பங்குசந்தை புகார்களை விசாரிக்க குழு அமைத்த உச்சநீதிமன்றம்! மோடி-அதானிக்கு உதவுமா? உண்மையை அம்பலப்படுத்துமா?


தானி குழுமம் செய்த மோசடிகள் குறித்தான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தை கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை உருவாக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த முடிவானது, மோடியின் அரசாங்கம் மீதான கடும் விமர்சனத்தை இப்போது குறைத்துள்ளது.

மார்ச் 2, 2023 அன்று உச்ச நீதிமன்றம், பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பை மதிப்பிடவும், அதை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காகவும் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இதுபோல அமைக்கப்பட்ட ஆறு குழுக்களை நாம் ஆய்வு செய்ததில், ஒரு குழுவின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன; ஒரு குழு அறிக்கையை இன்னும் அளிக்கவில்லை; மூன்று குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்படாமல் உள்ளது. ஒன்றில் பொது அமைதி சீர்குலைந்ததால் குழு பயனளிக்காமல் போனது. இந்தக் குழுக்கள் குறித்தான ஆய்வில், அவை மூன்றுவித தன்மைகளில் இருந்தன. அதாவது ரகசியமானதாகவோ, பயனற்ற தன்மையிலோ அல்லது தன்னிச்சையான போக்கை கொண்டதாகவோதான் உள்ளன.

மேற்கண்ட விசாரணை குழுக்கள் சிறை சீர்திருத்தங்கள், காடழிப்பு, மின்னணு கண்காணிப்பு, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல், விவசாயிகளின் குறைகள் மற்றும் கருப்பு பணம் போன்றவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டன. கடந்த ஜனவரி 24 அன்று அமெரிக்காவின் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமான ஹிண்டன் பர்க் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் அதன் பங்கு (Share) விலைகளை போலியாக/ செயற்கையாக உயர்த்துவதற்காக மோசடியான வழிமுறைகளில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக குற்றம் சாட்டியது.

அறிக்கை வெளியான ஒரு மாதத்திற்குள், அதானி குழுமத்தின் சந்தை மூலதனத்தில் 60% சரிவு ஏற்பட்டது. உலகையே உலுக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதத்தில் முடிக்குமாறு இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபிக்கு (SEBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வுதான் நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.

அந்தக் குழுவிடம், சமீப காலங்களில் பங்குச் சந்தையில் மோசமான ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்த தொடர்புடைய காரண காரணிகள் உட்பட, ஒட்டுமொத்த மதிப்பீட்டை வழங்கவும்,  முதலீட்டாளர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும்,  அதானி குழுமம் அல்லது பிற நிறுவனங்களால் பங்குச் சந்தை தொடர்பான சட்ட மீறல்களை கையாள்வதற்கான ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளதா என ஆராயவும், ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பிற்கான சட்டபூர்வ ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழுவானது, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ. எம். சப்ரே தலைமையில், பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ஓ.பி. பட், முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் பங்குச் சந்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ஜே.பி தேவதர், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவர் கே.வி. காமத், இன்போசிஸ் இணை இயக்குனர் நந்தன் நிலகேணி மற்றும் கார்ப்பரேட் வழக்கறிஞர் சோமசேகரன் சுந்தரன் ஆகியோரை உள்ளடக்கி உள்ளது.

இந்தக் குழுவானது, தனது அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது. சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட கவர் ஜனநாயகத்துக்கு எதிரானது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி தான் இப்படியும் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அனைத்து மத்திய நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. தேவையான அனைத்து தகவல்களையும் குழுவுக்கு வழங்குமாறு செபிக்கு உத்தரவிட்டதுடன், இதுவரை எடுத்த நடவடிக்கையை குழுவுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் அமைத்த குழுக்கள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் என்ன ஆனது? என்பது பற்றிய ஆய்வுகள் இதோ:

  1. சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்கான குழு:

தலைமை: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அமிதவ ராய்.

குழு அமைத்த நாள்: செப்டம்பர் 25, 2018.

