ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு படுகொலை தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் சில பகுதிகள் பிரண்ட்லைன் ஆகஸ்ட் மாத இதழின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம்  அன்றைய தமிழக அதிமுக அரசும், போலீசும் கூட்டு சேர்ந்து கார்ப்பரேட் முதலாளி வேதாந்தாவிற்காக சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் 26 ஆண்டு கால வரலாற்றில் இந்த ஆலையை எதிர்த்து கடந்த 2018 மே 22-ஆம் தேதி நடைபெற்ற அதன் 100-வது நாள் போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. 99 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 100-வது நாள் கலவரமாக மாற்றப்பட்டது என்பதிலிருந்து கடந்த 100 நாட்களாகத் தான் மக்கள் போராடுகிறார்கள் என்பதல்ல, 1994-ல் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்தே இந்த ஆலைக்கெதிரான போராட்டத்திற்கும் அஸ்திவாரம் போடப்பட்டது.

தூத்துக்குடிக்கு வருவதற்கு முன்னதாக இந்த நிறுவனம், மஹாராஷ்ட்ராவில் 50 ஆயிரம் மக்கள் ஒன்று கூடி நடத்திய போராட்டத்தாலும் ஆலைக்கு உள்ளே புகுந்து அடித்து நொறுக்கியும் விரட்டியடிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத், கோவா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் அனுமதி மறுக்கப்பட இறுதியாகத் தான் தமிழ்நாட்டிற்குள் வந்தது. நிறுவனத்தின் இந்த இழிபுகழ் வரலாற்றை அறிந்த தூத்துக்குடி மக்கள் ஆலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது பஜாரி அரசியல் நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், சுற்றுச்சூழல் விதிகளை மீறி அனுமதி வழங்கினார்.

1994 அக்டோபர் 30 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ல் தாமிர மூலப்பொருட்க்ள் ஆலைக்கு வந்த போதே ஆலைக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கடல்வழி முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். எனினும் ஆலை இயக்கப்பட்டது.

ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நச்சுப்புகை வெளியேற்றத்தால், மூச்சுத்திணறல், மயக்கம், வாந்தி பேதி என 80-க்கும் மேற்பட்ட முறைகள் மக்கள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் பதிவாகி இருக்கிறது. இவ்வாலையினால், சரும நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களாலும், காற்று, நிலம், நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையில் தொடர் வழக்குகளும் பதிவாகி உள்ளது.

மக்களுக்கு தொடர் பாதிப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக நடந்த போராட்டங்களாலும், நீதிமன்ற உத்தரவுகளாலும், 4 முறை மூடப்பட்டு மீண்டும் மீண்டும் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே தீர்ப்புக்கள் வழங்கின. இந்நிலையில், 2010-ல் நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகக அதன் துணைத்தலைவர் வரதராஜன் கைதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் தீவிரமடையவே ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை பெற்று, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு நடைபெற்று வந்த போதே 2013-ல் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது. எனினும், 100 கோடி அபராதத்துடன் மீண்டும் ஆலையை இயக்க அனுமதி வழங்கியது.

அதுவரையில் நீதித்துறையை நம்பி வந்த மக்கள், இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தான் தாங்களே நேரடியாக களத்தில் இறங்க முடிவெடுத்து போராட்டங்களை நடத்தி வந்தனர். 26 ஆண்டுகளாக மக்கள் நெஞ்சில் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த போராட்டத்தீ, 2018 பிப்ரவரியில் 640 ஏக்கர் பரப்பில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பால் பெருநெருப்பாக மாறியது. ஆலைக்கு அருகில் இருக்கும் அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள், 2018 பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பந்தல் அமைத்து முழக்கங்களை எழுப்பி, தங்களது போராட்டத்தை அமைதியாக நடத்தி வந்தனர்.

