அறிவோம் வரலாறு!
தொடர் கட்டுரை.
இந்தியாவில் பிரதான சக்தியாக திகழ்கின்ற உழைக்கும் வர்க்கம் விவசாயிகளால் நிறைந்துள்ளது. விவசாயத்தின் மூலம் தேசிய வருமானத்தில் கிடைக்கின்ற வருவாயைக் கொண்டு (GDP) விவசாயிகள் வாழ்நிலையை கணிப்பது என்பது ஒரு குறுகிய சூத்திரம் ஆகும். தகவல் தொழில்நுட்பம், சேவைப் பொருளாதாரம், நகரமயமாக்கம் இவையெல்லாம் நாடு தழுவிய அளவில் அதிகரித்து வரும் போதிலும் உற்பத்தி உறவுகளில் பெரிய மாற்றம் இன்றி, பெரும்பான்மை மக்கள் விவசாயத்தையும், விவசாயத்தின் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பையும் சார்ந்து தான் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில் வேளாண் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ள கார்ப்பரேட் கைக்கூலியான பாசிச மோடி அரசை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒன்பது மாதத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டம் நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் எழுச்சியாக மாற வேண்டும் என்றால் விவசாயிகளை அணிதிரட்டும் மாபெரும் – அளப்பரிய பணியை செய்வதில் உண்மையான நாட்டமும், அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் மனத்துணிவும் அவசியம்.
தமிழகத்தில் 1943-ஆம் ஆண்டு விவசாயிகளை ஒன்று திரட்டுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. இந்த மகத்தான பணியை செய்வதற்கு தோழர்.சீனிவாசராவ் பண்ணை ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு, குறிப்பாக கீழத் தஞ்சை பகுதியில் விவசாயிகளை திரட்டுவதற்கு பணிக்கப்பட்டார். நகர்புறத்தில் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டு வந்தாலும் கட்சியின் கட்டளைக்கு ஏற்ப விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதற்கு உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விவசாயிகள் மத்தியில் வேலையை கொண்டு சென்றார்.
அந்த அனுபவத்தில் விவசாயிகளை அமைப்பு ரீதியாக திரட்டுவதற்கு பணியாற்றிய தோழர்களைப் பற்றி தொகுத்து ’கம்யூனிஸ்டு கட்சியும் விவசாயிகளும்’ என்ற சிறு நூலை எழுதினார். இன்று விவசாயிகளை ஒன்று திரட்டுவதற்கும், சமகாலத்தில் விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்கவும், விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டியடிக்கும் கொடூரமான வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கிளர்ச்சியை தூண்டுவதற்கும் செழுமையான அனுபவம் நமக்கு தேவை. தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் செயல்பட்ட தோழர்களின் வாழ்க்கை முறை நமக்கு ஒரு அனுபவப் பாடமாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த தோழர்களின் வாழ்க்கையே தினமும் வெளியிடுவதன் மூலம் நமது சிந்தனையில், விவசாயிகள் பற்றிய ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். தோழர் லெனின் எழுதிய நாட்டுப்புற ஏழைமக்களுக்கு என்ற வழிகாட்டும் நூல் இத்தகைய கண்ணோட்டத்தை தனக்கு உருவாக்கியதாக தோழர் சீனிவாசராவ் பதிவு செய்துள்ளார்.
தோழர் லெனின் காட்டிய வழியை நாமும் கடைபிடித்து விவசாயிகளை அமைப்பாக்குவதில் முன்னேறுவோம்! வேளாண் சட்டத்திருத்தத்தை கிழித்தெறிந்து போராடுவோம்.
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.