வழக்கு : 1382 சிறைகளில் மீண்டும் மனிதாபிமானமற்ற நிலை தொடர்வது குறித்து.

காலக்கெடு: 12 மாதங்கள்.

அறிக்கை நிலை:  இன்னும் வரவில்லை.      4 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் காலதாமதம்.

சிறையில் கைதிகள் நெரிசல், இயற்கைக்கு மாறான மரணங்கள், பணியாளர்கள் பற்றாக்குறை, பயிற்சி பெறாத ஊழியர்கள் இருப்பது தொடர்பானது.

இந்தியாவின் 1382 சிறைகள் தொடர்பாக நான்கு பிரச்சனைகளை எழுப்பிய முன்னாள் தலைமை நீதிபதி ஆர் சி லகோட்டி, 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் இந்தப் பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு ஐந்து ஆண்டுகள் விசாரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு, முந்தைய உத்தரவுகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிட ஒரு குழுவை அமைத்து வழக்கையும் முடித்து வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் 12 மாத கெடுவை, பல்வேறு முறை மீண்டும், மீண்டும் நீட்டித்து இறுதியாக மார்ச் 21, 2022 அன்று, நீதிபதி ராய் குழு தனது அறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதன் பிறகு இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவேயில்லை. Article 14 சார்பாக இது குறித்து நீதிபதி ராயிடம் கேட்டதற்கு, “தாமதம் குறித்து நான் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு பதிவு விஷயம் தொடர்பானது. தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

காமன்வெல்த் அமைப்பின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்ட சிறைச்சாலை சீர்திருத்த திட்டத்தின் ஆராய்ச்சியாளரான மதுரிமா தனுக்கா, “இதுபோன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தி, பொதுவெளிக்கு கொண்டு வரும் சமூகக் குழுக்களிடம் அது கலந்து பேசவே இல்லை. எனவே இந்த குழுவின் அறிக்கை நடைமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்றார்.

  1. காடழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு:

1995 ஆம் ஆண்டு “கோதவர்மன்” என்பவர் நீலகிரியில் சட்டவிரோதமான முறையில் காடழிப்பு நடப்பதைத் தடுத்து, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,  முன்னாள் இந்திய வனத்துறை அதிகாரி மகாராஜ் கே முத்தூ தலைமையில் ஐந்து நபர் குழு மே – 9, 2002 – ல் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது.

வனத்தின் நிலங்கள் வனத்துறை அல்லாத பயன்பாட்டுக்கு ஆட்படாத வகையில் அதற்கான பரிந்துரைகளை வழங்கி, நீதிமன்றத்திற்கு உதவுமாறு அந்தக் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பரந்த அதிகாரத்தினால் இந்தக் குழு “சிறு நீதிமன்றம்” என அறியப்பட்டது. இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு நிபுணர் “நீதிமன்றத்தின் அதிகாரங்களை ஒரு குழுவுக்கு அளிப்பது அரசியலமைப்பின் 32 – வது பிரிவின் கீழ் மிகவும் தவறானதும், முறையற்றதும் ஆகும்” என்றார்.  உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் முன்னாள் சட்ட ஆலோசகருமான ஷோமோனோ கன்னா, அந்தக்குழு பல பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி, பத்தாண்டு காலத்துக்கு ஒரு அதிகார மையமாக செயல்பட்டது என்று கூறினார்.

அந்தக் குழுவின் அறிக்கை, ஆதிவாசிகள் மற்றும் பழங்குடிகளின் இருப்பிடங்களை “ஆக்கிரமிப்புகள்” என்று குறிப்பிட்டு, மாநில அரசுகள் அவர்களை காடுகளில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. காடுகளில் வாழும் வனவாசிகளின் உரிமைகளை ஆட்சியாளர்களும் அங்கீகரிக்கவில்லை தான் என்ற போதும் இந்தக் குழு, நடைமுறை செயல்பாடுகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு பரிந்துரையை செய்தது.

