(ஆளுங்கட்சியால் முடிவேயில்லாமால் செய்யப்படும் தொடர்பிரச்சாரத்தால், ஒரு சாதாரண மனிதன் சிந்திக்கக்கூடிய தன்மையை இழந்து, வெற்றுக் கோஷங்களின், கவர்ச்சிவாக்கியங்களின் பிடிக்குள் ஆட்பட்டு விடுகிறான்).

பா.ஜ.க.-வின் ஏழரை ஆண்டுகால ஆட்சியில் இந்தியா தன்னுடைய பொருளாதாரத்தையும், சமூக அந்தஸ்தையும் இழந்து சர்வதேச சமூகத்தில் கூனிக்குறுகி நின்றுகொண்டிருக்கிறது.

ஆனாலும், இன்றைக்கும் நமக்கு அக்கம்பக்கத்தில், வேலை செய்யுமிடங்களில், குடும்பங்களில், நண்பர்கள் வட்டாரத்தில் பெரும்பாலானவர்கள் இதற்கு எதிர்பதமாகத்தான் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்று நாம் ஒருவேளை யோசிக்கலாம்.

76 வருடங்களுக்கு முன்பு நாஜி எதிர்ப்பாளரும், ஜெர்மன் மெய்யியலாளருமான டீட்ரிக் பான்ஹோபர் (Dietrich Bonhoeffer) என்பவருக்கும் இதே போன்றதொரு கேள்வி எழுந்தது. கூட்டன்பெர்க், கதே, பீத்தோவன் போன்ற மாபெரும் ஆளுமைகளை உலகுக்கு கொடுத்த ஒரு நாடு ஹிட்லர் என்ற ஒரு பைத்தியக்காரனையும் எப்படி கொடுக்க முடியும் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அதைப்பற்றி மேலும் ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார். ஒருவேளை சமூகத்தின் ஆழத்தில் இருந்த யூதர்கள் மீதான வெறுப்பு திடீரென வெளியே வந்துவிட்டதா? அல்லது கோயபல்சின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு சாதாரண ஜெர்மானியர்கள் இரையாகிவிட்டனரா? அல்லது இரண்டும் சேர்ந்தா?

ஹிட்லரை எதிர்த்ததால் சிறைப்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட பான்ஹோபர் தனது சிந்தனைகளை சிறையில் இருந்தபோது எழுதிச் சென்றுள்ளார். அவை “மூடத்தனம் பற்றிய கட்டுரை” (On Stupidity) என்று அழைக்கப்படுகிறது. அதில் “மூடத்தனமே எல்லா தீமைகளைவிட பெரிய எதிரி. ஒருவன் தீமையை எதிர்த்து போராட முடியும், ஆனால் மூடத்தனத்தின் முன்பு நாம் என்றுமே நிராயுதபாணிகள் தான். காரண காரியங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல தான். உண்மைகள் மறுக்க முடியாதவைகளாக இருந்தபோதும் அவை அனைத்தும் சம்பந்தமில்லாதவை, தற்செயலானவை என்று ஒதுக்கித்தள்ளப்பட்டுவிடும்” என்கிறார்.

இந்தக் கூற்றை ஒரு பொய்யான WhatsApp செய்தியை அது உண்மையில்லை என்று நிரூபிக்க பலவித தரவுகளோடும், தர்க்கரீதியிலும் முயன்ற ஒருவர் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார். “சர்தார் பட்டேல் சிலையின் உள்ளே ஒரு தொலைநோக்கியின் (telescope) மூலம் மோடி பாகிஸ்தானை கண்காணிக்கிறார்” என்றும், “நேருவின் தாத்தா ஜமுனா நகரைச் சேர்ந்த கியாசுதீன் காஜி” என்றும் WhatsApp மூலம் வந்த செய்தியை அப்படியே பகிரும் ஒருவரை அது பொய் என்று நிரூபிக்க முயன்று எத்தனைமுறை நீங்கள் தோற்றிருப்பீர்கள்?
பான்ஹோபர் தனது கட்டுரையில் மூடத்தனத்திற்கும், சமூக நெறிமுறைகளின் வீழ்ச்சிக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். “மூடத்தனம் என்பது அறிவில் ஏற்படும் ஒரு குறை என்பதல்ல, மாறாக அது நெறிமுறையில் ஏற்படும் குறையாகும். மனிதர்கள் எவ்வளவோ அறிவாளிகளாக இருந்தாலும் அவர்கள் மூடர்களாகவும் இருக்கிறார்கள். அதேபோல அறிவில் குறைந்தவர்களாக இருந்தாலும் மூடர்களாக இருப்பதில்லை” என்கிறார்.

மார்ச் 22, 2020 கொரோனா ஊரடங்கின் போது கைகளையும், தட்டுகளையும் தட்டும் மக்கள்.