நியாயமான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகி வந்தது. 24 மார்ச்சில், சுமார் 20,000 வியாபாரிகள் முழு கடையடைப்பு நடத்தி, போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் 2018, மே 22-ஆம் தேதியன்று நூறாவது நாள் போராட்டமாக ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி “லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆலைச் சுற்றுவட்டார கிராம மக்கள், மீனவர்கள், வணிகர்கள் என ஒட்டு மொத்த  தூத்துக்குடி மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அலை அலையாய் அணி திரண்டனர். அமைதியாக கூடிய மக்கள் மீது வன்முறையை ஏவியதுடன் துப்பாக்கிச்சூடும் நடத்தியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு. இதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஈவிரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளுக்காக நீதி கேட்டு தமிழக மக்கள், ஜனநாயக சக்திகள், அனைத்து கட்சிகள் என அனைவரும் தொடர்ந்து போராடிய நிலையில் வேறுவழியின்றி எடப்பாடி அரசு துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்தின் விசாரணை 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி தொடங்கி. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்தி கடந்த மே மாதம் முடிவடைந்தது.

36 கட்டங்களாக 1426 பேருக்கு சம்மன் அனுப்பி 1048 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள இந்த விசாரணையில் 1544 ஆவணங்கள் குறியீடு செய்யபட்டு 5 தொகுதிகளாகக் கொண்ட 3000 பக்க இறுதி அறிக்கை கடந்த மே 18ம் தேதி தமிழக அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் தான் பிரண்ட்லைன் பத்திரிக்கையின் ஆகஸ்டு மாத இதழில் வெளிவந்தது.

அந்த அறிக்கையில், பொதுமக்கள் கூட்டத்தை கையாளுவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யாருடைய உத்தரவும், துண்டுதலுமின்றி துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலே காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருந்து, உரிய உத்தரவுகள் இன்றியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறிய அதிமுக அரசாங்கத்தின் கூற்றை உறுதிபடுத்த எந்த ஒரு ஆதாரமும் இல்லை. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூட படுகாயம் அடையவில்லை. போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

மே-22 க்கு முன் நடந்த அமைதிக்குழு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் தூத்துக்குடியிலிருந்து 100 கி.மீ. தாண்டி கோவில்பட்டியில் அவரது முகாம் அலுவலகத்தில் மிக வசதியாக இருந்து கொண்டே உதவி ஆட்சியர் M.S.பிரசாந்த்-ஐ அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் ஆகியோரின் முழு செயலற்ற தன்மை, சோம்பல், கடமை தவறுதல், ஆகியவையே கலவரத்துக்கு காரணம். பேரணியாக வந்த மக்களை காவல்துறையினர் சுட்டு கொன்றதற்கு தாசில்தார்கள் உடந்தையாக இருந்துள்ளனர். காவல் நிலையாணைகளின் படி, கூட்டத்தை கலைக்க, போலீசார் எச்சரிக்கை செய்தல், தண்ணீர் பீச்சி அடித்தல், வானத்தை நோக்கி சுடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை ஏதும் செய்யவில்லை.


இதையும் படியுங்கள்: தூத்துக்குடி: ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனம் மீண்டும் செயல்பட துடிப்பது ஏன்?


வெகு தொலைவில் இருந்த பொதுமக்களை கலெக்டர் வளாகத்தில் ஹெரிடேஜ் பூங்காவில் மறைந்து இருந்து காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். தங்களுக்கு என்ன நடக்கிறது; துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே சிதறி ஓடிய மக்கள் மீது காவல் துறை துப்பாக்கி சுடு நடத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் தொலைவில் இருந்து துல்லியமாக சுடக்கூடிய Long Range துப்பாக்கிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, 13 பேரில் 6 பேருக்கு குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்துள்ளதை பிரேத பரிசோதனை நிரூபித்துள்ளது. காவலர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். அவரைத் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் போன்ற நான்கு இடங்களில் இருந்து சுட வைத்துள்ளதன் மூலம் அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எஃப்.சி.ஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர்.

மக்கள் மீதான இந்த படுகொலைகளுக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் தங்களது வரம்பை மீறி விட்டார்கள் என்று கூறி, குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை பரிந்துரைக்கிறது. குறிப்பாக, தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி SP மகேந்திரன், உதவி SP லிங்க திருமாறன், 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை காவலர், 7 காவலர்கள் என 17 போலீசாரைப் பட்டியலிட்டுள்ளார் நீதிபதி அருணா ஜெகதீசன்.

