உதவியாளரையும் வேலைக்கமர்த்தி கோவை பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் வேலைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தனர்.

கோவையின் மையமான மூன்று பகுதிகளில் ஏற்கனவே எழுதப்பட்ட நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி டாட்டாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான சுவரில் எழுதிக்கொண்டிருந்தபோது அச்சுவருக்கு அருகில் கம்பங்கூழ் தள்ளுவண்டி கடைபோட்டு இருந்த நபரால் தகவல் கிடைக்கப்பெற்ற சங்கிகள் ஒவ்வொருவராகக் கூட ஆரம்பித்தனர். அவர்களில் போலீசுக்கு உளவு சொல்லும் ஒரு நபரும் (informer) அடக்கம். அவர்கள் சுவரெழுத்தை போட்டோ எடுப்பதும் பகிர்வதும் போனில் பேசுவதுமாக இருந்தனர். அதில் ஒருவன் மட்டும் நம்மிடம் வந்து “நீங்க கம்யூனிஸ்டா”? என்று கேட்க, நாம் “மக்கள் அதிகாரம்” என்று சொன்னவுடன் “அதானியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் ஆனால் கொலைகார ஆர்எஸ்எஸ் என்று எழுதக்கூடாது” என்று கூறினான். “அதிலென்ன தப்பு? நாங்கள் அப்படிதான் எழுதுவோம்” என்று சொன்னதும் அங்கிருந்து போனில் பேசியபடியே நகர்ந்தான்.

இப்படி போய் கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு சங்கியாக அங்கு கூட ஆரம்பித்தனர். அப்படி சுமார் 20 பேர் பக்கம் கூடி விட்டனர். அப்பொழுது ரோந்து போலீசும் அங்கு வந்துவிட்டது. மாவட்ட செயலாளருடன் ஏற்கனவே பரிச்சியம் இருந்ததால் ரோந்து போலீசு சங்கிகளை அங்கிருந்து அனுப்ப முயற்சித்தனர். “என்ன கூட்டம்? நீங்கள் யார்?” என்று போலீஸ் கேட்டதும் சங்கிகள் நழுவ ஆரம்பித்தனர். அப்பொழுது வேறு ஒரு போலீஸ் வாகனத்தில் C-1 காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் அங்கு வரவும், ஏற்கனவே சுவரெழுத்தைப் பார்த்து நரம்பு முறுக்கேறி இருந்த ஒரு சங்கி “யார் இப்படி எழுதியது” என்று கேட்க, “நீ யார் அதை கேட்பதற்கு” என்று நாம் கேட்க உடனே தலையிட்ட காவல் ஆய்வாளர் பழனியம்மாள் “அனுமதி இல்லாமல் சுவரெழுத்து எழுதியதற்காக உங்களை கைது செய்கிறோம் உடனே வண்டியில் ஏறுங்கள் என்றார் (சங்கிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றுகிறாராம்).

சுவரெழுத்தை அழித்தாக வேண்டும் என்று சங்கிகள் கோரிக்கை வைத்தவுடன் அங்கிருந்த போலீஸ் அனைவரும் ஒத்த மனதுடன் நீங்களே அழித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு முழுச்சுதந்திரம் அளித்தனர். மகிழ்ச்சியடைந்த சங்கிகள், குறிப்பாக அந்த கம்பங்கூழ் கடைக்காரர் மிகவும் சந்தோஷத்துடன் நமது ஓவியர் கொண்டுவந்திருந்த சுண்ணாம்பால் சுவரெழுத்தை அழித்தார். சங்கிகளுக்கு பாபர் மசூதியை இடித்து விட்ட மகிழ்ச்சி!.

நாம் “தமிழ்நாடு முழுக்க இப்படித்தான் எழுதி வருகிறோம் எந்த பகுதியிலும் இப்படி நடக்கவில்லை” என்றதற்கு, “ஏங்க கோயம்புத்தூர் ரொம்ப சென்சிட்டிவான ஏரியாங்க இங்க இப்படித்தான்”

மூன்று தோழர்களையும் வாகனத்தில் அழைத்துப் போகும் வழியில் ஆய்வாளர் பழனியம்மாள் அட்வைஸ் மழைகளாகப் பொழிந்து “அனுமதி வாங்காமல் சுவரெழுத்து எழுதியது தவறு, அப்படியே எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட அமைப்பை (ஆர்எஸ்எஸ்) குறித்து எழுதியது பிரச்சினையை உண்டு பண்ணும்” என்று கூறியதற்கு, நாம் “தமிழ்நாடு முழுக்க இப்படித்தான் எழுதி வருகிறோம் எந்த பகுதியிலும் இப்படி நடக்கவில்லை” என்றதற்கு, “ஏங்க கோயம்புத்தூர் ரொம்ப சென்சிட்டிவான ஏரியாங்க இங்க இப்படித்தான்” என்று கூறினார்.

பின்னர் மக்கள் அதிகாரம் கோவை மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி, இணைச் செயலாளர் தோழர் ஜூலியஸ், செயற்குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இரு நபர் ஜாமீன் வழங்கி மாலை 7 மணிக்கு விடுவித்தனர். சுவரெழுத்து எழுதிய ஓவியர் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்கு ஏதும் பதியாமல் விடுவித்த போலீஸ் பின்னர் அவர்களை மிரட்டி அழைத்துச்சென்று எங்கெல்லாம் சுவரெழுத்து எழுதியிருந்தோமோ அங்கெல்லாம் அவர்களையே அழிக்க வைத்தனர். இரண்டு இடங்களில் சுவர் விளம்பரங்கள் சங்கி கும்பலால் ஏற்கனவே அழிக்கப்பட்டிருந்தன.

சுவர் விளம்பரம் என்ற பெயரில் எந்தவித அரசியலும் இல்லாமல் ஓட்டுக்கட்சி தலைவர்களை வாழ்த்தியும், தனது பெயர்களையே சுவர் முழுவதும் எழுவதும் போலீசுக்குப் பிரச்சினையில்லை. மக்களை பாதிக்கக்கூடிய கார்ப்பரேட்-காவி பாசிச சக்திகளை அம்பலப்படுத்தும் காத்திரமான முழக்கங்களை சுவரெழுத்தாக எழுதினால் சங்கிகளால் பிரச்சினை ஏற்படும் என்று போலீஸ்துறையே அஞ்சி நடுங்குகிறது.  சர்வ அதிகாரமும் படைத்த போலீசையே ஆட்டுவிக்கும் அபாயகரமான சக்திகளாக சங்கி கும்பல் கோவையில் வளர்ந்து வருகிறது.

1997-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சங்கிகளை சீராட்டிவளர்ந்துவந்த போலீஸ் பின்னர் அவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய ஒரு மதகலவரத்தை கோவையில் நடத்தி முடித்தது. இடையில் சிலகாலம் அடங்கியிருந்த சங்கிகள் பின்னர் 2014-ல் ஒன்றியத்தின் ஆட்சியதிகாரம் கையில் கிடைத்தவுடன் மீண்டும் கோவையில் அசுரவேகத்தில் வளர்ந்து கோவையை “தமிழ்நாட்டின் உத்தரபிரதேசமாக” மாற்ற முயல்கின்றனர்.

இதைத்தடுத்து பெருமைமிக்க கோவையைக் காப்பாற்ற வேண்டுமானால் அனைத்து இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு, சனாதன எதிர்ப்பு தலித்திய அமைப்புகளும், கட்சிகளும் ஒன்றிணைந்து காவி காலிகளுக்கு எதிரான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உடனடியாகக் கட்டி எதிர்வினை ஆற்றவேண்டும்.

  • மதியழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here