டாக்டர் அண்ணாஜி
சேலம் ஜில்லாவில் ஒரு பிரபலமான மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் பக்தி ஏற்பட்டு காங்கிரசில் சேர்ந்தார். 1930 போராட்டத்தில் கலாசாலை உயர்நிலைப்பள்ளி மாணவராயிருந்தபோது போலீஸ் தடியடிக்காளானார். டாக்டர் பரீட்சைக்குப் படித்துத் தேறி சில இடங்களில் வேலை பார்த்துப் பிறகு சுயேச்சையாக இருக்க எண்ணங்கொண்டு கிருஷ்ணகிரியில் தனியாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார். 1940ல் தனிநபர் சத்யாகிரகம் வந்தது. உடன் டாக்டர் அண்ணாஜியும் அவரது மனைவி லலிதாவும் சத்யாகிரகஹத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அடைந்தார்கள். திருச்சியில் சிறையிலிருக்கும் போதுதான் கம்யூனிஸ்டுகளான எம். ஆர். வெங்கட்டராமன், பி. ஸ்ரீனிவாசராவ் முதலியவர்களுடைய தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் நெருங்கிப் பழகியதன் காரணமாக முதல்முதலாக அடிப்படையான அரசியல் விஷயங்களைப்பற்றி விவாதிக்கவும். எண்ணவும் தலைப்பட்டார். அதன் காரணமாக தீர்க்கமான அரசியல் அபிப்பிராயங்களுடன் சிறையினின்றும் விடுதலை செய்யப்பட்டு கிருஷ்ணகிரி வந்தடைந்தார். 1942 ஜனவரியில் காவேரிப்பட்டினத்தின் பக்கத்திலுள்ள ராமபுரம் என்னும் கிராமத்தில் விவசாயிகள் இயக்கத்தை ஆரம்பித்தார். தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஸ்தாபனரீதியில் விவசாயிகள் இயக்கத்தைத் தைரியமாக ஆரம்பித்த பெருமை டாக்டருடையதுதான். ராமபுரத்தில் மிட்டாதார்களுக்கும் குடியானவர்களுக்கும் விளைச்சலைப் பிரித்துக்கொள்வதில் தகராறு விவசாயிகளை ஒன்றுதிரட்டி சுமார் 6 மாத காலம் தொடர்ந்து கிளர்ச்சிசெய்து, கலெக்டர் தலையிடும்படி செய்து விவசாயிகளுக்கு வெற்றி கிடைக்கச்செய்தார்.
1942 ஆகஸ்டுக் குழப்பம் ஏற்பட்டவுடன் நமது டாக்டருக்கும் கொந்தளிப்பைப் பார்த்தவுடன் குழப்பம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் கட்சித் தொடர்பு ஏற்பட்டு முறையாக அரசியல் நிலைமை பற்றி விவாதித்ததினால், குழப்பம் தீர்ந்து கம்யூனிஸ்டுக் கட்சியின் பாதைதான் தெளிவான சுதந்திரப் பாதை என்ற முடிவுக்கு வந்தார். அன்றிலிருந்து கட்சி அங்கத்தினரானார். பின்னால் அவரது மனைவி லலிதாவும் கட்சி அங்கத்தினரானார்.
சேலம் ஜில்லாவிலும் குறிப்பாக கிருஷ்ணகிரி தாலுக்காவிலும் இவரைத் தெரியாத விவசாயி குடும்பம் கிடையாது. ஒவ்வொரு ஏழை விவசாயியும் எங்கள் டாக்டர் என்றுதான் குறிப்பிடுவது பழக்கம். எங்கிருந்து எந்த விவசாயி வந்தாலும் எந்தக் கேள்வியும் இல்லாமல் வைத்தியம் செய்வது இவர் வழக்கமாகிவிட்டது. மக்களின் தலைவராக மாத்திரமல்ல மக்களின் டாக்டராகவும் சேவை செய்கிறார்.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ‘பிளேக்’ என்னும் கொள்ளை நோய் ஏற்பட்டபோது. டாக்டர் அண்ணாஜி நேரடியாகச் சென்று மருத்துவப் பணியாற்றினார். அவரின் துணைவியார் லலிதா அண்ணாஜியும் மக்கள் பணிக்குத் துணையாகச் செயலாற்றி வந்தார்.
நாடு விடுதலைபெற்ற பின்னரும், டாக்டரின் பொதுப்பணியும். விவசாயிகள் இயக்கத்தில் ஈடுபாடும் நீடித்தது. 1947இல் பாதுகாப்புக் கைதியாக சிறைவைக்கப்பட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1963இல் பிளவுபட்டது. டாக்டர் அண்ணாஜி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர் காலமாவதற்கு முன்பு அவர் நடத்திவந்த மருத்துவமனையை மார்க்சிஸ்ட் கட்சியில் ஒப்படைத்துவிட்டார்.
டாக்டர் அண்ணாஜியுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பணியாற்றிய தியாகி தெய்வம் பற்றியும் தோழர் சீனிவாசராவ் குறிப்பிட்டிருக்கிறார்.
தோழர் தெய்வம் நல்ல கவிஞர். பல கவிதைகள் எழுதியிருக்கிறார். ஜீவா துவக்கிய “ஜனநாயகம்” மாத இதழில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார். அவருடைய அதிகாரிகளாக மகளும், மகனும் வருவாய்த்துறையில் இருந்தார்கள். மருமகன் தோழர் இராமனந்தமும் பாரதி புகழ் பரப்பும் கலை இலக்கியப் போராளியாகத் தீவிரப் பணியாற்றி வந்தார். தோழர் தெய்வம் சுதந்திரப் போராட்ட வீரருக்கான ஓய்வூதியம் பெற்று வந்தார்.
தொடரும்…