துப்பாக்கி சூடு நடத்திய பின்பு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீ வைக்கும் 20 பேர் அடங்கிய நபர்களின் வீடியோ ஆதாரம் இருந்தும், இவர்களை மாநில காவல்துறையோ சிபிஐயோ அடையாளம் காண முயற்சிக்கவில்லை என்பதையும் விமர்சனமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சத்திலிருந்து 50 லட்சமாகவும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாகவும் ஆகவும் இழப்பீட்டை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களையும் பரிந்துரைக்கிறது அறிக்கை.


இதையும் படியுங்கள் : மூடி சீல் வைத்த ஆலைக்குள் ஸ்டெர்லைட் பணியாளர்களுக்கு என்ன வேலை?


இந்த படுபாதக தாக்குதல் நடவடிக்கைகளை, அன்றைய முதல்வர் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமி “துப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்” என்று பொறுப்பற்ற முறையில் பேசினார். ஒரு வேளை அது உண்மையாகவும் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரியாமல் அதிகார வர்க்கம் முடிவுகளை எடுப்பது ஒன்றும் இந்திய அரசியலில் புதியதல்ல. இதற்கு பெயர்தான் இரட்டை ஆட்சி முறை என்கிறது மார்க்சிய-லெனினிய அமைப்புகள். ஆனால் தெரிந்த பிறகும் சம்மந்தம் இல்லாதது போல பேசி தனது கார்ப்பரேட் சேவையை பகிரங்கமாக அறிவித்தார் பழனிச்சாமி.

துப்பாக்கி சூடு தொடர்பாக பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், போராட்டக்குழுவுக்குள் ஊடுருவியதாகக் கூறி போலீஸ் துப்பாக்கி சூடுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது ‘போலீசின் பொய்க்கதை’ என்பதையும் விசாரணையில் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்படி சம்பவ தினமான மே-22 அன்று லட்சம் பேர் கூடுவதாக போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் ஊரில் இல்லை. தாசில்தார்கள் செயல்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் தகவலே காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை. தொலைவில் இருந்து துல்லியமாக சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தியுள்ளனர். ஒரே காவலரை வைத்து 4 வெவ்வேறு இடங்களில் மறைந்திருந்து 17 ரவுண்டு சுடப்பட்டுள்ளது. மண்டையின் பின்பக்கத்தில் தோட்டாக்கள் நுழைந்துள்ளது. கூட்டத்தைக் கலைக்க எச்சரிக்கை செய்தல், தண்ணீர் பீச்சி அடித்தல், வானத்தை நோக்கி சுடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை.

இப்படி மாநில முதல்வர் முதல், போலிசின் கடைநிலை ஊழியரான காவலர்கள் வரையில் யாருமே தங்களது கடமைகளைச் செய்யவில்லை. அல்லது செய்யக்கூடாது என்று உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவைக் கொடுத்தவர்கள் யார் என்பதற்கு வரலாற்றில் உலக அளவிலும் ஏன் நமது நாட்டிலேயும் பல்வேறு உதாரணங்கள் உண்டு.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பகல் கொள்ளையை எதிர்த்துப் போராடக்கூடிய போராளிகளை திட்டமிட்டு படுகொலை செய்வது இது முதல் முறையல்ல. நைஜீரியாவில் ஷெல் நிறுவனத்திற்கு எதிராக மக்களை திரட்டி போராடிய ஆசிரியர் கென் சரோ வைவா படுகொலை செய்யப்பட்டார். சிலியின் அதிபராக இருந்த அலான்டே அமெரிக்காவின் AT & T என்ற நிறுவனத்திற்கு எதிராக தடை விதித்தார் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார். போபால் விஷவாயு படுகொலையை நடத்திய மைக்கேல் ஆண்டர்சன் அப்போதைய காங்கிரசு அரசாங்கத்தின் தயவுடன் தனது சொந்த நாட்டிற்கு தப்பி ஓடி வாழ்ந்து மடிந்தார். இறுதி காலத்தில் அற்ப தொகை அவர் மீது நட்ட ஈடாக விதிக்கப்பட்டது. இதற்காக இந்திய மக்கள் பல ஆண்டு காலம் போராட வேண்டி இருந்தது.