இதன் விளைவால் பெருமளவிலான வனவாசிகள் வன்முறையின் வாயிலாக வெளியேற்றப்பட்டனர்.  இந்த நடவடிக்கை பரவலான எதிர்ப்பையும் சந்தித்தது. “இந்தக் குழு அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், வனத்தின் நிலங்கள் வனத்தின் பயன்பாட்டை தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது தான். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவே இல்லை” என்றார் கன்னா.

உச்ச நீதிமன்றம் முழு காடுகளையும் நிர்வகித்தல் என்ற ஒரு பெரிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு, அதற்கென ஒரு குழுவை அமைத்து, அக்குழுவிற்கு தடையற்ற அதிகாரங்களை வழங்கியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து நீதியைப் பெற வழியில்லாத ஆதிவாசிகள் இதனால் கடும் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

அந்தக் குழுவில் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் விமர்சிக்கப்பட்டது. அந்தக் குழுவில் இருந்த ஐந்து பேருமே வனத்துறை அதிகாரிகள் தான். எனவே காட்டின் நலன்  அல்லாத திட்டங்களால், இந்தியக் காடுகளின் நிலப்பரப்பு தொடர்ந்து அழிவுக்குள்ளாகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் வனத்தின் பூர்வகுடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு, வனப் பகுதிகளிலுள்ள கனிம வளங்கள் கார்ப்பரேட் கொள்ளைக்காக திறந்து விடப்படும் அநியாயம் அரங்கேற்றப் படுகிறது.

  1. “பெகாசஸ்” உளவு வேலையை ஆராய அமைக்கப்பட்ட தொழில்நுட்பக்குழு!

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவு மென்பொருளை பயன்படுத்தி, தங்கள் மின்னணு சாதனங்கள் சட்ட விரோதமாக கண்காணிக்கப்பட்டது குறித்து “சுதந்திரமான விசாரணை” நடத்தக் கோரி பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி R.V. ரவீந்திரன் தலைமையில் ‘சுதந்திரமான’ தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழுவிடம், தற்போதுள்ள  கண்காணிப்பு குறித்த சட்டம் மற்றும் நடைமுறைகள் பற்றி ஆராய்ந்து, அதில் தனிமனித உரிமையை பாதுகாக்கும் வகையில் சேர்க்க வேண்டிய, மேம்படுத்தப்பட்ட பரிந்துரைகளை வழங்குமாறு கூறியது. இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை ஜூலை 2022 – ல் சமர்ப்பித்தது. சீலிட்ட அறிக்கையின் சில பகுதிகளை படித்த முன்னாள் தலைமை நீதிபதி என்.வி ரமணா, “குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்ட 29 ஃபோன்களில் ஐந்தில் மட்டுமே ஊடுருவும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது . இருப்பினும் அது பெகாசஸ் உளவு மென்பொருள்தானா என்பதைக் குழுவால் உறுதிப்படுத்த முடியவில்லை” என்றும்  கூறினார்.

தற்போதைய அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தைப் போலவே நீதிமன்றத்தின் உத்தரவு இருந்த போதிலும், இந்திய அரசாங்கம் குழுவுக்கு சரியான வகையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதையும் ரமணா வெளிப்படுத்தினார். எனினும் அவர் ஒன்றிய அரசை விமர்சிக்கவோ, அதன் மீது குற்றம் சுமத்தவோ இல்லை.

இந்த தொழில்நுட்பக் குழுவானது, தனிமனித ரகசியத் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பாக சட்ட விதிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் பரிந்துரைகளை தனி அறிக்கையாக வழங்கியது. இதன் முடிவுகளை நீதிபதி வெளியிடவில்லை. நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதன் பிறகு எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. இந்த வழக்கின் 3 மனுதாரர்களில் ஒருவரான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் நிறுவனர் ஜக்தீப் சோக்கர் நம்மிடம்  “அறிக்கையின் தாக்கம் அல்லது விளைவு பற்றி எதுவுமே தெரியாததால் அதைப் பற்றி என்ன கூறுவது?” என்றார்.

  1. நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு!

