தென்னிந்திய போரை வழி நடத்திய கிழச்சிங்கம்:

விருப்பாச்சி கோபால் நாயக்கர்.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் மிக  முக்கியமானதொரு தலைவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர், பழனி, திண்டுக்கல் பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்த இந்தப் பகுதி, தென் தமிழகத்தையும் மேற்குத் தமிழகத்தையும் அதன் வழியாக திப்புவின் மைசூரையும் இணைக்கும் மிக முக்கியமான கண்ணியாகச் செயல்பட்டிருக்கிறது.

ஆங்கிலேய காலனியாதிக்கத்துக்கு எதிரான கோபால் நாயக்கரின் போராட்டம் அவருடைய 53வது வயதில், 1783-இல் தொடங்குகிறது. அப்போது திப்புவின் வசமிருந்த திண்டுக்கல் பகுதி மீது ஆங்கிலேயர் போர் தொடுத்த போது, அதை எதிர்த்துப் போரிட்டன கோபால் நாயக்கரின் படைகள். 1792 ஒப்பந்தத்தின் கீழ் காரன்வாலிஸ் கைப்பற்றிய திப்புவின் பகுதிகளில் கோபால் நாயக்கரின் விருப்பாட்சியும் அடக்கம். நிலைமையைக் கணக்கில் கொண்டு ஆங்கிலேயருக்கு சந்தேகம் எழாதபடி வரியைச் செலுத்திக் கொண்டே, மற்ற பாளையக்காரர்களை ரகசியமாக ஒன்றிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக்கர். மணப்பாறையிலிருந்து திருச்சி வரை பரவியிருக்கும் கள்ளர் நாடு மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பாளையங்களை ஒன்றுதிரட்டி மார்ச், 1797-இல் ‘திண்டுக்கல் கூட்டிணைவை உருவாக்குகிறார்.

இந்தக் கூட்டிணைவின் சார்பில் 2 பிரதிநிதிகளை திப்புவுக்குத் தூது அனுப்பி உதவி கேட்கிறார். உடனே, உதவிகளுடன் தனது தூதர்கள் நான்கு பேரை கோபால் நாயக்கரிடம் அனுப்புகிறார் திப்பு.காஜி கான் தலைமையிலான திப்புவின் படை, திண்டுக்கல் கூட்டிணைவுக்கு உதவும் பொருட்டு மைசூர் அரசின் தென் எல்லையில் முகாமிடுகிறது.

1799 மார்ச்சில் திப்புவுக்கு எதிரான இறுதிப்போரை வெல்லெஸ்லி தொடங்கியவுடன், திண்டுக்கல் கூட்டிணைவின் படைகள் ஆங்கிலேயேர்களின் முகாம்களைத் தாக்கிச் சூறையாடுகின்றன. போரில் திப்பு இறக்கிறார். “கட்டபொம்மனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும்  நேரும்” என்று மிரட்டுகிறான் கலெக்டர். அதை அலட்சியம் செய்து விட்டு, தமிழகம் தழுவிய கூட்டிணைவை ஒருங்கிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக்கர். வேலூர் சிறையில் இருந்த திப்புவின் மகன் ஃபத்தே ஹைதர், தூந்தாஜி வாகிடமும் கோபால் நாயக்கரிடமும் சென்று சேர்ந்து கொள்ளுமாறு திப்புவின் (முன்னாள்) படைவீரர்களுக்கு வழிகாட்டுகிறார்.

ஏப்ரல், 1800இல் பழனி மலைக் காடுகளில் கோபால் நாயக்கர் தலைமையில் கூடுகிறார்கள் தென்னிந்தியப் போராளிகள். ‘பழனி சதித்திட்டம்’ என்று வெள்ளையரால் அழைக்கப்படும் இந்தக் கூட்டம், கோவையிலுள்ள ஆங்கிலேயரது கோட்டையைத் தாக்குவதிலிருந்து தொடங்கி தென்னிந்திய அளவில் ஒரே நேரத்தில் எழுச்சியைத் தொடங்கத் திட்டமிடுகிறது. கோவை தாக்குதல் தோல்வியடைந்து அனைவரும் தூக்கிலிடப்படுகிறார்கள். செப், 1800இல் தூந்தாஜி வாக் கொல்லப்படுகிறார். அடுக்கடுக்கான தோல்விகளுக்குப் பின்னரும் கோபால் நாயக்கர் துவளவில்லை. தோல்வியடைந்த தூந்தாஜி வாகின் வீரர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.

தன்னுடைய எதிரிகளை ஒவ்வொருவராக அழித்துக் கொண்டே வந்த ஆங்கிலேயர்கள், இறுதியாக மார்ச், 1801இல் கோபால் நாயக்கரின் மீது பலமுனைத் தாக்குதல் தொடுக்கிறார்கள். விருப்பாட்சி பகுதியின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக கோபால் நாயக்கருடன் சேர்ந்து ஆனைமலைக் காடுகளுக்குள் பின்வாங்கி போரைத் தொடர்கிறார்கள். ஏப்ரல் இறுதி வரை போர் தொடர்ந்தும் வெள்ளையர்களால் கோபால் நாயக்கரைப் பிடிக்க முடியவில்லை.

களைத்துப் போன ஆங்கிலேயர்கள், துரோகிகளைத் தேடுகிறார்கள். கோபால் நாயக்கரைக் காட்டிக் கொடுத்தால் 2000 ரூபாய், மற்ற தலைவர்களின் தலைக்கு 500 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்படுகிறது. மே, 4-ஆம் தேதியன்று கோபால் நாயக்கரும் பிற முன்னோடிகளும் வளைக்கப்படுகிறார்கள். சம்பிரதாயமான விசாரணை கூட நடத்தாமல் அனைவரையும் தூக்கிலிடுகிறது ஆங்கிலேயப் படை. தென்னிந்திய விடுதலைப் போரின் மையமாகவும், போராளிகளின் தளமாகவும் துடிப்புடன் இயங்கிய விருப்பாட்சி சூறையாடப்பட்டது. விடுதலைக்காக இறுதி வரை தளராமல் போராடிய அந்தக் கிழச்சிங்கம் தன்னுடைய 73-வது வயதில் விடைபெற்றுக் கொண்டது.

புதூர் இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here