அதன் தொடர்ச்சியாகத் தான் தனது ஆலை மூடப்படும் என்ற கொலை வெறியில் வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் அனில் அகர்வால் திட்டமிட்டு கொடுத்தபடி இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனாலும், இத்தனையும் தெரிந்து கொண்டும், பொது மக்களைக் குற்றவாளிகளாகவும், சமுக விரோதிகளாகவும் அதிமுக, பிஜேபி, இந்து முன்னணி, அர்ஜுன் சம்பத், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அவதூறு செய்தனர். கலவரத்துக்குப் பின்னர் கூட தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பகுதி மக்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பொருட்களை உடைத்துப் போட்டு பெண்கள் என்றும் பாராமல் மக்களை தெருவிலே இழுத்து வந்து அடித்து அராஜகம் செய்தனர்.

எனவே, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் மாவட்ட நிர்வாகம், போலிசு அதிகாரிகளின் தொடர்பு, எடப்பாடி மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகத்தின் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும்.

முதலாளி அனில் அகர்வால் முதல், சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமியும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். போராடிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கைகளை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவை தான் மக்களது ரணங்களுக்குத் தரும் மருந்தாகவும், நீதியாகவும் அமையும்.

ஆனால், இப்போதும் கூட, இந்த அறிக்கை கசிந்தது பற்றி அதிமுக குண்டர்களில் ஒருவரான ஜெயக்குமார் தக்கபடி விசாரிக்க வேண்டும் என்கிறார். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் 80 முறைக்கும் மேல் நச்சுவாயு கசிவு ஏற்பட்ட போது இல்லாத அக்கறையை, ஆணையத்தின் அறிக்கை கசிந்ததில் காட்டுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான அவரின் சிந்தனையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஆணையத்தின் அறிக்கை, இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர், மூன்று துறை வட்டாட்சியர்கள் மீது துறை நடவடிக்கை, குற்றவியல் மற்றும் சட்டத்திற்குட்பட்ட பிற நடவடிக்கைகளைத் தொடங்குமாறு பரிந்துரைக்கிறது. ஆனால், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் அறிக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை மட்டுமா அல்லது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுமா என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது,

எனவே எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் அறிக்கை பரிந்துரைகளின் படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஸ்டெர்லைட்டை எப்படி மக்கள் போராட்டம் மூடியதோ அதே போல், மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி வேண்டுமென்றால், இந்த ஆலையின் இயந்திரங்கள், கட்டுமானங்கள் உள்ளிட்ட அனைத்தும் நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். படுகொலைக்குக் காரணமான ஏ1 குற்றவாளியான அனில் அகர்வால், மாநில முதல்வர், மாவட்ட ஆட்சியர், தாசில்தார்கள், போலிசு துறை அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை தண்டிக்கப்பட வேண்டும். மக்களுக்கு விரோதமான ஆலைகளை நிறுவக் கூடாது என்ற சமூகப் பொறுப்புடன் அரசுகள் செயல்பட வேண்டும்.


இதையும் படியுங்கள் : தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு! போலீஸ் குண்டர்களின் திட்டமிட்ட கொலை வெறியாட்டம் என்பது நிரூபணம்!


ஆனால், முதலாளிகள் மாநாடுகள் நடத்தி கார்ப்பரேட்டுக்களுக்கு பட்டுக்கம்பள வரவேற்பு கொடுக்கும் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளோ, கார்ப்பரேட் காவி பாசிசத்தை நடைமுறைப்படுத்தும் மோடி ஆட்சியோ இவற்றைச் செய்யாது. இந்த அரசமைப்பே கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

அதனை தூக்கியெறிந்து மாற்றாக, இந்த கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக, அதைத் தாங்கி நிற்கும் இந்த அரசமைப்பிற்கு எதிராக, கட்சிகள் இயக்கங்கள், அமைப்புக்கள் என மக்களுக்கான உண்மையான ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் ஓரணியில் சேர்ந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் புதிய அரசியல் நிர்ணய சபையை உருவாக்கும் ஜனநாயக கூட்டரசை நிறுவ வேண்டும். அதற்காக பரந்து விரிந்த அளவிலே மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், அதற்காக கங்கணம் கட்டி செயல் படுவதன் மூலம் மட்டுமே படுகொலைக்கான நீதியைப் பெறுவதும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட நாசகார ஆலைகளை நிரந்தரமாக அகற்றி சுத்தமான, சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியும்.

  • முனியாண்டி

புதிய ஜனநாயகம்.
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்! பரப்புங்கள்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here