ஏப்ரல் 2019 – அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம், நீதிபதி ஏ.கே. பட்நாயக்கை கொண்டு ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது. நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அதிருப்தி அடைந்த “ஊழியர்களின் சதியை” விசாரித்து அறிக்கை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுக்குப் பின்னே தலைமை நீதிபதி அலுவலகத்தை செயலிழக்கச் செய்யும் முயற்சிகள் இருப்பதாகவும்,  நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், சதி நடப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.

நீதிபதி பட்நாயக் தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, பிப்ரவரி 18, 2021-ல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்னால் உள்ள சதியை புறந்தள்ள முடியாது என்று கூறியது. ஆனால் அந்த சதியை எதன் அடிப்படையில் நம்புகிறது என்பதை வெளிப்படுத்தவில்லை. விசாரணையின் நோக்கத்தை அடைய முடியாது என்பதை ஆரம்பத்திலேயே நீதிமன்றம் உணர்ந்திருக்க வேண்டும். சீலிடப்பட்டு சமர்பிக்கப் பட்ட பட்நாயக்கின் அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.

  1. வேளாண் சட்டங்களை ஆராய்வதற்கான குழு!

செப்டம்பர் 27, 2020 அன்று நரேந்திர மோடி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளதாக டிசம்பர் 2020 – ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் டெல்லியில் திரண்டு, இச்சட்டங்கள் விவசாயிகளை மோசமாக பாதிக்கும் என்றும் அதே வேளையில் பெரு நிறுவனங்களுக்கு பெருத்த நன்மை பயக்கும் என்றும் குற்றம் சாட்டி தொடர் போராட்டம் நடத்தினர்.

அப்போதைய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, ஜனவரி-12, 2021 – ல் விவசாய சட்டங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் அரசின் கருத்துக்களைக் கேட்டு, உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார். குழு தனது இறுதி அறிக்கையை மார்ச் 19, 2021- ல் சீலிட்டு சமர்ப்பித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றாலும், குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனில் ஜெய்சிங் (சுதந்திர பாரத் கட்சி) அறிக்கையை பகிரங்கப்படுத்தினார்.

விவசாயிகளின் விடாப்பிடியான, உறுதியான போராட்டம், அரசின் அடாவடித் தனத்தை அசைத்தது. எனவே மோடியின் அரசாங்கம் 12 மாதங்களுக்குப் பிறகு இந்தச் சட்டங்களை ரத்து செய்தது. எனவே அறிக்கை பயன்படுத்தப் படவில்லை.

  1. கருப்புப் பணம் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழு!

2009 – ஆம் ஆண்டு வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் குறித்த மத்திய அரசின் முக்கிய ஆவணங்களை வெளியிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் தனது கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஜூலை 4, 2011 – ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி. ஷா மற்றும் அரிஜித் பசாயத் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு அமைத்தது.

கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பதுக்குவதற்கு எதிராகவும், அதைத் தடுக்கும் வகையிலும் உரிய, தேவையான நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் ஆராய்ந்து விரிவான செயல் திட்டத்தை பரிந்துரைக்குமாறு இக்குழுவை கேட்டுக்கொண்டது. அதன் பிறகு அந்தக் குழுவானது ஆறு முறை தனது பரிந்துரைகளை சீலிடப்பட்ட உரைகளில் அளித்தது. ஆனால் இதுவரை அறிக்கை எதுவும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

2015 முதல் இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. மே 2021- ல் எமது நிருபர் சிறப்புப் புலனாய்வுக் குழு வழங்கிய பரிந்துரைகளின் நகல்களை கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி விண்ணப்பித்தார். ஆனால் இன்றைய மோடி அரசு அதைத்தர மறுத்தது. இதற்கிடையில் சுவிஸ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் இந்தியர்களின் பணம், 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021 – ல் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதானி – ஹிண்டன்பர்க் வழக்கில் என்ன நிகழும்?