இதற்கு மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளே நல்ல உதாரணம். அங்கு போராடும் விவசாயிகள் பெரிய அளவுக்கு படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் இச்சட்டத்தின் தீமைகளை உணர்ந்து கொண்டு ஒட்டுமொத்த விவசாயிகளுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வருகிறார்கள். அதே சமயத்தில் படித்த மேதாவிகள் தங்களின் சொந்த சுயலாபத்துக்காக விவசாயிகள் எக்கேடுகெட்டால் என்ன என்று இந்த வேளாண் சட்டங்களை ஆதரித்து வருகின்றனர்.

“மக்கள் தங்களை மூடர்களாக ஆக்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர்” என்கிறார் பான்ஹோபர். “சுய சிந்தனையே இல்லாத கும்பலிடமிருந்து விலகியிருப்பவர்கள் தங்களை பெரும் சேதத்திலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள்” என்று கூறுகிறார். எனவே மூடத்தனம் என்பது ஒரு மனோநிலை சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கவேண்டும் தவிர ஒரு சமூக பிரச்சினையாகப் பார்க்க தேவையில்லை என்று ஊகிக்கிறார்.

ஒவ்வொரு மத அல்லது அரசியல் சக்திகள் அதிகாரத்திற்கு வரும்போது அவை மக்களை பெரும் எண்ணிக்கையில் மூடத்தனதில் ஆழ்த்துவது அதிகரிக்கிறது அன்று கருதுகிறார்.

“பதவியில் இருக்கும் ஒருவனின் அதிகாரம், மற்றவர்களின் மூடத்தனத்தையே விரும்புகிறது” என்று அவர் கருதுகிறார். தனிப்பட்ட ஒருவரிடமோ, கட்சியிடமோ குவிக்கப்படும் பெருமளவு அதிகாரத்தின் தாக்கத்தால் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களது சுதந்திரத்தையும், சுயத்தையும் இழந்து விடுகின்றனர். இது வரலாற்றுப் பூர்வமான உண்மை, இதுவேவே தற்கால இந்தியாவிலும் நடந்துவருகிறது.

அத்தகைய சுயத்தை இழந்துவிட்ட ஒரு நபருடன் விவாதிக்கும் நாம் வெறுமனே அந்த நபரை மட்டுமே எதிர்கொள்வதில்லை மாறாக அவனை ஆட்டுவிக்கும் வெற்றுக் கோஷங்கள்,

கவர்ச்சி வாக்கியங்களையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அவன் ஒரு பேய்பிடித்தவன் போல, குருடனாகவும், தன் சுயத்தை இழந்து வேறு ஒரு சக்தியின் பிடியில் இருப்பவன்போல நடந்துகொள்வான். யோசிக்கும் தன்மையை இழந்த பிறகு அவன் எந்த ஒரு தீமைக்கும் ஆட்படுபவனாகவும், அது தீயது என்று உணராதவனாகவும் ஆகிவிடுகிறான்.

சில்லிடவைக்கும் இந்த வார்த்தைகள் இன்று இந்திய சமுதாயத்துக்கும் அப்படியே பொருந்துகிறது. ஆயிரக்கணக்கான இந்துத்துவ படையணிகள் யாரை, எப்படி (வார்த்தைகளிலா அல்லது வேறுவகையிலா) தாக்கவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லப்படுகிறதோ அப்படியே செய்தும் வருகிறார்கள்.

சரி இதற்கு என்னதான் தீர்வு? “அறிவுறுத்தல் அல்ல விடுதலைதான் மூடத்தனைத்தை விரட்டும். உண்மையான அகவிடுதலை என்பது புற விடுதலை மூலம் தான் சாத்தியம் என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டு ஆகவேண்டும். ஆகவே அதுவரையில் நாம் அத்தகைய மூடர்களிடம் விவாதிப்பதை கைவிட்டு விலக வேண்டும்” என்கிறார் பான்ஹோபர்.

முட்டாளாக்கப்பட்டவர்கள், அரசால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களையும், அவைகளின் தவறான விவரங்களையும் மட்டுமே பார்த்துவரும்போது நமது நம்பிக்கைகள் உலர்ந்து போகக்கூடும். அதேசமயத்தில், அரசின் உதவியால் பரப்பப்படும் தவறான தகவல்களை எதிர்கொள்ள முற்போக்காளர்களும், சுதந்திர ஊடகங்களும் தங்களால் இயன்றவற்றை தொடர்ந்து செய்வதன்மூலம், எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் இறுதியாக மூடத்தனத்தை பரப்பும் ப ஜ க அரசை வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலில் முறியடிக்க உதவும். இந்திய அரசியலை பீடித்திருக்கும் சனியனிடமிருந்து விடுதலையும் கிடைக்கும்.

அதன் மூலம் தற்போது உச்சத்தை எட்டியிருக்கும் மூடத்தனமும் இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கும்.

(கட்டுரையாசிரியர் ரோஹித் குமார் ஓர் உளவியல் பின்புலமுள்ள கல்வியாளர்).

தமிழில்: செந்தழல்

நன்றி: The Wire.

Link: A Nazi Dissident’s Reflections on Stupidity Hold Lessons for BJP Supporters (thewire.in)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here