ஆர்ட்டிகிள் -14 இணைய இதழ் மேற்கொண்ட பகுப்பாய்வு அடிப்படையில் பார்க்கும் போது, இதுவரை உச்ச நீதிமன்றம் அமைத்தக் குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப் படவில்லை. அதேபோல அதானி மோசடி தொடர்பான விசாரணைக் குழுவின் இறுதிஅறிக்கையையும் சீலிடப்பட்ட கவரில் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இந்த விவகாரமும் முட்டுச் சந்திற்குள்தான் கொண்டு செல்லப்படக் கூடும் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

அனுஜ் புவானியா எனும் வழக்கறிஞர், (“கோர்ட்டிங் தி பீப்பிள் – எமர்ஜென்சி காலத்துக்கு பிந்தைய பொதுநல வழக்குகள்” எனும் நூலின் ஆசிரியர்) ஆர்டிகிள் -14 க்கு கூறும்போது, “இந்தக் குழுவானது விஷயத்தை திசை திருப்பவே உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது. நீதிமன்ற கண்காணிப்பின் கீழான விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்கொண்டிருக்க வேண்டும். மாறாக அது கொள்கை மற்றும் நிர்வாக விஷயங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அதேபோல இந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

“வேளாண் சட்டங்களுக்கான குழுவைப் பார்த்தால், வெளிப்படையாகவே அது தவறு எனத் தெரிகிறது. எந்த அளவுகோல்களும் இன்றி வாய் வார்த்தைகளே இத்தகைய  நியமனங்களை செய்கிறது” எனவும் அவர் விமர்சிக்கிறார்.  “பெரும்பாலான உச்ச நீதிமன்ற குழுக்களின் மூலம் எந்த நன்மையும் இதுவரை நிகழவில்லை. மேலும் இந்த அதானி விவகாரம் பெகாசஸ் வழியில் சென்று விடுமோ என அஞ்சுகிறேன்” என்கிறார்.

சோக்கர் கூறுகையில், “நீதிமன்றங்கள் பிரச்சனைகளை தீர்க்க முயலாமல் சட்டரீதியாகவும், அரசியலமைப்பின் படியும் தீர்ப்பளிக்க முயல வேண்டும்” என்றார். “ஏனெனில் பிரச்சனைகளை தீர்ப்பது என்பது நிர்வாக மற்றும் சட்டமன்றத்தின் வேலையாகும். அதற்கு வேறு வகையான நிபுணத்துவம் தேவைப்படுகிறது” என்றார்.

இதையும் படியுங்கள்: 

அதானி குழுமத்தின் வர்த்தக மோசடிகளுக்கு பின்புலமாய்  இருந்த மர்ம மனிதன் வினோத் அதானி!

அதானியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில்).

மேலும் “அவர்கள் சட்ட மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்டு வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் நீதிமன்றங்கள் சிக்கலை தீர்க்க முயலுகின்றன. எனவேதான் விசாரணைக் குழுவை அமைக்கின்றனர். இறுதியில் ஒன்றுமே நடக்காது, குழப்பம் மட்டுமே உருவாக வழிவகுக்கும்” என்கிறார்.

இது போன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் மீது தேவையற்ற நம்பிக்கையை  வைப்பதற்கு பதிலாக, அவர்கள் அதை எவ்வளவு மோசமாக்குகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். அவர்கள் மோசமாக்காமல் இருந்தால் அதுவே சிறந்த விளைவாக இருக்கும்.

நீதிமன்றங்கள் அமைக்கும் விசாரணைக் குழுக்கள், பிரச்சினைகளை நீர்த்துப்போக செய்யத்தான் உதவுகிறதே தவிர, தீர்வைத் தருவதில்லை. மேற்கண்ட ஆய்வானது மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் மூலம் தடுத்துவிடலாம் என நினைப்பது தவறு என்பதையும், மாறாக மக்கள்திரள் போராட்டங்களே உரியத் தீர்வு என்பதையும் புரிய வைத்துள்ளன.

செய்தி ஆதாரம்:

https://article-14.com/post/why-supreme-court-decision-to-probe-the-adani-hindenburg-matter-is-good-news-for-the-govt-64054c5a44b8f

தமிழில் ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here